Monday, December 2, 2013

படித்ததில் பிடித்தது 6 - குட்டிக்கதைகள்

                         1. ஐந்தில் வளையாதது!

போதை போன்ற தீய பழக்கங்களை உடனே விட்டொழிக்க சொன்னார் ஆசிரியர்.

மாணவர்கள்," நாங்கள் சிறுவர்கள்.. போக போக விட்டுவிடுவோம்", என்றார்கள்

ஆசிரியர் பள்ளி தோட்டத்துக்கு மாணவர்களை அழைத்து சென்றார்

தோட்டத்தில் இருந்த புற்களை பிடுங்க சொன்னார் சில நிமிடத்தில் செய்து முடித்தனர்.

பின்பு அங்கிருந்த செடிகளை களைய சொன்னார் இதுவும் சில நிமிடத்தில் முடிந்தது.

பிறகு வேலி அருகே இருந்த மரங்களை பிடுங்க சொன்னதும் மாணவர்கள் திரு திருவென முழித்தார்கள் .

ஆசிரியர் சொன்னார்,"தீய வழக்கங்களும் இப்படித்தான் புற்கள் செடிகள் போன்று சிறிதாக இருக்கும் போதே அழித்து விடுங்கள் வளர்ந்து மரமாகி விட்டால் அது நம்மை அழித்துவிடும்!".


                           2.   புத்தி உள்ளவன் பிழைத்து கொள்வான்!

ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்.இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது.

முதல் கைதியின் ஆசை:நல்ல பெண்,நல்ல மது ,லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.

இரண்டாவது கைதியின் ஆசைகள் ;நல்ல பெண்,நல்ல உணவு,ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.

மூன்றாவது கைதி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான்.அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.

ஆறு மாதத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர்.செர்ரிப் பழம் என்று பதில் வந்தது.அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு,பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.

மூன்றாவது ஆசையாக அவன் சொன்னான்,''என் உடல் தற்போதைய அதிபரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.''அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர்,''என்ன சொல்கிறாய்,நீ?அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்! ''கைதி அமைதியாகச் சொன்னான்,''அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்" :).

 

Wednesday, November 27, 2013

கையெழுத்து!

நம் அன்றாட வாழ்க்கையில் பலவித மனிதர்களை ,பலவித காலகட்டங்களில் சந்திக்கின்றோம் .அவர்கள் பின்னாளில் நம் நண்பர்களாகவோ எதிரிகளாகவோ அல்லது  எவ்வித உறவுப்பிணைப்பும் இல்லாதவர்களாகவோ அடையாளப்படுத்தப் படுகின்றனர்.என்னைப்பொறுத்தவரையில் அவர்கள் எந்த வகையினராக இருந்தாலும் அவர்களிடம்  நாம் கற்றுக்கொள்ள ஒரு பாடமும் கேட்டறிய ஒரு கதையும் இருக்கவே செய்கிறது.

         அவ்வாறு என் வாழ்க்கையில் பலவித நல்லவை,கெட்டவைகளை பலரும்  அறியவைத்துள்ளனர்.நான் ஆறாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.அந்த வருடம் இதற்கு முந்தியவை போல மகிழ்ச்சியான வருடமாக இல்லை.காரணம் இருவர்.அவர்கள்  என் வகுப்பில் சேரும்வரை முதலிடம் பிடித்திருந்த நான்,பிறகு மூன்றாம் இடம் தள்ளப்பட்டேன்.என்னால் அவர்களைப் போல ஏன் படிக்கமுடியவில்லை? என்ன ஆயிற்று எனக்கு என கேள்விகேட்டபடி படுக்கையில் தூக்கமின்றி துவண்டேன்.பெருக்கல் வாய்ப்பாடு மனப்பாடம் செய்ய முடியாமல் அடி வாங்கிய வருடமும் அதுதான்.ஆசிரியைகள் பள்ளி முடிந்த பிறகு எடுக்கும் சிறப்பு வகுப்புகளுக்கு செல்லத்  துவங்கினேன்.இருந்தாலும் கணக்குப்பாடம் என்பது அவ்வளவு பிடிப்பதாக இல்லை.

         ஏழாம்வகுப்பும் எப்படியோ கடந்து சென்றது.எட்டாம் வகுப்பு படிக்கையில் கிட்டத்தட்ட  என் எண்ணங்கள் முற்றிலும் மாறியிருந்தன.மதிப்பெண்கள் பற்றியோ எத்தனையாவது இடம் பிடிக்கிறேன் என்பதைப் பற்றியோ நான் கவலைப்படுவதே இல்லை.காரணம்  எனக்கு அமைந்த நண்பர்கள்.அவர்களை விட அதிக மதிப்பெண் என்பது மட்டுமே எனக்கு போதுமானதாக இருந்தது.நன்றாக படிப்பவர்களை நண்பர்களாக்கிக் கொண்டேன்.கணித வகுப்புகளில் கொடுக்கும் வீட்டுபாடங்களை, சிந்திக்காமல் அச்செடுக்க அவர்கள் மிகவும் உதவினார்கள்.அது போலவே, வகுப்பில் தினமும் வைக்கப்படும் தேர்வுத்தாள்களில் மதிப்பெண் இடுபவர்களும் அவர்களே என்பதால்,ஆசிரியையிடம் அடிவிழாமல் காப்பாற்றும் மதிப்பெண்கள் எனக்குக் கிடைப்பதை அவர்கள் உறுதி  செய்துவிடுவார்கள்.அவர்களில் முக்கியமானவர்கள் யமுனாதேவி மற்றும் கவிதா.


           கவிதா என் சொந்த ஊரைச் சேர்ந்த மாணவி.பக்கத்து வீடு கூட.ஆகவே படிப்பு சார்ந்த  குறிப்பாக கணிதம் சார்ந்த உதவிகள் நிறைய கிடைத்தன.சிலரைப் பற்றி நாம் நினைப்பது ஒன்றாக இருக்கும்.ஆனால் உண்மை வேறொன்றாக இருக்கும்.கவிதா மீது  முதலில் எனக்கு இருந்த கோபம் இப்போது மரியாதையாக மாறி இருந்தது.கவிதாவின் அழகான தமிழ் கையெழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும்.,சீரான இடைவெளியில்,நேர்த்தியாக  அழுத்தமாக எழுதப்படும்  அந்த வரிகளைக் கண்டு வியந்த உணர்வு இன்றும் அப்படியே இருக்கிறது.கவிதாவின் நோட்டு புத்தகங்களை வாங்கி வந்து,அவள் எழுதியதைப்  போலவே எழுத முயற்சித்தேன்.இரண்டு மூன்று வரிகள் அதேபோல எழுதிவிடுவேன்.பிறகு பழையபடி கையெழுத்து குழைந்துவிடும்.அப்படி எழுதுவதற்கு அதிக நேரம்  தேவைப்பட்டது.அடுத்த நாள் முதல், வகுப்புகளில் கவிதா எழுதுவதை உன்னிப்பாகக் கவனித்தேன்.பேனா பிடிப்பது,எந்தப்பக்கம் சாய்த்து எழுதுகிறாள் வார்த்தைகள் எப்படி  நேராய் அமைகின்றன என ஒவ்வொன்றையும் கூர்ந்துகவனிக்க துவங்கினேன்.

         அந்த வருடம் கல்வி சிறிது முன்னேற்றத்துடன் முடிவடைந்தது.வேறு பள்ளிக்கு மாற்றல் ஆனேன்.இன்னும் "கவிதாவின் கையெழுத்து" எனக்கு  பரிச்சயப்படவில்லை.நான் பத்தாம்வகுப்பு படிக்கும்போது,எனக்குள் கிடந்த கையெழுத்து ஆசை மீண்டும் தலைதூக்கியது.தினமும் பலமணிநேரம் அதற்காக பயிற்சி செய்தேன்.வீட்டுப்பாடம்  செய்யும்போதும்,பரிச்சைக்கு முன்னர் எழுதிப்பார்க்கும் போதும் கையெழுத்தின் மேன்மையில் அதிகம் கவனம் செலுத்தத் துவங்கினேன்.
    
          பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு  எழுதுகையில் ஓரளவு நன்றாகவே தேர்ந்துவிட்டேன்.கவிதாவின் எழுத்துகளுடன் ஒப்பிட முடியாது எனினும் நல்ல வடிவாக எழுதப் பழகியிருந்தேன்.

பத்துவருடங்களுக்கு  மேல் ஆகின்றன.இன்றும் என் கதை கவிதைகளைப் படிப்பவர்கள் "உன் கையெழுத்து அழகாக இருக்கிறது !" எனக் கூறினால்,சட்டென நினைவில் வந்துசெல்கிறாள் கவிதா  என்ற அந்தத் தோழி!

Wednesday, July 17, 2013

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!

(குறிப்பாக பெண்களுக்கு)
1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

Monday, April 22, 2013

படித்ததில் பிடித்தது 5 - ஆசைகள்மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்


மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1.
என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2.
வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3.
உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக.
 

கிடா விருந்து அழைப்பு!


சித்திரை மாசம் வந்தாலே பெரும்பாலான கிராமங்கள்ல திருவிழா களைகட்டும்.குறைஞ்சது 3வார விழாவ நடத்துவாங்க.பூப்போட்டு அம்மை அழைக்கிறதுல இருந்து,கம்பம் நட்டு,திருவிழா எடுத்து மஞ்சள்நீர்,மறுபூசை வரை பல கட்டமா,உற்சாகம் குறையாம ஊர் முழுக்க கொண்டாடுவாங்க.இத்தனை அலம்பல்ல, வராத மழை கூட வந்துடும்-ங்கிறது நம்பிக்கை.போன வருசம் கூட பருவம் மாறாம கொஞ்சம் மழை வந்துச்சு.இந்த ஒரு வருசமா சொட்டுத்தண்ணி கூட பார்க்கமுடியல.புயல் தள்ளிவிட்ட மேகங்கள் மட்டும் அப்பப்ப வந்து கண்ணீர்விட்டுட்டு போனது.போன வாரம் எங்க ஊருல கம்பம் நட்டு,இந்தவார விழா நடக்கப்போவதை உறுதி செய்திருந்தாங்க.அந்தன்னைக்கு மழை வரும்னு எல்லாரும் வானத்தைப் பார்த்துக் கிடந்தோம்.பூசாரி போட்ட தீர்த்தம் தான் மிச்சம்.


   சாமிவந்து ஆடின அந்த பூசாரி சிபிஐ கணக்கா ஒன்னு சொன்னாரு,"ஊர் எல்லையில எவனோ உரலைப் போட்டு வச்சிருக்கான்.அத எடுத்து எறிஞ்ச உடனே மழை வரும்"னு.நான் சிரிச்சுகிட்டே வீட்டுக்கு வந்துட்டேன்.சொல்லி ஒருவாரம் ஆனாலும் மழையைக் காணோம்.அதுக்காக, பூசாரிக்கு அருள்வரலை,சாமி வாக்கு சரியா குடுக்கலை அப்டினு முடிவு சொல்றேன்னு நினைக்கக் கூடாது.மக்களே மறந்தாச்சு.வர்ற நோம்பிக்கு கறிசோறு தின்னப்போறோம்னு சந்தோசமோ என்னமோ.ஆடு,கோழின்னு பக்தியோட வெட்டி சாமிக்கா ஊட்டி விடறோம்?நம்ம காசு.நம்ம வயிறு.சாமிக்கு என்ன தெரியும்னு நெனச்சாங்களோ என்னமோ?

நான் சொல்ல வந்ததை விட்டு எதையோ பேசிட்டிருக்கேன்.

   இந்த மாரியம்மன்கோவில் பொங்கல் விழாவுக்கு,கிடாய் வெட்டி சொந்தங்களை அழச்சு விருந்துபோடலாம்னு எங்க வீட்டுல முடிவு செஞ்சோம்.போன் பண்ணி எல்லாரையும் அழைச்சா போதும்னு வீட்டுல பேசிகிட்டாங்க.ஒரு பெரிய மனுசன் வாய வச்சுட்டு சும்மா இருக்காம,"அதென்ன போன்ல கூப்படறது?புதுவீடு கட்டிருக்கோம்.மொதவிருந்து அங்க போடப்போறோம்.நேர்ல கூப்பிட்டாதான் நல்லா இருக்கும்!"னு சொல்ல,.எல்லாரும் சரின்னு சொல்லிட்டங்க.அதுமட்டுமில்லாம,அந்த பெரிய மனுசனையே சொந்தக்காரங்களை அழைக்கபோகச் சொல்லிட்டாங்க. 

   அந்தப் பெரிய மனுசன் நான்தான்ங்கிறதால சனிக்கிழமை காலைல நேரமாவே வண்டிய விட்டேன்.கொளுத்துற வெயில்னு கேள்விப்பட்டிருக்கேன்.பதிலை நல்லா பட்டுத் தெரிஞ்சுகிட்டேன்.போற வீடுகள்ல தண்ணீர்பதார்த்தமா சாப்பிட்டதால,தாக்கம் பெருசா தெரியல (தாக்கம் தான். தாகம்-னு நினச்சு எனக்கு தமிழ் வராதுன்னு முடிவு கட்டிடாதீங்க).போன வாரம் நெறஞ்ச மழை பேஞ்சதால,சூடு கொறஞ்சிருக்குன்னு சில ஊர்ல சொன்னாங்க."அடே பாருடா.நம்ம ஊரு மாரியாத்தா இந்த ஊருக்கு இறைச்சுவிட்டிருக்கா!"னு மனசுக்குள்ள நினச்சுகிட்டேன்.

   வீடுவந்து சேர 5 மணி ஆகிடுச்சு.உத்தேசமா 120கல் தூரத்தை வண்டியில கடந்திருப்பேன்.சூட்டுல கண்ணு ரெண்டும் கோவப்பழமா சிவந்திடுச்சு.தலை நிறைய எண்ணெய பூசிகிட்டு,படுத்துகிட்டேன்.மெதுவா கண்ணைமுழிச்சு பார்த்தப்போ சென்னை அணி விளையாட்டு டிவிக்குள்ள நடந்துகிட்டுஇருந்தது.திடும்மென எழுந்து உட்கார்ந்து,அரைத்தூக்கத்தில கைதட்டிட்டிருந்தேன்.என்ன நடக்குதுன்னே காலைல வரை தெரிய.அவ்வளவு அலுப்பு.

   இந்தவாரம் வியாழக்கிழமை திருவிழா வரப்போகுது.அழைச்ச சொந்தக்காரங்க எல்லாம் வருவாங்க.அவங்களோட சேர்ந்து கிடா விருந்து சாப்பிடப்போறேன்.நாள் முழுக்க எங்கவீடு நெறைய உறவுகள் இருக்கப்போறாங்க.அடுத்த விசேசம் வரை காணக்கிடைக்காத காட்சி அது.இந்த எண்ணம் மனசுக்குள்ள வரும்போதே,அலுப்பு சலிப்பெல்லாம் தண்ணிவத்திப்போன பக்கத்து ஊரு ஆத்தோட போயிருது.

 இன்னொரு முக்கியமான விசயம்.படிக்கிற நீங்களும் எங்க வீட்டு விருந்துக்கு வந்துடுங்க.அப்புறம் சொல்லலனு கோவிச்சுக்கப்படாது.

மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா

நாள் : 25 April வியாழன்,2013
இடம் : எங்க வீடு