Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, November 19, 2018

ஈரமான நெஞ்சம்..

என்னவளிடம் கேட்டேன்..
என்னைப் போன்ற ஒருவனை நீ
சந்தித்தது உண்டா? என்று..

இல்லை என்று சொல்வாள் என
எண்ணிக் கேட்ட கேள்வி அது..

அலட்டல் இல்லாமல் அவள் சொன்னாள்
"உண்டு" என்று..

கோபத்தை உள்வைத்து
ஆர்வமாய் முகம் வைத்து,
"யாரென்று சொல் கண்ணே!" என்று
அமைதியாகக் கேட்டேன்..

நெருங்கி என்னிடம் வந்து,
நெற்றிமுடி வருடியபடி சொன்னாள் ..
" இரவு முடிந்த பின்னும்
மலரிதழ்களின் ஈரம் காய்ந்திடாது பெய்யும்
வான் மழையும் நீயும் ஒன்றுதானே!" என்றாள் ..

புன்சிரிப்பு என்னிடம்...குறும்புச் சிரிப்பு அவளிடம்...

- ராஜ்குமார்
16-11-18 23:45
 

Wednesday, November 14, 2018

அடிக் கள்ளி..


காதல் என்ற பொக்கிஷத்தின்
கள்ளச் சாவியைக்
கேட்டால் தருகிறேன் என்கிறது - உன்
கண்களின் வெட்கம்!

- ராஜ்குமார் (11-11-18 10:45)

தனிமை

பலநாள் கழித்து
என் வீட்டுக்குள் நுழைந்தேன்..

சிதறிக் கிடந்த தானியங்களை
எறும்புகள் தின்றிருந்தன.
சிறு பூச்சிகள் சிலந்திவலையில்
சிக்கிக் கிடந்தன..

வாடி உதிர்ந்த காகிதப் பூக்களைக்
காற்று எடுத்துச் சென்றிருந்தது..

ஆனால்,

என் தனிமை மட்டும்
தின்னப் படாமல்
எனக்காகக் காத்துக் கொண்டிருந்தது..!

                          *        *        *

என் தனிமையை இசை தின்று தீர்க்கிறது..
ஸ்வரங்கள் இனிமையில்
நான் தொலையும் தருணத்தில்
என்னையும் தின்றுவிட்டு
ஏப்பம் விடுகிறது இசை...!

- ராஜ்குமார் (02/11/18 11:00)

ரசிகை

என் எழுத்துகளுக்குக் காத்திருக்கின்றன
அவள் விழிகள்.
என் கவிதை பாடக் காத்திருக்கின்றன
அவள் மொழிகள்..!

என்ன எழுதிக்கொடுத்தாலும் - அவள்
படித்துக்கொண்டே இருப்பாள்!
நான் எழுதுவதை நிறுத்தினாலும் - அவள்
வாசிப்பு ஓய்ந்ததில்லை.

எனது வரிகளை
விழிகளால் சுவைத்து
விழுங்கத் துடிக்கும்
அவளது பசி ,குறையாதது!

அவள் மீது எனக்கும்,
என் கவிதைகள் மீது அவளுக்கும் ,
இழையோடும் உறவு
காதல் சேராதது...காமம் தோயாதது...!

கண்ணீராய், வெட்கங்களாய் ,
புன்னகையாய் ,பூரிப்பாய்
எனது எழுத்துக்களுக்கு-தினம்தினம்
அவளின் கைத்தட்டல்கள்...!

இதோ
எழுதுவதற்கு நான் தயாராகி விட்டேன்.
எங்கே எனது அந்த ரசிகை?

- ராஜ்குமார் (02/11/18 9:00)

Tuesday, January 30, 2018

பிரிவின் வலியில்..

காதலில் தவிக்கும் -என்
கண்களில் தூக்கம் இல்லை.
தனிமை கசக்கிறது!
நிமிடங்கள் சுடுகின்றன!

கவிதைகளைத் துணையாக விட்டுத்
தூரமாக நீ சென்று விட்டாய்! -என்னைக்
கவிதைகள் தூங்க விடுவதில்லை.
நானும் தான்..

நடுநிசியில் எழுந்துகொண்டு
எதுகை மோனை யோசிக்கிறேன்!
பசி வந்த பொழுதுகளில் -நம்
காதல் கவிதைகள் வாசிக்கிறேன் !

உருவகிக்க இயலாத உணர்வுப் பிடியில்
உள்ளம் நோகிறது!
பரிதவிக்கும் நான்!
தூரமாய்  நீ ! - நிஜம்
சுடுகிறது!

- ராஜ்குமார்


Tuesday, August 15, 2017

வறுமையின் சுவடுகள்

என்சிறு வயதினில்
எண்ணற்ற கனவுகள்..
ஏங்கியன யாதென்று
எண்ணிப் பார்த்தால்
பனையோலைக் கடிகாரம்
பளபளக்கும் பாலீஷ் மணிகள்
வண்ணப் பலூன்கள்
வாய்ருசிக்கப் பணியாரம்!
கேட்டிருந்தால் ஒருவேளை
கிடைத்திருக்குமோ என்னமோ?
கேட்க நினைத்ததில்லை!
வறுமையின் அரங்கேற்றம்..
ஊமையானேன் நான்..
                  ** ** **
சிறுஊசி நூல்கோர்த்து
சேலைக்கிழிசல்களை
சிரித்தபடி தைத்திடுவாள் அம்மா..
ஒருமுனையை நான் பிடிக்க,
அவள் சொல்லும் கதைகேட்டு
உள்ளம் மகிழ்ந்திருந்தேன்!
வறுமையில் யாம் இருந்தோம்
என்ற நினைப்பையும் மறந்துவிட்டு...
                   ** ** **

மழைத்துளிகள்

நீர் காணா உயிர் அது மழையைக் கண்டு வியக்கும் நொடியில் ஒரு கவிதை....
________
*மழைத்துளிகள்..*

விண்ணின்று வழியும்
தண்ணீர் உதிரம்!
மேகச் சிப்பிகள்
சிந்தும் முத்துக்கள்!

மின்னல் பூக்களில்
சுரக்கும் தேன்துளிகள்!
இடிகள் பெயர்தெடுக்கும்
சுரங்கத்தின் வைரங்கள்!

மனதில் இன்பத்தைக் கருக்கொள்ள வைக்கும் மகரந்தத் துளிகள்!
தமிழ்சோலை பதுக்கி வைக்கும்
கவிதைப் பூத்தூவல்!

- ராஜ்குமார்

Wednesday, July 26, 2017

மயங்கும் மலர்களே..


மாலை மயங்கும் நேரம் மலர்ந்த மலர்களே...!
நீங்கள் எப்போதாவது
காதல் கொண்டதுண்டா?

மைவிழியின் வீச்சில் மையல் கொண்டு,
மஞ்சள் முகம்கண்டு மதி மயங்கி,
செம்மீன் உதட்டு வரிகளில் சிக்குண்டு,
சங்கு கழுத்தில் மனம் நழுவி,
அவள் சிந்தும் அழகுப் புன்னகைக்கு காத்திருந்து,
விழிகள் திறந்தபடி கனவுகள் கண்டதுண்டா?

காதலித்துப் பாருங்கள்...!

உங்கள் மகரந்தச் சேர்க்கையில்
புது உயிரோட்டம் காண்பீர்கள்!

தென்றல் காற்றில் அழகு நடனம் புரிவீர்கள்...!

Wednesday, October 5, 2016

மழையே மழையே! (கவிதை)

காகித வானம்,
மழையில் நனைகின்றது!
சூரியனும் இல்லை..சந்திரனும் இல்லை
நின்று குடைபிடிக்க!


வி
ண்மீன்கள் இருக்கும் இடம் கூடத் தெரியவில்லை!


வானம் மறைந்து விட்டால்,
கவிதைக்கு எங்கே செல்வேன்?


ண்ணாடிக் குடையுடன் எழுகின்றேன்,
ஆகாயம் கிழியாமல் காப்பாற்ற!


"ஏ மழையே நின்றுவிடு!
சந்திர வெளியை விட்டுவிடு!
கோடிகள் எல்லாம் ஈடாகா,
என் கவிதைகள் தருகிறேன் உனக்காக! ஏ மழையே நின்றுவிடு!"


குடைபிடித்தும் நனைந்தேன் நான்!

ன்சொல் கேளாமல் விழுகின்ற துளிகளில்,
என்னையும் உணராமல் கரைந்து போகிறேன்!
குளிர்ந்த காற்றில் மிதக்கும் சாரலில்,
என்னைக் கழற்றி நனைந்து மகிழ்கிறேன்!


ப்போது வானம் உடைந்தாலும் எனகென்ன!
சொர்க்கம் என் அருகினில் மழையாய்ப் பொழிகையில்...



- Rajkumar PP

Wednesday, April 20, 2016

யாரடி நீ!

யார் தூரிகையால் உனை வரைந்தாரோ! 
ந்த லோகத்திலே நீ பிறந்தாயோ!
சிரிப்பதும் முறைப்பதும் தவிர்ப்பதுமாய்-சில
ழக்கங்கள் நமக்குள் இருப்பதனால்,
நினைப்பினை இழந்தும் நினைக்கின்றேன்..
நின்கரம் தீண்டிடத்  துடிக்கின்றேன்...!

- ராஜ்குமார்  

மலரே பேசு


காற்று வீசும் திசையை எண்ணி
சில்லிடும் சாரல் அலைகிறது!
மெல்லிய காதலை சுமந்து என்னுயிர்
உன் பின்னால் திரிகிறது!

நீல வலைக்குள் விழுந்த நிலவை
இரவில் பார்க்கிறேன்.
முகத்தை மறைத்து விழிக்குள் விழிக்கும்
உனது நினைவில் வேர்க்கிறேன்!

லர்ந்தும் வளரும் மலரின் இனமே
உன் மனதைத் திறப்பாயோ!
கனவில் கரைந்து கண்ணில் வழியும்
நின்றன் காதல் சொல்வாயோ!

- ராஜ்குமார்

Friday, November 7, 2014

என் கற்பனைக் காதலி (சந்தக்கவிதை)


கன்னத்தில் குழிவிழும் அழகியவள் -கால்
சலங்கையில் ஜதி சொல்லும் யுவதியவள் !

வார்த்தைகள் ஒவ்வொன்றும் இனித்திருக்கும் -அவள்
திருமுகம் பார்த்திட மனம் துடிக்கும் !

தினம்தினம் புதிதாய்க் காதலிப்பாள் -என்னுள்
திரும்பிய திசையெல்லாம் சிரித்திருப்பாள் !

உயிருடன் நடந்திடும் ஓவியமே -என்னை
உனதொரு ரசிகனாய் மாற்றிவிட்டாய் !

பார்வைகள் ஒவ்வொன்றும் இனிய சுகம் -மனம்
கவிதைகள் படைத்திடும் புதியவிதம் !

இனியவளே உன்னைக் காதலித்தேன்-என்
உயிராய் உன்னைத் தினம் நினைத்தேன்!

இளமை மாறா இளங்கிளியே -நித்தம்
வருவாயோ என்னை மகிழ்த்திடவே!

என் தாள்களில் எல்லாம் கவிதைச் சத்தம் -உன்னைக்
கண்டதும் கேட்பேன் நூறு முத்தம்!!

- ராஜ்குமார்

Tuesday, November 4, 2014

அன்பென்ற மழையில்! (கவிதை)


அவள் விழியின் ஈரத்தில்,
நானும் நனைந்திருந்தேன்.

பலநாளும் அவள் அழுததுண்டு.
என்மேல் வரும் கோபத்தால்!
இருந்தும் புன்னகைப்பாள்..
என் மனம் குளிர்வதற்கு.

அன்புக் குழந்தையை,
அடிவயிற்றில் சுமந்தபடி,
நித்தம் பல கனவோடு,
வாழ்கின்றாள் என்னவள்!

அன்றைய பொழுதுகளில்,
அப்படி நான் இருக்கவில்லை.

சமுதாயக் கோபத்தில்,
வேலையிழந்த ஏக்கத்தில்,
என்னை மறந்தபடி
வாழ்ந்த அந்நாட்களில்,
என்னவள் கனவுகளை-நான்
கண்டுகொள்ளத் துணியவில்லை!

அன்புகாட்டி அவள் ஊட்டும் சோற்றுக்கும்,
அக்கறையாய் அவள் செய்யும் சேவைக்கும்,
இரக்கம் சிறிதுமின்றி-உடல்
வேதனையை விலையாய்க் கொடுத்தேன்!

அன்றொருநாள் நள்ளிரவில்,
நடுங்கிக் கிடந்தேன் குளிர் சுரத்தில்!
"அம்மா! அம்மா!" என்ற வார்த்தையன்றி,
ஏதும் சொல்லத்துணிவின்றிக் கிடந்தேன்!

அழுது பரபரத்து -என்னவள்
மருத்துவமனை சேர்த்தாள்!
விடியல் வரை உறக்கம் தொலைத்து,
என்னை மடியில் சுமந்திருந்தாள்!

அவள்முகம் பார்த்தேன் விழிகள் திறந்து!
கண்டுகொள்ளா நேரத்திலும்,
காதல் மழை பொழிந்தவள்.
அடைந்துகிடந்த இதயத்தில்
அன்பை வாரித் தெளித்தவள்!

சொல்லி அழ வார்த்தைகள் வரவில்லை.
அவள் வளைகை இறுகப் பற்றிக்கொண்டு ,
விரல்களில் முத்தமிட்டேன்!

சிரித்தபடி அழுதாள்!-அன்று
அவள் விழியின் ஈரத்தில்,
நானும் நனைந்திருந்தேன்.

- ராஜ்குமார் 

சராசரி இந்தியனின் நள்ளிரவுக் கனவு!


முடியாத இரவினிலும்,
விடிந்த பொழுதினிலும்,
புரியாமல் வருகின்ற,
கனவுகள் ஏராளம்!

கண்ணுறங்கும் நிமிடம் மட்டும்
வருவதில்லை கனவுகள்.
காத்திருக்கும் நொடிகளில்,
காணாத ஏக்கத்தில்,
எண்ணும்பொருள் ஏதுமின்றி பிறந்துமடியும் கனவுகள்,
தினம் தினம் ஏராளம்.

அன்றொருநாள் அப்படித்தான்,
நல்லதொரு கனவுகண்டேன்.
சாலை ஓரமாக,
சத்தமின்றி நடந்திருந்தேன்.
வருடிய தென்றலில் உள்ளம் சில்லிட்டது!

பிளாஸ்டிக் இல்லாத தெருக்கள்,
பிளவுகள் இல்லாத சாலைகள்.
ஆட்கள் நிறைந்தபோதும்,
கூச்சல் இல்லை அங்கு!

என் நாட்டை சுற்றிப் பார்த்திட-இங்கு
ஏராளப் பயணிகள்.!
சுயவேலைகள் பெருக்கியதில்,
குறைந்த விலைகளால்-குறைவில்லா வாழ்க்கை!


எல்லோரும் ஓர் நிறை!
என் நாட்டில் இன்று,
சுற்றுலாஅமைச்சருக்கும் நுழைவுச்சீட்டு கேட்கப்படுகிறது!
நடிகர் நடிகை மோகம் சுவடின்றி ஒழிந்திருக்கிறது.

சாதிச் சண்டைகளோ,
கொலை,குற்றச் செய்திகளோ,
சீர்கெட்ட நடிகையின் நடுப்பக்கப் படங்களோ,
நிச்சயமாய் இல்லை,
என் கையில் உள்ள நாளிதழில்.

ஒப்பற்ற என் நாடு,
ஒளிர்கிறது இன்று,
சத்தமின்றி வாழும் இந்தச் சராசரி இந்தியனின்
நம்பிக்கை நிறைந்த –ஒரு
நள்ளிரவுக் கனவினில்....!

- ராஜ்குமார்

Tuesday, March 11, 2014

உயிரான உணர்வுகள்!

( உயிர் எழுத்துகளைக் கொண்டு துவங்கப்பட்ட உண்மை வரிகள்!)




           வளைப்பற்றி எழுதும் முதல் வரியை கற்பனையில் பார்க்கின்றேன்.அதன் பொருள்செறிந்த வார்த்தைகளில் லயித்துவிடுகின்றேன்.அதனைப் படித்துமுடித்து இரண்டாம் வரியை என் பார்வை தீண்டுகையில்,மொத்த வார்த்தைகளும் வரிசை தெரியாமல் மறைந்துவிடுகின்றன.அழியாத நினைவுகளை,உன்னத உணர்வுகளை எழுத்தாய் தீட்டி வைப்பது கடினம்தான்.

           துவரையில் பேசிய வார்த்தைகள் இரண்டோ மூன்றோதான் இருக்கும்.நேராய் அவள்முகத்தை பார்த்தது கிடையாது.சிலநேரம் கண்கள்,சிலநேரம் அவள் புன்னகை.அவ்வளவுதான்.அவளைப்பற்றி எழுதத் துவங்கி இன்றோடு ஆறுமாதங்கள் நிறைவடைகின்றன.அவ்வப்போது ஒரு வரிக்கவிதை எட்டிப்பார்க்கும்.எழுதிக்கொள்வேன்.


           தயம் விரைவாய்த்துடித்தது,மூச்சு திக்கித்திணறியது என்று சொல்வது உயர்வுநவிற்சி என நினைத்தால்கூட,உண்மை அதுவே.அந்த முதல் சந்திப்பை என்றும் மறக்க முடியாது.அன்று இரண்டொரு வார்த்தைகள்.கொஞ்சம் புன்னகை.ஆறுதலாய் அவள் பார்வை.


           ன்றைய என் பயணம்கூட புதிதாய் இருந்தது.பார்க்கும் மனிதர்களும் விந்தையாய்த் தெரிந்தனர்.கனவில் மிதந்தபடி இல்லம் சேர்ந்தேன்.அன்று இரவுத் தூக்கம் தொலைத்து,அவளுடனான கற்பனை உரையாடல்களை அரங்கேற்றம் செய்துகொண்டிருந்தேன்.முதல் வரிசையில் அமர்ந்து முழுதாய் ரசித்தவனும் நான் தான்.


           வள் எப்படிப்பட்டவள்?அவளின் கனவுகள் எதைப்பற்றியது?என்ன நினைக்கிறாள் என்னைப் பற்றி?இப்படி பதில் தெரியாத ஆயிரம் கேள்விகள்,தினமும் அவளைப் பார்க்கும் நொடிப்பொழுதில் மின்னி மறைகின்றன.


ராஜ்குமார்...
(29-jul-13)

Wednesday, January 23, 2013

இதயத்திருடி...


நினைக்கவே கூடாது என்று தான் நினைக்கின்றேன்.
 கண்களை விட்டு மறைய மறுக்கிறது அவள் முகம்!
கனவில் நினைப்பவர்கள் கண்முன் வருவார்களா?
அன்று நான் கண்டேன்!
வெள்ளை உடையில் தேவதையாய்!

கனவிலும் அவள்!நினைவிலும் அவள். சிலநாள் சுற்றி நடப்பவை அறியும் உணர்வில்லை எனக்கு!
என்ன ஆயிற்று ?
"காரணம் அவள் தான்.மறந்து விடு" -உள் மனம் கிசுகிசுத்தது..
அதோ சந்தர்ப்பங்கள் வருகின்றன, 'சண்டாளி' இவளென மறந்து தொலைக்க...

அதிகாலை நேரம்.
ஜோடியாய் அவள் இன்னொருவனுடன் மோட்டார்வண்டியில்.
படு வேகமாய்...மிக நெருக்கமாய்...
மனமுடைந்து,உணர்விழந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.


என்னவள் இல்லை இவள் !

சிலரை பிடிப்பதில்லை நமக்கு.
நமக்கு சொந்தமான ஒன்று அவர்களிடம் இருக்க,
நினைவுகளை நம்மால் தொலைக்க முடிவதில்லை.
அவள் எதை எடுத்துக்கொண்டாள் என்னிடமிருந்து?.
ஏன் மறக்க முடியவில்லை அவளை?

இன்று காலை.
அதே சாலை.ஆட்கள் கடந்தபடி இரைச்சலாய்.
பச்சை உடையில் அந்த பாரிஜாதம்! அதோ வருகிறாள்.
அவள் நடைக்கு ஜதி சொல்லின என் இதயத்துடிப்புகள் !
நெருங்கி வருகிறாள்."நீ பறிகொடுத்த இதயம் திரும்ப வேண்டுமா?!"
கேட்டபடி கடக்கின்றன அவள் ஒற்றைப் பார்வையும்,
உதட்டோரப் புன்னகையும்!

- ராஜ்குமார்

Wednesday, April 25, 2012

நான் ரசித்த கவிதைகள்! - 3

 காதல் திருமணம்! - கமலஹாசன் கவிதை

"முதல் தீண்டலுக்கு உடல் சிலிர்த்து,
வெட்கத்தில் புன்னகைத்து,
கடற்கரையில் காற்று வாங்கி,
கைபிடித்து பரவசமாய் நடந்து,
கன்னத்தில் லேசாய் முத்தமிட்டு,
கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி,
கண்களால் பேசிச் சிரித்து,
கால் கடுக்க காத்திருந்து,
காது பிடித்து மெல்லத் திருகி,
கண்ணீரோடு கட்டியணைத்து,
கண்பொத்தி விளையாடி,
இடிக்கு பயந்து தோளில் சாய்ந்து,
செல்லமாய் நெஞ்சில் குத்தி,
பேசாமல் இருந்து தவிக்கவிட்டு,
கோயில் சுற்றி , குளம் சுற்றி,
மழை ரசித்து நனைகையில்,
துப்பட்டாவில் குடை விரித்து,
புத்தகத்தில் கடிதம் மறைத்து,
மணிக்கணக்கில் தொலைபேசி,
அப்பாவின் அதட்டலுக்கு அஞ்சி,
"அவர் ரொம்ப நல்லவர்மா" என
அழுது புலம்பி அம்மாவிடம் சொல்லி,
ஒரு வழியாக வெற்றி கொள்கிற
காதல் திருமணங்கள் போல
இனிப்பதில்லை-இன்டர்நெட்டில் தேடியலைந்து,
பத்துக்கு பத்து பொருத்தம் பார்த்து,
பண்ணுகின்ற திருமணங்கள் !"
- கமலஹாசன்

Tuesday, April 17, 2012

பிரிவின் வலி!

நோய்வாய்பட்ட அந்த பனைமரம் மொட்டையாகக் காட்சியளித்தது!
உயிர் இல்லை.இருந்தாலும், உச்சி மரத்தில் கிளிகள் குடியிருப்பதால், அது இன்னும் உயிருடன் இருக்கிறது என வைத்துக் கொள்ளலாம்!

கையில் அகலமான துணியுடன் அவன் அந்தப் பனைமரத்தில் ஏறுகிறான்.
கிளியின் வீட்டு வாசலை அடைத்துவிட்டு,மறுவழியில் கைவிட்டு கிடைக்கின்ற குஞ்சுகளைப் பிடித்து கோணியில் போடுகிறான்."கீச்..கீச்" என மழலை மொழியில் அவை அலறுகின்றன.

அதை அவன் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

பெற்ற அன்னை அவனை சுற்றி சுற்றி வட்டமிட்டுப் பறக்கிறது.'அவன் அந்தக் குஞ்சுகளை எப்படியாவது வெளியே விடமாட்டானா?' என்ற ஆசையோடு.அவன் விடவில்லை.எங்கோ மறைந்து விட்டான்.தாய்க்கிளி
அழுத விழியோடு கூடு நோக்கிப் பறந்தது.

கிளிக் குஞ்சுகளை அவன் ஒரு பெரிய கூண்டுக்குள் அடைத்தான். அங்கு இவைபோல பல மழலைக்கிளிகள் அடைக்கப்பட்டிருந்தன.உணவும்,நீரும் நாள்முழுக்க கிடைக்கப் பெற்றது.இருப்பினும் அவைகள் குடும்பத்தை நினைத்து கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தன.

நாட்கள் நகர்ந்தன.

ஒவ்வொரு கிளியும் இன்னொரு ஜோடியுடன் சேர்த்து கூண்டுகளில் அடைக்கப்படுகிறது!

சந்தையில் 100ரூபாய்க்கு விலைபோகிறது! வளர்க்கும் ஆசையோடு பலர் வாங்கிச் செல்கிறார்கள்-"பறவைகள் என்றால் எனக்கு உயிர்!" என்று வீட்டுக்கு வருபவர்களிடம் பெருமை பேசிக்கொள்ள.

இப்படி ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் அடைபட்டிருக்கும் பறவைகளை பார்த்தால், எனக்கு ஈழப்போரில் குடும்பத்தை இழந்த தமிழ்குடும்பங்கள் தான் நினைவுக்கு வருகிறது!

அத்தகைய பிரிவின் ஒரு சின்ன வெளிப்பாடு இந்த வரிகள்.

                                                        






           கூண்டுக்கிளி

கிடைத்த சொந்தங்கள் என் இனம் இல்லை!
ஆனால் அன்பாய் கவனிக்கிறார்கள்!
அவர்களின் உண்மை சொந்தங்கள் பெறும் மறைபொருள் அன்பு இல்லை அது.

நானாக எதுவும் கேட்பதில்லை.
உள்ளன்போடு உணவிட்டு,இருக்க அறை கொடுத்து,
பருக நீர் அளித்து பாசமாய் கவனிக்கிறார்கள்!

எதையோ பேசுகிறார்கள்.என்னையும் அதையே பேசச் சொல்கிறார்கள்!
எளிய ஒலிகளை திருப்பி சொல்கிறேன்.
கேட்டு மகிழ்கிறார்கள்!
கைதட்டி ஆர்பரித்து முத்தம் கொடுக்கிறார்கள் வாஞ்சையோடு.

"என்னை வெளியே விடுங்கள்! என் சொந்தங்களைக் காணவேண்டும்", என கூப்பாடு போடுகிறேன் அவ்வப்போது!
எனக்கு பசியோ என்றெண்ணி பழங்களைக் கொடுக்கிறார்கள்!

மனம் வாடுகிறேன்.

இறக்கும் வரையில் இந்த உணர்வுப் போராட்டம் கூண்டுக்குள்ளே, குறுகிய கம்பிகளின் நடுவே முடிந்து போய்விடுமோ? என எண்ணிப்பார்க்கையில்!

Wednesday, April 11, 2012

நான் ரசித்த கவிதைகள்! - 2

உயிரின் மதிப்பை மட்டுமல்ல,வாழ்வின் முடிவும் ஆரம்பமும் நம் கையில் இல்லை என்ற தத்துவத்தையும் உணர்த்துகிறது இந்தக் கவிதை.இந்த வரிகளை படித்தபிறகு நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் மனம் ரசிக்கப் பழகுவதை அனைவரும் உணரலாம்!

                                        வாழ்வை ரசிக்கப் பழகுங்கள்!!

                                                                                         - தோழியின் வரிகள்
 
பத்து மாதம் பத்திரமாய் இருந்து,
பெற்றவளை விட்டு பூமிக்கு வந்தோம்!
வாழ்க்கைப் பயணத்தில்,
இறங்(க்)கும் நேரம் தெரியாமலே!


வாழ்க்கைத் தேடலில்,
வழியில் அறிமுகமாகும்,
பலரிடமிருந்தும் கேட்கும் ஓர் வாசகம், "என்ன வாழ்க்கையடா இது?"

இன்ப துன்பம் நிறைந்தது தான் இவ்வுலக வாழ்க்கை!

இலையுதிர் காலத்தை ஏற்கும் சோலைகள், அதை இழப்பாக நினைப்பதில்லை!
வசந்த காலம் வந்த போதும், அதை வரவேற்க மறப்பதில்லை!

நம் வாழ்வின் மேன்மை,தெரிய வேண்டுமா?
வாழ்வின் அர்த்தம் அறிய வேண்டுமா?

 கேட்டுப் பாருங்கள்!

விளக்கை நோக்கிச் சென்று,
வினாடிப் பொழுதில் உயிர் தப்பிய
விட்டில் பூச்சிகளை!

வேடன் தானெறிந்த அம்பினிலே
தப்பிப் பிழைத்த தத்தைகளை!

"பூர்வ ஜென்மத்து புண்ணியமோ?
இறைவனின் இரக்கமோ? தப்பிப் பிழைத்தது"
என்று அவர்கள் சொன்னது, காற்றினிலே கலந்து,என் காதுகளை அடைந்தது!

உங்கள் இறுதி ஆக்ஸிஜனை,
 நீங்கள் சுவாசிக்கும் வரையிலும் ரசியுங்கள்!

பகலவனைக் கண்டதும்
பட்டென மறையும்
பனித்துளியை!

கணநேரப் பொழுதாயினும்,
காண்போரைக் கவரும்,
கதிரவனின் நிறப்பிரிகையாம் வானவில்லை!

ஆலமரத்து கிளைகளில்,
அங்குமிங்கும் ஓடித்திரியும்
அணில்களை!

பார்ப்போரை பரவசப்படுத்தும்
பச்சிளங்குழந்தைகளின்
பவளச் சிரிப்பை!

சட சடவென்று
பெய்யும் மழையில்,
ஜன்னலோரப் பேருந்து பயணத்தை!

இன்னும்,
ஏராளமாய்
உங்களுக்குப் பிடித்தவற்றை,
மிகவும் பிடித்தவற்றை ரசிக்கப் பழகுங்கள்!



நமக்கு வயதானாலும்,
அவற்றிற்கு "என்றும் இளமை" தான்!

அன்பென்ற வார்த்தை தவிர
அவளேதும் அறியா
அருமை அன்னையை!

கண்டிப்புடன்
கடும் உழைப்பையும்
நமக்காகத் தரும் தந்தையை!

நம் மௌனத்தின் அர்த்தம் கூட,
அழகாய்ப் புரிந்து கொள்ளும்
அன்பான நண்பர்களை!

செல்லமாய்த் சண்டையிடும்
சகோதர உறவுகளை!

போட்டியிடும் பகைவனை!

இவர்களுக்கெல்லாம் மேலாக,
இவ்வுலகில் வேறு யாராலும் நேசிக்க முடியாதபடி, "உங்களை" மிகவும் நேசியுங்கள்!

வாழ்வின் மதிப்பு தானாய்த் தெரியும்!

நாளை உலகைக் காண,
நடைபோடுவோம்,"நம்மால் முடியும்" என்ற நம்பிக்கையோடு!
                                                                     
                                                                                                            

Monday, April 2, 2012

நான் ரசித்த கவிதைகள்! - 1

நான் அதிகம் செவிவழியே கேட்டு ரசித்த சில கவிதைகளில், அம்மாவுக்காக கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்எழுதிய இந்தக் கவிதை மிக முக்கியமானது. வாழ்வில் நடந்த உண்மையை தமிழால், அழுத்தம் மாறாது கொடுத்த கவிஞரின் திறனை பலமுறை எண்ணி வியந்தவன் நான். இதோ அந்தக் கவிதை உங்களுக்காக!

முதன்முதலாய் அம்மாவுக்கு!


ஆயிரந்தா கவி சொன்னேன்.அழகழகா பொய் சொன்னேன்!
பெத்தவளே உன் பெரும, ஒத்தவரி சொல்லலையே!
காத்தெல்லாம் மகன் பாட்டு, காகிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு! உங்கீர்த்தி எழுதலையே?
எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பத்தி
எழுதியென்ன இலாபமுன்னு எழுதாம போனேனோ?

பொன்னையா தேவன்பெத்த பொன்னே,குலமகளே!
என்னைப் புறந்தள்ள இடுப்புவலி பொறுத்தவளே!
வைரமுத்து பிறப்பான்னு வயித்தில் நீ சுமந்ததில்ல.
வயித்தில் நீ சுமந்த ஒன்னு வைரமுத்து ஆயிடுச்சு!

கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,
இடப்பக்கங் கிடக்கையில என்னென்ன நினச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ? களவானப் பிறந்தவனோ? தரணியாள வந்திருக்கும் தாசில்தார் இவந்தானோ?
இந்த விவரங்க ஏதொன்னும் தெரியாம, நெஞ்சூட்டி வளத்த உன்ன, நெனச்சா அழுகை வரும்!

கதகதன்னு களி கிண்டி, களிக்குள்ள குழி வெட்டி,
கருப்பட்டி நல்லெண்ண கலந்து தருவாயே!
தொண்டையில அது இறங்கும் சுகமான இளஞ்சூடு,
மண்டையில இன்னும் மசமசன்னு நிக்குதம்மா!

கொத்தமல்லி வறுத்து வச்சு, குறுமொளகா ரெண்டு வச்சு,
சீரகமும்,சிறுமிளகும் சேர்த்துவச்சு நீர்தெளிச்சு,
கும்மி அரச்சு நீ கொழகொழன்னு வளிக்கையில,
அம்மி மணக்கும்! அடுத்ததெரு மணமணக்கும்!

தித்திக்க சமைச்சாலும்,
திட்டிகிட்டே சமைச்சாலும்,
கத்திரிக்கா நெய் வடியும்!
கருவாடு தேனொழுகும்!

கோழிக்குழம்பு மேல,
குட்டி குட்டியா மிதக்கும், தேங்காய்ச் சில்லுக்கு,
தேகமெல்லாம் எச்சில் ஊறும்!

வறுமையில நாமபட்ட வலிதாங்க மாட்டாம,
பேனா எடுத்தேன்! பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையிலே,
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேளையிலே,பாசம் வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு கதியத்து நிக்கையில,
பெத்த அப்பன் சென்னை வந்து சொத்தெழுதி போன பின்னே,
அஞ்சாறு வருசம் உன் ஆசமுகம் பார்க்காம,
பிள்ளை மனம் பித்தாச்சே! பெத்த மனம் கல்லாச்சே!

படிப்பு படிச்சுகிட்டே பணம் அனுப்பி வச்ச மகன்,
கைவிட மாட்டான்னு கடைசியில நம்பலையே!

பாசம்,கண்ணீர்,பழையகதை எல்லாமே,
வெறிச்சோடிப்போன வேதாந்தம் ஆயிடுச்சே!

வைகையில ஊர் முழுக, வல்லூறும் சேர்ந்தழுக,
கைப்பிடியாய்க் கூட்டிவந்து கரைசேர்த்து விட்டவளே!
எனக்கொன்னு ஆனதுன்னா,உனக்கு வேறு பிள்ளை உண்டு!
உனக்கேதும் ஆனதுன்னா, எனக்கு வேற தாய் இருக்கா?

                                                                            - 'கவிப்பேரரசு' வைரமுத்து