Thursday, September 15, 2011

மனிதனாய் வாழ வேண்டுமா?

இன்று காலை நான் படித்த இரண்டு குறுஞ்செய்திகள் தான் என்னை இந்த பதிப்பை வெளியிட தூண்டின.
வாழ்க்கை என்பது எப்படி இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம் ?
ஆனால் நடப்பது என்ன ? அதுபோலவே மனிதர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் ? அப்படி நல்லவராய் இருப்பவர்கள் உண்மையில் நல்லவர்களா? 

இது போல எத்தனையோ எதிரும் புதிருமாக எண்ணங்கள் வருவதை யாராலும் மறுக்க முடியாது.

"வார்த்தைகளை சுமப்பது தான் கவிதை - வருத்தங்களை சுமப்பது தான் வாழ்க்கை
கற்பனையோடு வாழ்பவன் தான் கவிஞன்- காயங்களோடு வாழ்பவன் தான் மனிதன் "

என்பது பாதி உண்மையே தவிர முற்றிலும் ஏற்க முடியாத ஒன்று. வாழ்க்கை என்பது ,காதலும் கண்ணீரும் சிரிப்பும் ஏக்கமும் கலந்த ஒரு அற்புத நாடகம்.
 அவை மாறி மாறி வருமே தவிர ஒரே மாதிரி நிச்சயமாக இருப்பது இல்லை.
அது போல கவலை இல்லாத மனிதன் இந்த உலகத்தில் இல்லை. அப்படி இருப்பவர்கள் இருவர் - குழந்தைகள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டோர் என் அறிஞர்கள் கூறுகிறார்கள்.அப்படி கவலை சுமக்கும் மனிதன் நினைக்க வேண்டிய வரிகள்
"ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியை வேண்டும் அளவுக்கு கவலை வேண்டும் என நினைப்பதில்லை.
மழை வேண்டாம் - வானவில் மட்டும் போதும் என்று நினைப்பது எப்படி சாத்தியம் இல்லையோ அதுபோலத்தான் இதுவும்.
ஆக,கண்ணீர் துளியோ , மழைத்துளியோ எதுவானாலும் ரசிக்கப் பழகிவிட்டால் வாழ்க்கை இனிப்பாகும்"

இனி மனிதர்களுக்கு வருவோம். கைகளில் உள்ள ஐந்து விரல்களும் ஒன்றுபோல இருப்பதும் இல்லை அதுபோல் உலகில் வாழும் அனைவரும்  நல்லவர்களாக இருப்பதில்லை  என்பது தான் உண்மை.ஆகவே யார் நல்லவர் அப்படி இருப்பவர் உண்மையில் நல்லவரா எனக் குழம்பாமல் வள்ளுவர் சொன்ன இந்த யோசனையை மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.

"குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்"

பொருள் :ஒருவரிடம் நல்லவை, தீயவை என குணங்களை நீ  கண்டாய் எனில் அவற்றில் எது மிகையாய் தெரிகிறதோ அதனை எடுத்துக்கொள்.

சிந்தித்து வாழுங்கள்- சிறப்பாய் வாழுங்கள்!!

"கண்ணுக்குத் தெரிந்த மனிதனை நீ மதிக்க மறந்து விட்டால், 
கண்ணுக்கு தெரியாத கடவுளை மனதார மதித்தும் பயன் இருக்க போவதில்லை"

என்பதை நினைத்து , நிம்மதியான வாழ்க்கையை அமைத்து வாழ அன்புடன் வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்