மாலை மயங்கும் நேரம் வானத்தில் கதிரவன் கையசைத்து விடைபெறும் வேளையில்,
மேகத்துடனான பாசத்தில் பிரிய மனமில்லாத ஒளிக்கீற்றுகள் வண்ணங்களாய் ஜொலித்தன.
மேகத்துடனான பாசத்தில் பிரிய மனமில்லாத ஒளிக்கீற்றுகள் வண்ணங்களாய் ஜொலித்தன.
அது அவ்வளவு ரம்மியமான காட்சி!
சொர்க்கமோ அல்லது வேறு எதுவோ என கோவை சாலையை உணரவைத்த அவளை மறக்க முடியாது!
என்னின்று சில அடி தள்ளி வருகிறாள்!
இடையே காற்றைத்தவிர தடையேதும் இல்லை.
அந்த நகர நெரிசலில் தும்பையும்,ஈக்களும் எங்கிருந்து வந்தன?
தூய வெண்மையாய் தும்பை அவள் மீது உடையென படர்ந்ததுவோ?
சில வண்ணத் தும்பிகள்,தேன்பருக வந்தமர்ந்து பின்னர் அவள் முக அழகைப் பார்த்துக்கொண்டே உடல் தொட்ட மயக்கத்தில் மோட்சத்தை அடைந்தனவோ?
ஆமாம் வடிவமாய் அவள் உடையில் அவைகள்!!
மாலை நேர சில நட்சத்திரங்கள், இவளைப் பார்த்த மயக்கத்தில் வானிலிருந்து தவறிவிழுந்து,
பச்சைப் பாசியாய் அவள்மேல் படர்ந்த துப்பட்டாவின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டதோ?
இவை யாவும் நடந்து முடிந்த நேரத்தில், என் முன்னே அவள்- அன்று வரைந்த வண்ணம் காயாத ஓவியமாய் அவள் வருகிறாள்!!