Showing posts with label எனது- படைப்புகள். Show all posts
Showing posts with label எனது- படைப்புகள். Show all posts

Monday, November 19, 2018

குறுங்கதைகள்

Tech Geek

" Tech " என முன்புறமும்," Geek " என்று பின்னாலும் எழுதிய T-shirt அணிந்து கொண்டு, தான் முன்னே வாங்கி வைத்த வடையும்,இட்லியையும் எந்த டேபிளில் வைத்தோம் என்று தெரியாமல் திருதிருவென விழித்தபடி,ஒருகையில் காபி சிந்துவது கூடத் தெரியாமல்,இன்னொரு கையில் "Whatsapp status" பார்த்துக் கொண்டு சுற்றி சுற்றி நடந்த அந்த சக தொழிலாளியைப் பார்த்தபோது மனதில் சொல்லிக்கொண்டேன்..இவன் "
Tech Geek" இல்லை.."Tech Freak ".

கஜா புயல்..

  புயலால் மரங்கள் சரிந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடிய பொழுதில், சரிந்த மரங்கள் மீது நின்றும், வெள்ளத்தின் ஓரத்திலும் நின்று எடுக்கப்பட்ட selfie -கள் சமுதாயத்திற்கு சொல்வது என்ன?

வழி..

Google Map -ல் வழிதேடி எளிதில் நண்பன் வீட்டை வந்தடைந்தேன்..
ஆனால், திரும்பி வரும்போது தான் தெரிந்தது, எனது பயண அனுபவங்கள் எல்லாம் google map history -க்குள் முடங்கி விட்டன என்று..அதில் நான் தொலைத்தவை உணர்வுகளும்,பல மனித முகங்களும்...

அதற்குத் தக..

உதவி என்று கேட்டவர்களுக்கு உன் கைகள் உதவட்டும். ஒரு கை உனக்கு என்றால்,மற்றது,ஏழை எளியவர்களுக்கு கொடுப்பதற்கு என்ற ஒரு சினிமா வசனத்தைக் கேட்டுக்கொண்டே நகர்ந்த என்னிடம் ,"சாமி..சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு சாமி..எதாவது போடுங்க.." என்றது சிறுவனின் கூக்குரல்.."சில்லறை இல்ல.." என்று சொல்லிவிட்டு வழக்கம் போல அவனைக் கடந்து வந்துவிட்டேன்.யாரோ யாரையோ சத்தமாகத் திட்டியது காதில் விழுந்தது..மன்னிக்க வேண்டும்.அது எழுத இயலாத கெட்டவார்த்தை.
எனக்கு எனோ சுருக்கென்றது..


- ராஜ்குமார்
16-11-18 10:50

ஈரமான நெஞ்சம்..

என்னவளிடம் கேட்டேன்..
என்னைப் போன்ற ஒருவனை நீ
சந்தித்தது உண்டா? என்று..

இல்லை என்று சொல்வாள் என
எண்ணிக் கேட்ட கேள்வி அது..

அலட்டல் இல்லாமல் அவள் சொன்னாள்
"உண்டு" என்று..

கோபத்தை உள்வைத்து
ஆர்வமாய் முகம் வைத்து,
"யாரென்று சொல் கண்ணே!" என்று
அமைதியாகக் கேட்டேன்..

நெருங்கி என்னிடம் வந்து,
நெற்றிமுடி வருடியபடி சொன்னாள் ..
" இரவு முடிந்த பின்னும்
மலரிதழ்களின் ஈரம் காய்ந்திடாது பெய்யும்
வான் மழையும் நீயும் ஒன்றுதானே!" என்றாள் ..

புன்சிரிப்பு என்னிடம்...குறும்புச் சிரிப்பு அவளிடம்...

- ராஜ்குமார்
16-11-18 23:45
 

Wednesday, November 14, 2018

அடிக் கள்ளி..


காதல் என்ற பொக்கிஷத்தின்
கள்ளச் சாவியைக்
கேட்டால் தருகிறேன் என்கிறது - உன்
கண்களின் வெட்கம்!

- ராஜ்குமார் (11-11-18 10:45)

தனிமை

பலநாள் கழித்து
என் வீட்டுக்குள் நுழைந்தேன்..

சிதறிக் கிடந்த தானியங்களை
எறும்புகள் தின்றிருந்தன.
சிறு பூச்சிகள் சிலந்திவலையில்
சிக்கிக் கிடந்தன..

வாடி உதிர்ந்த காகிதப் பூக்களைக்
காற்று எடுத்துச் சென்றிருந்தது..

ஆனால்,

என் தனிமை மட்டும்
தின்னப் படாமல்
எனக்காகக் காத்துக் கொண்டிருந்தது..!

                          *        *        *

என் தனிமையை இசை தின்று தீர்க்கிறது..
ஸ்வரங்கள் இனிமையில்
நான் தொலையும் தருணத்தில்
என்னையும் தின்றுவிட்டு
ஏப்பம் விடுகிறது இசை...!

- ராஜ்குமார் (02/11/18 11:00)

ரசிகை

என் எழுத்துகளுக்குக் காத்திருக்கின்றன
அவள் விழிகள்.
என் கவிதை பாடக் காத்திருக்கின்றன
அவள் மொழிகள்..!

என்ன எழுதிக்கொடுத்தாலும் - அவள்
படித்துக்கொண்டே இருப்பாள்!
நான் எழுதுவதை நிறுத்தினாலும் - அவள்
வாசிப்பு ஓய்ந்ததில்லை.

எனது வரிகளை
விழிகளால் சுவைத்து
விழுங்கத் துடிக்கும்
அவளது பசி ,குறையாதது!

அவள் மீது எனக்கும்,
என் கவிதைகள் மீது அவளுக்கும் ,
இழையோடும் உறவு
காதல் சேராதது...காமம் தோயாதது...!

கண்ணீராய், வெட்கங்களாய் ,
புன்னகையாய் ,பூரிப்பாய்
எனது எழுத்துக்களுக்கு-தினம்தினம்
அவளின் கைத்தட்டல்கள்...!

இதோ
எழுதுவதற்கு நான் தயாராகி விட்டேன்.
எங்கே எனது அந்த ரசிகை?

- ராஜ்குமார் (02/11/18 9:00)

Tuesday, January 30, 2018

பிரிவின் வலியில்..

காதலில் தவிக்கும் -என்
கண்களில் தூக்கம் இல்லை.
தனிமை கசக்கிறது!
நிமிடங்கள் சுடுகின்றன!

கவிதைகளைத் துணையாக விட்டுத்
தூரமாக நீ சென்று விட்டாய்! -என்னைக்
கவிதைகள் தூங்க விடுவதில்லை.
நானும் தான்..

நடுநிசியில் எழுந்துகொண்டு
எதுகை மோனை யோசிக்கிறேன்!
பசி வந்த பொழுதுகளில் -நம்
காதல் கவிதைகள் வாசிக்கிறேன் !

உருவகிக்க இயலாத உணர்வுப் பிடியில்
உள்ளம் நோகிறது!
பரிதவிக்கும் நான்!
தூரமாய்  நீ ! - நிஜம்
சுடுகிறது!

- ராஜ்குமார்


Tuesday, December 26, 2017

கன்பூசியஸ் சிந்தனை முத்துக்கள்

**மனிதன் இயற்கையிலேயே நல்லவன்.ஆகவே, தண்டனையோடு அவனை நெருங்குவது முட்டாள்தனம்!

**சிந்தனையில்லாத படிப்பு உபயோகமற்றது.படிப்பில்லாத சிந்தனை ஆபத்தானது.

**தெரிந்ததை தெரியும் என்றும்,தெரியாததை தெரியாது என்றும் உணர்வது தான் அறிவு.

**நேர்மையானது எது எனத் தெரிந்தும்,அதைச் செய்யத் தவறுவது கோழைத்தனம்.

**முடிந்துபோன விஷயத்துக்கு விளக்கம் வேண்டாம்.
முன்னேறிச்செல்லும் விஷயத்துக்கு விளக்கம் வேண்டாம்.
இழைத்துவிட்ட தவறுகள் பற்றி,குற்றங்குறை கூறவேண்டாம்.

**அறிவாளி, யாரை வெறுப்பது,யாரை நேசிப்பது என்பதைத் தெளிவாக அறிவான்.

கல்வி என்பது....

கற்பது எப்போது என்பது,பள்ளியில் சேர்ந்த நாள் அன்று முடிவு செய்யப்படுவது அல்ல.தேவைகள் தோன்றும்போது,கற்பது தானாகத் துவங்கிவிடுகிறது.அப்படியானால்,அதற்கு முடிவு எப்போது என்று மட்டும் கேட்காதீர்கள்.ஏனெனில்,எது முடிவு என்பதைக் கற்றுக்கொள்ளவே முழு ஆயுளும் போதாது.
ஆகவே விரலைப் பார்த்து நேர விரயம் செய்யாமல், நிலவைப் பார்த்து ரசியுங்கள்.கல்வி பற்றி எண்ணாமல்,கற்பதைத் தொடங்குங்கள்.

ஒன்றைத் தெரியவில்லை என்று எப்போது நாம் உணர்கிறோமோ,அதனைக் கற்பதன் தேவை என்ன என்பதை எப்போது புரிந்து கொள்கிறோமோ,அந்த நொடியில்,நீங்கள் கற்க எண்ணியவை கண்முன் தானாகாத் தோன்றும்.அது,
மற்றவர் சொல்லிலிருந்தோ,புத்தகமாகவோ அல்லது காற்றில் பறந்து நம்மை அடையும் காகிதக் குப்பையாகவோ நிச்சயம் நம்மை அடையும்.ஆகவே, கற்கும் வாய்ப்பிற்காக,விழிப்புடன் காத்திருங்கள்.

அனைத்து வாய்ப்புகளும் கதவைத் தட்டுவதில்லை.
கதவைத் தட்டும் அனைத்தும்.இன்றையநாளில்,வாய்ப்புகளாக இருப்பதில்லை!!!

- ராஜ்குமார் (26-12-17)

Tuesday, August 15, 2017

வறுமையின் சுவடுகள்

என்சிறு வயதினில்
எண்ணற்ற கனவுகள்..
ஏங்கியன யாதென்று
எண்ணிப் பார்த்தால்
பனையோலைக் கடிகாரம்
பளபளக்கும் பாலீஷ் மணிகள்
வண்ணப் பலூன்கள்
வாய்ருசிக்கப் பணியாரம்!
கேட்டிருந்தால் ஒருவேளை
கிடைத்திருக்குமோ என்னமோ?
கேட்க நினைத்ததில்லை!
வறுமையின் அரங்கேற்றம்..
ஊமையானேன் நான்..
                  ** ** **
சிறுஊசி நூல்கோர்த்து
சேலைக்கிழிசல்களை
சிரித்தபடி தைத்திடுவாள் அம்மா..
ஒருமுனையை நான் பிடிக்க,
அவள் சொல்லும் கதைகேட்டு
உள்ளம் மகிழ்ந்திருந்தேன்!
வறுமையில் யாம் இருந்தோம்
என்ற நினைப்பையும் மறந்துவிட்டு...
                   ** ** **

மழைத்துளிகள்

நீர் காணா உயிர் அது மழையைக் கண்டு வியக்கும் நொடியில் ஒரு கவிதை....
________
*மழைத்துளிகள்..*

விண்ணின்று வழியும்
தண்ணீர் உதிரம்!
மேகச் சிப்பிகள்
சிந்தும் முத்துக்கள்!

மின்னல் பூக்களில்
சுரக்கும் தேன்துளிகள்!
இடிகள் பெயர்தெடுக்கும்
சுரங்கத்தின் வைரங்கள்!

மனதில் இன்பத்தைக் கருக்கொள்ள வைக்கும் மகரந்தத் துளிகள்!
தமிழ்சோலை பதுக்கி வைக்கும்
கவிதைப் பூத்தூவல்!

- ராஜ்குமார்

Wednesday, July 26, 2017

மயங்கும் மலர்களே..


மாலை மயங்கும் நேரம் மலர்ந்த மலர்களே...!
நீங்கள் எப்போதாவது
காதல் கொண்டதுண்டா?

மைவிழியின் வீச்சில் மையல் கொண்டு,
மஞ்சள் முகம்கண்டு மதி மயங்கி,
செம்மீன் உதட்டு வரிகளில் சிக்குண்டு,
சங்கு கழுத்தில் மனம் நழுவி,
அவள் சிந்தும் அழகுப் புன்னகைக்கு காத்திருந்து,
விழிகள் திறந்தபடி கனவுகள் கண்டதுண்டா?

காதலித்துப் பாருங்கள்...!

உங்கள் மகரந்தச் சேர்க்கையில்
புது உயிரோட்டம் காண்பீர்கள்!

தென்றல் காற்றில் அழகு நடனம் புரிவீர்கள்...!

Wednesday, October 5, 2016

மழையே மழையே! (கவிதை)

காகித வானம்,
மழையில் நனைகின்றது!
சூரியனும் இல்லை..சந்திரனும் இல்லை
நின்று குடைபிடிக்க!


வி
ண்மீன்கள் இருக்கும் இடம் கூடத் தெரியவில்லை!


வானம் மறைந்து விட்டால்,
கவிதைக்கு எங்கே செல்வேன்?


ண்ணாடிக் குடையுடன் எழுகின்றேன்,
ஆகாயம் கிழியாமல் காப்பாற்ற!


"ஏ மழையே நின்றுவிடு!
சந்திர வெளியை விட்டுவிடு!
கோடிகள் எல்லாம் ஈடாகா,
என் கவிதைகள் தருகிறேன் உனக்காக! ஏ மழையே நின்றுவிடு!"


குடைபிடித்தும் நனைந்தேன் நான்!

ன்சொல் கேளாமல் விழுகின்ற துளிகளில்,
என்னையும் உணராமல் கரைந்து போகிறேன்!
குளிர்ந்த காற்றில் மிதக்கும் சாரலில்,
என்னைக் கழற்றி நனைந்து மகிழ்கிறேன்!


ப்போது வானம் உடைந்தாலும் எனகென்ன!
சொர்க்கம் என் அருகினில் மழையாய்ப் பொழிகையில்...



- Rajkumar PP

Wednesday, September 28, 2016

சின்னதாய் ஒரு காதல் கதை!

ஒரே பள்ளியில்,ஒரே வகுப்பில்சேர்ந்த இருவருக்கும் ஒரேவயதுதான்!மூன்று வயதில் காதல்வருமா? வந்தது அவனுக்கு!அவள்,அவனை விட படிப்பில் சுட்டி!அருகில் வந்து அனுமதிகேட்காமல் அமர்ந்து பேசுபவள்!

கடையில் என்ன வாங்கிவந்தாலும் பங்கிட்டு அவனுக்கும்கொடுப்பவள்!

இதுபோன்ற பல காரணங்கள்இருந்தது அவனது காதலுக்கு!

அன்று வகுப்பு துவங்கியது!அவனுக்கு கவனம் முழுக்க அவள் மீதுதான்!

உடன் இருந்த நண்பன்சொன்னான்!,"டேய்.அவகிட்ட லவ்சொல்லிடு.இல்லனா அந்தசோடாபுட்டி உஷார்

பண்ணிடுவான்!" என்று!

"அவ கிட்ட போனாவே, என்னமோமாதிரி இருக்குடா.எப்படிசொல்றது?" என்று நண்பனைக்கேட்டான்

"ஒன்னுமில்ல டா..எதுவும்பேசவேணாம்! அவ முன்னாடிபோய் நின்னு, உன் காதுல விரல்வச்சு,யானை காதாட்டுற மாதிரிபண்ணு!அதுக்கு பேர் தான்காதலிக்கிறது! அவபுரிஞ்சுக்குவா!" என்ற

விஞ்ஞானப்பூர்வ அறிவுரையைநண்பன் வழங்க,அதை முயற்சித்துப் பார்ப்பதென அவன்முடிவு செய்தான்!

வகுப்பு முடிந்து அனைவரும்வெளியே சென்றுவிட, அவளும்அவனும் தனியாக வகுப்பில்!

"சாப்பிடப் போகலயா?" என தனதுLunch Box எடுத்துக்கொண்டுஅவள் கேட்க, இவன் எதுவும்பேசாமல்

அவள் முன்னால் சென்று"காதலித்து"க் காட்டினான்!அவ்வளவுதான்! அவள் கீழேபுரண்டு புரண்டு அழ

ஆரம்பித்தாள். சத்தம் கேட்டு ஆயாஎன்னவெனக் கேட்க,அவள் என்னசொல்வாளோ என்ற பயத்தில்அவன் நின்று கொண்டிருந்தான்.

"எனக்கு அம்மா வேணும்! வரச்சொல்லுங்க!" என அவள்நிறுத்தாமல்அழுதுகொண்டிருந்தாள்!

ஆயா, அவளைக் கூட்டிக்கொண்டுவெளியே சென்ற உடனே, அவனும்ஒரே ஓட்டமாக வெளியேசென்றான்!

அறிவுரை சொன்ன நண்பனைக்கடிந்து கொண்டான்! "Bubble Gumலவிட்ட குமிழ் மாதிரி அழகா இருந்தஅவ முகத்தில் கண்ணீரைப்பார்க்க வச்சிட்டியே!.போடா!" எனதிட்டித் தீர்த்தான்.

அடுத்தநாள் அவளது போலிஸ்அம்மாவுடன் பள்ளிக்கு வந்து,ஆசிரியையிடம் ஏதோ புகார்செய்துகொண்டிருந்தாள்! அவள்அம்மா சொன்ன கடைசி வார்த்தைமட்டும் தெளிவாகக்

கேட்டது! "இனி என்பொண்ணுகிட்ட அந்தமாதிரி சொன்னான்னு தெரிஞ்சா,அப்புறம் நான் யார்னு காட்ட

வேண்டியதுவரும்!".அவ்வளவுதான்! அதன்பிறகு அவளை அவன் பார்ப்பதுகூட இல்லை.அவளும் தான்!

அவள் அம்மாவிடம் என்னசொல்லியிருப்பாள் என்றகேள்விக்கு கடைசிவரைஅவனுக்கு விடைகிடைக்கவில்லை.

வருடங்கள் கடந்தன! பள்ளியில்பிரிந்த காதல், கல்லூரியில்சேர்ந்தது! ஒரே அலுவலகத்தில்சேர்ந்த அவர்களுக்கு காதலிக்கநேரம் உண்மையில்இல்லாமல்தான் இருந்தது!பெற்றோர் எதிர்ப்பை சம்மதமாகமற்றிய பிறகே இருவரும்திருமணம் செய்துகொண்டனர்!

முதல் இரவில் தனது நீண்டகாலக்குழப்பத்தைப் பற்றி அவளிடம்கேட்டான்! "உனக்கு நியாபகம்இருக்கா! நான் School-ல உங்கிட்டஇப்டி பண்ணிக்காட்டினேன் ல.அப்போ எதுக்கு அழுத?.வீட்லஎன்ன சொன்ன?" என காதில்கைவைத்தபடியே கேட்டான்!

"பின்ன! கொழுக்மொழுக்னுஇருந்த என்னை பார்த்துயானைனு சொன்னா கோவம்வராதா?" எனக் குழந்தைத்தனமாகக் கேட்டாள்!அவனுக்குத்தூக்கிவாரிப்போட்டது! "அப்படியா நினைத்தாய்?" என

ஆச்சரியமாகக் கேட்டான். "வேறஎன்னவாம்? எனக்கு ரொம்பவருசம் கோபம் உன் மேல!அப்புறம் எனக்கே என்னை பார்க்கஅப்படி தெரிய ஆரம்பிச்சது!அப்புறம், 12 ஆம் வகுப்பு முடிஞ்ச

உடனே Slimஆகிட்டேன்! எல்லாம் நீசொன்ன comments தான்காரணம்!.நம்ம காதலுக்கும்உன்னோட அந்த அக்கறை தான்காரணம்" எனச் சொல்லிமுடித்தாள்!

அவன் எதுவும் பேசவில்லை.தனது அசட்டு நண்பனின்ஐடியாவையும், தனதுமுட்டாள்தனமான புரிதலையும்நினைத்துப் புன்னகைத்துக்கொண்டான்!

காரணம் புரியவில்லை எனினும்,அவளும் புன்னகைத்துக்கொண்டாள்!

கதை புன்னகையோடு முடிகிறது!

- ராஜ்குமார்

Thursday, September 22, 2016

உண்மை எனும் கானல் நீர்

உண்மை.
எத்தனையோ நேரங்களில் மறுக்கப்படுவது..
பணம் செல்வாக்கு பதவி கொண்டு மறைக்கப்படுவது..
வெளிப்பட வேண்டி காத்திருக்க வைப்பது.. வெளிவந்துவிடுமோ என பயப்பட வைப்பது..

உண்மை.
நல்லதா..கொடியதா?
நண்பனா துரோகியா?
ஆக்கமா அழிவுசக்தியா?

உண்மை...
மறைந்தால் ரகசியம்!
மறைத்தால் கபடம்!
வெளிப்பட்டால் அம்பலம்!
வணங்கினால் கடவுள்!
ஏய்த்தால் ஆயுதம்!

ஆக,கூர்ந்து நோக்கினால் ,நம் மனம் எல்லா பொழுதிலும் உண்மையை வேண்டுவதில்லை என்பதே கசப்பான உண்மை..!

ஆகவே தான், ரகசியங்கள்,கடவுள்கள் போற்றப்படுகின்றன.

உடைக்கப்பட்ட உண்மைகள் சுவாரஸ்யத்தை இழக்கின்றன.!

சிந்திப்போம்.சிறப்போம்👍

பொய் வாழவிடாது..!
உண்மை சாக விடாது..!

உண்மையை மறைக்க ஆயிரம் பொய் அவசியமாகிறது..
பொய்களைத் தவிர்க்க ஒரு உண்மை போதுமானதாகிறது☺☺

- ராஜ்குமார்

Wednesday, September 21, 2016

உன் வாழ்க்கை உன் கையில்

உணவு பிடிக்கவில்லை என்றால் தூக்கி எறிந்துவிட்டு பிடித்த உணவை வரவழைத்து உண்ணலாம்!
பிடித்த உறவுக்கு நம்மைப் பிடிக்கவில்லை எனில்,உணர்வுகளைப் புரியவைத்து மாற்றத்தை ரசிக்கலாம்!
உலகம் பிடிக்கவில்லைஎனில், உலகத்திற்கு ஏற்றபடி நம்மை மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாம்!

நம் வாழ்க்கையின் போக்கு என்றுமே நாம் நினைத்தபடி அமைய வேண்டுமெனில், மாறவேண்டும் நாம் சில நேரம்!

முத்து சிப்பிக்குள் சுரக்கும்போதுதான் ஒளி படைத்ததாக மாறுகிறது!
வைரம் தானாக இறுகுவதால்தான்,கண்ணாடியை அறுக்கும் கடினத்தன்மை பெறுகிறது!

முத்து,வைரம் என நம்மை நாம் மட்டுமே மாற்ற முடியும்!
அடுத்தவருக்காக உன்னை மாற்றத் துவங்கினால், இறுதியில் உன் தனித்துவத்தை இழந்துவிடுவாய்!

உன்னை உனக்குப் பிடித்தபடி மாற்றிக்கொள்!

குயவனுக்கு களிமண்ணை மட்டும் பானையாக மாற்றத்தெரியும்!
பொற்கொல்லனுக்கு தங்கம்,வெள்ளி போன்றவைகளை தட்டி நகையாக மாற்றமட்டும் தெரியும்!
சிற்பிக்கு கல்லுக்குள் மறைந்து கிடக்கும் சிற்பத்தை எழுப்ப மட்டும் தெரியும்!

ஒரு பொற்கொல்லனை பானையைத் தட்ட விடலாமா?
சிற்பியிடம் நகையை உளிகொண்டு உடைக்க விடலாமா?
குயவனிடம் தங்கம் கொடுத்து அழிக்க விடலாமா?

நாம் தங்கமா,களிமண்ணா அல்லது சிற்பமாகப்போகும் கல்லா என்பது நமக்கு மட்டுமே தெரியும்!
சிற்பியாக வேண்டுமா,கொல்லனாக வேண்டுமா என்பதை நாம் முடிவு செய்தால் தான் உருப்படியான பயன்கிடைக்கும்!

புரிந்துகொளுங்கள்! நினைத்தபடி வாழ பிடித்தபடி மாறுங்கள்! மாற்றுவதை விட, மாறுவது சிறப்பு!

÷ராஜ்குமார்

Wednesday, April 20, 2016

யாரடி நீ!

யார் தூரிகையால் உனை வரைந்தாரோ! 
ந்த லோகத்திலே நீ பிறந்தாயோ!
சிரிப்பதும் முறைப்பதும் தவிர்ப்பதுமாய்-சில
ழக்கங்கள் நமக்குள் இருப்பதனால்,
நினைப்பினை இழந்தும் நினைக்கின்றேன்..
நின்கரம் தீண்டிடத்  துடிக்கின்றேன்...!

- ராஜ்குமார்  

மலரே பேசு


காற்று வீசும் திசையை எண்ணி
சில்லிடும் சாரல் அலைகிறது!
மெல்லிய காதலை சுமந்து என்னுயிர்
உன் பின்னால் திரிகிறது!

நீல வலைக்குள் விழுந்த நிலவை
இரவில் பார்க்கிறேன்.
முகத்தை மறைத்து விழிக்குள் விழிக்கும்
உனது நினைவில் வேர்க்கிறேன்!

லர்ந்தும் வளரும் மலரின் இனமே
உன் மனதைத் திறப்பாயோ!
கனவில் கரைந்து கண்ணில் வழியும்
நின்றன் காதல் சொல்வாயோ!

- ராஜ்குமார்

Thursday, December 10, 2015

உறுமீன் (திரை விமர்சனம் அல்ல)

இன்றைய காலங்களில் தமிழ் திரைப்படங்கள் எத்தனையோ மாறுதல்களைக் கண்டுள்ளது மகிழ்ச்சி நிறைந்த செய்தி.அதுவும்,"காதல்","தாய்","தங்கை" அல்லது கதாநாயகன் பெயரை படத்திற்குச் சூட்டாமல் வேறுபட்டு யோசிக்கின்றனர் இன்றைய இளம் திரை நண்பர்கள். அதுவும் அழகுத் தமிழில் வெளிவந்த சில படப்பெயர்கள் என்னை வியக்க வைத்தன.
அவைகளில் சில .."யான்"- நான்,ஐ - அழகு ,அநேகன்-ஒரே உருவில் மற்றொருவன்,அயன்-படைப்பவன்(பிரம்மா) இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

நேற்று குடும்பத்துடன் "உறுமீன்" படம் பார்க்கச் சென்றேன்.அந்தப் பெயர் கூட ஒரு பழைய தமிழ் செய்யுள் வரி போலத் தோன்றியது.படம் பார்க்கும்போதே அதன் பொருள் இதுவாகத்தான் இருக்கும் என எண்ணிக்கொண்டேன்.
நண்பர்கள் இன்று காலையில் மீண்டும் "உறுமீன்" பற்றிப் பேச,எனக்கு அதன் பொருளை அறிந்துகொள்ளும் ஆவல் இன்னும் அதிகமானது.அனைவரின் இலவச ஆசான்,"கூகிள்" உதவியுடன் அச்செய்யுளை நான் கண்டுபிடித்தேன்.

அவ்வையார் அருளிய "மூதுரை"-யில் இடம்பெற்றுள்ளது "உறுமீன்".
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. 16


பொருள்:
 ஆற்றின் கரையில் ஒருகாலை ஊன்றி நிற்கும் கொக்கு, சிறு மீன்களை ஓடவிட்டுவிட்டு வாடியதுபோல காத்திருப்பதற்குக் காரணம்,தனக்குப் போதுமான பெரியமீனைப் பிடிப்பதற்காகவே.அதைவிடுத்து, அக்கொக்கினை நாம் முட்டாள் என எண்ணிவிடக் கூடாது.
அதுபோலவே, அடக்கம் கொண்ட மக்கள், நீங்கள் கூறும் தூற்றல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால்,அவர்களை முட்டாள்கள் என்று கூறி ஏமாறவேண்டாம்.அவர்கள் தம் வலிமைக்குச் சமமான எதிரியாக உம்மை நினைக்கவில்லை என்று அறிக.


நீதி:  யாரையும் குறைத்து மதிப்பிடாதே!

ஆக, நமது உறுமீன் பட நாயகன்,இரண்டு ஜென்மங்களாய் விட்டுவிட்ட தனது எதிரியை,தன்னை முட்டாள் என எண்ணிய பெரிய மீனை,மூன்றாம் ஜென்மத்தில் வென்றுவிட்டான்.உறுமீன் சிக்கி விட்டது.


Friday, November 27, 2015

எது வாழ்க்கை! - 1

எது வாழ்க்கை!
 - ராஜ்குமார் 

ஒரு மனிதன், தகுதியால் அல்லாமல் பிறரால் உயரத்தில் வைக்கப்படும்போது அவன் ஆணவம் மிகுந்தவன் ஆகிறான்.உயர்த்திவர்கள்,தம் ஆரம்ப நிலையில் உதவியவர்கள் என அனைவரையும் மதிக்கத் தவறுகிறான்.அன்றைய நாளில் ஆதாயம் கிடைக்கும் என்றால் மட்டுமே சிலரிடம் சிரித்துப் பேசுகிறான்.

குடும்பம் என்பது காதல்,புரிதல் அதை விட பொறுத்து அருளுதல் ஆகியவற்றைப் பொறுத்தே இனிமையானதாக அமைகிறது.ஆனால் என்று பணம் என்ற ஒன்றைச் சுற்றியபடி குடும்ப வாழ்க்கை நகர்கிறதோ அன்று பிரச்சினைகளுக்கான துவக்கம் இனிதே ஆரம்பமாகிறது.

உதாரணமாக,கணவன் மனைவிக்குள் தோன்றும் சண்டைகளைப் பார்ப்போம்.
நாம் நினைக்கலாம், கணவனின் பணத்தேவை, மனைவியின் அறியாமை அல்லது அழகு சார்ந்த தாழ்வுணர்வுகள் தான் காரணங்கள் என்று.அவை வெறும் கற்பனைகளே! ஆம். மிகப்பெரிய பணக்காரர் இன்போசிஸ் நாராயணமூர்த்தி அவர்களின் மகன் மற்றும் டிவிஎஸ் நிறுவனரின் ஒரே அழகிய மகள் ஆகியோர் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்று கடந்த மாதம் நீதிமன்றத்தில் முறிவு பெற்றது.ஆச்சரியம் தானே! ஒரு உண்மை என்னவெனில்,கணவன் மனை சண்டைகளுக்கு காரணம் என்று ஒன்று இல்லவே இல்லை.எல்லாம் கண்ணுக்குத் தெரியாத உணர்வுப் போராட்டங்களே!

கணவன் மனைவிக்குள் உள்ள உறவு, நினைத்த உடன் நம் மனதில் மகிழ்ச்சியை அள்ளித் தெளிப்பதாக இருக்க வேண்டும்.இருவர் மனமும் எப்போது முகம் பார்ப்பேன் என ஏங்கித் தவிக்க வேண்டும்.இதெல்லாம் சாத்தியமா எனக் கேட்கலாம்.நிச்சயம் என்பதே என் பதில்.

Tuesday, January 6, 2015

அவைகளும் நானும் (சிறுகதை)



தினமும் நான் அலுவலகம் செல்லும் அந்த வழியில் நிறைய நாய்கள் உண்டு.ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த அந்த நாய்களை என்றுமே நான் பெரிதாக  கண்டுகொள்வதில்லை.அதே போல் தான்  அவைகளும் என்னை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை .இந்த உலகத்தில் நம்மைப்போலவே அனைவரும்  இருந்துவிட்டால் என்ன ஆவது? அது நம் ஐந்து விரல்களும் ஒரே அளவாக  இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பதற்குச் சமமானது.அழகாகத்தான் தெரியும்.ஆனால்  பயனற்ற ஒன்று நாம் எதிர்பார்க்கும் இந்த மாறுதல் . அழகான இந்தத் தத்துவத்தை நீங்கள் ஆராயாமல் அனுபவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அதே தெருவில்  நான் அடிக்கடி பார்க்கும் இன்னொருவரைப்பற்றி சொல்லிவிட ஆசைப்படுகிறேன்..

அவர் அடையாளம் சொல்கிறேன்.அந்த தெரு வழியாக ஒருவேளை நீங்கள் நடக்க  நேர்ந்தால், அவரைப் பார்த்து ஒரு வணக்கம் சொல்லிவிட்டுப் போனால் நான்  சந்தோசப்படுவேன்.அவருக்கு வயது சுமார் 50 இருக்கும்.நல்ல உயரம்,ஒல்லியான  தேகம்.சீப்பைப் பார்க்காத நரைத்த தலை,தொள தொள-வென அவரை விட  பெரியதாய் இருக்கும் அழுக்கு அரைக்கைச் சட்டை,அடர் நிறத்தில் கால்  சட்டை,வேகமான நடை அப்புறம் அந்த நாய்களுக்கு அடிக்கடி உணவிடும்  ஒரேமனிதர் அவர்தான்.எனவே,அவர் அந்த வீதியில் நடக்கும் போது நான் சொன்ன  அந்த நாய்கள் கூட்டம் அன்பாக அவரைச் சூழ்ந்துகொள்ளும்.

இன்றுவரை எனக்கு புதிராகத்தான் தெரிகிறார் அந்த மனிதர்.அதே தெருவில் உள்ள  ஒரு பட்டறையில் வேலை செய்கிறார் என்று நினைக்கிறேன்.ஏனெனில், சிலமுறை  தேநீர் நிரம்பிய பைகளுடன் அந்தப் பட்டறையினுள் நுழைவதைப் பார்த்திருக்கிறேன்.  நீண்ட நேரமாக திரும்ப மாட்டார்.ஆக அவர் தேநீர் விற்பவரில்லை அல்லவா. அதை  வைத்துத் தான் அவர் அங்கே வேலை செய்கிறார் என்ற முடிவுக்கு வந்தேன்.மற்றபடி  எங்கே தங்கியிருக்கிறார்..எவ்வளவு சம்பாதிக்கிறார்,அந்த நாய்களுக்கு உணவிட  தினமும் எவ்வளவு செலவு செய்கிறார் என எதுவுமே எனக்குத் தெரியாது.

நள்ளிரவு சுமார் 1 மணி இருக்கும்.நான் அந்த வீதியில் தனியாக  வந்துகொண்டிருந்தேன்.யாரும் என்னைப்பார்த்து பயப்படவேண்டாம்.ஒரு  தமிழ்ப்படத்தின் இரவுக்காட்சி பார்த்துவிட்டு அறைக்குத்  திரும்பிக்கொண்டிருந்தேன்.திரையரங்கிலிருந்து எனது அறை நடக்கும்  தொலைவுதான்.அது ஒரு நீண்ட நெடிய ஆள் அரவமற்ற சாலை.இருமருங்கிலும்  பாதரசவிளக்குகள் ஒளியைப்பாய்ச்சிக்கொண்டிருந்தன.அந்த வீதியில் வீடுகள்  மிகவும் குறைவு.பட்டறைகள் மற்றும் மாலைவரை செயல்படும் சிறுதொழில்  அலுவலங்கள் தான் அதிகம்.இரவுக்குளிர்க்காற்றை முகத்தில் வாங்கிகொண்டு  மெதுவாக நடந்துகொண்டிருந்தேன்.இதோ பாதி வழி தாண்டியாயிற்று.

இதுவரை என்னைக் கண்டுகொள்ளவில்லை என எந்த நாய்களைப் பற்றி மேலே  குறிப்பிட்டேனோ, அதே அழகு நாய்க்குட்டிகள் அன்று என்னை வைத்தகண்  வாங்காமல் பார்த்தன.என்னையும் அறியாமல் முகத்தில் கலவரம்  பரவியது.இருந்தும் மெதுவாய் நடந்தேன்.இன்னுமொரு 2 நிமிடம் நடந்தால்  அறைக்குச் சென்றுவிடலாம்.அப்போது பார்த்து, ஒரு நாய் குரைக்கத்  துவங்கியது.அதைத் தொடர்ந்து அனைத்து நாய்களும் ஒருசேர கூப்பாடு  போட்டன.அந்த திடீர் சத்தத்தில் சப்தநாடிகளும் அடங்கி நிலைகுழந்திருந்த எனக்கு, நாய்கள் நெருங்குவதைப் பார்க்கையில் மேலும் திகில் பரவியது.இதுவரை எந்த நாயிடமும்  கடி வாங்கியதில்லை என்ற பெருமை எனக்கு எப்போதும் உண்டு.இன்றோடு அது தொலைந்தது  என்றே நினைத்துக்கொண்டேன்.

அலைபேசியை எடுத்து, அப்படி நாய்கள் கடித்தால் யாரை அழைத்து தகவல்  சொல்வது என பார்த்துக்கொண்டிருந்தேன்.அவ்வாப்போது ஊய்..போ..என்றெல்லாம்  நாய்களைப்பார்த்து சத்தமிட்டபடி முன்னேறினேன்.ஒன்றிரண்டு நாய்கள்  கால்களுக்குள் புகுந்து வெளியே வந்தவாறு பயமுறுத்தின.அந்த வினாடியில் இதயம் அப்படியே வாய்வரை வந்து விட்டு  உள்ளே செல்வது போலிருந்தது.ஆபத்துதவி ஆண்டவன்  என நான் இந்த நேரம் சொல்ல  வேண்டுமென்றால்,எங்கிருந்தோ வந்த அந்தப் பெண் நாயைச் சொல்வேன். தூரத்தில் ஊளையிட்ட அதனைப் பார்த்தவுடன் இவை என்னை விட்டுவிட்டு அந்தப் பெண் நாயைத் துரத்தத் துவங்கின.அப்பாடா..இப்போது அப்படி ஒரு நிம்மதி என் மனதில். அறைக்கு வேகமாக வந்த நான் , ஒரு குவளை நீரை மூச்சுவிடாமல் குடித்து முடித்தேன்.இயல்புநிலைக்குத் திரும்பி உறங்குவதற்கு சிறிது நேரம் பிடித்தது.

அடுத்தநாள் காலையில் அலுவலகம் கிளம்பும்போது, என் அறைக்கு முன் இருக்கும் மளிகைக்கடையில்  இரண்டு ரொட்டித்துண்டு பொட்டலங்களை வாங்கிகொண்டேன்.என்றும்போல  என்னை அந்த நாய்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், நான் அருகில்  சென்றேன்.இரவு இருந்த பயம் இப்போது இல்லை. மெதுவாக நெருங்கி  ரொட்டித்துண்டுகளை அவைகளிடம் வீசினேன்.ஒரே பாய்ச்சலில் வந்து  ஆர்வமாய் சாப்பிடத்துவங்கின.சிலவினாடிகள் பார்த்துவிட்டு,மகிழ்ச்சியாக அலுவலகம் நோக்கிப்  புறப்பட்டேன்.இந்த மனநிறைவு உணர்வுக்கு,எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்யலாம் எனத் தோன்றியது.சிறிதுதூரம் நடந்த நான், மெல்லத் திரும்பினேன்.அங்கே வாலைக் குழைந்தபடி அந்த  நாய்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தன.


- ராஜ்குமார்