Tuesday, April 17, 2012

பிரிவின் வலி!

நோய்வாய்பட்ட அந்த பனைமரம் மொட்டையாகக் காட்சியளித்தது!
உயிர் இல்லை.இருந்தாலும், உச்சி மரத்தில் கிளிகள் குடியிருப்பதால், அது இன்னும் உயிருடன் இருக்கிறது என வைத்துக் கொள்ளலாம்!

கையில் அகலமான துணியுடன் அவன் அந்தப் பனைமரத்தில் ஏறுகிறான்.
கிளியின் வீட்டு வாசலை அடைத்துவிட்டு,மறுவழியில் கைவிட்டு கிடைக்கின்ற குஞ்சுகளைப் பிடித்து கோணியில் போடுகிறான்."கீச்..கீச்" என மழலை மொழியில் அவை அலறுகின்றன.

அதை அவன் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

பெற்ற அன்னை அவனை சுற்றி சுற்றி வட்டமிட்டுப் பறக்கிறது.'அவன் அந்தக் குஞ்சுகளை எப்படியாவது வெளியே விடமாட்டானா?' என்ற ஆசையோடு.அவன் விடவில்லை.எங்கோ மறைந்து விட்டான்.தாய்க்கிளி
அழுத விழியோடு கூடு நோக்கிப் பறந்தது.

கிளிக் குஞ்சுகளை அவன் ஒரு பெரிய கூண்டுக்குள் அடைத்தான். அங்கு இவைபோல பல மழலைக்கிளிகள் அடைக்கப்பட்டிருந்தன.உணவும்,நீரும் நாள்முழுக்க கிடைக்கப் பெற்றது.இருப்பினும் அவைகள் குடும்பத்தை நினைத்து கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தன.

நாட்கள் நகர்ந்தன.

ஒவ்வொரு கிளியும் இன்னொரு ஜோடியுடன் சேர்த்து கூண்டுகளில் அடைக்கப்படுகிறது!

சந்தையில் 100ரூபாய்க்கு விலைபோகிறது! வளர்க்கும் ஆசையோடு பலர் வாங்கிச் செல்கிறார்கள்-"பறவைகள் என்றால் எனக்கு உயிர்!" என்று வீட்டுக்கு வருபவர்களிடம் பெருமை பேசிக்கொள்ள.

இப்படி ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் அடைபட்டிருக்கும் பறவைகளை பார்த்தால், எனக்கு ஈழப்போரில் குடும்பத்தை இழந்த தமிழ்குடும்பங்கள் தான் நினைவுக்கு வருகிறது!

அத்தகைய பிரிவின் ஒரு சின்ன வெளிப்பாடு இந்த வரிகள்.

                                                        






           கூண்டுக்கிளி

கிடைத்த சொந்தங்கள் என் இனம் இல்லை!
ஆனால் அன்பாய் கவனிக்கிறார்கள்!
அவர்களின் உண்மை சொந்தங்கள் பெறும் மறைபொருள் அன்பு இல்லை அது.

நானாக எதுவும் கேட்பதில்லை.
உள்ளன்போடு உணவிட்டு,இருக்க அறை கொடுத்து,
பருக நீர் அளித்து பாசமாய் கவனிக்கிறார்கள்!

எதையோ பேசுகிறார்கள்.என்னையும் அதையே பேசச் சொல்கிறார்கள்!
எளிய ஒலிகளை திருப்பி சொல்கிறேன்.
கேட்டு மகிழ்கிறார்கள்!
கைதட்டி ஆர்பரித்து முத்தம் கொடுக்கிறார்கள் வாஞ்சையோடு.

"என்னை வெளியே விடுங்கள்! என் சொந்தங்களைக் காணவேண்டும்", என கூப்பாடு போடுகிறேன் அவ்வப்போது!
எனக்கு பசியோ என்றெண்ணி பழங்களைக் கொடுக்கிறார்கள்!

மனம் வாடுகிறேன்.

இறக்கும் வரையில் இந்த உணர்வுப் போராட்டம் கூண்டுக்குள்ளே, குறுகிய கம்பிகளின் நடுவே முடிந்து போய்விடுமோ? என எண்ணிப்பார்க்கையில்!

1 comment:

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்