Thursday, December 10, 2015

உறுமீன் (திரை விமர்சனம் அல்ல)

இன்றைய காலங்களில் தமிழ் திரைப்படங்கள் எத்தனையோ மாறுதல்களைக் கண்டுள்ளது மகிழ்ச்சி நிறைந்த செய்தி.அதுவும்,"காதல்","தாய்","தங்கை" அல்லது கதாநாயகன் பெயரை படத்திற்குச் சூட்டாமல் வேறுபட்டு யோசிக்கின்றனர் இன்றைய இளம் திரை நண்பர்கள். அதுவும் அழகுத் தமிழில் வெளிவந்த சில படப்பெயர்கள் என்னை வியக்க வைத்தன.
அவைகளில் சில .."யான்"- நான்,ஐ - அழகு ,அநேகன்-ஒரே உருவில் மற்றொருவன்,அயன்-படைப்பவன்(பிரம்மா) இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

நேற்று குடும்பத்துடன் "உறுமீன்" படம் பார்க்கச் சென்றேன்.அந்தப் பெயர் கூட ஒரு பழைய தமிழ் செய்யுள் வரி போலத் தோன்றியது.படம் பார்க்கும்போதே அதன் பொருள் இதுவாகத்தான் இருக்கும் என எண்ணிக்கொண்டேன்.
நண்பர்கள் இன்று காலையில் மீண்டும் "உறுமீன்" பற்றிப் பேச,எனக்கு அதன் பொருளை அறிந்துகொள்ளும் ஆவல் இன்னும் அதிகமானது.அனைவரின் இலவச ஆசான்,"கூகிள்" உதவியுடன் அச்செய்யுளை நான் கண்டுபிடித்தேன்.

அவ்வையார் அருளிய "மூதுரை"-யில் இடம்பெற்றுள்ளது "உறுமீன்".
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. 16


பொருள்:
 ஆற்றின் கரையில் ஒருகாலை ஊன்றி நிற்கும் கொக்கு, சிறு மீன்களை ஓடவிட்டுவிட்டு வாடியதுபோல காத்திருப்பதற்குக் காரணம்,தனக்குப் போதுமான பெரியமீனைப் பிடிப்பதற்காகவே.அதைவிடுத்து, அக்கொக்கினை நாம் முட்டாள் என எண்ணிவிடக் கூடாது.
அதுபோலவே, அடக்கம் கொண்ட மக்கள், நீங்கள் கூறும் தூற்றல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால்,அவர்களை முட்டாள்கள் என்று கூறி ஏமாறவேண்டாம்.அவர்கள் தம் வலிமைக்குச் சமமான எதிரியாக உம்மை நினைக்கவில்லை என்று அறிக.


நீதி:  யாரையும் குறைத்து மதிப்பிடாதே!

ஆக, நமது உறுமீன் பட நாயகன்,இரண்டு ஜென்மங்களாய் விட்டுவிட்ட தனது எதிரியை,தன்னை முட்டாள் என எண்ணிய பெரிய மீனை,மூன்றாம் ஜென்மத்தில் வென்றுவிட்டான்.உறுமீன் சிக்கி விட்டது.