Wednesday, September 12, 2012

படித்ததில் பிடித்தது 1-அந்த வாசகம்! (சிறுகதை)


அ.யாழினி அன்புமணி, ஈரோடு (சுட்டி விகடன்)

அன்று காலை சூரிய வெளிச்சம் தட்டி எழுப்ப, உலகம் கண் விழித்தது. பல் துலக்க, முகம் துடைக்கத் தங்கள் வீட்டுக் கண்ணாடியை நெருங்கியவர் களுக்கு பயங்கர அதிர்ச்சி. ஒவ்வொருவர் நெற்றியிலும் பச்சை குத்தியதைப்போல் அந்த வாசகம் இருந்தது.

தாங்கள் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டி, பூனைக்குட்டிகளின் நெற்றியிலும் அது இருந்ததைக் கண்டு குழம்பினர். நகரங்களில் இப்படி என்றால், கிராமங்களில் பால் கறக்க, ஏர் உழ, மேய்ச்சலுக்கு எனத் தங்களது ஆடு, மாடுகளை நெருங்கியவர்களுக்கு தலை சுற்றியது. அந்தக் கால்நடைகளின் உடல்களிலும் அதே வாசகம்.

சாலையில் செல்பவர்களின் நெற்றியிலும் அவ்வாறு இருந்தது. பலரும் மருத்துவர்களிடம் ஓடினார்கள். ஆனால், மருத்துவர்களே தங்கள் நெற்றியில் இருப்பதை எந்த மருந்தைத் தேய்த்து அழிப்பது என்று புரியாமல் மண்டையை உருட்டிக்கொண்டு இருந்தார்கள்.

அவ்வளவு ஏன்? ஓயாமல் வானிலை ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளும், வானத்தில் பிரகாசிக்கும் சூரியன் மீதும் அப்படி எழுதி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். விண்வெளி ஆராய்ச்சி மையத்தையும் விட்டுவைக்கவில்லை அந்தக் குழப்பம். செவ்வாய் கிரகத்தில் இறங்கிய விண்கலம் அனுப்பிய புகைப்படத்தில், அந்தக் கிரகத்தின் தரையிலும் அது எழுதப்பட்டு இருந்தது.

ஃபேஸ்புக், ட்விட்டர், செல்போன் மூலம் இந்தச் செய்தி உலகம் முழுக்கப் பரபரப்புடன் பரிமாறப்பட்டது. மருத்துவர்கள், விஞ்ஞானிகளுக்கே புரியாததால், பத்திரிகையாளர்கள் சென்று ஆன்மிகவாதிகளின் வீட்டுக் கதவைத் தட்டினார்கள்.

கதவைத் திறந்த அவர்களும் கையில் தத்துவப் புத்தகங்களுடன் புரியாமல் விழித்துகொண்டு இருந்தார்கள். காரணம், அவர்களின் நெற்றியிலும் அந்த வாசகம்.

சூரியன் மேற்கில் இறங்கி, சந்திரன் தோன்றியபோது நிலவிலும் அந்த வாசகம் மின்னியது. மனிதர்களின் நெற்றியில் இருட்டிலும்கூட அந்த எழுத்துகள் தெளிவாக ஒளிர்ந்தன. எங்கே பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் அதே வாசகம்தான். அப்படி என்னதான் எழுதப்பட்டு இருந்தது?

ஸ்பெயின் நாட்டு மொழியில் 'லா ப்ரென்டேசியன் டி டியோஸ்என்றும் இத்தாலியில் 'பிரசன்டேஸியோன் டிடியோஎன்றும் இருந்தது. அதேபோல் ஃப்ரான்ஸில் 'டையுஒரெசன்டேஷன்டச்சு மொழியில் 'டி வூர்ஸ்டெல்லிங் வான் காட்போர்ச்சுக்கீசிய மொழியில் 'அப்ரசன்டேயி அவோ டு டியஸ்ஹிந்தியில் 'தான்:பகவன்தெலுங்கில் 'இச்சினிவாலு:தேவுடுகன்னடத்தில் 'கொட்டவரு:பகவன்மலையாளத்தில் 'சௌஜன்யம்:தெய்வம்என்றும் இருந்தன. இங்கிலாந்தில் 'பிரசன்டேஷன்:லார்ட்என்று எழுதப்பட்டு இருந்தது.

அதே சமயம் மேலோகத்தில்...

பூமியில் நடந்துகொண்டு இருந்த விநோதத்தைக் கண்டு தேவர்களும், தேவதைகளும், இன்னபிற தேவலோக ஊழியர்களும் புரியாமல் குழம்பினர். அதற்கான விளக்கத்தை அறியக் கடவுளிடம் சென்றனர்.

"
இறைவா, இது என்ன புதுக் குழப்பம்? ஒரே நாளில் உலகம் முழுக்க இது எப்படி நடந்தது?" என்று கேட்டார்கள்.

கடவுள் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு "இதை நான் கண்டுபிடிக்கவில்லை. மனிதர்கள்தான் முதலில் ஆரம்பித்துவைத்தார்கள். எனக்கும் ஆசை வந்துவிட்டது. அங்கே பாருங்கள்" என்றார்.

ஒரு கோயிலில் எரிந்துகொண்டு இருந்த டியூப்லைட் ஒன்றைச் சுட்டிக் காட்டினார். மற்றொரு இடத்தில் ஒரு மின்விசிறியில் யார் பெயரை எழுதுவது என்று இருவர் சண்டையிட்டுக்கொண்டு இருந்தனர்.

கடவுள் சிரித்தபடியே சொன்னார் "ஒரு சிறிய மின்விளக்கையும் மின்விசிறியையும் வழங்கியதற்கே தங்கள் பெயரையும் ஊரையும் போட வேண்டும் என்று இந்த மனிதர்கள் சண்டை போடுகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தையே படைத்தவன் நான் என்பதை மறுந்துவிட்டார்கள். அதைஅவர்களுக்கு நினைவுபடுத்தவே இவ்வாறு செய்தேன். இன்று முழுவதும் அந்த வாசகம் இருக்கும். நாளை காலை தானாக மறைந்துவிடும். நான் செய்தது சரிதானே?" என்றார்.

"
ரொம்ப சரி!" என்று புன்னகைத்தனர் தேவர்கள்.

கடவுள் சொன்னபடியே அடுத்த நாள் காலையில் கண்விழித்த அனைவருக்கும் நிம்மதி. அந்த வாசகம் மறைந்துபோய்விட்டது.

மன்னிக்கவும் நண்பர்களே! நம்ம தமிழ்நாட்டில், தமிழ் மொழியில் என்ன எழுதி இருந்தது எனச் சொல்லவே இல்லையே? அந்த வாசகம்... 'உபயம்: கடவுள்.

6 comments:

  1. அருமையான கதை
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்லதொரு சிறுகதை.சுட்டி விகடன் என்ன ஆனந்த விகடனிலேயே பிரசுரித்திருக்கலாம்.

    ReplyDelete
  3. நல்ல கதை சார்...

    அதுவும் முடிவு : உபயம் : கடவுள் ! அருமை...

    நன்றி....

    ReplyDelete
  4. நல்ல உபாயம்

    சகாதேவன்

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்