Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

Tuesday, December 26, 2017

கன்பூசியஸ் சிந்தனை முத்துக்கள்

**மனிதன் இயற்கையிலேயே நல்லவன்.ஆகவே, தண்டனையோடு அவனை நெருங்குவது முட்டாள்தனம்!

**சிந்தனையில்லாத படிப்பு உபயோகமற்றது.படிப்பில்லாத சிந்தனை ஆபத்தானது.

**தெரிந்ததை தெரியும் என்றும்,தெரியாததை தெரியாது என்றும் உணர்வது தான் அறிவு.

**நேர்மையானது எது எனத் தெரிந்தும்,அதைச் செய்யத் தவறுவது கோழைத்தனம்.

**முடிந்துபோன விஷயத்துக்கு விளக்கம் வேண்டாம்.
முன்னேறிச்செல்லும் விஷயத்துக்கு விளக்கம் வேண்டாம்.
இழைத்துவிட்ட தவறுகள் பற்றி,குற்றங்குறை கூறவேண்டாம்.

**அறிவாளி, யாரை வெறுப்பது,யாரை நேசிப்பது என்பதைத் தெளிவாக அறிவான்.

கல்வி என்பது....

கற்பது எப்போது என்பது,பள்ளியில் சேர்ந்த நாள் அன்று முடிவு செய்யப்படுவது அல்ல.தேவைகள் தோன்றும்போது,கற்பது தானாகத் துவங்கிவிடுகிறது.அப்படியானால்,அதற்கு முடிவு எப்போது என்று மட்டும் கேட்காதீர்கள்.ஏனெனில்,எது முடிவு என்பதைக் கற்றுக்கொள்ளவே முழு ஆயுளும் போதாது.
ஆகவே விரலைப் பார்த்து நேர விரயம் செய்யாமல், நிலவைப் பார்த்து ரசியுங்கள்.கல்வி பற்றி எண்ணாமல்,கற்பதைத் தொடங்குங்கள்.

ஒன்றைத் தெரியவில்லை என்று எப்போது நாம் உணர்கிறோமோ,அதனைக் கற்பதன் தேவை என்ன என்பதை எப்போது புரிந்து கொள்கிறோமோ,அந்த நொடியில்,நீங்கள் கற்க எண்ணியவை கண்முன் தானாகாத் தோன்றும்.அது,
மற்றவர் சொல்லிலிருந்தோ,புத்தகமாகவோ அல்லது காற்றில் பறந்து நம்மை அடையும் காகிதக் குப்பையாகவோ நிச்சயம் நம்மை அடையும்.ஆகவே, கற்கும் வாய்ப்பிற்காக,விழிப்புடன் காத்திருங்கள்.

அனைத்து வாய்ப்புகளும் கதவைத் தட்டுவதில்லை.
கதவைத் தட்டும் அனைத்தும்.இன்றையநாளில்,வாய்ப்புகளாக இருப்பதில்லை!!!

- ராஜ்குமார் (26-12-17)

Wednesday, October 11, 2017

படித்ததில் பிடித்தது

*கேட்டது ஒன்று,!*
   *கிடைத்தது ஒன்று!!* 

ஆண்டவனிடம்,
வலிமை கேட்டேன்!
          கஷ்டங்களை
          கொடுத்தார்!!
எதிர் கொண்டேன்,
வலிமை பெற்றேன்.👍​
                 
அறிவு கேட்டேன்!
        பிரச்சினைகளை
        கொடுத்தார்!! 
சமாளித்தேன்                             
அறிவு பெற்றேன்.👍​

தைரியம் கேட்டேன் !
         ஆபத்துக்களை     
         கொடுத்தார் !!
சந்தித்து மீண்டேன்  ,
தைரியம் பெற்றேன். 👍

அன்பு கேட்டேன் ! 
         வம்பர்களை   
         கொடுத்தார்
அனுசரித்து சென்று
வம்பர்களின் அன்பையும் பெற்றேன். 👍​ 

வளமான வாழ்வு கேட்டேன்!    
       சிந்திக்கும் மூளையை
       கொடுத்தார்.
வளமான வாழ்வு கிடைத்தது.👍​

*கேட்டது ஒன்று,!*
         *கிடைத்தது ஒன்று!!*

*கிடைத்ததை வைத்து*
         *கேட்டதைப் பெற்றேன்*.👍​

*படித்ததில் பிடித்த ஒன்று..👆​*

Thursday, September 22, 2016

உண்மை எனும் கானல் நீர்

உண்மை.
எத்தனையோ நேரங்களில் மறுக்கப்படுவது..
பணம் செல்வாக்கு பதவி கொண்டு மறைக்கப்படுவது..
வெளிப்பட வேண்டி காத்திருக்க வைப்பது.. வெளிவந்துவிடுமோ என பயப்பட வைப்பது..

உண்மை.
நல்லதா..கொடியதா?
நண்பனா துரோகியா?
ஆக்கமா அழிவுசக்தியா?

உண்மை...
மறைந்தால் ரகசியம்!
மறைத்தால் கபடம்!
வெளிப்பட்டால் அம்பலம்!
வணங்கினால் கடவுள்!
ஏய்த்தால் ஆயுதம்!

ஆக,கூர்ந்து நோக்கினால் ,நம் மனம் எல்லா பொழுதிலும் உண்மையை வேண்டுவதில்லை என்பதே கசப்பான உண்மை..!

ஆகவே தான், ரகசியங்கள்,கடவுள்கள் போற்றப்படுகின்றன.

உடைக்கப்பட்ட உண்மைகள் சுவாரஸ்யத்தை இழக்கின்றன.!

சிந்திப்போம்.சிறப்போம்👍

பொய் வாழவிடாது..!
உண்மை சாக விடாது..!

உண்மையை மறைக்க ஆயிரம் பொய் அவசியமாகிறது..
பொய்களைத் தவிர்க்க ஒரு உண்மை போதுமானதாகிறது☺☺

- ராஜ்குமார்

Wednesday, September 21, 2016

உன் வாழ்க்கை உன் கையில்

உணவு பிடிக்கவில்லை என்றால் தூக்கி எறிந்துவிட்டு பிடித்த உணவை வரவழைத்து உண்ணலாம்!
பிடித்த உறவுக்கு நம்மைப் பிடிக்கவில்லை எனில்,உணர்வுகளைப் புரியவைத்து மாற்றத்தை ரசிக்கலாம்!
உலகம் பிடிக்கவில்லைஎனில், உலகத்திற்கு ஏற்றபடி நம்மை மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாம்!

நம் வாழ்க்கையின் போக்கு என்றுமே நாம் நினைத்தபடி அமைய வேண்டுமெனில், மாறவேண்டும் நாம் சில நேரம்!

முத்து சிப்பிக்குள் சுரக்கும்போதுதான் ஒளி படைத்ததாக மாறுகிறது!
வைரம் தானாக இறுகுவதால்தான்,கண்ணாடியை அறுக்கும் கடினத்தன்மை பெறுகிறது!

முத்து,வைரம் என நம்மை நாம் மட்டுமே மாற்ற முடியும்!
அடுத்தவருக்காக உன்னை மாற்றத் துவங்கினால், இறுதியில் உன் தனித்துவத்தை இழந்துவிடுவாய்!

உன்னை உனக்குப் பிடித்தபடி மாற்றிக்கொள்!

குயவனுக்கு களிமண்ணை மட்டும் பானையாக மாற்றத்தெரியும்!
பொற்கொல்லனுக்கு தங்கம்,வெள்ளி போன்றவைகளை தட்டி நகையாக மாற்றமட்டும் தெரியும்!
சிற்பிக்கு கல்லுக்குள் மறைந்து கிடக்கும் சிற்பத்தை எழுப்ப மட்டும் தெரியும்!

ஒரு பொற்கொல்லனை பானையைத் தட்ட விடலாமா?
சிற்பியிடம் நகையை உளிகொண்டு உடைக்க விடலாமா?
குயவனிடம் தங்கம் கொடுத்து அழிக்க விடலாமா?

நாம் தங்கமா,களிமண்ணா அல்லது சிற்பமாகப்போகும் கல்லா என்பது நமக்கு மட்டுமே தெரியும்!
சிற்பியாக வேண்டுமா,கொல்லனாக வேண்டுமா என்பதை நாம் முடிவு செய்தால் தான் உருப்படியான பயன்கிடைக்கும்!

புரிந்துகொளுங்கள்! நினைத்தபடி வாழ பிடித்தபடி மாறுங்கள்! மாற்றுவதை விட, மாறுவது சிறப்பு!

÷ராஜ்குமார்

Tuesday, August 9, 2016

படித்ததில் பிடித்தது 16 - எது அமைதி (குட்டிக்கதை)

நாட்ல அப்பப்போ ஏதாவது போட்டிகள் நடத்தி; வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.

      ஒருமுறை 'அமைதி' ன்னா என்ன?  அப்படிங்கறத தத்ரூபமான ஓவியமா வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும்னு அறிவிச்சாரு.

      இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தாங்க.!

        மன்னன் ஒவ்வொரு ஓவியமா பார்வையிட்டுட்டே வந்தான். ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தாங்க.!

   ஒருத்தர் அழகான ஏரியை ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் இருக்கற மாதிரி வரைஞ்சிருந்தாரு. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமா இருந்தது.!!

      மற்றொருத்தர் பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களை தத்ரூபமாக வரைஞ்சிருந்தாரு. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றினபடி ஓவியத்தில் பிரதிபலிச்சிருந்தாங்க.!

     ஆனா, ஒரே ஒரு ஓவியத்தில் ஒரு மலை மேலிருந்து ஆக்ரோஷமா கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்துச்சு. அதுமட்டுமா இடியோட மழை வேற கொட்டிட்டிருந்தது.
      இது அமைதியே அல்ல.  சற்று உற்று பார்த்தப்ப நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளோட காணப்பட்டது.!!

   "இந்த ஓவியத்தை வரைந்தது யார்?" சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்பட்டாரு.!

     மன்னர்., " இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை. கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?" ன்னாரு.

       அதுக்கு ஓவியர், " மன்னா சப்தமும், பிரச்சனையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல ...!

      இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி.!

    அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது.!"

    "சபாஷ் .. அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்" னு கைதட்டின மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்!!.

   ஆக நண்பர்களே., அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித பிரச்சனையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல.
     ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, " நிச்சயம் ஒருநாள் விடியும் " என்று விடாமுயற்சியோட தினசரி உழைச்சிட்டிருக்காங்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி...!

Friday, November 27, 2015

எது வாழ்க்கை! - 1

எது வாழ்க்கை!
 - ராஜ்குமார் 

ஒரு மனிதன், தகுதியால் அல்லாமல் பிறரால் உயரத்தில் வைக்கப்படும்போது அவன் ஆணவம் மிகுந்தவன் ஆகிறான்.உயர்த்திவர்கள்,தம் ஆரம்ப நிலையில் உதவியவர்கள் என அனைவரையும் மதிக்கத் தவறுகிறான்.அன்றைய நாளில் ஆதாயம் கிடைக்கும் என்றால் மட்டுமே சிலரிடம் சிரித்துப் பேசுகிறான்.

குடும்பம் என்பது காதல்,புரிதல் அதை விட பொறுத்து அருளுதல் ஆகியவற்றைப் பொறுத்தே இனிமையானதாக அமைகிறது.ஆனால் என்று பணம் என்ற ஒன்றைச் சுற்றியபடி குடும்ப வாழ்க்கை நகர்கிறதோ அன்று பிரச்சினைகளுக்கான துவக்கம் இனிதே ஆரம்பமாகிறது.

உதாரணமாக,கணவன் மனைவிக்குள் தோன்றும் சண்டைகளைப் பார்ப்போம்.
நாம் நினைக்கலாம், கணவனின் பணத்தேவை, மனைவியின் அறியாமை அல்லது அழகு சார்ந்த தாழ்வுணர்வுகள் தான் காரணங்கள் என்று.அவை வெறும் கற்பனைகளே! ஆம். மிகப்பெரிய பணக்காரர் இன்போசிஸ் நாராயணமூர்த்தி அவர்களின் மகன் மற்றும் டிவிஎஸ் நிறுவனரின் ஒரே அழகிய மகள் ஆகியோர் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்று கடந்த மாதம் நீதிமன்றத்தில் முறிவு பெற்றது.ஆச்சரியம் தானே! ஒரு உண்மை என்னவெனில்,கணவன் மனை சண்டைகளுக்கு காரணம் என்று ஒன்று இல்லவே இல்லை.எல்லாம் கண்ணுக்குத் தெரியாத உணர்வுப் போராட்டங்களே!

கணவன் மனைவிக்குள் உள்ள உறவு, நினைத்த உடன் நம் மனதில் மகிழ்ச்சியை அள்ளித் தெளிப்பதாக இருக்க வேண்டும்.இருவர் மனமும் எப்போது முகம் பார்ப்பேன் என ஏங்கித் தவிக்க வேண்டும்.இதெல்லாம் சாத்தியமா எனக் கேட்கலாம்.நிச்சயம் என்பதே என் பதில்.

Tuesday, June 2, 2015

எனக்குப் பிடித்த தத்துவங்கள் - ராஜ்குமார்


  • அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி. ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்கிறவன் மூடன். ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை. தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.

  • நிலத்தில் வளரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை. அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.

  • மலரைப் பார்; கொடியைப் பார்; வேர் எப்படி இருக்குமென்று பார்க்க முயற்சிக்காதே. அதைப் பார்க்க முயன்றால், நீ மலரையும் கொடியையும் பார்க்க முடியாது.

  •  ஒவ்வொரு மரணமும் அழுகையோடு முடிந்து விடுகிறது. ஒவ்வொரு அழுகையும் மரணத்தோடு முடிந்து விடுகிறது
  • மனிதன் சந்தோஷமாக இருக்கும் பொழுது தனக்கு ஏதாவது துன்பம் வந்து விடுமோ என்ற பயத்திலேயே வாழ்கிறான்.
    அந்த நேரத்தில் ஒரு சிறிய பயத்தைக் கொடுத்தாலும் அவன் அதிகமாக பயந்து விடுகிறான்.இதே கவலையான நேரத்தில் அந்தக் கவலையை விட தனக்கு வேறு துன்பம் இல்லை என்று அரட்டுகிறான்.


அறிவுரைகள்

·   அதிகம் நல்லவனாக இருக்க. நினைக்காதே.உன்னை நடிகன் என்று சொல்லிவிடுவார்கள்!

·   அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே.அடிமையாக்கி விடுவார்கள்!

·    அதிகப் பொறுமையுடன் நடக்காதே.பொறுக்கியாக மாறும் வரை விடமாட்டார்கள்!

·   எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என நினைக்காதே.பொறாமையால் உன்னை காணாமல் ஆக்கி விடுவார்கள்!

·  எல்லோரையும் நம்பி விடாதே.ஏமாற்றுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்!

·  கோபப்படாமலேயே இருந்து விடாதே.கோமாளியாக்கி விடுவார்கள்!
 24 குருமார்கள்
தத்தாத்ரேயர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார் என்பதையும் கேட்டான்.

எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்…’ என்றார்.

இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், “சுவாமி! ஒரு வருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே…’ என்றான்.

அவனிடம், “பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்…’ என்றார் தத்தாத்ரேயர். மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்

மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்; தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன். பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன். எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது; பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.

ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

வேடன் ஒருவன் புறாக்குஞ்சு களைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன். பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன். பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.

எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன். பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.

புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்…’ என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.

இதைக் கேட்ட அரசன், தன் பதவியையே உதறித் தள்ளி விட்டு, ஆன்மிகத்தில் ஈடுபட்டான்.


வாழ்ந்து பாருங்கள்

ஒரு சிறுவன் நடந்து போய்க் கொண்டிருந்த போது சாலையில் நூறு ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தான்.
அன்று முதல் ஏதும் தரையில் கிடக்கிறதா என்று பூமியைப் பார்த்துக் கொண்டே நடந்தான்.
அடுத்த அறுபது வருடங்கள் அப்படியே இருந்தான். அவனுக்குக் கிடைத்தவை 768 ரூபாய், 2 மோதிரங்கள், 3 கொலுசுகள்.
ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900 சூர்யோதயங்கள், 630 வானவில் காட்சிகள்.
ஆயிரக்கணக்கான பூக்கள், பல்லாயிரம் குழந்தைகளின் புன்னகைகள் வாழ்க்கையைத் தொலைத்தவன் மீட்பதற்கு வாய்ப்பே இல்லை.
அதிர்ஷ்டம் காலை இடறினால் மட்டும் குனிந்து பாருங்கள்.
இல்லையென்றால் வாழ்க்கையைப் பாருங்கள், வாழ்ந்து பாருங்கள்!!