Thursday, December 29, 2011

சார்...ஒரு உதவி ! நன்றி சொல்லனும்!

"உன்னை நான் பார்த்ததும் இல்லை,
என்னை நீ பார்க்கவும் இல்லை,பின்பு
எதற்காகத் துடிக்கிறாய்-நான் வாழவேண்டும் என்று ?"

என்ன கைமாறு செய்வதெனத் தெரியாமல் ஒரு கவிஞன், தன் இதயத்தைப் பார்த்து தொடுத்த வினா இது.

நானும் நினைத்துப் பார்க்கிறேன்.எனக்கு உதவியவர்களை.
சில பேர் கண்முன் வருகிறார்கள்.நன்றிக்கடன் செலுத்த நினைத்த என்னிடம் .இதையெல்லாம் பெரிதாக்காதே! நமக்குள்ள என்ன கைமாறுகள்?" என பூரித்து கண்ணீர் சிந்தியவர்கள் பலர்.நன்றி வேண்டாம்,கடன் மட்டும் போதும் என
வாங்கி மறைந்தார்கள் சிலர்.

ஆனாலும் கொஞ்சம் ஆழமாக எண்ணிப் பார்க்கும்போது, நமக்கு உதவியவர்கள் பட்டியல் நீள்கிறது.பயணச்சீட்டு வாங்கிக் கொடுத்தவர்,அடுத்த தெரு வரை சென்று வண்டியில் இறக்கி விட்டவர்,அடிபட்டுக் கிடந்தபோது அவசரமாய் மருத்துவமனையில் சேர்த்தவர்,அவசரமாய் தொலைபேசி எண் எழுத பேனா கொடுத்தவர்,வங்கியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உதவியவர்...இன்னும் எத்தனையோ பேர்.

அறிமுகம் இல்லாத இவர்களுக்கு நான் என்ன செய்யப் போகிறேன்?
மீண்டும் என் வாழ்வில் இவர்களை சந்திப்பேனா? தெரியாது. ஆனால் உதவிகள் பெரிது தான்.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது (101)

உண்மை தான்.ஒன்று மட்டும் என்னால் முடியும்.
உதவி என்றால், தெரிந்தவர்க்கு, உறவுகளுக்கு மட்டுமே செய்தல் என்ற மாய எண்ணத்தை முதலில் விலக்க வேண்டும்.
இந்த உதவிகளை அறிமுகம் இல்லாத மற்றவருக்கு செய்ய வேண்டும்.

இதனால் உங்களுக்கு சொல்லும் செய்தி யாதெனில்,

"மற்றவர் செய்த உதவிகளை சற்றே நினைத்துப் பார்க்கும் ஒருவன்,
சுயநலம்,பொறாமை,கர்வம் போன்ற சிறு சிறு உணர்வுகளுக்கு அடிமையாக மாட்டான்"

"பேசறவன் ஆயிரம் பேர் எனில் ,செய்பவன் ஆறு பேர்தான்" நாம் எந்தப் பக்கம்? முடிவு உங்கள் கையில்.


1 comment:

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்