Monday, November 28, 2011

சின்னச் சின்னக் கவிதைகள்!

                                                     ஜில் ஜில் காதல்!
உச்சி முதல் பாதம் வரை
குச்சி ஐஸ் உருகுதடி-உன்
எச்சில் படாதா என்று..

                                                      அவள்!
அவள் வாய் திறந்து பேசியதை
நான் பார்த்துக் கொண்டிருந்தேன் வாயைத் திறந்து...

                                                       அன்பே!
இரவில் உன்முகம் காண விழையும் ஆவல் எனக்கும், நிலவுக்கும் ஒன்று தான்..!!
ஆனால்,
நிலவுக்குத் தடையாய் உன் வீட்டு மாடி..
எனக்குத் தடையாய் உன்னோட டாடி..!!!

                                                  தேவதையே!
உறக்கக் கலக்கத்திலே, பிரம்மன் உன்னைப் படைத்தானோ?
என் உறக்கத்தைக் கலைக்க!

                                    சின்னக்குயிலாய் என்னவள்!

காற்றினில் கலைந்தோடும் மேகங்களே!-தென்னங்
கீற்றினில் நுழைந்தோடும் தென்றல் காற்றே!
வயற்காட்டினில் பாய்ந்தோடும் ஓடை நீரே-எந்தன்
மூச்சினில் நிறைந்தவள் பாடுகிறாள்,நின்று
கேட்டபின் செல்லுங்கள் தோழர்களே!


- அன்புடன்!! இணையகவி

Thursday, November 24, 2011

உங்களின் நலனுக்காக!!

அனைவருக்கும் வணக்கம்.
தினம்தினம் நாம் எவ்வளவோ செய்திகளைப் படிக்கிறோம்.எத்தனையோ
நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம்! புதிய முகங்களை சந்திக்கிறோம்!
சில பாடங்கள்,சில அறிவுரைகள்,சில ஆதங்கங்கள்..இன்னும் எத்தனையோ!!
ஆக, ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியம் தான். அதைவிட, அந்தநாளில் நம் உடல்நலம் பேண நாம் என்ன செய்கிறோம்
என்பதும் முக்கியம்.

ரஞ்சன் தாஸ்! (முதன்மை செயல் அதிகாரி - SAP India)
42 வயதே ஆன இவர் கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி மாரடைப்பால் இவ்வுலக வாழ்வை நீத்தார்.




இத்தனைக்கும், அவர் தினமும் உடற்பயிற்சி செய்வதையும், நடைபயிற்சி செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.
அவரது மறைவிற்கு முக்கிய காரணங்கள்:
  • - அவரது உறக்கம் தினமுன் 4-5 மணி நேரம் மட்டும்.
  • -அதிக வேலைப் பளுவால் விளைந்த மன அழுத்தம்.
ஆக, கணினி பொறியாளர்கள் மற்றும் அனைத்து பிற பணியாளர்களும் இதனைக் கருத்தில் கொண்டு,தினமும் 7 மணி நேரம் உறங்காவிட்டால் அது நெருப்புடன் விளையாடுவது போன்றது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அடுத்த செய்தி, கொஞ்சம் அதிர்ச்சியளிக்கக் கூடியதும் நம்ப முடியாததுமாக இருந்தது எனக்கு.
பரோட்டா நீரழிவு நோயை உண்டாக்குகிறது. இது செய்தி.
இதன் முழு விவரம் இதோ.

"பரோட்டா செய்வதற்கு நாம் பயன்படுத்தும் மைதா மாவு, கோதுமை மாவினை பனசாயல் பெரோசிடே(benzoyl peroxide) கொண்டு வெண்மையாக்குவதன் மூலம் கிடைக்கிறது.

இந்த வேதிப்பொருள் தலைமுடிக்கு அடிக்கும் சாயத்தில் உள்ள ஒரு பகுதிப்பொருள்.

இது மாவில் உள்ள புரதத்துடன் சேர்ந்து நீரழிவுநோய்க்கு காரணமாகிறது", என்று அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்கள்.
மேலும் ஐரோப்பா,இங்கிலாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இந்த மைதா தடை செய்யப்பட்ட உணவுப்பொருள் என்பது கூடுதல் தகவல்.

மைதா, மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கிறார்கள் என்று இவ்வளவு நாளாக நினைத்திருந்தேன்.அது சரியா அல்லது இது சரியா என இப்போது குழப்பமாக உள்ளது.

ஆனாலும், பரோட்டா அவ்வளவு ஆரோக்கியமான உணவு இல்லை. அதில் நார்சத்து கிடையாது. ஆகவே அது சீரணத்துக்கு உகந்ததல்ல.
எது எப்படியோ குழந்தைகளின் உணவில், பரோட்டா,மற்றும் இதர பேக்கரி பதார்த்தங்களை தவிர்க்கவும்.

இன்றைய செய்தி இவ்வளவு தான். நாளை மீண்டும் சந்திப்போம்!



Tuesday, November 22, 2011

ஆடம்பர பயணம் - அலட்டல் இல்லாமல்!

காந்திபுரம் பேருந்து நிலையம் !!
தள்ளு வண்டிக்கடைகள் தங்கள் வியாபாரத்தில் மும்முரமாக இருக்க,
தங்கள் ஊருக்கு செல்லும் பேருந்தைத் தேடியபடி மக்கள் அலைந்துகொண்டிருந்த மாலை வேளையில்,கூட்டத்தைக் கடந்தபடி நானும் நடந்துகொண்டிருந்தேன்.
கார்த்திகைப்பனி கொஞ்சம் கன்னம் தொட்டது.

நான் எதிர்பார்த்த கோவை - கோபி பேருந்து, நிலையத்துக்குள் நுழைந்ததும் பலரின் கைக்குட்டைகள் பேருந்துக்குள் பறந்தன இடம் பிடிக்க..
எனக்கு அதில் விருப்பம் இல்லை (அப்போது என் கையில் கைக்குட்டை இல்லை) என்பதால், நான் வேகமாக பின் வாயிலில் ஏறி சாளர இருக்கை ஒன்றைப் பிடித்து அமர்ந்து கொண்டேன்.

நடத்துனருடன் நடக்கும் சில்லறை சம்பந்தமான சில்லறை வாதங்களை நான் விரும்பாததால், எப்போதும் சரியான பயணச்சீட்டு விலையை நான் எடுத்துச் செல்வது வழக்கம். 28ரூபாய். சரிபார்த்து எடுத்து, என் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு , சாளரக்கம்பிவழியே வேடிக்கை பார்க்கத்துவங்கினேன்!

பத்து நிமிடங்கள் கரைந்தன.

காலையில் 'பேருந்து பயணச்சீட்டு மற்றும் பால் விலையை உயர்த்தி விட்டார்கள்', என்ற செய்தியைப் படித்தது நினைவுக்கு வந்தது .
இது அவ்வப்போது நடக்கும் ஒன்று என்றாலும், புதிய விலையை அறியும் ஆவல் அதிகரித்தது..கிட்டத்தட்ட அனைவரின் முகத்திலும் அதே எதிபார்ப்பு.

முகத்தில் புன்னகை தவழ நடத்துனர் உள்ளே நுழைந்தார்.அவர்
கையில் வைத்திருந்த பையில் இருந்து வரும் வழக்கமான சில்லறை சத்தம் சுரம் குறைந்து கேட்டது!
கரகரப்பான குரலில்,"பயணச்சீட்டு விலை 49 ரூபாய்.அனைவரும் சரியான சில்லறை எடுத்து வைக்கவும்" என்று சொன்னதும் அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி அலை!
ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் என்றால் பரவாயில்லை! ஒரேயடியாக 21 ரூபாய் ஏற்றி இருப்பது சராசரிக் குடிமகனுக்கு விழுந்திருக்கும் பெரும் இடி எனவே தோன்றியது.
என் அருகினில் அமர்ந்த ஒரு அரசுப்பணியாளர் இந்த விலையேற்றத்தின் காரணத்தை விவரிக்கத்துவங்கினார்.
"பொதுத்துறை தனக்கென வருவாய் மீதம் இல்லாமல், அரசிடம் கடன் வாங்கும் நிலையில் இருப்பது வேதனை அளிக்கிறது.ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தினசரி மீத வருமானமும் குறைக்கப்பட்டுள்ளது.
பலரும் ஆட்சியைக் குறை சொல்கிறார்கள்! அது நியாயம் இல்லை.
வாகன எரிபொருள் விலை கொஞ்சம் கொஞ்சமாக ஏறியபொழுதே, பயணச்சீட்டு விலையை அரசு உயர்த்தி இருக்க வேண்டும்.
ஆனால், மக்கள் தம் ஆட்சியை நல்லாட்சியாகக் கருதவேண்டி, கடந்த அரசு, பொதுத்துறைக்கு இழப்பினை ஏற்படுத்தியுள்ளது!!
ஆக, இதன் பிறகு வரப்போகும் விலை ஏற்றத்துக்கும், காரணம் இருக்கிறது. அரசு மக்களை ஏய்த்து எதையும் அதற்கென ஈட்டப் போவதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்!!" என்றார்.

அவர் சொன்னதுபோல,அரசியல் பின்னணியை அலசிப்பார்க்கும்போது விலையேற்றியதில் தவறொன்றும் இல்லை எனவே தோன்றுகிறது.
ஆனாலும் அடித்தட்டு மக்களை நினைக்கும் போது வருத்தமாய் இருக்கிறது!!
அரசியல்வாதிகள் இதனைப் புரிந்துகொள்வார்களா!!
(இருக்கும் வரை இருப்பதைக் கொள்ளையடித்து, வரப்போகும் தன் சந்ததிக்கு சொத்து சேர்க்கும்
உள்ளங்களே!! உங்களால் பலர் சந்ததியிழந்து நிற்கின்றார்கள்! உணர்ந்துகொள்ளுங்கள்!!)

நீண்ட நேர பயண முடிவில் வீடு வந்து சேர்ந்தேன்.

                                      <<பயணம் முடிந்தது>>



Friday, November 18, 2011

படித்ததில் பிடித்தது! - நான் தொலைத்த வாழ்க்கை

[இணையத்தில் படித்த கவிதை இது. பொருள் மாறாமல்,
கவிதை நடைக்காக சில வரிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது]

வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !

சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை மொத்தமும்
தொலைந்து போகுமோ!!-இது
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

நினைத்த நொடியில்
இதயம் நனைக்கும்
இந்த இனிய வாழ்வு -இனி
இளைய தலைமுறைக்குக் கிடைக்குமா ?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
எவனடா?
இருந்தால்
அவன் போல சொர்க்கம் கண்டவன் யாரடா!


 

Friday, November 4, 2011

அம்மா என்னும் தமிழ் வார்த்தை

அண்ணா பல்கலைக் கழகத்தில் தமிழறிவு மணியன் அவர்கள் ஆற்றிய 'தழிழுக்கு தலைவணக்கம்' எனும் சொற்பொழிவிலிருந்து...


நம் வீட்டில் கூட தற்போது தமிழில் பேசுவதை மறந்து விட்டோம். குழந்தைகள் பெற்றோரை 'மம்மி, டாடி' என்று தான் அழைக்கின்றனர். ஆனால் தமிழில் 'அம்மா' எனும் வார்த்தை எப்படி உருவானது என்பது பலருக்கு தெரியாது.

அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதால் முதல் எழுத்தாக 'அ' எனும் உயிர் எழுத்தையும், உயிர் வளர மெய் (உடல்) தேவை என்பதால் 'ம்' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும், 10 மாதம் கழித்து உயிர், மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் 'மா' எனும் உயிர் மெய் எழுத்தை வைத்துள்ளனர்.

அதே போன்று தான் 'அப்பா' என்ற சொல்லும் அமைத்துள்ளது. இதில் தாய் மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற சொல்லில் 'ம்' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அப்பா எப்போதும் வலிமையானவர் என்பதால் அதில் 'ப்' எனும் வல்லின எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழ் என்பது பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ள மொழி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.