Friday, February 24, 2012

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

இந்தத் தலைப்பு வெறும் வசனமாக எனக்குத் தோன்றவில்லை.நமது முன்னோர்கள் அந்த வார்த்தையை உண்மையாக்கி வாழ்ந்திருக்கிறார்கள்.வெளிநாட்டவர் ஒருபக்கம் அறிவியல் எழுச்சியில் இறங்கியிருக்க, இங்கே சத்தமில்லாமல், வானவியலும்,இயற்பியலும்,கட்டடக் கலையும், இன்னும் இது போன்ற எத்தனையோ கலைகளும் சிறப்புற்றிருந்தன.

அந்த வரிசையில் கணிதவியலையும் எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு செங்கோண முக்கோணத்தில், அதன் கர்ணத்தின் நீளத்தின் இருமடியானது,
மற்ற பக்க நீளங்களின் இருமடிகளின் கூட்டுக்கு சமம்.”- பித்தாகரஸ் தேற்றம்

இத்தேற்றத்தை கிரேக்க நாட்டு கணிதவியல் அறிஞர், மெய்யியல் அறிஞராகிய பித்தேகோரசு கண்டுபிடித்தார் என்று பொதுவாக நம்பப்படுவதால், அவர் பெயரால் இத்தேற்றம் வழங்குகின்றது.ஆனால் அவருக்கு முன்பாகவே நமது புலவர் போதையனார் நமக்கு அருளியதை பார்க்கின்றோம்.

"ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே"


a=8(நீளம்)
b=6(குன்றம்)
c=?(கர்ணம்)
c= (a - a/8) + (b/2)
   = 8-(8/8) + (6/2) =10
c=10.


போதையனார் தேற்றத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம்(√) இல்லாமலேயே, நம்மால் இக்கணிதமுறையை பயன்படுத்த முடியும்.

பொது வாழ்விற்கும் உதவும் கணக்கு வழிமுறைகளும் நம்மிடம் உண்டு.

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா?

முடியும் என்கிறார்கள் நமது முன்னோர்கள்.இதோ ஒரு தமிழ் செய்யுளின் வரிகள்.

கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்.

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு , ஐந்து, இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை X என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது 90X ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது 45X ஆகும் அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது 135X ஆகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை X=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க வேண்டும் கிடைப்பது 810 ஆகும் எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.

அடுத்த முறை பூசணி வாங்கும் போது சரிபாருங்கள்.

எந்த பூசணிக்காயில் அதிக விதைகள் இருக்கின்றதோ அதை தான் ஒரு பூசணிக்காய் விவசாயி வாங்குவான், ஏன் என்றால் தன் நிலத்தில் அதிக விதைகளை பயிரிட்டால் தான் அவனுக்கு அதிக மகசூல் கிடைக்கும். சரி பூசணியை விடுங்கள்.

ஒரு சுளை 3 ரூபாய்க்கு விற்கும் ஒரு பலாச்சுளை வியாபாரி அதிக சுளைகள் உள்ள பழங்களையே வாங்க விரும்புவான். பழங்களை உடைக்காமலே உள்ளிருக்கும் சுளைகளை அறிவது அவனுக்கு பயன் தரும்.அதற்கான வழிமுறையும் நம்மிடம் இருக்கிறது.


ஒரு பலாப்பழத்திலுள்ள காம்பைச் சுற்றிய முதல் வரிசையில் உள்ள முட்களை எண்ண வேண்டும். அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்க வேண்டும். அதில் கிடைக்கும் தொகையை ஐந்தால் வகுத்தால் பலாப்பழத்தில் உள்ள பலாச் சுளைகளின் எண்ணிக்கை கிடைக்கும்.

இந்த வழிமுறைகளை, கணக்கதிகாரம் என்ற நூலில் தெளிவாக விளக்கியவர் காரிநாயனார் என்ற புலவர்!

ஆச்சர்யம் தான். இதைப் போலவே பல கணக்கியல் வல்லுனர்களும்,அவர்களது நூல்களும் நம் தமிழகத்தில் இன்று சுவடில்லாமல் மறைந்தன(ர்) என்பது உண்மை.

போனது போகட்டும். மிஞ்சி நிற்கும் பெருமைகளை நாகரிகம் என்ற பெயரால் அழியாமல் காத்து, தமிழை வாழ வைப்போம்! தமிழன் என்ற பெருமையை நிலைநிறுத்துவோம்!

"தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!"

Tuesday, February 7, 2012

விளக்கம் தெரியுமா?

பழமொழி: மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம்.
விளக்கம்:
விவசாயிகள் வீட்டில் ஆண், பெண், குழந்தைகள் என அத்தனை பேரும் தங்கள் விளைநிலத்தில் உழைக்கின்றனர். இதில் ஆணுக்கு இணையாக பெண்கள் ஈடுபடும் போது வெளிமனிதர்களுக்குக் கொடுக்கும் கூலி மிச்சமாகிறது. அதோடு ஒற்றுமையின் விளைவாக உழைப்பின் பலன் பெருகுகிறது. மாமியார் தங்கள் குடும்ப நிலத்தில் உழைத்தால், அது மண்ணுக்கு உரம். அதாவது அந்த வீட்டுத் தலைவனின் கரங்களைப் பலப்படுத்துவதின் மூலம் அவர்கள் சொந்த மண்ணுக்கு உரமாகும். வீட்டுக்கு வந்த மருமகளும் சேர்ந்து உழைத்தால் மண் பொன்னாகும். பொன்னுக்கே உரம் என்றார்கள்.

இவ்வளவு அருமையான கருத்துடைய பழமொழியே நாளடைவில் மாமியார்களைப் பற்றி ஒரு தவறான கருத்தைக் கூறுவது போல் அமைந்து விட்டது.

மாமியார் உடைத்தால் மண் குடம்: மருமகள் உடைத்தால் பொன் குடம்.
ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் என்பது தான் இதன் அர்த்தம்.