Monday, January 21, 2013

ஒரு உதாரணம் - கற்பனைக் கதை - ராஜ்குமார்

ஒரு குழந்தை.ஆணோ பெண்ணோ!பிறந்துவிட்டது.

5 வயது முடிந்த பிறகு அரசுப்பள்ளியில் சேர்க்கலாம் என நினைத்தால்,துணைவி பக்கத்து வீட்டு வாட்ச்மேன் பையன் 2 வயதில்,கான்வென்ட் போவதை மறைமுகமாய் சொல்லிக்காட்டுகிறாள்.

அப்படியே நாமும் குழந்தையை அந்தப்பள்ளியில் சேர்க்கலாம் என சொன்னால்,மறுபடியும் ஒரு பிரச்சினை.

வாட்ச்மேன் குழந்தை படிக்கும் பள்ளியிலேயே இஞ்சினியர் பிள்ளையும் படிப்பதா? கௌரவம் என்ன ஆவது? ஊரே கேவலமாய்ப் பேசும் என்று எச்சரிக்கை வேறு.

அப்படியா.சரி.உயர்ந்த பள்ளி என நீங்கள் சொல்வது எது எனக் கேட்டால்,இந்தப் பள்ளியைவிட சில மடங்கு அதிக கட்டணம் கேட்கும் பள்ளியைக் காட்டுகிறார்கள்.

அவர்கள் கேட்ட அந்தத் தொகையை 23 வயதில் கல்லூரிக்கு செலுத்தியதாக நியாபகம்

சொந்தக்காரர்களின் முகங்கள் கூட சரியாகப் பழகாத அந்த 2 வயது பிஞ்சை,அந்தப் பள்ளியில் சேர்த்தாயிற்று.

முதல்நாள் நானே பைக்கில் கொண்டு விட்டேன்.அழுதகண்களோடு கையசைத்துவிட்டு, பள்ளிக்குள் நுழைந்தது குழந்தை.

அடுத்த ஒருவாரம் பள்ளி வாகனம் வீட்டுக்கே வந்து அழைத்துச் சென்றது.

ஒரு ஞாயிறு இரவு.கணிப்பொறியில் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலில் மூழ்கியிருந்தேன்.என்னவள் வந்தாள்."குழந்தை அழுகிறது.என்னவெனக் கேளும்!" என்றாள்.


 மடியில் அமர்த்தியபடி குழந்தையைக் கேட்டேன்,"என்ன ஆயிற்று".
பள்ளிக்கு தினமும் காரில் கூட்டிச் செல்லவேண்டும் என்றும்,தன் வகுப்பில் அனைவரும் அப்படியே வருகிறார்கள் என்றும் கூறியது., கூட படித்துப்பழகாத இந்த பிஞ்சின் மனதுக்குள் ஏற்றத்தாழ்வு பூதம் நுழையப்பார்க்கிறதே என பயந்தேன்.அப்படியே காரில் இறக்கிவிடுவதை வாடிக்கையாக்கினேன்.



சிலநாள் கழித்து மீண்டும் அழுகை.என்னவெனக்கேட்டேன்.

தன் வகுப்புப் பையன் ஒருவனுக்கு,அவன் தந்தை அமெரிக்காவிலிருந்து கண்சிமிட்டும் பொம்மை வாங்கிவந்தார் என்றும்,அதே போல தனக்கும் வேண்டும் என்றது. 
அதட்டினேன்.அழுதது. 

அடிக்க மனம் வரவில்லை.பெரிய கடை ஒன்றுக்கு அழைத்துப்போய்,சில ஆயிரங்கள் செலவு செய்து வேண்டிய பொம்மைகளை வாங்கிகொடுத்தேன்.

இதுதான் நேரம் என்று துணையும் நகை வேண்டும் என்றது.நாளை அவள் தோழியின் திருமணவிழாவாம்.பெரிய இடம்.நாமும் அதற்கேற்ப போகவேண்டும் அல்லவா?என கேள்வி வேறு.

நாட்கள் நகர்ந்தன.

குழந்தை மதிப்பெண்பட்டியலைக் கொண்டுவந்து காட்டியது.தேர்வுகள் அனைத்திலும் 95,100 என மதிப்பெண்கள்.பேச்சில் ஆங்கில வார்த்தைகள் சற்று தூக்கலாகவே இருந்தது.மனைவிக்கு இதில் ஏக பெருமை.

என் குழந்தைக்கு தமிழில் நாட்டம் குறைந்துவிட்டதோ? என எண்ணம் எழுந்தது.
ஒரு சில வார்த்தைகளைக் காட்டி படிக்கச் சொன்னேன்."I dono dad" என சொல்லிவிட்டு ஒரு ஆங்கிலப் பாடலை முனுமுனுத்தபடி ஓடியது குழந்தை.

மனைவி,”உங்களைப்போலவே அவனையும் தமிழ் பித்தன் ஆகச்செய்கிறீரா?” என கிண்டலாகக் கூறிக் கடந்தாள்.


அரசுப்பள்ளியில்,10 வயதில், "தமிழ் என் மூச்சு! தமிழின் வளர்ச்சிக்கும்,தமிழின் செம்மைக்கும் உயிருள்ளவரை துணைநிற்பேன்!" என மேடையில் முழங்கிய என் உருவம், ஏளனமாய்ச் சிரித்தது என்னைப்பார்த்து!

5 comments:

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்