Thursday, November 29, 2012

ஐடி துறையில் பணிபுரிவோர்களுக்கு சுகி.சிவம் கூறும் அறிவுரை

நீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடை யது. வெற்றி என்பது உங்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருள். வாழ்க!

பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல! உங்களின் பெற்றோர் தங்களது பணிக் காலத்தின் இறுதியில் வாங்கும் ஊதியத் தொகையை, நீங்கள் முதல் மாதமே வாங்கி விடலாம். அதற்காக, அவர்களை விடவும் நீங்கள் அதிபுத்திசாலி என்றோ, திறமையாளர் என்றோ, பெரிய மனிதராகவோ எண்ண வேண்டாம்.

உறவினர்களை அற்ப ஜந்துக்கள் போல நினைக்க வேண்டாம். தம்பி- தங்கைகளைப் படிக்க வைக்க நிறைய செலவு செய்யுங்கள். குடும்பத்தின் பந்த- பாசத்தை, இணைய தளத்தில் டௌன் லோட் செய்ய முடியாது! வெளிநாட்டுப் பணம் வரலாம்... வெளிநாட்டுப் பண்பாடு வரலாமா? பிற மனிதர்கள் எல்லோருமே நாம் பயன்படுத்திக் கொள்ள மட்டும் அல்ல!

பத்து ரூபாய் கூடுதல் சம்பளம் என்றதும் கம்பெனியைக் கைகழுவுவது கொஞ்ச காலம் பெருமையாகத் தெரியலாம். ஆனால், ஒரு நாள்... இந்தத் துறையின் செயல்பாடே இதனால் ஸ்தம்பிக்க வாய்ப்பிருக்கிறது.

உணவு, உறக்கம், ஓய்வு, காலா காலத்தில் இல்லாதபடி உடம்பை- மன தைச் சீர்குலைத்தால், 40 வயதுக்குப் பிறகு உயிர் வாழ்வதே பிரச்னை யாகி விடும். யோசியுங்கள்.

எப்போதும் ஏ.ஸி-யில் இருப்பதால், உங்களுக்கு வியர்வையே வருவதில்லை. அது, உடலுக்குக் கெடுதல். உடலை வியர்க்க விடுங்கள். தண்ணீர்த் தாகம் எடுக்காத போதும் நீர் அருந்துங்கள். கண்ட கண்ட குளிர்பானங்கள் குடிப்பதை விட்டு விட்டு, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை சாறு அருந்துங்கள். பார்லியும் சேர்த்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் நிகழ வேண்டிய காலைக் கடனை முடிக்க மாத்திரைகள் சாப்பிடுவதும் நல்லதல்ல. கண்களிலும் கவனம் வையுங்கள்.

உட்கார்ந்தே இருப்பதால் எடை கூடும்; சர்க்கரை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலும் பழுத்துக் கிடக்கும். மூளைக்கு வேலை என்பதால் ரத்த அழுத்தமும், சக்கைப் போடு போடும். எல்லாவற்றையும் எதிர்பார்த்து வெற்றி கொள்ளுங்கள்.

காதலிக்கும்போது அல்லது திருமணத்துக்குப் பெண் தேடும் போது... சம்பளம், வேலைவாய்ப்பு, செலவழிக்கும் இயல்பு போன்றவற்றை இரண்டாம்பட்சமாக வைத்துக் கொண்டு, ஒழுக்கம், குணம், பண்பாடான குடும்பம் ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

'இன்று போலவே என்றும் சம்பளம் வரும்' என்று கனவு காணாதீர்கள். சிக்கனமாக செலவழிக்கப் பழகுங்கள். உங்களால் அதிகம் செலவழிக்க முடியும் என்பதற்காக, சிரமப்பட்டு சம்பாதிப்பவர்களது மனம் புண்படும்படி ஜம்பம் அடிக்காதீர்கள். அந்நிய நாட்டின் தயவில் அதிகம் சம்பாதிப்பவர்களாகிய பலரும் இந்த நாட்டு வெற்றிக்கு உழைப்பவரை இளக்காரமாக நினைக்காதீர்கள்.

வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பும் போது, ஓட்டல்களில் தங்கிக் கொண்டு... உறவினர்களை- அம்மா- அப்பாவை, ''என்னால் வர முடியாது. இங்கு வந்து பார்... ஆட்டோவுக்கு வேண்டு மானால் காசு தருகிறேன்!'' என்று கூறி அசிங்கப்படுத்தாதீர்கள். பணத்தை விட ரத்தம் கனமானது.

வெளிநாடுகளில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவு என்பது உண்மைதான். என்றாலும் சிறிது நேரமாவது தாத்தா- பாட்டி... அதாவது உங்களின் பெற்றோர், உங்கள் பிள்ளையைக் கொஞ்சு வதற்கு- உணவு ஊட்டுவதற்கு அனுமதி கொடுங்கள்.

உங்களை காயப்படுத்துவதாக இந்த பதில் அமைந்தால், என்னை மன்னியுங்கள்! உங்களை நோகடிப்பது எனது நோக்கம் அல்ல. இவை யாவும், உங்களைப் போன்றோரின் பெற்றோர்கள், உங்களிடம் சொல்ல முடியாமல் என்னிடம் புலம்பிய புலம்பல்கள்.

6 comments:

  1. அவரின் பல அறிவுரைகள் சிந்திக்க வைப்பவை...

    நன்றி...
    tm1

    ReplyDelete
  2. படிக்கும் போது மட்டும் உறைக்கும், பிறகு மறந்துவிடும் இத்தகைய செயல்களை செய்வோருக்கு...

    ReplyDelete
  3. நன்றிகள் ராஜ்...

    ReplyDelete
  4. விழலுக்கு இறைத்த நீர்!

    ReplyDelete
  5. padhivu nandru
    surendran

    ReplyDelete
  6. Really all the words are true!!!

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்