Thursday, January 31, 2013

கணினிக்கு ஒரு காதல் கடிதம்!


"யார் யாரைப் பற்றியோ கவிதை,கதை என எழுதித் தள்ளுகிறாயே.என்னைப் பற்றிக் கொஞ்சம் எழுத மாட்டாயா?"
இந்தக் கேள்வியை ஏக்கமாய் என்னைப் பார்த்து கேட்டது வேறு யாரும் இல்லை. தினமும் என் முகத்தை பலமணி நேரமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் கணிப்பொறிதான்."அடச் செல்லமே! எழுதாமல் என்ன?உன்னை வர்ணிக்கவும்,உன்னுடனான என் உறவினை விவரிக்கவும் வார்த்தைகளைக் சேர்த்தபடி பலநாளாய்க் காத்திருக்கிறேன்.இனியும் உன் பொறுமையை நான் சோதிக்கப் போவதில்லை.இதோ உனக்காக.உன்னைப் பற்றி !!"

காலம் எவ்வளவோ மாற்றங்களை நம்மிடம் காணவைக்கிறது.இன்று நமக்குத் தேவையாய் இருப்பது நாளை வேண்டாத பொருள் ஆகிவிடுகிறது.கனவில் மட்டுமே வரும் என நினைக்கும் சில நம் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாததாய் ஆகிவிடுகிறது.நீயும் அப்படித் தான்.


எனது 10 வயதில் " ஜீன்ஸ்" திரைப்படத்தில் முதன்முதலாய் உன்னைப் பார்த்தபோதே காதலில் விழுந்துவிட்டேன்."உன் அப்பா,உனக்கு எதாவது வாங்கிக் கொடுக்கவேண்டும் என சொன்னால், என்ன கேட்பாய்?" என யார் கேட்டாலும் என் பதில் உன் பெயர்தான். இத்தனைக்கும் உன்னை நேரில் கூட பார்த்தது கிடையாது.பள்ளிக்கு ஒருவர் பயிற்சி புத்தகங்கள்,பொதுஅறிவு புத்தகங்கள் என விற்க வந்தார்.அந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்தில் நீ வண்ணமயமாய்க் காட்சியளித்தாய்.உடனே வாங்கி விட்டேன்.பல மணிநேரம் அதில் உன்னைப் பார்க்துக்கொண்டே மாய உலகில் மிதந்தேன்.

காலம் உருண்டோடியது.என் உறவுக்காரன்,அவர்களின் பக்கத்து வீட்டில் ஒருவர் கணிப்பொறி வைத்திருப்பதாய்ச் சொன்னான்.உடனே உன்னைப் பார்க்க விரைந்தேன்.அங்கே ஏதோ என் கனவு பலித்தது போல ஒரு உணர்வு எனக்கு.தினம் தினம் நினைத்துப் பார்த்து உருகிய உன் உருவம் என் கண் முன்னால்.வியப்பாய் உன் இயக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.உன்னைத் தொட்டுப் பார்க்கக் கூட என்னை அவர்கள் அனுமதிக்கவில்லை.கோபமாய் வீட்டுக்கு வந்து விட்டேன்.நீயாவது அவர்களிடம் சொல்லி இருக்க வேண்டும்.நான் உனக்கு தெரிந்தவன் என்று.போகட்டும்.

விடுதியில் தங்கிப் பள்ளியில் படித்த நாட்களில்,நண்பன் ஒருவன் கணிப்பொறியுடனான அவனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வான்.வாரத்துக்கு மூன்றுமுறையாவது திரும்பத் திரும்ப அவனை சொல்லவைத்துக் கேட்பேன்.சலிக்காத வர்ணனைகள் அவை.பாராமுகமாய் உன்மேல் என் காதல் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தது.

உன்னை முதன்முதலாய் என் விரல்கள் தீண்டிய நாள் மே மாதம்,2004.தந்தை என்னை கோபியில் உள்ள ஒரு பிரபல கணிணி பயிற்சிநிலையத்தில் சேர்த்தார்.


முதல் நாள் ஆகையால் வரைவது எப்படி என சொல்லிக் கொடுத்தார்கள்.இரண்டு மணிநேரம் முடிந்தது என அவர்கள் சொல்லி என்னை அழைத்தபோது வரைந்து முடிக்காத மலர் உன் முகத்தில் சிரித்தது.நம் முதல் சந்திப்பில் நான் உனக்கு அன்புடன் கொடுத்த மலர்தான் அதுவெனத் தெரிந்தது எனக்கு,அன்று என் கனவில் நீ!.,பார்த்த காட்சிகள் நின்ற இடம் என அனைத்திலும் உன் பிம்பம்.

என் காதல் வெற்றியடைந்து உன்னைக் கரம் பிடித்த வருடம் 2009.நீ எனக்குக் கற்றுக் கொடுத்தவை எத்தனையோ.இன்றுவரை அது தொடர்கிறது.உன்னுடன் எனக்கு நல்லதொரு புரிதல் இருக்கிறது.வெற்றிகரமாக நாம் இன்றும் நெருக்கமாய்.நாள் முழுக்க உன் முகத்தைப் பார்த்தபடி இருக்கும் உத்தியோகம் எனக்கு.இதைவிட வேறு என்ன வேண்டும்? ஒரு கணிப்பொறியுடன் நமக்கு எந்திர வாழ்க்கை என எவ்வளவோபேர் எதிர்மறையாய்ப் பேசும்போது,நீ எனக்கு கொடுத்தவற்றை சற்று எண்ணிப்பார்ப்பேன்.நம் தீராக்காதலை நினைவு கூர்வேன்.செல்லமாய் நாம் பேசும் கொஞ்சுமொழிகள் எனக்குமட்டும் ரகசியமாய் காதில் கேட்கும்!

-என்றும் காதலுடன் ஒரு மென்பொருள் பொறியாளர்.

2 comments:

  1. இது என்றும் தீராத காதல் ஆயிற்றே...

    ReplyDelete
  2. un kaadhali(kanipori) en kaadhalan !!!!!!!

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்