Monday, August 29, 2011

சொல்லாத காதல்

முதல் தடவை உன் முகம் பார்க்கும்போது வந்த தவிப்பினை உன்னைப்  பார்க்கும் ஒவ்வொரு தடவையும் உணர்கிறேன்.
நீ அருகில் வந்து பேசும் போது உன் கண்களின் அசைவில் மயங்குகிறேன்.
உன் கண்கள் பார்த்த கிறக்கத்தில் நான் பேச நினைப்பதை
மறக்கின்றேன்.
புன்னகை உதிர்க்கும் உன் உதடுகளை வருடிப்பார்க்க நினைக்கிறேன்.

"காதல் என்பது வலி.
மருந்தை மறுக்கும் மாய நோய்" என்று
பலபேர்  சொல்லியும் நான் நம்பவில்லை.
உன் மறுமொழிக்கான காத்திருப்பில்
அதன் உண்மைப்பொருளை உணர்ந்துகொண்டேன்.

நினைவில் வந்து நின்றபொழுதே,
என் கனவினை உனக்கென வாங்கிக்கொண்டாய்.

மஞ்சள் மாலைப் பொழுதுக்கு நான் எழுதிய கவிதைகளெல்லாம்,
அதில் உந்தன் பெயரை எழுதச் சொல்லி அகிம்சைப் போர் புரிகின்றன.

என் இனியவளே,ஒருநாள் உன்னைப்பார்க்காவிட்டாலும் நெஞ்சம் ஏனோ வலிக்கிறது.
நேரம் காட்டாத என் கடிகாரமும் உன்னைப்பார்க்கும் நொடிப்பொழுதில் துடிக்கிறது.

நட்புடன் இன்றும் பேசுகிறாய்!
ஏக்கப் பார்வை வீசுகிறாய்!

இருந்தும் சொல்லத் துணிவில்லை
என் மனதின் தேடல் நீ என்று..

வருடிய தென்றலுக்கு,
வைகறை மேகங்களுக்கு,
தழுவிய மழைத்துளிக்கு
சொல்லாததுபோல, உன்னிடமும் நான் சொல்லவில்லை என் ஒருதலைக்காதலை..

Friday, August 26, 2011

ஒரு கேள்வி!

தன்னைப்பார்த்து யாராவது பெரிய பூனை என்று சொன்னால்,
புலிக்கு எவ்வளவு கோபம் வருமோ அது போலத் தான்
எனக்கும் வந்தது.

நான் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு சுட்டிப்பையன் இருக்கிறான்.
மாலை வேளைகளில் 1ஆம் வகுப்பு படிக்கும் அவனுக்கு டியூசன் எடுப்பது எனது பொழுதுபோக்கு.

போன வாரம் விமானம் பற்றிய ஒரு ஆங்கிலப் பாடம்.அனைத்தும் சொல்லி முடித்து ,சிறுவர்களுக்கே உரித்தான அறியாமையை அகற்றும் பொருட்டு, நான் பின்வருமாறு கூறினேன்.

"அருண்! விமானம் இந்த புத்தகத்தில் இருக்கிற மாதிரி சின்னதா இருக்காது.
அது இந்த வீதி நீளத்துல இருக்கும்!".அதற்கு அவன், "ஓ..உண்மையாகவா?" என்று  கேட்டான்.அவனுக்குப் புதிய ஒரு செய்தியை சொன்ன மகிழ்ச்சியில்,
"உண்மை தான் அருண்..ஒரு நாள் நாம விமான நிலையம் போலாம். அங்க போனா நெறைய விமானம் பார்க்கலாம்!"
என்று சொன்னேன்!

நேற்று மாலை 6:30 மணி. மொட்டைமாடியில் படுத்து வானத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தோம் நானும் அவனும்.
தன் வகுப்பில் நடந்த நிகழ்ச்சிகளை  ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது விமானம் பறக்கும் சத்தம் கேட்டது.

அவனுக்கு விமானத்தைக் காட்டிக் கொண்டே சொன்னேன், "அருண்!! அதோ போகுதுல்ல அது தான் விமானம்! ".
இனி விமான நிலையம் போவது அவசியமில்லை என நினத்துக்கொண்டேன்.

அப்பொது அவன் "ஓ!! அது சரி அங்கிள். அந்த விமானத்தை நல்லாப் பாருங்க! அது புத்தகத்தில இருக்கிற மாதிரி சின்னதா தான் இருக்கு! ஏன் அது வீதி நீளம் இருக்குன்னு பொய் சொன்னீங்க?
இனி தப்பு தப்பா சொல்லிக்கொடுத்தா அம்மாகிட்ட சொல்லிடுவேன்" என்று சொன்னான்.அப்போது தான் கோபம் வந்தது எனக்கு.

என்ன ஒரு வில்லத்தனமான கேள்வி? .எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை!
இனி எது சொன்னாலும் அவன் நம்ப மாட்டான் என்பது உறுதி.
எதுவும் பேசாமல் ஒரு முடிவுக்கு வந்தேன் நாளைக்கே அவனைக்கூட்டிக் கொண்டு விமான நிலையம் போகவேண்டும் என்று.

Wednesday, August 24, 2011

ஒரு பொய்யாவது சொல் கண்ணே!

ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் (2)

பூக்களில் உன்னால் சத்தம்
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்
இதை தாங்குமா என் நெஞ்சம் (2)

பெண்மையும் மென்மையும் பக்கம் பக்கம் தான்
ரொம்ப பக்கம் பக்கம் தான்
பார்த்தால் ரெண்டும் வேறுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
உண்டால் ரெண்டும் வேறுதான்

இரவினை திரட்டி
கண்மணியின் குழல் செய்தாரோ (2)
நிலவின் ஒளி திரட்டி கண்கள் செய்தாரோ
விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு கை ரேகை செய்தாரோ
வாடை காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டு
தங்கம் தங்கம் பூசி தோள் செய்தாரோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தாரோ?

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே (2)
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே!
கங்கை கங்கை ஆற்றை,
கவிதைகள் கொண்டு தரும் காவிரி ஊற்றை,
கண்ணில் கையில் தந்தவள் நீதானே !

ஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ?
காதல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ?

குடிமகன்!

இரவு 9 மணி:
கோவை மாநகரத்துல, சரவணம்பட்டி ஒயின் ஷாப் பக்கத்துல நடந்த ஒரு உண்மை சம்பவம்!

கருவாப்பையன் என்கின்ற நம்ம கந்தசாமிக்கு ஏதோ ஒரு கவலை.
வருத்தத்தைக் குறைக்க நெனச்சு, வறுத்த கோழியும், ரெண்டு குவாட்டரும் ஆர்டர் கொடுத்தாரு.

பக்கத்து மேசையில, முக்காடு போட்டுட்டு இருக்கிறது யாருன்னு கொஞ்சம் துண்டை விலக்கிப் பார்த்தா ..
அட நம்ம கருவாட்டுக்கடை கோவிந்தராசு.
அவருக்கு கவலைன்னு ஒன்னும் இல்ல.
ஆனா, நாள் முழுக்க கருவாடு வாசம் பிடிச்ச அவருக்கு, வாய்க்கு ருசியா அதை சமைச்சுப்போட
யாரும் இல்லைன்னு,ஒரு குவாட்டருடன், கருவாட்டு மீனும் ஆர்டர்  கொடுத்தாரு. ஊருக்குள்ள
நல்லமனுசன்னு எல்லாரும் நினைக்கிறதால தான் அந்த முக்காடு!

இப்படி இருக்க, இதுவரை அறிமுகம் இல்லாத இந்த ரெண்டுபேரும் எதேச்சையா
பார்த்துகிட்டாங்க."எந்த ஊரு? என்ன பேரு?"னு ஆரம்பிச்ச பேச்சு, ரெண்டு பேரையும் ஒரே மேசைக்கு
வர வச்சுது. கோழியையும், கருவாட்டையும் மாறிமாறி பகிர்ந்து சாப்பிட்டாங்க.
மூனு பாட்டில் சரக்கும் நொடியில காலியானது.

போதை ஓவரா போக, விட்டுட்டு ஓடிப் போன தன் மனைவியை கோவிந்தன் சகட்டு மேனிக்கு திட்ட ,
தன் மனைவியைத்தான் பேசறான்னு பொங்கி எழுந்த நம்ம கந்தசாமி,
ஓங்கி ஒரு அறைவிட,அய்யோனு கத்தி விழுந்த கோவிந்தனுக்கு அடிச்சது யாருன்னு கூட தெரியல..

எவனோ பகையாளின்னு கைகளை சுத்தி இவரு கந்தசாமியை அடிக்க, ரணகளமானது ஒயின்ஷாப்.

காலையில 9 மணி
கருவாடு மார்க்கெட்:
மனைவியோடு கருவாடு வாங்க வந்தார் நம்ம கந்தசாமி.
கோவிந்தன் கடையைத் தாண்டிப்போகும்போது அவரை எங்கேயோ பார்த்த நியாபகம்.
கோவிந்தனுக்கும் அதே நியாபகம்.

அந்தக்கடையிலேயே கருவாடு வாங்கிட்டு, கந்தசாமி கோவிந்தன்கிட்ட கேட்டாரு ,"உங்க பேரு என்னங்க? இதே ஊரா?"னு!!

நீதி : "குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு!!"

Friday, August 19, 2011

நான் காப்பாற்றிய உயிர்

போன வாரத்தில், ஒரு மாலை நேரம்.
நான் எங்கள் தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்தேன்!
மஞ்சள் மற்றும் கரும்புப் பயிர்கள் மழைக்கு ஏங்குவதைப் பார்க்கும்போது வருத்தமாய் இருந்தது.

இரண்டு காவல் நாய்கள் அங்கு இருக்கின்றன.
என்னுடன் விளையாடும் அளவுக்கு அவைகளுக்கு நேரம் இல்லை என்பது எனக்கு தெரியும்.
ஆகவே அவைகளை நான் தொந்தரவு செய்வதில்லை.

சில கோழிக்குஞ்சுகளையும் அங்கு வளர்க்கின்றோம் பிற்கால இறைச்சியை நோக்கி.
மொத்தம் எட்டுக் குஞ்சுகள் இருக்கின்றன.தோட்டத்தில் அவை அங்கும் இங்குமாக எங்கும் சென்று இரைதேடினாலும்,
இறுதியாக கூண்டுக்குள் வந்துவிடும். அப்படி அவை கூண்டுக்குள் அடையும் போது,நான் எண்ணிக்கொண்டிருந்தேன்.
7 தான் இருந்தது.மீண்டும் எண்ணிப் பார்த்தேன். மாற்றம் இல்லை.

ஒன்றைக்காணவில்லை என்பது உறுதி.

எங்கள் நாய்களில் ஒன்று, இதுபோல கோழி வேட்டைகளில் ஈடுபடுவது தெரிந்த ஒன்று.
இன்று அது கட்டிவைக்கப்பட்டிருந்ததால், அது ஏதும் செய்திருக்காது என்ற
 நம்பிக்கையுடன் தோட்டம் முழுவதும்தேடிப்பார்க்க விரைந்தேன்.
எனது சத்தத்துக்கு மறு சத்தம் வரவே இல்லை..ஆகவே, கீழாக பார்வையை ஓட்டியபடி நடந்தேன்.

அய்யோ!
அங்கே இரத்தம் சொட்ட சொட்ட, கத்தக்கூட தெம்பு இல்லாமல் அந்தக்குஞ்சு கிடந்தது. இறக்கை, கழுத்து
என பல காயங்கள். நான் அப்படியே எடுத்துச் சென்று, சிறிது தண்ணீரை தெளித்தேன். உயிர் இருந்தது.

பின்னர் அதை வீட்டுக்கு எடுத்துவந்து, காயங்களுக்கு மருந்து வைத்தபிறகு தான் அது நடக்கத் துவங்கியது.

மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

என் அப்பா, காயங்களைப் பர்ர்த்தவுடன் சொன்னார், இது கீரி செய்த வேலை என்று.
தோட்டத்தில் உள்ள மீத குஞ்சுகளையும் வீட்டுக்கு கொண்டு வந்துவிடலாம் என முடிவு செய்தோம்.

அன்று இரவு, ஒரு உயிரைக்காப்பாற்றிய மகிழ்ச்சியில் நன்றாக உறங்கினேன்!!


தாலட்டு பாட்டு-2


தாலட்டுப் பாட்டு-1

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ!!

கண்ணே உறங்குறங்கு, என் கண்மணியே நீயுறங்கு!
பொன்னே உறங்குறங்கு, என் பூங்கிளியே நீயுறங்கு!

கண்ணை அடித்தார் யார்? எந்தன் கண்மணியைத் தொட்டார் யார்?
பொன்னை அடித்தார் யார்? என் பூங்கிளியைத் தொட்டார் யார்?

யாரடித்து கண்ணீர் ஆறாய்ப் பெருகியது?
எவரடித்து கண்ணீர் குளமாய்த் தேங்கியது?

மாமன் அடித்தனோ மல்லிகைப்பூ செண்டாலே?
அத்தை அடித்தளோ அரளிப்பூ செண்டாலே?
பாட்டி அடித்தளோ பால் புகட்டும் சங்காலே?
சித்தி அடித்தளோ சின்னஞ்சிறு விரலாலே?

 யாரடிச்சு நீ அழர? கண்ணே நீ கண்ணுரங்கு!
யாரடித்து கண்ணீர் ஆறாய்ப் பெருகியது?

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ!!

அம்மா பாட்டு

அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!

இலையில் சோறைப் போட்டு,
ஈயைத் தூர ஓட்டு!

உன்னைப் போல நல்லார்,
ஊரில் யாவர் உள்ளார்?

என்னால் உனக்குத் தொல்லை,
ஏதும் இங்கே இல்லை!

ஐயம் இன்றிச் சொல்வேன்,
ஒற்றுமை என்றும் பலமாம்!
ஓதும் செயலே நலமாம்!
ஔவை சொன்ன மொழியாம்!
அஃதே எனக்கு வழியாம்!

Thursday, August 11, 2011

தூய தமிழ்ச்சொற்கள்

 (ஏதேனும் வார்த்தைக்கு, தூய தமிழ் பொருள் வேண்டின், எனக்கு மின்னஞ்சல் செய்க)
முகூர்த்தம் - நல்வேளை
மோசம் - கேடு
யந்திரம் - பொறி
யாகம் - வேள்வி
யுத்தம் - போர்
ரகசியம் - மறைபொருள், குட்டு, பூடகம்
ருசி - சுவை
லாபம் - மிகை ஊதியம்
வாகனம் - ஊர்தி
வாதம் - சொற்போர், சொல்லாடல்
வாலிபர் - இளைஞர்
விபத்து - துன்ப நிகழ்ச்சி
விவாகம் - திருமணம்
வீரம் - மறம்
வேகம் - விரைவு
ஜனங்கள் - மக்கள்
ஜாக்கிரதையாக - விழிப்பாக
ஜென்மம் - பிறவி
 
அதீதம் - மிகை
அந்தரங்கம் - மறைவடக்கம்
அந்தரம் - பரபரப்பு
அந்தி - மாலை
அந்நியம் - வேறுபாடு, வேற்றுமை
அதிஸ்டம் - நல்வாய்ப்பு
துரதிஸ்டம் - பொல்லாத காலம், கெட்டகாலம் , தீய வாய்ப்பு
வருஷம் - ஆண்டு
நிமிஷம் - மணித்துளி
ஜனாதிபதி - அரச தலைவர்
போலிஸ் - காவல்துறை
போலிஸ்காரன் - காவல்துறையினர்
பூஜ்ஜியம் - சுழியம்
ராஜ்ஜியம் - அரசு
ஆலயம் - கோயில் 
சக்கரவர்த்தி - பேரரசன்
சந்தேகம் - ஐயம்
சபதம் - சூள்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சமீபம் - அண்மை
சச்சிதானந்தம் - மெய்யறிவின்பம்
சத்தியாக்கிரகம் - அறப்போராட்டம்
சந்ததி - வழித்தோன்றல்
சிகிச்சை - மருத்துவமுறை
சந்தர்ப்பம் - வாய்ப்பு
சம்பிரதாயம் - தொன்மரபு
சாபம் - கெடுமொழி
சாதாரண - எளிதான
சாட்சி - சான்று
சிங்காசனம் - அரியணை
சந்திரன் - மதி/நிலவு
சத்ரு - பகை
சப்தம் - ஒலி
சிநேகம் - நட்பு
சூரியன் - பகலவன்/ஆதவன்
நிசப்தம் - அமைதி
பந்தம் - உறவு
பௌர்ணமி - முழுமதி
மத்தியானம் - நன்பகல்
ராத்திரி - இரவு
லட்சியம் - இலக்கு
ஜன்மம் - பிறப்பு
ஜீவன் - உயிர்
உதயம் - எழுதல், காலை
உதாசீனம் - புறக்கணிப்பு
உதிரம் - குருதி
உபகரணம் - துணைக்கருவி
உபகாரம் - உதவி
உபத்ரவம் - ஊறு,தொந்தரவு
உபதேசம் - அறிவுரை
உபரி - மிகை
உபயோகம் - பயன்
உபாயம் - வழி
உற்சாகம் - விறுவிறுப்பு,ஊக்கம்
உல்லாசம் - உவகை
உஷார் - விழிப்பு
அபூர்வம் - அருமை
அவகாசம் - ஓய்வு
அவசரம் - விரைவு
அவசியம் - தேவை
அவயவம் - உறுப்பு
ஆகாயம் - வானம்
ஆபத்து - துன்பம்

நான்கு நண்பர்கள்

நான்கு நண்பர்கள் கூட்டாக பஞ்சு வியாபாரம் செய்து வந்தனர். அவர்களது பஞ்சுக்கடையில் ஏராளமான எலிகள் சேர்ந்து பஞ்சுப் பொதிகளை நாசமாக்கி விட்டன.

எலிகளை ஒழிப்பதற்காகப் பூனை ஒன்றை வளர்க்கலாம் என்று நால்வரில் ஒருவன் அபிப்பிராயம் சொன்னான். மற்ற மூவரும் அவன் கருத்தை ஆதரித்தனர்.

நால்வருமாகச் சேர்ந்து ஒரு பூனையை வளர்க்க ஆரம்பித்தனர். பூனை வந்ததிலிருந்து எலிகளின் உபத்திரவம் குறைந்தது. இதன் காரணமாக நால்வருக்கும் பூனையின் மேல் மிகுந்த அன்பு ஏற்ப்ட்டு விட்டது. பூனைக்குச் சகலவித உபசாரங்களும் செய்ய ஆரம்பித்தனர்.

அத்துடன் நில்லாமல் அதன் கால்களுக்குத் தண்டை கொலுசு முதலியன்வைகளை அணிவித்து அழகுபடுத்த நினைத்தார்கள்.

இதை நடைமுறைக்கு கொண்டு வரும்போது பல சிக்கலகள் வந்தன. எனவே வியாபாரிகள் நால்வரும் பூனையின் நான்கு கால்களை ஆளுக்கு ஒன்றாகப் பங்கிட்டுக் கொண்டனர். அவரவர்க்குச் சொந்தமான கால்களில் தங்களுக்கு விருப்பமான அணிகலன்களைப் பூட்டி மகிழ்ந்தனர்.

ஒரு நாள் பூனை நொண்டிக் கொண்டே வந்தது. இதைப் பார்த்த வியாபாரிகளில் ஒருவன் தன் நண்பனிடம், "நண்பா, உனக்குச் சொந்தமான காலில் அடிபட்டு விட்டது. ஜாக்கிரதையாக மருந்து போட்டு குணப்படுத்து" என்றான்.

அந்தக் காலுக்கு உரியவனும் பூனையின் காயத்தைத் துடைத்து எண்ணெய்த் துணியால் அதைச் சுற்றி வைத்தான்.

அன்று இரவு பூனை விளக்குப் பக்கம் போகவே அதன் காலில் சுற்றியிருந்த துணியில் நெருப்புப் பிடித்துக் கொண்டது. தன் காலில் சுற்றப்பட்டிருந்த துணியில் நெருப்புப் பிடுத்துக் கொண்டதும் பூனை மிரண்டு போய்ப் பஞ்சு மூட்டைகளின் மேல் ஓடியது. உடனே பஞ்சு மூட்டைகள் அனைத்திலும் நெருப்பு பிடித்துக் கொண்டது.

இதனால் அந்த பஞ்சு மூட்டைகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.

வியாபாரிகளில் மற்ற மூவரும் துணி சுற்றியவனைப் பார்த்து, "நீ எண்ணெய்த் துணி சுற்றி வைத்ததால் தான் இந்த நஷ்டம் ஏற்பட்டது. எனவே எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நீதான் கொடுக்க வேண்டும்" என்றனர்.

அவனோ தான் வேண்டுமென்றே செய்யவில்லை, எதிர்பாராவிதமாக நடந்து விட்டதற்குத் தன்னை மன்னிக்க வேண்டும் என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டான்.

ஆனால் மற்ற மூவரும் அவன் பேச்சைக் கேட்கவில்லை. பிரச்சனை மரியாதை ராமனிடம் சென்றது. மூவரும் பூனையின் இவனுக்கென்று பிரித்துக் கொடுக்கப்பட்ட கால்களால் தான் இத்தனை நஷ்டம். ஆகவே இவன் தான் அந்த நஷ்டத்தை தீர்க்க வேண்டும் என்று கூறினர்.

விஷயம் முழுவதையும் கேட்ட மரியாதை ராமன் இவ்வாறு தீர்ப்பு சொன்னான் 'பூனையின் ஒரு காலில் அடிபட்டுள்ளது. அந்தக்காலால் நடக்கவோ, ஓடவோ அதனால் முடியாது. அந்த சமயத்தில் அது மற்ற மூன்று கால்களால் தான் ஓடியிருக்க வேண்டும். எனவே உங்கள் மூவருக்கும் சொந்தமான கால்களால் ஓடித்தான் அது நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, நீங்கள் மூவரும் தான் இந்த நாலாமவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினான்.

வேறு வழியில்லாமல் மூவரும் நஷ்டத்தை பகிர்ந்து மீண்டும் கடையை நடத்த துவங்கினர். மரியாதை ராமனின் சமயோசிதமான தீர்ப்பை எண்ணி அனைவரும் மகிழ்ந்தனர்.

துறவி

ஒரு ஊரில் முற்றும் துறந்த முனிவர் ஒருவர் இருந்தார். அவருக்குப் பல சீடர்கள் இருந்தார்கள்.

அவர் தன் சீடர்களுக்குப் பல புத்திமதிகள் கற்பித்தார், முக்கியமாகப் பெண்களை மதிக்க வேண்டும், தவறான எண்ணத்துடன் பழகக் கூடாது, பெண்களைத் தெய்வமாக கருத வேண்டும், மற்றவர்கட்கு உதவ வேண்டும் என்றெல்லாம் பல நல்வழிகளைக் கற்பித்தார். அதன்படியே சீடர்களும் ஒழுக்கமானவர்களாகத் திகழ்ந்தார்கள்.

ஒரு நாள் முனிவர் ஒரு சீடனை அழைத்துக் கொண்டு, ஒரு ஆற்றின் வழியே போய்க் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பெண் ஆற்றில் விழுந்து விட்டார்.

அந்தப் பெண் "உதவி" "உதவி" எனக் கூக்குரலிட்டபடி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

சீடன் துறவியைப் பார்த்தான், துறவி எதுவுமே சொல்லவில்லை, எவ்வித சலனமுமில்லாமல் நடந்து கொண்டிருந்தார்.

சீடன் தாமதிக்கவில்லை, உடனே ஆற்றில் குதித்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றிக் கரையிலே போட்டுவிட்டு தொடர்ந்து துறவியுடன் நடந்தான்.

சிறிது தூரம் போனார்கள் துறவி எதுவுமே பேசவில்லை.

பின் துறவி சொன்னார், "என்ன இருந்தாலும் நீ அந்தப் பெண்ணைத் தொட்டுத் தூக்கியது சரியில்லை, எனக்கு அது பிடிக்கவில்லை" என்றார்.

அதற்குச் சீடன் சொன்னான், "குருவே, நீங்கள்தான் ஆபத்தில் மற்றவர்க்கு உதவ வேண்டும் என்று கற்றுத் தந்திருக்கிறீர்கள், நான் அந்தப் பெண்ணைக் காப்பாற்றிக் கரையில் போட்டதோடு சரி எல்லாம் மறந்துவிட்டேன், நீங்கள்தான் இன்னமும் அந்தப் பெண்ணைக் நினைத்துக் கொண்டு வருகிறீர்கள்" என்றான்.

இதைக் கேட்ட துறவி வெட்கித் தலைகுனிந்தார்.

Wednesday, August 3, 2011

இரு வல்லவர்கள்- நான் மலரோடு தனியாக!!

 படைப்பு          : கண்ணதாசன்
ஒலிவடிவம்  : (இங்கு சொடுக்கவும்)

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?
என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்.(2)

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்.
(நான் மலரோடு தனியாக ...)

நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?(2)

உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்?(2)
(நீ இல்லாமல்...)

பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத,
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட, (2)

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக,
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற!!(2)

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்.

(நான் மலரோடு தனியாக)