Thursday, December 29, 2011

சார்...ஒரு உதவி ! நன்றி சொல்லனும்!

"உன்னை நான் பார்த்ததும் இல்லை,
என்னை நீ பார்க்கவும் இல்லை,பின்பு
எதற்காகத் துடிக்கிறாய்-நான் வாழவேண்டும் என்று ?"

என்ன கைமாறு செய்வதெனத் தெரியாமல் ஒரு கவிஞன், தன் இதயத்தைப் பார்த்து தொடுத்த வினா இது.

நானும் நினைத்துப் பார்க்கிறேன்.எனக்கு உதவியவர்களை.
சில பேர் கண்முன் வருகிறார்கள்.நன்றிக்கடன் செலுத்த நினைத்த என்னிடம் .இதையெல்லாம் பெரிதாக்காதே! நமக்குள்ள என்ன கைமாறுகள்?" என பூரித்து கண்ணீர் சிந்தியவர்கள் பலர்.நன்றி வேண்டாம்,கடன் மட்டும் போதும் என
வாங்கி மறைந்தார்கள் சிலர்.

ஆனாலும் கொஞ்சம் ஆழமாக எண்ணிப் பார்க்கும்போது, நமக்கு உதவியவர்கள் பட்டியல் நீள்கிறது.பயணச்சீட்டு வாங்கிக் கொடுத்தவர்,அடுத்த தெரு வரை சென்று வண்டியில் இறக்கி விட்டவர்,அடிபட்டுக் கிடந்தபோது அவசரமாய் மருத்துவமனையில் சேர்த்தவர்,அவசரமாய் தொலைபேசி எண் எழுத பேனா கொடுத்தவர்,வங்கியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உதவியவர்...இன்னும் எத்தனையோ பேர்.

அறிமுகம் இல்லாத இவர்களுக்கு நான் என்ன செய்யப் போகிறேன்?
மீண்டும் என் வாழ்வில் இவர்களை சந்திப்பேனா? தெரியாது. ஆனால் உதவிகள் பெரிது தான்.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது (101)

உண்மை தான்.ஒன்று மட்டும் என்னால் முடியும்.
உதவி என்றால், தெரிந்தவர்க்கு, உறவுகளுக்கு மட்டுமே செய்தல் என்ற மாய எண்ணத்தை முதலில் விலக்க வேண்டும்.
இந்த உதவிகளை அறிமுகம் இல்லாத மற்றவருக்கு செய்ய வேண்டும்.

இதனால் உங்களுக்கு சொல்லும் செய்தி யாதெனில்,

"மற்றவர் செய்த உதவிகளை சற்றே நினைத்துப் பார்க்கும் ஒருவன்,
சுயநலம்,பொறாமை,கர்வம் போன்ற சிறு சிறு உணர்வுகளுக்கு அடிமையாக மாட்டான்"

"பேசறவன் ஆயிரம் பேர் எனில் ,செய்பவன் ஆறு பேர்தான்" நாம் எந்தப் பக்கம்? முடிவு உங்கள் கையில்.


Friday, December 23, 2011

"வெடி" வெள்ளி


இன்றைய பதிவினை ஒரு அறிவுரையுடன் ஆரம்பிக்கலாம்.

"காதல் திருமணம் செய்யுங்கள்
ஆனால் பெற்றோறை எதிர்த்து திருமணம் செய்யாதீர்கள்......
செய்தால் அது காதல் திருமணம் அல்ல.
ஏனெனில்,
இன்றுவரை காதலித்த பெற்றோரின் உண்மைக்காதல் புரியாத
உங்களுக்கு உங்கள் காதல்
புரிந்திருக்க வாய்ப்பில்லை!
"

இந்த சின்ன அறிவுரை புரியாமல் பலர் பலரை, கண்ணீரில் மிதக்கவிட்டிருக்கிறார்கள்! இனியும்
வேண்டாமே!

சரி. நான் சொல்ல வந்ததே வேறு.
இந்த வாரம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பரபரப்பான வாரம்.

சோ மற்றும் உளவுப்படையின்
உதவியால், பல உண்மைத்தகவல்கள் வெளிவந்ததால், "சினேகிதியே" என்று முதல்வரைப் புகழ்ந்த உயிர் தோழி,
"ஒய் திஸ்  கொலவெறி டி" எனப் பாடும் அளவுக்கு அதிரடியாக விரட்டப்பட்டார். அடுத்த முதல்வர் கணிப்பு,
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது என தினம் தினம் அடுக்கடுக்காக காரணங்கள் குவிகின்றன.இது எங்கு முடியும் என
இந்த வருட முடிவுக்குள் தெரியவரும்.



நன்றாக இருக்கின்ற முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் எனக் கொக்கரிக்கும் கேரள அரசினை, தமிழ் புலிகள் மிரள வைத்துக்
கொண்டிருக்கின்றன.மத்திய அரசின் தலையீடு இதுவரை இல்லை என்பதால், இது பெரும் வன்முறையாக வெடித்துவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது.விரைவாக எதாவது ஒரு முடிவுக்கு வர வேண்டும். பார்க்கலாம்.

அதை எல்லாம் விட, முக்கிய செய்தி.



அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! கொண்டாடி மகிழுங்கள்!! அடுத்தவாரம் சந்திப்போம்!

(நான் சொந்த ஊர் செல்ல இருப்பதால் நேரம் கருதி, இந்தச் செய்தி இத்தோடு முடிகிறது)


Friday, December 16, 2011

சொல்லக்கூடாத ரகசியங்கள்

இன்று காலையில் என் நண்பனிடமிருந்து வந்த குறுஞ்செய்தியுடம் பதிவை தொடங்குகிறேன்.
"என்னைத் தாண்டி செல்லும் போதெல்லாம் திரும்பிப் பார்ப்பாள்!
இப்போது தான் தெரிந்தது,
அவள் திரும்பி மட்டும் தான் பார்த்தாள்-விரும்பிப் பார்க்கவில்லை என்று!"

இந்தக் காதல் வந்தாலே இப்படித்தான். அத விடுங்க.

இன்றைய தினமலர் செய்திப்பக்கத்தில் படித்த ஒரு பயனுள்ள தகவலை
அனைவரிடமும் பகிர்வதில் மகிழ்ச்சி.
யாரிடமும் சொல்லக்கூடாத 8 ரகசியங்கள் :
  1. ஒருவரது வயது
  2. பணம் கொடுக்கல் வாங்கல்
  3. வீட்டு சச்சரவு
  4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்
  5. கணவன்-மனைவி அனுபவங்கள்
  6. செய்த தானம்
  7. கிடைக்கும் புகழ்
  8. சந்தித்த அவமானம்
இதுவரை பின்பற்றவில்லை எனில் இனிமேல் இவற்றை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
பேருந்து கட்டண உயர்வு பற்றி மக்களின் அரசல் புரசல் பேச்சுகள்
இப்போது அடங்கி விட்டது.மறுபடியும் எரிபொருள் விலை உயர்கிறது என்ற செய்தி வருத்தமளிக்கிறது.
இருப்பினும், "குடிமகன்"கள் வருத்தப்படும் அளவுக்கு, சரக்கு விலை அதிரடியாக உயர்த்தப்படும் என்ற செய்தி ஆறுதல்
அளிக்கிறது (அந்த விலையேற்றத்திற்கு எதிர்ப்பு போராட்டங்கள் வராது என்பதால்.)
எப்படியோ இந்தியப் பொருளாதாரம் முன்னேறினால் மகிழ்ச்சி தானே!

குழந்தைகளுக்கு சொல்ல கதைகள் இல்லையா? இது உங்களுக்காக..அதுவும் ஆங்கிலத்தில் அவர்களுக்கு சொல்லவும்,
படங்களுடன் காண்பிக்கவும் ஒரு தளம் இருக்கிறது.
இதில் பலவித விளையாட்டுகள்,பாடல்கள் என அனைத்தும் இருக்கிறது.
குழந்தைகளின் ஓய்வு நேரத்தை இது போன்ற பயனுள்ள தளங்களில் செலவிட வைத்தால்,தொலைக்காட்சி மோகம் அவர்களுக்கு குறையும் அல்லவா?
தள_முகவரி: http://www.kidsone.in/tamil/

Wednesday, December 14, 2011

கொங்கு நாடு - பொடிநடை பயணம்!

நான் எனது சொந்த ஊரிலிருந்து, கோவை வந்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிறது.என் நகர வாழ்க்கை பற்றி கிராமத்தில் அதிசயமாகப் பேசுவதைப்பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது எனக்கு.

"இக்கரைக்கு,அக்கரை பச்சை" என்பது பழமொழி மட்டுமல்ல, நிஜ மொழியும் தான்.

நேற்றோடு, என் முதல் பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்து விட்டது.மிக்க மகிழ்ச்சி.கொண்டாட வேண்டுமே என்று நினைத்ததன் விளைவாக, படம் பார்க்கலாம் என முடிவெடுத்தேன்.

பேருந்தில் இருந்து இறங்கி, திரையரங்கு நோக்கி நடக்கத்துவங்கினேன்.

அது ஒரு பிரபல சாலை.எப்போது அதிக கூட்டம் அலைமோதும் இடம்.
போன வாரம் பார்த்தபோது, சுவர்களில் வெற்றிலை எச்சில் கறைகள்,விளம்பர சுவரொட்டிகள்,சாலையோரக்கடைகளின் எச்சில் இலைகள் சகிதமாக காட்சியளித்தது.இன்று பெரிய மாற்றம்.

கூட்டம் மாறவில்லை.சுவர்கள் சுத்தமாக இருக்கின்றது. எப்படி? விடை தெரிந்ததும் சிரிப்பதா? பாராட்டுவதா? என தெரியவில்லை.சுவர்களில் பல்வேறு மதங்களின் சின்னங்களும்,கடவுள் உருவங்களும் பதிக்கப்பட்டிருந்தது.கடவுள் எதைத் தடுக்கிறாரோ இல்லையோ அந்த சுவற்றைப் பாதுகாக்கிறார். நல்ல முயற்சி.

மாலை 6.30 காட்சி நேரம்.மயக்கம் என்ன திரைப்படம்.

விமர்சனம் நிறைய படித்திருப்பீர்கள்.ஆக, கதை பற்றி அதிக விவாதம் தேவையில்லை என் நினைக்கிறேன்.


ஒருவரியில் சொல்லப் போனால், "முயற்சியுடையார்-இகழ்ச்சியடையார்!"
அடுத்த வரியில் சொன்னால், "ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே"- இங்கு முதல் ரகம்.
மூன்றாம் வரியில் சொல்லச் சொன்னால்,"சித்திரமும் கைப்பழக்கம்" - இது கேமராவிற்கும் பொருந்தும்.

படம் முடிந்த பின்னர் வேகமாக வெளியே வந்தேன். இல்லையெனில் வாகனங்களுக்குள் புழுபோல நெளிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதால்.

எனது கைப்பேசியில், இரண்டு மூன்று தவறிய அழைப்புகள்(தவறவிட்ட அழைப்புகள்). இப்போது பேசும் மனநிலையில் இல்லை.பேருந்து பிடித்து அறைக்கு விரைவாகச் செல்ல வேண்டும்.இப்போதே மணி 9.20யைத் தொட்டு விட்டது.

20 நிமிடப் பயணம். இன்று இரவு எங்கு சாப்பிடலாம் என நினைக்கையில், கண்களில் பட்டது ஒரு உணவகம்.

இன்று அங்கு சாப்பிடுவது தான் சரியாக இருக்கும்.ஏனென்றால், பணியில் சேர்ந்த முதல்நாள், இரவு உணவு அங்கு தான் சாப்பிட்டேன்.தரம் சற்று குறைந்திருந்தது.ஒரு வருடம் ஆகிவிட்டது. எவ்வளவோ மாற்றம்.

நடக்கத் துவங்கினேன்.அந்த வழி நெடுக்க ஏராளமான உணவகங்கள் இருக்கின்றன.கிட்டத்தட்ட அனைத்து கடைகளிலுமே நான் சில நாள் வாடிக்கையாளனாக இருந்திருக்கின்றேன். இப்போதும் அப்படித்தான்.

எங்கள் ஊரில் இருந்த நாட்களில் ஏதாவது ஒருநாள் தான் "ஓட்டல் உணவு".அது பெரும்பாலான நேரம் பரோட்டாவவாகத் தான் இருக்கும்.
ஆக,அப்போதெல்லாம் ஓட்டல் என்றாலே பரோட்டா தான்  கண்முன் வரும்.ஆனால், இங்கு வந்த பிறகு உணவகங்களின் பல வகை உணவுகளைப் பற்றி அறிந்து கொண்டேன்.
  • ஒரு கரண்டி மாவினை அப்படியே ஊற்றி,ரெண்டு திருப்பு திருப்பிக் கொடுத்தால் வீட்டு தோசை.
  • அதே மாவினை, ஊற்றிய பின்னர் கல்லில் பரவவிட்டு எடுத்தால், சாதா தோசை. நல்லா வெந்து மொறுமொறு என இருந்தால் "ஸ்பெஷல் தோசை"
  • இரண்டு கரண்டி மாவினை பெருசா ஊத்தி எடுத்தா ஊத்தாப்பம்.(சில மிகைத் துணைகளை சேர்த்து, வெங்காய ஊத்தாப்பம், தக்காளி  ஊத்தாப்பம், முட்டை ஊத்தாப்பம், என நிறைய இருக்கு)

இது போல முட்டை உணவுகளிலும் பல ரகம்.
  • முட்டையை கல்லில் உடைத்து விட்டு, ஒருபக்கம் வேக விட்டுக் கொடுத்தால் ,ஆஃபாயில்.
  • அதை இரண்டு புறமும் வேக வைத்தால் ஃபுல்பாயில்.
  • வெங்காயம்,கொத்தமல்லி சேர்த்து கொஞ்சம் வேக விட்டால், ஆம்லெட்.
  • அதே வெங்காயத்துடன்,முட்டையை ஒரு பக்கம் வேக விட்டு, மடித்துக் கொடுத்தால் அது கலக்கி.
இப்போது எனது சிறுவயது சிறப்பு உணவு - பரோட்டா.
  • சில்லி பரோட்டா
  • வீச்சு பரோட்டா
  • முட்டை வீச்சு பரோட்டா
  • முட்டை பரோட்டா
  • கொத்து பரோட்டா
இது போல நிறைய இருக்கின்றன.எல்லாமே நான் சுவை பார்த்து விட்டேன்.

வெளி உணவுகள் உடலுக்கு நல்லதில்லை தான்.வேறு வழியில்லை. சமைக்கும் வசதி அறையில் இல்லை என்பதால் பொறுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.

வீட்டை விட்டு வெளியே வந்து, காசுக்காக உழைத்து வாழ்கின்ற பல இளைஞர்களுக்கு,இது போன்ற சிறு உணவகங்கள் தான் உறவினர்கள் வீடு போல.காசு கொடுக்கிறோம் அது மட்டும் வேறுபாடு.

எனது அறைக்கு வெகு அருகில் பெட்டிக்கடை ஒன்று இருக்கிறது.
பல பன்னாட்டு நிறுவனங்கள் அருகில் இருப்பதால் இரவில், சிகரெட் வியாபாரம் அங்கு ஜோர்.

சற்று தள்ளி ஒரு ஜோடி நின்று கொண்டிருத்தது.பெண்ணிற்கு சம உரிமை கொடுக்கிறான், புகைக்கையில். இருவரின் இழுப்பில், சாம்பலாய் இறக்கிறது அந்த சிகரெட்.

கலாச்சார சீர்கேடு இது தானோ!! அதிர்ச்சி தெளியாமலே அறையை அடைந்தேன்.


எப்போது உறங்கினேன்? தெரியவில்லை..

திரைகடல் ஓடியும், கலாச்சாரத்தைக் கெடுக்காத,உறவுகளைப் பிரிக்காத திரவியம் தேடு!!

யாராவது என் பேனாவைப் பார்த்தீங்களா?

"அம்மா! இங்க வச்சிருந்த என்னோட பேனா எங்க?".
"அந்த மேசை மேல தான் இருந்துச்சு! நால்லா தேடிப் பாரு!!".
நானும் அரைமணிநேரமாகத் தேடுகிறேன்.கிடைக்கவில்லை.

ராசியான பேனா! எவ்வளவோ ஸ்டைலா புது புது பேனா வந்தாலும்,
இந்த பேனா மேல எனக்கு காதல் அதிகம்!ஐந்து வருட பிணைப்பு எங்களுக்குள்! அழகான என் எழுத்துக்கள் என்றும் அழகாக இருக்க வேண்டி, என் அப்பா வாங்கித்தந்த பேனா அது.

அந்தப் பேனாவினால் எழுதத் துவங்கினாலே,எழுத்துக்கள் உயிர் பெற்றது போல எனக்குள் உணர்வு வரும்.அது விவரிக்க முடியாத இன்பம்!
அந்தப் பேனாவைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

"பேனா கிடைச்சுதா?" என்ற கேள்வியோடு அம்மா என் அறைக்குள் வந்தாங்க.
இருவருமாக அலமாரி,மேசை,படுக்கை என எல்லா இடங்களிலும் தேடினோம்.

சிறிது நேரத்துக்கு பிறகு, ஏதோ நியாபகம் வந்தது போல, "அடடா..மறந்தே போய்ட்டேன்!நீ காலையில ஆபிஸ் போனதுக்கு அப்புறம், காமாட்சி அக்கா வந்துச்சு. ஏதோ அவங்க பொண்ணுக்கு லோன் வாங்க விண்ணப்பம் பூர்த்தி செய்யனும்னு பேனா கேட்டுச்சு. நானும் அந்த பேனாவை எடுத்துக் குடுத்திட்டேன்.இன்னும் கொண்டு வந்து தரலை..நானும் வேலையா இருந்ததால, மறந்தே போய்ட்டேன்!!","அந்த பேனாவை எதுக்குமா
குடுத்த?" என்று கூறிவிட்டு கோபத்தோடு வாசலை நோக்கிச் சென்றேன்."மணி ஆறு ஆகிடுச்சு! அவங்க வீட்டுக்கு வந்திருப்பாங்க!
போய் வாங்கிட்டு வந்துடு..இனிமே நான் யாருக்கும் குடுக்கல டா! கோபப்படாதே!",என்ற அம்மாவின் குரல் வாசல் வரை கேட்டது.

காமாட்சி அக்கா வீடு, எங்க வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருக்கிறது.எங்க தெருவில் மொத்தமே 6 வீடுகள் தான், அதில் படிச்ச உயிர்கள் ரெண்டு பேர் தான். ஒன்னு நான். இன்னொன்னு, காமாட்சி அக்கா பொண்ணு யமுனா.நான் படிச்சு முடிச்சு வேலைல இருக்கேன். யமுனா கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கிறாள்.நல்ல குடும்பம்.

லேசான பனிக்காற்று, கார்த்திகை மாதம் என்பதை நினைவுப்படுத்தியது.
காமாட்சி அக்கா வீட்டுக்கு வெளியே கொடியில் காய்ந்த துணிகளை எடுத்துக்கொண்டிருந்தார்.
என்னைப்பார்த்ததும்,"தம்பி! வாங்க.இப்ப தான் யமுனா கிட்ட சொல்லிட்டு இருந்தேன்.உள்ள வாப்பா!",நான் வாசலில் நுழைந்தபோது அடுத்த கட்டளை,"யம்மு!!! குமார் அண்ணனோட பேனாவை எடுத்துட்டு வா!" என்று சொல்லியபடிதுணிகளை எடுத்துக்கொண்டு அறைக்குள் போய்விட்டார்.

"அண்ணா! எப்படி இருக்கீங்க?",இது யமுனா."நல்லா இருக்கேன் யம்மு.
காலேஜ் எப்படிப் போகுது?"என்றபடி பேனாவை வாங்கிகொண்டேன்."காலேஜ் ஜாலியா போகுது.பரீச்சை வந்தா தான் கடுப்பா இருக்கும்!" ,"அது அப்படித்தான். கல்லூரி முடிச்சதுக்கு அப்புறம்,இந்த எரிச்சல் கூட சிரிப்பூட்டும்!"என்றேன்.அவள் சிரித்தாள்.

சிறிது நேரப் பேச்சுக்குப் பின்னர், காமட்சி அக்கா கொடுத்த தண்ணீரை பருகிவிட்டு வெளியே வந்தேன்.

பேனா எனது சட்டைப் பையில்.

வீடு வந்து சேரும் போது மணி 7. ஒரு கதை எழுத நினைத்து தான் அந்த பேனாவைத்தேடினேன்.உடை மாற்றிக்கொண்டு, வெள்ளைத்தாளுடன் மொட்டை மாடியில் அமர்ந்து யோசிக்கத்துவங்கினேன்.

"வந்து சாப்பிடு டா! மணி எட்டாகப் போகுது." அம்மாவின் குரல் கற்பனைகளைக் கலைத்து விட்டது. "இப்ப தாம்மா வந்தேன்.அதுக்குள்ள என்னசாப்பாடு?பசிக்கல.நான் அப்புறமா சாப்பிடுறேன்!",என்றேன் கோபமாக. அப்படி சொன்னேனே தவிர பசி வயிற்றைக் கிள்ளியது.ஒரு வரியாவது எழுதிவிட்டு சாப்பிடப் போலாம் என அமர்ந்திருந்தேன்.

நிலா,வானம்,நட்சத்திரம்,மேகம் எனப்பார்த்த எனக்கு,கதை எழுதும் எண்ணம் மாறி, கவிதை எழுதத் தோன்றியது.

"நிலவே! உனக்கும் எனக்கும் இடையில் உணர்வுப்பாலமாய் என் கவிதை" எனத்துவங்கிய போது பசி உணர்வு மேலோங்கிவிட்டது. பேனாவையும், தாளையும் மேசை மேல் போட்டுவிட்டு அவசர அவசரமாக
சாப்பிடச் சென்றேன்.உண்ட மயக்கம். உடனடி உறக்கம். 

காலை எழுந்து அலுவலகம் செல்லும் அவசரத்தில்
இரவு நடந்த கவிதை முயற்சி மறந்தே போய்விட்டது.

மாலையில் வீட்டுக்கு வந்த உடன் மீண்டும் தேடினேன்.
"அம்மா! இந்த மேசை மேல வச்சிருந்த என் பேனாவை பார்த்தீங்களா"!!

மறதி, நம் தேசிய வியாதி - கமல்ஹாசன்