Tuesday, November 22, 2011

ஆடம்பர பயணம் - அலட்டல் இல்லாமல்!

காந்திபுரம் பேருந்து நிலையம் !!
தள்ளு வண்டிக்கடைகள் தங்கள் வியாபாரத்தில் மும்முரமாக இருக்க,
தங்கள் ஊருக்கு செல்லும் பேருந்தைத் தேடியபடி மக்கள் அலைந்துகொண்டிருந்த மாலை வேளையில்,கூட்டத்தைக் கடந்தபடி நானும் நடந்துகொண்டிருந்தேன்.
கார்த்திகைப்பனி கொஞ்சம் கன்னம் தொட்டது.

நான் எதிர்பார்த்த கோவை - கோபி பேருந்து, நிலையத்துக்குள் நுழைந்ததும் பலரின் கைக்குட்டைகள் பேருந்துக்குள் பறந்தன இடம் பிடிக்க..
எனக்கு அதில் விருப்பம் இல்லை (அப்போது என் கையில் கைக்குட்டை இல்லை) என்பதால், நான் வேகமாக பின் வாயிலில் ஏறி சாளர இருக்கை ஒன்றைப் பிடித்து அமர்ந்து கொண்டேன்.

நடத்துனருடன் நடக்கும் சில்லறை சம்பந்தமான சில்லறை வாதங்களை நான் விரும்பாததால், எப்போதும் சரியான பயணச்சீட்டு விலையை நான் எடுத்துச் செல்வது வழக்கம். 28ரூபாய். சரிபார்த்து எடுத்து, என் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு , சாளரக்கம்பிவழியே வேடிக்கை பார்க்கத்துவங்கினேன்!

பத்து நிமிடங்கள் கரைந்தன.

காலையில் 'பேருந்து பயணச்சீட்டு மற்றும் பால் விலையை உயர்த்தி விட்டார்கள்', என்ற செய்தியைப் படித்தது நினைவுக்கு வந்தது .
இது அவ்வப்போது நடக்கும் ஒன்று என்றாலும், புதிய விலையை அறியும் ஆவல் அதிகரித்தது..கிட்டத்தட்ட அனைவரின் முகத்திலும் அதே எதிபார்ப்பு.

முகத்தில் புன்னகை தவழ நடத்துனர் உள்ளே நுழைந்தார்.அவர்
கையில் வைத்திருந்த பையில் இருந்து வரும் வழக்கமான சில்லறை சத்தம் சுரம் குறைந்து கேட்டது!
கரகரப்பான குரலில்,"பயணச்சீட்டு விலை 49 ரூபாய்.அனைவரும் சரியான சில்லறை எடுத்து வைக்கவும்" என்று சொன்னதும் அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி அலை!
ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் என்றால் பரவாயில்லை! ஒரேயடியாக 21 ரூபாய் ஏற்றி இருப்பது சராசரிக் குடிமகனுக்கு விழுந்திருக்கும் பெரும் இடி எனவே தோன்றியது.
என் அருகினில் அமர்ந்த ஒரு அரசுப்பணியாளர் இந்த விலையேற்றத்தின் காரணத்தை விவரிக்கத்துவங்கினார்.
"பொதுத்துறை தனக்கென வருவாய் மீதம் இல்லாமல், அரசிடம் கடன் வாங்கும் நிலையில் இருப்பது வேதனை அளிக்கிறது.ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தினசரி மீத வருமானமும் குறைக்கப்பட்டுள்ளது.
பலரும் ஆட்சியைக் குறை சொல்கிறார்கள்! அது நியாயம் இல்லை.
வாகன எரிபொருள் விலை கொஞ்சம் கொஞ்சமாக ஏறியபொழுதே, பயணச்சீட்டு விலையை அரசு உயர்த்தி இருக்க வேண்டும்.
ஆனால், மக்கள் தம் ஆட்சியை நல்லாட்சியாகக் கருதவேண்டி, கடந்த அரசு, பொதுத்துறைக்கு இழப்பினை ஏற்படுத்தியுள்ளது!!
ஆக, இதன் பிறகு வரப்போகும் விலை ஏற்றத்துக்கும், காரணம் இருக்கிறது. அரசு மக்களை ஏய்த்து எதையும் அதற்கென ஈட்டப் போவதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்!!" என்றார்.

அவர் சொன்னதுபோல,அரசியல் பின்னணியை அலசிப்பார்க்கும்போது விலையேற்றியதில் தவறொன்றும் இல்லை எனவே தோன்றுகிறது.
ஆனாலும் அடித்தட்டு மக்களை நினைக்கும் போது வருத்தமாய் இருக்கிறது!!
அரசியல்வாதிகள் இதனைப் புரிந்துகொள்வார்களா!!
(இருக்கும் வரை இருப்பதைக் கொள்ளையடித்து, வரப்போகும் தன் சந்ததிக்கு சொத்து சேர்க்கும்
உள்ளங்களே!! உங்களால் பலர் சந்ததியிழந்து நிற்கின்றார்கள்! உணர்ந்துகொள்ளுங்கள்!!)

நீண்ட நேர பயண முடிவில் வீடு வந்து சேர்ந்தேன்.

                                      <<பயணம் முடிந்தது>>



No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்