Friday, October 19, 2012

நம்ம ஊர் விளையாட்டுகள் - 2


ஒளிகண்டு விளையாட்டு (ஐஸ்-பாய்/ஐஸ் நம்பர் 1) Hide and Seek..

ஒரு விளையாட்டுக்கு இத்தனை பெயரா என வியப்பாக இருக்கிறதா? அனைத்துப் பெயர்களும் விளையாடும் முறையும் கிட்டத்தட்ட ஒரே விளையாடைத்தான் குறிக்கின்றன.இந்த விளையாட்டுடன் என் அனுபவம் பற்றி முதலில் பார்க்கலாமா? (இல்லைன்னு சொன்னாலும் விடமாட்டேன் :) )

"எங்கள் ஊர் சித்திரைத்திருவிழா.மாரியம்மன் கோவிலை சுற்றி மக்கள் கூட்டம் நிரம்பி இருக்கிறது.கூட்டத்துக்குள் அங்கும் இங்கும் சில சிறுவர்கள் ஓடிக்கொண்டிருப்பது தெரிகிறது.அவர்கள் எங்கெங்கோ போய் மறைகிறார்கள்.ஒருவன் திருதிருவென விழித்துக்கொண்டு, காணாமல் போன பிள்ளைபோல மற்றவர்களைத் தேடுகிறான்.திடீரென பின்னாளிருந்து ஒருவன் அவன் முதுகில் வேகமாக தட்டி,"கப் ஐஸ்!" என சொல்ல,.இவன் மீண்டும் ஆட்டமிழந்த சோகத்தில், ஓடிச்சென்று அந்த மரத்தின் பின்னால் நின்று 1,2,3..என எண்ணத்துவங்குகிறான்...." ஒவ்வொரு ஆண்டும்,திருவிழா சமயத்தில் இப்படி நாங்கள் விளையாடுவது வழக்கம்.ஒளிந்து கொள்ளப்போன குழந்தைகளில் நானும் ஒருவன்!
முதலில் இந்த "ஒளிகண்டு" விளையாட்டைப் பற்றி பார்க்கலாம்.அதற்கு முன்னால் விளையாட்டினால் விளையும் நன்மைகளைப் பற்றி பார்த்துவிடலாம்.
குழந்தைகள் இந்த விளையாட்டினால் பெரும் நன்மைகள்:
1.துப்பறியும் திறன் ( Detective capacity )
2.திட்டமிடல் ( Planning )
3.மேம்பட்ட விழிப்புணர்வுத் திறன் (Extra Awareness )
இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று பார்ப்போமா?

விளையாட தேவை:
  • 1.உங்கள் விருப்பம். குறைந்தபட்சம் 5 பேர்.
  • 2.திறந்தவெளி/பொது இடம் (கோவில்,பள்ளி,சந்தை,..)
விளையாடும் முறை:
1.துவக்கவீரரைத் தேர்வுசெய்தல்.
 
2.துவக்கும் நபர், மரம் அல்லது சுவற்றைப் பார்த்தபடி, கண்களைமூடி 1 முதல் 10 வரை சத்தமாகச் சொல்ல வேண்டும்.

3.அதே நேரத்தில் மற்றவர்கள் அவர்களின் விருப்பப்படி எங்காவது போய் ஒளிந்துகொள்ளவும்.

4.தேடிக்கொண்டு வருபவர், ஒளிந்திருக்கும் அனைவரையும் கண்டுபிடிக்கவேண்டும்.அப்படி ஒவ்வொருவரைக் கண்டுபிடிக்கும் போதும் "ஐஸ் நம்பர்" எனச்சொல்லி,அவர் எத்தனையாவது ஆள் என்பதையும் சத்தமாகச் சொல்லவேண்டும். எகா:"ஐஸ் நம்பர் 1, ஐஸ் நம்பர் 2"..5.மற்றவர்களைத்தேடும்போது, ஒளிந்திருப்பவர் தேடுபவரின் பின்னால்,அவர் அறியாமல் வந்து முதுகைத்தட்டி, "கப் ஐஸ்" என சொன்னால், அவர் மீண்டும் விளையாட்டைத் துவங்கவேண்டும்.

5.அப்படி இல்லாமல்,அனைவரும் கண்டுபிடிக்கப் பட்டால், "ஐஸ் நம்பர் 1" ஆட்டத்தைத் துவங்குவார்.

6.சலிக்கும் வரை விளையாடலாம்.(சிலநேரம் ஒரே ஆள் மீண்டும் மீண்டும் ஆடமிழக்கும் பரிதாபங்களும் நிகழும்)

 

Wednesday, October 10, 2012

நம்ம ஊர் விளையாட்டுகள் - 1


இந்தத் தொடர் பதிவை வெளியிட ஊக்கமளித்த நண்பர்களுக்கும்,தகவலுக்கு உதவியாய் இருந்த traditionalgames.in  இணையதளத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

                                                                    கொக்கு பற பற...

இன்றளவும் கிராமங்கள் மற்றும் பள்ளிகளில், 5 முதல் 10 வயதுவரையிலான குழந்தைகளால் விளையாடப்படும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று.
வெறும் பொழுதுபோக்கு மட்டுமின்றி, அறிவுக்கும் விருந்து படைக்கும் அற்புதவிளையாட்டு இது.இந்த விளையாட்டின் முக்கிய நோக்கம்,பறக்கின்ற உயிர்களுக்கும்,மற்றவைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்துவதே ஆகும்.அதுமட்டுமன்றி, கீழே குறிப்பிட்டுள்ள மறைமுக நன்மைகளும் உள்ளன.

1.தெளிவாக கவனிக்கும் திறன்.
2.சொல்வதை விரைவாகப் புரிந்துகொள்ளும் திறன்.

இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று பார்ப்போமா?

விளையாடத் தேவை:

1.குறைந்தது 8பேர் (அதிக குழந்தைகள் இருந்தால் இன்னும் நலம்!)

2.அமைதியான இடம் (அனைவரும் சிரமமின்றி அமர ஏதுவாக இடம் இருத்தல் அவசியம்)

  
 
விளையாடும் முறை:

1.அனைவரும் வட்டமாக அமர்ந்து கொள்ளவேண்டும்.இரண்டு கைகளையும் நிலத்தில் வைத்திருங்கள்.

2.குழுவினரை வழிநடத்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.அவர் கட்டளைகளின் படி மற்றவர்கள் செயல்படவேண்டும்.

3.வழிநடத்துபவர், ஏதாவது ஒன்றைச் சொல்லி இறுதியில் "பற பற" என்ற வார்த்தையைச் சேர்த்து சொல்ல வேண்டும்.

உதாரணமாக, கொக்கு பற பற என சொன்னால், மற்ற குழந்தைகள், "கொக்கு பற பற" என்று சொல்லிக்கொண்டு,பறப்பது போல் கைகளை அசைத்துக் காட்டவேண்டும்.
அன்றி, "செங்கல் பற பற" என்றால், குழந்தைகள் அந்த வார்த்தையை சொல்லவோ,செய்கைகள் செய்யவோ கூடாது.அப்படி செய்தால், செய்பவர் ஆட்டத்திலிருந்து விலக்கப்படுவார்

4. ஆக. குழுவில் இருப்பவர்கள், வழிநடத்துபவர் சொல்வதை கவனமாக,தெளிவாகக் கேட்க வேண்டும்.சொல்பவை பறப்பவையா அல்லது பறக்க இயலாதவையா என்பதை உணர்ந்து வேகமாக செயலில் காட்ட வேண்டும்.

5. வழிநடத்துபவர், ஆட்டத்தைத் துவங்கும்போது மெதுவாகச் சொல்லியும்,போகப் போக வேகத்தைக்கூட்டியும் கட்டளை இட வேண்டும். இதனால், வட்டம் சுருங்கத் துவங்கும்.இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருப்பவருக்கு பரிசு தரலாம்.

6. மீண்டும் வட்டமாக அமர்ந்து வேறு ஒருவர் வழிகாட்டியாக செயல்பட வைத்து விளையாடத்துவங்கலாம்.ஆர்வம் குறையும் வரை விளையாடலாம்! குறைந்தது மூன்று சுற்றுகள் விளையாடுவது நன்று.

 
For English version: