Friday, September 30, 2011

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி..

 யார் யாரோ எத்தனையோ சொற்பொழிவுகளிலும், மேடைகளிலும்,தொலைக்காட்சிகளில் அரைமணிநேர நிகழ்ச்சியாகவும்
விளக்கிக்கூறிய திருக்குறளை, இதுவரை எத்தனை தடவை நாம்
செவி மடுத்துக் கேட்டிருப்போம்?

பெரும்பாலான இளைய தலைமுறைகள் இது போன்ற நிகழ்ச்சிகளைக் கேட்பது அவமானம் எனவும்,தகுதிக்குறைவு எனவும் நினைப்பது ஏன்?

தமிழன் தானே நாமெல்லாம்? அதில் எவருக்கேனும் சந்தேகம் இருக்கிறதோ என்னமோ தெரியவில்லை.


மதம், மொழி,நாடு என அனைத்தையும் சமமாகப் போற்றி,
பொதுவான நெறியை அறுதியிட்டு கூறும் ஒரு மறைநூல் திருக்குறள்!

சிறுவயதில், மனப்பாடப் பகுதியாக திருக்குறள் வந்த காரணத்தால் ,
தவிர்க்க முடியாமல் , படித்து மனதில் பதியவைத்துக் கொண்டோம்.

அதனாலோ என்னமோ இன்றைய காலத்தில் திருக்குறள் புத்தகங்கள் பல வீடுகளில் ,ஏதோ காட்சிப்பொருளாகவே காணக்கிடைக்கிறது.

நானும் பல ஆண்டுகளாக திருக்குறளின் சிறப்பை அறியாதவனாய் காலத்தை கடத்தியுள்ளதை நினைக்கும்போது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது.

நம் வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக திருக்குறள் இருக்கிறது என்பதற்கு சில உதாரணங்கள் தர ஆசைப்படுகிறேன்.

1.எப்படி கற்க வேண்டும்?

 குறள் எண் : 391
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

விளக்கம்:
கல்வி என்பது யாதெனில் , நமது அறியாமையை உடைக்கும் உளி போன்றது.
ஆக, எதனைக் கற்பதானாலும்   சரி, அதனைக் குற்றமற கற்க வேண்டும்.
துளியேனும் அதனைப் பற்றிய ஐயங்கள் தோன்றாத அளவுக்கு தெளிவுடன்,பிழையின்றி கற்க வேண்டும்.
அப்படிக் கற்கும் கல்வியை கற்றதோடு விடாமல்,  கற்றவாறு நடைமுறையில் வாழ்ந்து
காட்டவேண்டும்.இதுதான் கற்றல் முறை என்று வள்ளுவர் கூறுகிறார் 

2. எதனைக் கற்க வேண்டும்?

எப்படி கற்க வேண்டும் என்று சொல்லிவிட்டோம்.எதனைக் கற்பது என்று சொல்லாவிட்டால்
அறிவுரை முற்று பெறாது என்று நினைத்த வள்ளுவர் , அடுத்த குறளில் அதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
 
குறள் எண் : 392

எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு


விளக்கம்:
உயிர்களாய்ப் பிறந்தவர்கள் உயர்வு பெற வாழ வேண்டும் எனில் கல்வி மிக அவசியம்.
அதிலும், "எண்களின் அறிவு சார்ந்த கல்வியும்,தமிழ் எழுத்துக்களை பிழையற எழுதவும் பேசவும்
கற்றுக்கொடுக்கும் கல்வியும், வாழ்க்கைக்கு மிகத்தேவையானவை. இந்த இரண்டையும் நம் கண்களைப்
போலக் கருத வேண்டும்" என்று அழகாகக் கூறுகிறார்.


இதுபோல, ஒவ்வொரு குறளும் அளவில்லாத கருத்துகளைத் தன்னகத்தே
கொண்டிருப்பதை நாம் உணர வேண்டும்.

அடக்கம்,ஒழுக்கம்,விருந்தோம்பல் முதலான அடிப்படைவாழ்க்கை அறங்களைப் பற்றி அறத்துப்பாலிலும் ,
நட்பு,அரசியல் முதலானவை பொருட்பாலிலும் ,காதலிப்பதன் அருமை , மணம் முடித்தபின் வாழ்வின் இனிமை ஆகியவற்றை இன்பத்துப்பாலிலும்,அற்புதமாக இருவரிக்கவிதைகளாக வடித்து வைத்திருக்கிறார் வள்ளுவர்.
அதனை படித்து இன்பமுறுவதற்கு நமக்கு வலிக்கிறது!

யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற  வேண்டியே இந்தப் பதிப்பினை வெளியிடுகிறேன்.
 நீங்களும் இதனை உணர்ந்து, புரிந்து கொள்ள திருக்குறளைப் படிக்கத் துவங்குங்கள்


படிக்க உதவும் கரங்கள் :

தினமலர்-குறள் அமுதம்
திருக்குறள் - பரிமேலழகர் உரை

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்