Thursday, December 20, 2012

நான் பிடித்த படங்கள்!

"இந்த கார்-கிட்ட நான் நின்னுக்கிறேன்.இப்போ அந்தா எதிரில தெரியுற மரத்துக்கு பக்கத்திலிருந்து என்ன போட்டோ எடுத்து எப்படி இருக்கும்?" என கார் வைத்திருக்கும் தன் நண்பரிடம் ஆர்வமாய் வினவுகிறார் 50 வயதைத்தாண்டிய அன்பர் ஒருவர்.அவர் பதிலுக்கு,"ம்..நன்றாகத்தான் இருக்கும்" என்று சொல்லிவிட்டு புன்னகைக்கிறார்.

புகைப்படம் அவர் எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும்,எடுக்கும் கோணங்களைப்பற்றி (Camera Angles) அவருக்கு கொஞ்சம் தெரிந்திருக்கிறது.இதுபோலத்தான் நானும்.சிறுவயதுமுதலே பார்த்துப்பார்த்துப் பழகிய புகைப்படக்கலையை சோதித்துப்பார்க்க நினைத்தேன்.

அதன் விளைவு,என்னுடைய இரண்டாம் மாத சம்பளத்தில் புகைப்படக்கருவி ஒன்றை வாங்கிவிட்டேன் (Kodak-digicam).எவ்வளவோ கோணங்கள்(angle),மாற்று அமைப்புகள் (modes) என இருந்தும் நான் அதிகம் விரும்புவது,மிக அருகில் எடுக்கப்படும் close-up புகைப்படங்கள் தான்.அதுபோலவே சூரிய உதயம்,அந்திமாலை என இயற்கை வண்ணங்களைப் பிடித்துவைப்பதிலும் அலாதி ஆசை எனக்கு.அப்படி எடுத்த சில புகைப்படங்கள் உங்களுக்காக.

(You can see full-size image when you clicked on image)

1.எங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருந்து காலை 6 மணிக்கு எடுக்கப்பட்ட சூரிய உதயம்.
அமைவுகள்:
Exposure:    0.002 sec (1/500)
Aperture:        f/5.6
Focal Length:    19.5 mm
ISO Speed:    64
Flash Used:    No

2.சூரிய குடும்பத்தில் பூமி இருக்கிறது.பூமிக்குள் சூரியன் இருந்தால் எப்படி இருக்கும்? இங்கு பாருங்கள்.

அமைவுகள்:
Exposure:    0.001 sec (1/1000)
Aperture    :    f/5.6
Focal Length:    19.5 mm
ISO Speed:    64
Flash Used:    No




3.பனிக்கூழ் உருகும் முன் எடுத்தது.பொள்ளாச்சி,அம்பரா உணவகம்
அமைவுகள்:
Exposure:    0.05 sec (1/20)
Aperture    :    f/3.1
Focal Length:    6.5 mm
ISO Speed:    160
Flash Used:    No

4.பொள்ளாச்சி ஆற்றங்கரையோரம் அழகாய்ப் பூத்திருந்த நட்சத்திரப்பூவின் அழகிய தோற்றம்.
அமைவுகள்:
Exposure:    0.01 sec (1/100)
Aperture    :    f/8
Focal Length:    6.5 mm
ISO Speed:    64
Flash Used:    No





மேற்கண்ட அனைத்து ஒளிப்படங்களும், இயற்கை ஒளியில் எடுக்கப்பட்டவை.மின்னொளி (flash) பயன்படுத்தப்படவில்லை.


எப்படி இருக்கிறது இவை.உங்களின் வார்த்தைகளை பின்னூட்டமிடுங்கள்.


Monday, December 17, 2012

தமிழில் பேசுவது கேவலமான ஒன்றா?

இனிய தமிழ்மொழியில் ஓரிரண்டு வாக்கியங்களை ஓசை பட,இலக்கணப்பிழையின்றி நண்பர்களுடன் நம்மால் பேசமுடியுமா? 

நான் பேசினேன்.சிரித்தார்கள்.ஏதோ கோமாளித்தனம் செய்துவிட்டவானாய் என்மேல் ஏளனப்பார்வை வேறு.என்னைப் பார்த்து அவர்கள் சிரிக்கவில்லை.அப்படியானால் எதற்குச் சிரித்தார்கள்? நான் பேசிய தமிழைக்கேட்டா? ஏன் அப்படி? தமிழ்நாட்டில்,தமிழ் மக்களுடன் தமிழில் பேசுவது என்ன அவ்வளவு கேவலமான ஒன்றா? வியப்பளிக்கிறது.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
  என பாரதி சொன்னார்.அதன்படி பிறநாட்டு செல்வங்கள் திரட்டப்போய், அவர்களின் கலாச்சார மோகத்திற்குள் நாம் வீழ்ந்துகிடக்கிறோம்.

அவர் எதற்கு பயந்தாரோ அது நடந்துவிடும் போல இருக்கிறது.
"மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"


தமிழ்நாட்டிற்குள்ளேயே இந்த நிலைமை எனில், வெளிநாடுகளில்? இந்தக்காணொளியைப் பாருங்கள்.கண்ணீர் வரவழைக்கும் தமிழின் எதிர்காலம் பற்றிய குறும்படம்.

 



Thursday, November 29, 2012

ஐடி துறையில் பணிபுரிவோர்களுக்கு சுகி.சிவம் கூறும் அறிவுரை

நீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடை யது. வெற்றி என்பது உங்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருள். வாழ்க!

பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல! உங்களின் பெற்றோர் தங்களது பணிக் காலத்தின் இறுதியில் வாங்கும் ஊதியத் தொகையை, நீங்கள் முதல் மாதமே வாங்கி விடலாம். அதற்காக, அவர்களை விடவும் நீங்கள் அதிபுத்திசாலி என்றோ, திறமையாளர் என்றோ, பெரிய மனிதராகவோ எண்ண வேண்டாம்.

உறவினர்களை அற்ப ஜந்துக்கள் போல நினைக்க வேண்டாம். தம்பி- தங்கைகளைப் படிக்க வைக்க நிறைய செலவு செய்யுங்கள். குடும்பத்தின் பந்த- பாசத்தை, இணைய தளத்தில் டௌன் லோட் செய்ய முடியாது! வெளிநாட்டுப் பணம் வரலாம்... வெளிநாட்டுப் பண்பாடு வரலாமா? பிற மனிதர்கள் எல்லோருமே நாம் பயன்படுத்திக் கொள்ள மட்டும் அல்ல!

பத்து ரூபாய் கூடுதல் சம்பளம் என்றதும் கம்பெனியைக் கைகழுவுவது கொஞ்ச காலம் பெருமையாகத் தெரியலாம். ஆனால், ஒரு நாள்... இந்தத் துறையின் செயல்பாடே இதனால் ஸ்தம்பிக்க வாய்ப்பிருக்கிறது.

உணவு, உறக்கம், ஓய்வு, காலா காலத்தில் இல்லாதபடி உடம்பை- மன தைச் சீர்குலைத்தால், 40 வயதுக்குப் பிறகு உயிர் வாழ்வதே பிரச்னை யாகி விடும். யோசியுங்கள்.

எப்போதும் ஏ.ஸி-யில் இருப்பதால், உங்களுக்கு வியர்வையே வருவதில்லை. அது, உடலுக்குக் கெடுதல். உடலை வியர்க்க விடுங்கள். தண்ணீர்த் தாகம் எடுக்காத போதும் நீர் அருந்துங்கள். கண்ட கண்ட குளிர்பானங்கள் குடிப்பதை விட்டு விட்டு, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை சாறு அருந்துங்கள். பார்லியும் சேர்த்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் நிகழ வேண்டிய காலைக் கடனை முடிக்க மாத்திரைகள் சாப்பிடுவதும் நல்லதல்ல. கண்களிலும் கவனம் வையுங்கள்.

உட்கார்ந்தே இருப்பதால் எடை கூடும்; சர்க்கரை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலும் பழுத்துக் கிடக்கும். மூளைக்கு வேலை என்பதால் ரத்த அழுத்தமும், சக்கைப் போடு போடும். எல்லாவற்றையும் எதிர்பார்த்து வெற்றி கொள்ளுங்கள்.

காதலிக்கும்போது அல்லது திருமணத்துக்குப் பெண் தேடும் போது... சம்பளம், வேலைவாய்ப்பு, செலவழிக்கும் இயல்பு போன்றவற்றை இரண்டாம்பட்சமாக வைத்துக் கொண்டு, ஒழுக்கம், குணம், பண்பாடான குடும்பம் ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

'இன்று போலவே என்றும் சம்பளம் வரும்' என்று கனவு காணாதீர்கள். சிக்கனமாக செலவழிக்கப் பழகுங்கள். உங்களால் அதிகம் செலவழிக்க முடியும் என்பதற்காக, சிரமப்பட்டு சம்பாதிப்பவர்களது மனம் புண்படும்படி ஜம்பம் அடிக்காதீர்கள். அந்நிய நாட்டின் தயவில் அதிகம் சம்பாதிப்பவர்களாகிய பலரும் இந்த நாட்டு வெற்றிக்கு உழைப்பவரை இளக்காரமாக நினைக்காதீர்கள்.

வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பும் போது, ஓட்டல்களில் தங்கிக் கொண்டு... உறவினர்களை- அம்மா- அப்பாவை, ''என்னால் வர முடியாது. இங்கு வந்து பார்... ஆட்டோவுக்கு வேண்டு மானால் காசு தருகிறேன்!'' என்று கூறி அசிங்கப்படுத்தாதீர்கள். பணத்தை விட ரத்தம் கனமானது.

வெளிநாடுகளில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவு என்பது உண்மைதான். என்றாலும் சிறிது நேரமாவது தாத்தா- பாட்டி... அதாவது உங்களின் பெற்றோர், உங்கள் பிள்ளையைக் கொஞ்சு வதற்கு- உணவு ஊட்டுவதற்கு அனுமதி கொடுங்கள்.

உங்களை காயப்படுத்துவதாக இந்த பதில் அமைந்தால், என்னை மன்னியுங்கள்! உங்களை நோகடிப்பது எனது நோக்கம் அல்ல. இவை யாவும், உங்களைப் போன்றோரின் பெற்றோர்கள், உங்களிடம் சொல்ல முடியாமல் என்னிடம் புலம்பிய புலம்பல்கள்.

Thursday, November 22, 2012

காதல்-மணம்




"ஹலோ அப்பா!"
"சொல்லுமா பிரியா! எங்க வந்துட்டு இருக்க?"
"GP சிக்னல் தாண்டியாச்சு.2நிமிஷத்துல பஸ் கணபதி வந்துடும்.சீக்கிரம் வண்டிய எடுத்துட்டு பஸ் ஸ்டாப்புக்கு வாங்கப்பா!"
"வரேன்மா.நீ பாத்து வா!"
" ம்.. சரிப்பா!"

டொக்—

"ஹலோ புரோக்கரா? இன்னும் 5 நிமிசத்துல பிரியா, வீட்டுக்கு வந்துடுவா..மாப்பிள்ளை வீட்டுல சொல்லிடுங்க.நேரத்துக்கு வந்துடுங்க!"
"சரிங்க வேலு! அரைமணி நேரத்துல நாங்க அங்க இருப்போம்!"
"நல்லதுங்க..வணக்கம்!"
"வணக்கம்"

டொக்—

"டேய் சிவா.அப்பாவே பஸ் ஸ்டாப்புக்கு வரேன்னு சொல்லிட்டாரு.நீ வண்டியோட அங்க வந்து தொலைக்காத! ஏற்கனவே சந்தேகப்படுறாங்க.சரியா?"
"ம்..சரிங்க பிரியா மேடம்!"
"ம்..அந்த பயம் இருக்கட்டும்.அப்புறம்"
"அப்புறம் என்ன அந்தப்புரம் தான்! சொன்ன மாதிரி நாளைக்கு லஞ்ச் முடிச்சுட்டு Brook fields வந்துடு.மேட்னிக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சு!"
"மறக்க மாட்டேன்டா..கணவன் சொல்லுக்கு வேறு சொல் உண்டா என் பிராணநாதா!"
"அட..பாருங்கப்பா!! சரி..நாளைக்கு பார்க்கலாம்!"
"ம்..பை பை!"
"அவ்ளோ தானா!"
"மீதி நாளைக்கு! பை"
"ம்.ம்.."

டொக்—

Wednesday, November 21, 2012

விபரீத கனவு - உனக்கும்-எனக்கும்



"அவ்ளோ பயங்கர கனவாடா மச்சி அது?"

 "ஆமாம் ரவி! நெஜ கொலை செஞ்ச ஃபீல் இன்னும் இருக்குடா!"

"அப்படி என்ன கனவு..என் கனவு மாதிரி இன்ட்ரெஸ்டா இருக்குமா?" 

"உன் கனவு பத்தி எனக்கு தெரியாதுடா..மொதல்ல கேளு..ஒரு இருண்ட காடு.நீளமா நடுவுல ஒரு ரோடு.ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் பெரிய பெரிய மரங்களா தெரியுது!சாயந்திரம் ஒரு 6 மணி இருக்கும்.லோகேஷ் அண்ணன் பைக்-ஐ நான் ஓட்டிட்டு போனேன்.அவரு பின்சீட்டுல உட்கார்ந்துகிட்டு இருந்தாரு.பயங்கர வேகமா போனேன்.ஸ்பீடாமீட்டர் முள் ஒரு முழுவட்டமே அடிச்சுது.அவ்ளோ வேகம்.!"

"நீயா?!சரி மேல சொல்லு!"

"ம்..அப்படி போகும்போது திடீர்னு அவர் கத்தினாரு.."தம்பி..வண்டிக்குள ஒருத்தன் வந்து விழுந்துட்டான்"னு.உடனடியா வண்டியை நிறுத்தி பின் சக்கரத்தைப் பார்த்தோம்.ஒரு ஆள் தலையை சக்கரத்துல விட்ட மாதிரி கிடந்தான்."ஓ.."னு அழுதான்.ரெண்டுபேரும் அவன் தலையை வெளியில எடுத்தோம்."கொலை..கொலை"னு கத்தினான்.பார்க்க வாட்ச்மேன் மாதிரி இருந்தான்டா..அப்புறம்.."

"டேய்..நிறுத்து.அவனுக்கு தலையில முடி இல்லையா?கால்ல ஒரு ஷு மட்டும் போட்டிருந்தானா?"

"மச்சி..ஆமாடா.உனக்கு எப்படி தெரியும்?"

"நான் ஒரு கனவு கண்டேன்னு சொன்னேன்ல.அதுல நான் ராணுவ யூனிபார்ஃம் போட்டுகிட்டு ஒரு தீவிரவாதியை துப்பாக்கி முனையில துரத்தினேன்.அவன் வேகமா ஓடி ஒரு காடுக்குள்ள புகுந்துட்டான்! அவன் தான் உன் வண்டியில விழுந்துட்டானா?என்ன ஆச்சு அப்புறம்!!"

"அப்புறம்..அவனை என்ன ஆச்சுனு கேட்டேன்.தலை வலிக்குது.அமுர்தாஞ்சன் வாங்க போறேன் னு சொல்லிட்டு ஓடிப்போய்ட்டான்!"

"கனவு மாதிரி இருக்கு.ஆனா..எப்படி ஒரே ஆள் ரெண்டுபேர் கனவிலும் வந்தான்? ஆச்சரியமா இருக்குடா!"

"எனக்கும் தான் மச்சி..அங்க பாரு சிவா வர்றான்..எப்போ வர சொன்னா எப்போ வர்றான் பாரு"

"ரவி மற்றும் ராஜ்..ரொம்ப சாரி.வர்ற வழியில ஒரு சின்ன பிரச்சினை.அதான் லேட்."

"உனக்கு என்ன பிரச்சினை.பைக்ல தான வந்த?"

"ஆமாடா. எனக்கு இல்ல..நம்ம நாட்டுக்கு! யாரோ ஒரு தீவிரவாதியை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டு போனாங்க.நடு ரோட்ல இழுத்துட்டு போனாங்க.அதான் ட்ராபிக்.அதனால நான் லேட்!"

"தீவிரவாதி எப்படி பட்டப்பகல்ல மாட்டினான்?அப்புறம் எப்படி இருந்தான் அவன்.நீ பார்த்தியா!"

"பார்க்கவே காமெடியா இருந்தான்டா அவன்.ஒரு ஷூ,மொட்டை தலை..தெருவுல ஒரு பெட்டிக்கடையில நின்னு, தலை வலிக்கு அமுர்தாஞ்சன் வேணும்னு கேட்டானாம்.பக்கத்துல நின்னுகிட்ட இருந்த போலீஸ் பிடிச்சுட்டு போய்ட்டாங்க!"

"சிவா.எனக்கு மயக்கம் வருதுடா,..ரவி என்னை கொஞ்சம் பிடிச்சுக்கோ!"


சினிமா கனவுடன் அலைபவர்களுக்கு.. - அன்புடன் மகேந்திரன்

 ஆனந்த விகடன் - 19.9.99



னக்கு அறிவுரைகளில் நம்பிக்கை இல்லை. சிநேகிதமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் எனக்குப் பிடிக்கிறது.

 நீ கனவு கண்டுகொண்டு இருக்கிற துறையில் நுழைந்து, நான் பெற்ற அனுபவங்களும் சிந்தனைகளும்தான் இந்தப் பகிர்தலுக்கான எனது தகுதி. நான், உன் மீதுகொண்ட அன்பும் அக்கறையும்தான் எனது இந்தப் பகிர் தலுக்கான காரணம்.

நான் திட்டமிட்டு இங்கே வரவில்லை என்றாலும்கூட, எனக்கும் கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்கிற கனவு. இந்த சினிமா எனக்கானது இல்லை, என் சமூகத்துக்கானது இல்லை என்று, அன்றைய சினிமாக்கள் மீதான எனது அதிருப்தியில் இருந்து உருவான கனவு. எனது திரைப்படங்கள் அப்படித்தான் உருவாகின. இன்றைக்கு சினிமாவைத் தேடி வருகிற இளைஞர்களின் கனவு, அப்படிப்பட்ட கனவா?

சினிமா ஒன்றும் தேவலோகமும் அல்ல. சினிமா சார்ந்த நபர்கள் ஒன்றும் தேவ தூதர்களும் அல்ல. இதைப் புரிந்துகொண்டால், எளிய விஷயங் களைப் பார்த்து ஆச்சர்யப்படத் தேவை இருக்காது.

நமது நாட்டில் எவ்வளவோ பேர் பட்டினிகிடக்கிறார்கள். விவசாயம் பண்ணுகிறவன் பட்டினி கிடக்கிறான். அன்றாடங்காய்ச்சி பட்டினிகிடக்கிறான். மாதச் சம்பளம் வாங்குபவன்கூடச் சமயங்களில் மாதக் கடைசியின் போது பட்டினிகிடக்கிறான். ஆனால், சினிமாவில் ஜெயித்த ஒரு நடிகரோ, டைரக்டரோ, தான் ஃபீல்டுக்கு வந்து பட்டினி கிடந்ததையும் முன்னேறியதையும் சொல்லும்போது, அதற்கு ஒரு அதிகப்படியான முக்கியத்துவம்... அந்தப் பட்டினியின் மீது ஒரு கவர்ச்சியும் ஏற்பட்டுவிடுகிறது. என்றோ அடைந்துவிடுவோம் என்கிற வெற்றிபற்றிய கனவு. அடுத்த வேளை பட்டினியைப் பரவாயில்லை என்று ஏற்றுக்கொள்ளும்படி உன்னைத் தயார்படுத்திவிடுகிறது. இதுதான் சினிமாவின் அபாயகரமான கவர்ச்சி.

இளமையையும் ஆரோக்கியத்தையும் பணயம் வைக்கும் அளவுக்கு இந்தக் கவர்ச்சி உன்னிடத்தில் ஏற்படுத்துகிற பாதிப்பு என்னை வருத்தமடையச் செய்கிறது. ஆயிரக்கணக்கில் வந்து இங்கே நுழைந்தவர்களில் சிலர் ஜெயித்திருக்கின்றனர். அந்தச் சிலரில் ஓரிருவர் தவிர்க்க முடியாமல் பட்டினிகிடந்து இருக் கிறார்கள். அவர்கள் விதிவிலக்குகள். அவர்களது எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அவர்கள் அடைந்த வெற்றியின் காரணமும் அடிப்படையும்தான் முக்கியமே தவிர, அவர்கள் பட்ட கஷ்டங்கள் உனக்கான முன் மாதிரியாக இருக்க முடியாது.

என்னை அணுகி வாய்ப்புக் கேட்ட பல இளைஞர்களிடத்தில் நான் பார்த்துக் கவலைப்படும் மற்றோர் அம்சம் - அவர்களது தீர்மானம் இன்மை. தாங்கள் என்னவாக ஆக வேண்டும் என்பதுபற்றி அவர்களுக்கே இருக்கிற குழப்பம். அசிஸ்டென்ட் என்று துவங்கி, 'கதை சொல்றேன்... பாட்டு எழுதுறேன்... டயலாக் எழுதுறேன்’ என்று சொல்லிக்கொண்டே போய் கடைசியில், 'ஆபீஸ் பாய்னாக்கூட சரி சார்... எப்படியாச்சும் உள்ளே நுழைஞ்சுட்டாப் போதும்’ என்பார்கள். எனக்கு மனசு கஷ்டப்படும். உங்கள் திறமை, உங்கள் தகுதிபற்றி உங்களுக்கே ஒரு தீர்மானமும் நம்பிக்கையும் வேண்டாமா? உங்களை நீங்களே குறைத்துக்கொள்ள வேண்டுமா? அப்படி என்ன அவசியம் சினிமாவுக்கு?

சினிமாவுக்கு வருகிற உன் போன்றவர்களின் ஊக்கத்தைக் குறைப்பதோ, உறுதியைக் குலைப்பதோ எனது எண்ணம் இல்லை. நிறையப் பேர் வர வேண்டும். உங்களது வருகையும் இருப்பும் உங்களது முழுப் பரிமாணத்தை யும் காட்ட வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆனால், திட்டமோ, கவனமோ இல்லாமல் இங்கு வந்து, தயக்கமும் பயமுமாக நீங்கள் ஒவ்வொருவரையும் அணுகி வாய்ப்புக் கேட்பது எனக்குச் சங்கடம் தருகிறது.

ஒரு மனிதனுக்குக் காதல் என்பது அவசியம். தன் மீதான காதல். நீங்கள் முதலில் உங்களை நேசியுங்கள். உங்கள் உடலை நேசியுங்கள். அதற்கு மரியாதை செய்யுங்கள். ஆரோக்கியமான உடலும் கூர்மையான மனசும்தான் சிறந்த படைப்புகளைத் தர உதவும். ஒரு சின்ன வேலையைத் தேடிக்கொள்ளுங்கள். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அடிமனதில், சினிமா ஒரு பொறியாக உங்களுக்குள் கனன்றுகொண்டு இருக்கட்டும். அதை அணையவிடாது, அந்தக் கனலுடன் இருங்கள். அந்தக் கனலின் வீரியம்கூடிக் கொண்டுதான் இருக்கும்.

வயிற்றுப் பசி இல்லாமல் முகத்தில் தெளிவும் - மனம் முழுக்க உங்களது திறமை குறித்த தன்னம்பிக்கையும் - உள்ளே 'என்னால் சாதிக்க முடியும்’ என்கிற உறுதியும்கொண்டு, நீங்கள் ஒருவரிடம் வாய்ப்புக் கேட்பது மிகவும் ஆரோக்கியமான தாக இருக்கும். அப்போது உங்க ளிடம் தேவையற்ற தயக்கம்இருக் காது... கூச்சம் இருக்காது... உறுதி இருக்கும். நம்பிக்கை இருக்கும். எல்லாவற்றுக்கும் மேல் வாய்ப்புக் கிடைக்காவிட்டால், நீங்கள் நிச்சயம் கூசிப்போக மாட்டீர்கள். உங்களுக்குப் பொருந்தி வரக்கூடிய மற்றொருவரைத் தேடி, அதே கம்பீரத்துடனும் தெளிவு டனும் நீங்கள் செல்வீர்கள்.

அன்றாடத் தேவைகளுக்காக ஒரு வேலையில் சேரும்பட்சத்தில் அதிலேயே மூழ்கி நம்முடைய பிரதான லட்சியம் மங்கிப் போகுமோ என்கிற சந்தேகம் இயல்பாகவே வரலாம். ஆனால், அப்படி அவசியம் இல்லை. எல்லாக் கலைகளும் கதைகளும், சுற்றி உள்ள சமூகத்தில் இருந்து தான் உருவாகின்றன. உங்களுக்கான காலம் கனியும் வரை நீங்கள் உங்களைத் தயார் செய்துகொண்டு இருங்கள்.

நீங்கள் என்ன வேலை செய்தாலும், எதில் ஈடுபட்டு இருந்தாலும், உங்களைச் சுற்றி நடக்கிற எல்லாமே கதைகள்தான். சுற்றி இருக்கிற ஒவ்வொருவரும் பாத்திரங்கள்தான். அதைக் கவனிப்பதும் தேர்ந்தெடுப்பதும் மட்டும்தான் உங்கள் காரியம். அதைக் கைக்கொண்டுவிட்டால், அதன் பின் ஒவ்வொரு விநாடியும் நீங்கள் கூர் தீட்டப்பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. நீங்கள் நடிகனாக விரும்பலாம், டைரக்டர் ஆக விரும்பலாம், கதை - வசனமோ, பாடலோ எழுத விரும்பலாம். எதுவாக ஆக விரும்பினாலும் உங்களுக்கான கச்சாப் பொருட்கள் உங்களைச் சுற்றி நிகழ்கிற சம்பவங்களிலும் உலவுகிற மனிதர்களிடத்திலும் இருக்கின்றன.

தவிர, நிறைய வேற்று மொழிப் படங்களைப் பார்ப்பது உங்களைச் செழுமைப்படுத்தும். நான் பார்த்த ஒரு வேற்று மொழிப் படம் நினைவுக்கு வருகிறது. 'Rape in the Virgin Forest’ எனும் படம். பழங்குடி மக்கள் வாழும் ஒரு காட்டில் 'நாகரிக’ மனிதர்கள் நுழைகிறார்கள். இவர்களது தேவைக்காக விறகு வெட்ட பழங்குடி மக்க ளையே உபயோகிக்கிறார்கள். அந்தப் பழங்குடி பெண்களில் ஒருத்தியை ஒருவன் நதியோரத்தில் கெடுப்பதற்காக விரட்டிச் செல்கிறான். அவள் ஓடுகிறாள். மற்றொரு புறத்தில் இவனுக்கா கப் பழங்குடி ஒருவன் பிரமாண்டமான ஒரு மரத்தை வெட்டிச் சாய்க்கிறான். நெடிதுயர்ந்த அந்த மரம் வீழ்கையில் அந்தப் பெண் ணின் கதறல் பின்னணியாக ஒலிக்கிறது. அப்படியே ஆடிப் போய்விட்டேன். இப்போது நினைத்தாலும் அந்தக் கதறல் மனதில் கேட்கிறது. மரம் விழுவதற்கு அந்தப் பெண்ணின் கதறல் எவ்வளவு பொருத்தமான பின்னணி இசை!

இதுபோன்ற படங்கள் நமக்குள்ளே இருக்கும் திரியைத் தூண்டிவிடுவதுபோல் ஒரு தூண்டலாக இருக்கின்றன.

அன்றாடத் தேவைகளின் முக்கியத்தை உணர்ந்து, அதை நிறைவேற்றியபடியே உனது அடுத்த இலக்குக்காக முயல்வதும்... உன்னை மேலும் மேலும் 'அப்டேட்' செய்துகொண்டு, வாழ்வைக் கவனித்து கவனித்து உனது கலை மனசைக் கூர்மைப்படுத்திக் கொள்வதும்தான் அதிமுக்கிய மாகப்படுகிறது. ஆனால், இவற்றைவிடவும் பெரிதான ஒன்று உண்டு. இந்தப் பாடத்தை எனக்குக் கற்றுத் தந்தவர் எனது மாமா.

ஒருநாள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். ஒரு சிறு பருக்கை கீழே சிதறிவிட்டது. அவர் புன்னகையோடு சொன்னார், ''இந்தப் பருக்கையோட நிலையைப் பாத்தியா... பாவம்!''

நான் வியப்பாக ''ஏன்?'' என்றேன்.

''இந்தப் பருக்கை எத்தனை இடத்தில் தப்பிச்சிருக்கு. அறுவடையில, களத்து மேட்டுல, அரவை ஆலையில, கடையில, அரிசி களைகையில, சாதம் வடிக்கையில... அப்படின்னு எத்தனை இடங்கள்! எங்கேயும் தவறாம அதோட பயனுக்காக எவ்வளது தூரம் கடந்து வந்துச்சு. இப்பப் பாரு... சாதமா மாறி உன் கைக்கு வந்து, கடைசி நொடியில் தவறி விழுந்துடுச்சே... எவ்வளவு பாவம் அது!''

நான் அதிர்ந்து, அப்படியே சிலையாக நின்றுவிட்டேன். எவ்வளவு எளிமையான மனிதரி டம் இருந்து எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!

நம்முடைய பிறப்பும் அந்த அரிசிபோலத்தான். நாமும் எத்தனை இடங்களில் இருந்து தப்பித் தப்பி வாழ்வைக் கடந்துகொண்டு இருக்கிறோம். நாம் ஒருபோதும் இந்த அற்புதமான வாழ்வை வீணாக்கிவிடக் கூடாது. கடைசி நிமிடத்தில் தவறிய அந்தப் பருக்கைபோல் தவறிப்போனவர்கள்தான் எத்தனை எத்தனை பேர்!

இதைச் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. மிகப் பெரிய கனவும் உழைப்பும்கொண்டு நீ சினிமாவில் வெல்ல முயலலாம். வெற்றியடைய வாழ்த்துக்கள். ஆனால், அப்படி ஆக முடியாது போனால் அது ஒன்றும் குறைபாடு இல்லை.

சினிமா தவிர்த்தும் வாழ்க்கை மிக உன்னதமானது. பெருமை உடையது. பிரபலம் இல்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியம் இல்லை.

உன்னை, என்னை உருவாக்கி, இப்போது நாம் இருக்கும் இடத்துக்குக் கொண்டுவந்து சேர்த்திருப்பது வரை, உன் பெற்றோர், என் பெற்றோர் உள்ளிட்ட பல பிரபலமற்றவர்களின் பங்கு இருக்கிறது.

இதுவரை கீழே தவறி விழாத சோற்றுப் பருக்கையாக நீயும் நானும் இப்போது நாம் இருக்கும் இடத்தில் நிற்கிறோம்.

இந்த உதாரணத்தை எனக்கு சொல்லிக் கொடுத்த என் மாமாவும்கூட... பிரபலமாகாத ஓர் எளிய விவசாயிதான்!'

Thursday, November 1, 2012

வரலாற்று பொக்கிஷங்கள் - படங்கள்


உலகின் முதல் விமானம்


பிடல் கேஸ்ட்ரோ உடன் சேகுவேரா

உலகை மிரளவைத்த ஹிட்லர்

சார்பியல் மேதை ஐன்ஸ்டீன் தன் சகாக்களுடன்

ஐன்ஸ்டீன் பள்ளி சான்றிதழ்

 கோகோ கோலா பரிணாமம்

உலகின் முதல் கம்ப்யூட்டர்


கார் விபத்தில் டயானா
 
ஒசாமா பின்லேடன் குடும்பம் (வட்டத்தில் ஒசாமா)

செப்- 11 இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட செய்தி அதிபர் புஷ் அவர்களுக்கு முதன்முதலில் தெரிவித்த தருணம்

கருணை அன்னை தெரசா