Monday, September 17, 2012

எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா?

"பகுத்தறிவு பகலவன்" ஈ.வெ.ரா பெரியார்(செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) அவர்களின் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை - எழுத்து ராஜ்குமார்



கடவுளை ஏற்றுக்கொள்வதற்கு முன் எவ்வளவு பேர் யோசிக்கிறார்கள்? எனக்குத் தெரிந்து ஒருவரும் துவக்கத்தில் கடவுளைப் புரிந்து பின்னர் ஏற்றுக்கொள்ளவில்லை.அவர்கள் பின்னாளில் புரிந்து கொள்கிறார்கள் என்று சொல்வதே பொருந்தும்.அதுவும் கொஞ்சமாகத் தான்.அப்படி முழுதும் நம்பினால் மருத்துவமனை பதிவேட்டில் அவர் பெயர் இருக்காது.மனதினுள் பொறாமை,கோபம் எதுவுமே இருக்காது.

இந்தக் காலத்தில் அப்படி இருக்கும் மகான்களைக் கூட பார்க்க முடியவில்லை என்பது கசப்பான உண்மை.இன்று உலவும் சாமியார்களில் பலர் பணத்தின் மேலும்,சிலர் மதன மோகத்தின் மீதும் பற்றை அறுக்காமல் இருக்கிறார்கள்.புத்தகத்தில் படித்த சிறுவயதுக் கதைகளால், தமக்கு ஒரு குரு வேண்டும் என பலரும் சிஷ்யர்களாகி சொத்துக்களை இழந்துகொண்டிருக்கிறார்கள் தங்களை அறியாமல்.உலகத்தில் காணப்படும் வறுமை,பசி,பஞ்சம் இவற்றைவிட மக்களைப் போலி பக்திமார்க்கத்திலிருந்து வெளியேற்றவாவது கடவுள் வரவேண்டும்..



கடவுளைப் போற்றித் துதிக்கும் மக்களைப் பாருங்கள்.அவர்கள் முகத்தில் ஆன்ம நிம்மதி ஒளி தெரிகிறது.பெரும்பாலானவர்கள் வயோதிகர்கள்.குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, பெற்ற பிள்ளைகளை,சமுதாயத்தை நம்புகிற மனநிலை அவர்களுக்கு இருப்பதில்லை.சுற்றி இருப்பவர்களை ஒரு சந்தேகத்துடன்,அச்சத்துடன் தான் அணுகுவார்கள்.அவர்கள் நம்புகிற ஒரே ஆள் நம் கடவுள்.உள்ளம் உருகி நினைக்கிறார்கள்.பேரானந்தம் அடைகிறார்கள்.இது ஒருவகை தியானம் தான்.

சிறுவயது முதலே நமக்கும் கூட ஒரு நம்பகமான துணையாக அவர் இருக்கிறார்.தேர்வுக்கு முன்னால் தேர்ச்சி அடையவேண்டும் என்று துவங்கி, கார் வேண்டும்,டிவி வேண்டும்,குடும்பப் பயணம் நன்றாக இருக்கவேண்டும்,இருட்டில் போகும்போது பேய்,பிசாசு தொடராமல் இருக்கவேண்டும் என கடவுளிடம் நமது வேண்டுதல் நீள்கிறது.அதேநேரம், தனக்கு நடக்கும் தடைகளுக்கும்,இழப்புகளுக்கும் காரணகர்த்தாவாக நினைத்து, திட்டித்தீர்ப்பதுவும் கடவுளைத்தான்.துதிக்கும் அதேவாய் தீயவார்த்தைகளைக் கொட்டுகிறது.கடவுளை நினைத்து நினைத்து குளிந்த மனம், கோபத்தீயால் கொதிக்கிறது.அதுவும் சிலநாட்கள் தான்.கடவுளை மறந்து,திட்டித்தீர்க்கும் காலத்தில் மனிதர்களின் சுய உருவம் வதைக்கும்போது தானாய் நாம் சரணடையும் ஒருவர் கடவுளாகத்தான் இருக்கிறார்.வேடிக்கையாக அல்லவா இருக்கிறது!!

கடவுள் இருக்கிறார் என்ற கூற்று உண்மை என வைத்துக் கொள்வோம்.பெருமக்கள் சொன்னதுபோல் அவரே உலகைப் படைத்தார்.புல்,பூண்டு முதலான அனைத்து உயிர்களையும் படைத்தார் என்பதையும் நினைவில் கொள்க.மதம் பற்றி வாகுவாதம் இப்போது வேண்டாம்.நம்மைப் பொறுத்தவரை, அவர் கடவுள்.அவ்வளவுதான்.

கடவுள் ஒரு படைப்பாளி.குயவன் பானை செய்வதைப்போல,சிற்பி சிற்ப உருவத்தைச் செதுக்குவது போல அவரும் நம்மைப் படைத்திருக்கிறார்.அவர் படைப்பில் ஒரு அதிசயம், தனது படைப்புகளில் சிலவற்றை உயிர்கொடுத்து உலவ விட்டிருக்கிறார்.

ஆக,இப்போது அவர் ஒரு தந்தை ஸ்தானத்தை அடைகிறார்.அன்பாய் வளர்க்கிறார்.அனைத்து உயிர்களும் சகோதரத்துவத்தை மனதில் வைத்து, ஒருவொருக்கொருவர் உதவியாக இருக்கின்றன.தாவரங்கள் ஒளி,நீர் ஆகிவற்றைப் பெற்று உணவுதயாரிக்கின்றன.அவற்றை மனிதன் உட்பட சில படைப்புகள் உண்டு வளர்கின்றன.சில விலங்குகள் கொடுக்கும் பயன்பொருட்கள் தாவர வளர்ச்சி மற்றும் பிற விலங்குகள் வாழ்வதற்கும் உதவுகின்றன. இப்படியாக ஒற்றுமையாய் வாழும் தனது குழந்தைகளை அன்போடு தந்தையாய் இருந்து கவனிக்கிறார்.
சந்ததிப்பெருக்கம் அடைந்தபின், பேரக்குழந்தைகளைப் பார்த்து பேரானந்தம் அடைகிறார்.அவர்களுக்கும் வேறுபாடுகாட்டாமல், அன்பைப் பொழிகிறார்.

இப்போது அவரை ஒரு படைப்பாளி என்ற பார்வையில் நோக்குவோம்.புதிய தலைமுறைகளைப் படைத்தவர் அவரே.ஆக, புதியனவற்றை வாழ்விக்க, பழைய படைப்புகளை அழிக்கவேண்டி இருக்கிறது.அது மட்டுமில்லாமல், எதிர்கால சிக்கல்களைத் தவிர்க்கவும் அப்படி கருணைக் கொலை செய்கிறார் அந்தப் படைப்பாளி.
ஒரு வீடு கட்ட நினைக்கிறோம்.அந்த வீடு கட்டும் இடத்தில், பல ஆண்டுகள் நாம் செல்லமாய் வளர்த்த மரம் ஒன்று செழித்து வளந்திருக்கிறது.வீடு முழுமையடையவேண்டும் என்றால், அந்த மரத்தை அகற்றவேண்டும் என்ற நிலை. நாம் என்ன செய்வோம்.வீடு என்ற புதுமை பிறக்க,மரம் என்ற பழமையை வருத்தத்தோடு வெட்டி விடுகிறோம்.கடவுளும் இதைத்தான் செய்கிறார்.

நெருங்கியவர் இறப்புக்குப் பின் நாம் கடவுளைத் திட்டுவது போலவே, அந்த மரத்தின் உறவுகளும் நம்மைத் திட்டுகின்றன என்று எண்ணிப் பார்க்கவேண்டும்.இதில் பாவம் என்று எதுவும் இல்லை.அதுபோல வருத்தம் என்பது இல்லாமல்போவதில்லை.
எப்படி ஒரு சிற்பி தான் உருவாக்கிய சிற்பத்தைச் சிதைக்க எப்படி முழு உரிமை இருக்கிறதோ,அது போல படைத்த கடவுளுக்கும், தான் படைத்தவற்றை அழிக்கும் உரிமை இருக்கிறது.இதில் கோபம் கொள்வதில் அர்த்தம் இல்லை.சண்டைப் போடுவதற்கும் நமக்கு உரிமை இல்லை.மனிதர்கள் சிலவருட எதிகாலத் திட்டங்களை நிகழ்காலத்தில் வகுக்கிறார்கள்.இடையில் மரணம் சம்பவிக்கிறது.அத்தனைத் திட்டங்களும் மனிதனோடு சேர்த்து அழிக்கப்படுகின்றன.ஆக,இறந்தவருக்காகவோ,அவரின் கனவுகளுக்காகவோ பிறர் அழுது அரற்றுவதில் பயன் ஏதும் விளையப் போவதில்லை.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் உறவினால் பிணைக்கப் பட்டிருந்தாலும், அவர்களின் வாழ்வும்,மரணமும் தனிமனிதனைப் பொறுத்தே அமைகிறது என்பதை மனதில் நிறுத்தவேண்டும்.

இறுதியாய், நீங்கள் கடவுளை நம்பினால்,உலகமும் உயிர்களும் அவர் படைப்பென்று நம்பினால், நாம் வாழும் இந்த வாழ்க்கை நிரந்தரமில்லை,கடவுள் கொடுப்பவற்றுக்கும்,எடுப்பவற்றுக்கும் வருத்தமோ,ஆனந்தமோ படுவது மாயை என்பதையும் உணர்ந்துவாழ வேண்டும்.படைத்தவனின் அடுத்தசெயல் நமக்குத் தெரிவதில்லை.ஆக, பயந்துவாழவேண்டும்.உணர்ந்துவாழ வேண்டும்.

நீங்கள், கடவுள் இல்லை என்று நினைத்தால், அறிவியலை நம்புங்கள்.இயற்கையை நம்புங்கள்.சக மனிதனை சகோதரனாய் எண்ணுங்கள்.அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்யுங்கள்.நீங்கள் கடவுளை நம்புவர்களுக்கு உபதேசம் செய்யும் நேரத்தில், இயலாத பலருக்கு உதவி வாழுங்கள்.உலக வாழ்க்கையின் இன்பத்தை உணரலாம்.இறுதிநாளில் சிரித்தபடி இறக்கலாம்.

எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா..நீங்களே சொல்லுங்கள்!

அன்புடன் ராஜ்குமார்.

2 comments:

  1. முடிவில் நீங்கள் சொன்ன கருத்துக்களுக்கு பிறகு, நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை... இருந்தாலும் :

    கடவுள் இருக்காரோ, இல்லையோ, கடவுள் என்றவுடன் எல்லோரும் பெரியாரை நினைக்கிறார்களே... அப்போ அவர்...?

    ReplyDelete
  2. கடவுள் என்பவர் வேறெங்கும் இல்லை.உலவும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறார்.அவ்வளவு தான்.இதை தாங்கள் எப்படி எடுத்துக்கொண்டாலும் நல்லதுதான்.பெரியார் ஒரு நல்ல மனிதர்..

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்