Monday, January 23, 2012

சுஜாதாவின் பத்து பயனுள்ள கட்டளைகள்

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.


2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.


3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.


4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.


5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.


6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.


7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.
 நன்றி ::உலக தமிழ் மக்கள் இயக்கம்

Thursday, January 12, 2012

தமிழா! இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

"மச்சி..இன்னைக்கு "நண்பன்" ரிலீஸ்.இந்தப் பொங்கல் செம என்ஜாய்மென்ட்.டிக்கெட் புக் பண்ணியாச்சு! காலைல மொதல் ஷோ.வந்துடு"

"ஹாய் டா..இந்த பொங்கலுக்கு டிவி ல நெறைய படம் போடுறானுங்க.மறக்காம பாரு!"

"ஏங்க..இந்த பொங்கல் தள்ளுபடியிலயாவது ஒரு வாசிங்மெசின் வாங்கிக் கொடுங்க!"

இந்த அவசர உலகில்,இப்படி பல வகையான உரையாடல்களை பொங்கல் விடுமுறை தினங்களில் கேட்க முடிகிறது.

"Happy pongal" ,"have a cheerful pongal holidays" என எக்கச்சக்க குறுஞ்செய்திகள் பறக்கின்றன.
சில கணிணி புலிகளால்,மின்னஞ்சலில் வண்ணமயமான வாழ்த்துமடல்கள் அனுப்பப்படுகின்றன.

திரையரங்கு,தொலைக்காட்சி,உல்லாச சுற்றுலா,குறுஞ்செய்தி வாழ்த்துகள் என்ற குறுகிய
வட்டத்துக்குள் பொங்கல் திருவிழா முடிந்து விடுகிறது.விடுமுறை முடிந்த பின் என்றும் போல எந்திர வாழ்க்கை தொடங்கி விடுகிறது.

1995ஆம் ஆண்டு:
நான் முதலாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.இதே பொங்கல் விடுமுறை எனக்கும் துவங்கியது. நான்கு நாள்.அன்றைய வகுப்பில் ஆசிரியை நடத்திய பாடம் இன்றும் கண்முன் நிழலாடுகிறது.

"பொங்கலுக்கு முதல் நாள்,அதாவது மார்கழி மாதம் கடைசி நாள் போகி. இது இந்திரவிழா என்றும் சொல்லப்படுகிறது.
பழையன கழிந்து புதியன புகுவதால், இது போக்கி என சொல்லப்பட்டு காலப்போக்கில் போகி என ஆனது.

இரண்டாம் நாள் தைப்பொங்கல்.ஆடியில் விதைத்த நெல்லை அறுவடை செய்த பின்னர், நல்ல விளைச்சலுக்கு காரணமான பூமித்தாய்க்கும்,சூரியனுக்கும் நன்றி சொல்லும் நாள் இது.இன்று புது நெல்லில், பச்சை இஞ்சி முடிந்த புதுப்பானையில் பொங்கலிட்டு,பூமியை வழிபடுவார்கள்.

மூன்றாம் நாள், மாட்டுப்பொங்கல்.உழவுக்கும்,நெல் மூட்டையை வயலிலிருந்து வீடு சேர்க்கவும் உதவியாக இருந்த மாடுகளுக்கு நன்றி சொல்லும் நாள்.இன்றைய நாளில் மாடுகளைக் குளிப்பாட்டி,கொம்புகளுக்கு வண்ணம் பூசி,புதுக்கயிறு மாட்டி அவற்றை அழகு பார்ப்பார்கள் உழவர்கள்.

இறுதி நாள், காணும் பொங்கல் / உழவர் திருநாள்.நெற்பயிரை நன்கு வளர்க்கும் பொருட்டு,கடுமையாய் உழைத்த உழவர் பெருமக்கள், தன் சொந்தம்,நண்பர்கள் என அனைவரையும் கண்டு,வரவேற்று விருந்துண்ணும் நாள்.பல விளையாட்டுப்
போட்டிகள் இந்நாளில் நடத்தப்படும்.".

வகுப்பு முடிந்தது.

அன்று மாலை எங்கள் வயலுக்குச் சென்றிருந்தேன்,அறுவடை முடிந்து களம் வெறுமையாய்க் கிடந்தது.
பக்கத்து களத்தில் கூட்டமாக ஆட்கள்.என்ன என்று பார்க்க ஓடினேன்.
வரிசையாக பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது.ஒவ்வொரு கல்லிலும்,ஆட்கள் , அறுவடை செய்த நெற்கதிர் கட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.நெல்மணிகள் சிதறி பறந்தன.இரவு எட்டுமணி.வேலை முடிந்து எல்லோரும் சென்று விட்டார்கள்.

எங்கள் வீடு:

நெல்லுக்கு காவல் காக்க வேண்டி, மாமா களத்துக்குப் புறப்பட்டார்."மாமா! நானும் உங்க கூட வரேன்!" என்று நான் சொல்ல,என்னை அள்ளி எடுத்துக்கொண்டு,"அங்க வேண்டாம் சாமி! பனிக் காத்து அடிக்கும்.உன் உடம்புக்கு எதாவதுவந்தா உங்க அம்மா என்னைப் பேசும்.இங்கயே இரு!"என்று சொல்லி,என்னைக் கட்டிலில் இறக்கிவிட்டு புறப்பட்டு விட்டார்.அம்மாவும்திட்டியதால்,வேறு வழியில்லாமல் படுத்துவிட்டேன்.

காலை புலர்ந்தது.மார்கழி இறுதிநாள்.

விழித்து பார்த்தபோது அத்தையும், சித்தியும் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள்.
"மருமகனே! சீக்கிரமா எழுந்து போய், பல்லை வெளக்கிட்டு காப்பியைக் குடி! மணி 7 ஆச்சு!" என்று அத்தை செல்லமாக அதட்டினார்.எழுந்து வீதிக்கு வந்து பார்த்தேன். எல்லா வீடுகளும் அதே பரபரப்பில் இருந்தார்கள்.குளித்துவிட்டு காலை உணவையும் முடித்துக் கொண்டேன்.எனது வாகனத்தை (இரு சக்கரவாகனத்தின் சக்கரம்) எடுத்துக்கொண்டு, பக்கத்துவீதிக்கு சென்றேன்.நாள் முழுக்க விளையாட்டு.மாலை ஆறு மணி. எங்கு பார்த்தாலும் நெருப்பு கொழுந்துவிட்டு ஜொலித்தது.
எங்கள் வீதியிலும் அப்படித்தான்.பழைய பாய்,முறம்,காகிதங்கள் என அனைத்தையும் நெருப்புக்குள் வீசி எறிய,எனக்கும் எதாவதை எறிய வேண்டும் போல இருந்தது."புத்தகப் பையை எறியலாமா?" என்ற எண்ணம் கூட வந்தது.
அம்மாவின் அடிக்கு பயந்து அந்த திட்டம் கைவிடப்பட்டது.கொஞ்சம் பழை காகிதங்கள்,மற்றும் கிழிந்த துணிகளை வீசி மகிழ்ந்தேன்.
எல்லோரும் வீசிய பொருட்களை விட நான் வீசியது நன்றாக எரிவதாகவே தோன்றியது."இது தான் போகி.ம்ம்ம்" என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
இரவினில் அத்தை சொன்ன மந்திரக் கதைகளால் நன்றாக உறங்கினேன்.காலை 6 மணிக்கே எழுப்பிவிட்டார்கள்.
அரைத்தூக்கத்திலேயே குளித்து முடித்து,மாமவுடன் வயலுக்குப் புறப்பட்டேன்.

குவிக்கப்பட்டிருந்த நெல்மணிகள் கோணிப்பைகளில் நிரம்பிக்கொண்டிருந்தது. இரண்டு பேர், நிரம்பிய மூட்டைகளை,மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தனர்."இன்னும் ரெண்டு வண்டி சேரும் தம்பி.நீ போய் பொங்கல் நெல்லை மில்லுல அரைச்சுட்டு வா." என வேலை செய்துகொண்டிருந்த பெரியவர் சொல்ல, மாமாவும் நானும் அதற்காக கிளம்பினோம்.வரும் வழியிலேயே கரும்பும்,மஞ்சளும்.வாங்கிக் கொண்டோம்.வீடு வந்து சேர்ந்தேன்.மணி 9.அம்மா சாப்பிடக் கூப்பிட்டார்.சாப்பிட்டுக்கொண்டே கேட்டேன்,"
ஏனம்மா அத்தை,சித்தி,நீ யாருமே சாப்பிடலை?"."இன்னைக்கு எல்லாரும் விரதம் சாமி.இன்னைக்கு விரதம் இருந்தா குடும்பத்துக்கு நல்லது.அது தான்" என்றார்.12 மணி.களம் முழுக்க கூட்டம்.வெயில் அவ்வளவாக இல்லை. பசுமாட்டு சாணம் கொண்டு,களத்தைப் பூசியிருந்தனர்.
அத்தை பொங்கல் வைக்க,சுற்றியும் பக்கத்து வீட்டு பெண்கள் நின்று கொண்டிருந்தனர்,
உமி நீக்கி எடுத்துவந்த புது அரிசியை உலையில் போட, சிறிது நேரத்துக்கெல்லாம் பொங்கல் பொங்கியது. "பொங்கலோ பொங்கல்" என சுற்றி இருப்பவர்கள் குலவை பாட, நானும் உற்சாகமாய் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன்.
இறக்கி வைத்தபிறகு அனைவருக்கும் பரிமாறினார்கள்.பொங்கலில் சர்க்கரை போடவில்லை.
அம்மா வாழைப்பழம்,சர்க்கரை கலந்து நன்றாக் பிசைந்து கொடுக்க, ருசித்து ரசித்து தின்றேன்.மனதுக்குள் குதூகலமாக, "பொங்கலோ பொங்கல்" என சொல்லிக் கொண்டேன்.

மதிய உணவு சொந்தங்களுடன்.அருமையான சைவ விருந்து. இரவு,மாரியம்மன் கோவிலில் திரைகட்டி படம் போட்டார்கள்.
படத்தின் பெயர் நினைவில் இல்லை ,ராமராஜன் நடித்த படம் என்பதைத் தவிர.
பொழுது புலர்ந்தது.மாமா எங்களின் இரண்டு மாடுகளையும் குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்.நான் பல் துலக்கியபடியே  அதை
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்."என்னடா மாப்பிள வேடிக்கை?" என்ற படி, தண்ணீரை அள்ளி என் மேலும் வீசினார் சிரித்துக்கொண்டே.நானும் பதிலுக்கு சிரித்துவிட்டு அம்மாவிடம் சென்று ஒளிந்துகொண்டேன்.
விளையாடிவிட்டு மாலை வீடு வந்து பார்த்த எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.இரண்டு வெள்ளை மாடுகளும் கொம்புகளுக்கு வண்ணம் பூசப்பட்டு,மலர்மாலையுடன், நெற்றித்திலகமிட்டு அம்சமாக நின்றுகொண்டிருந்தன.
நான் அவசரமாய்க் குளித்துவிட்டு,கூட்டத்தில் வந்து நின்றேன்.நானும், மாமாவும் ஒரு மலர்க்கொடியைப் பிடித்துக்கொள்ள,கன்றுக்குட்டியை விரட்டி அதனை தாண்ட வைத்தார்கள்.அது வந்தவேகத்தில் நான் கையில் வைத்திருந்த மலர்க்கொடியை விட்டுவிட,அனைவரும் சிரித்தார்கள்.என்னையும் சேர்த்து.
அப்புறமாக இரண்டு மாடுகளுக்கும் பூசையிட்டு,பொங்கல் வைத்தார்கள்.இன்றும் முடிந்தது என இரவு கண்மூடும் நேரத்தில்,மாரியம்மன் கோவிலின் ஒலிப்பெருக்கி கதறியது."ஊர்ப்பொது மக்களுக்கு ஒரு நற்செய்தி.தைப் பொங்கலின் கடைசி நாளான காணும் பொங்கலை முன்னிட்டு,கோவில் கமிட்டி சார்பாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.வழுக்கு மரமேறுதல்,பானை உடைக்கும் போட்டி,சிறுவர்களுக்கு முறுக்கு கடிக்கும் போட்டி,கபடி ஆகியவை நடைபெறும்.அனைவரும் வாருங்கள்.உங்கள் ஆதரவைத் தாருங்கள்!" என்ற அறிவிப்பைக் கேட்டவுடன் மகிழ்ச்சி பொங்கியது.

அடுத்தநாள் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில்,நான் என்னையும் மறந்து உறங்கிப்போனேன்.

அடுத்தநாள் போட்டிகள் முடிந்தன.பரிசுகளாக சிறுவர்களுக்கு எவர்சில்வர் தட்டம்,பெரியவர்களுக்கு பணமுடிப்பு.நாளை
பள்ளிக்கூடம் போகவேண்டும் என்ற எண்ணம்,இந்த மகிழ்ச்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கத் துவங்கியது. "
***********************
இன்று நடந்தது போல இருக்கும் இந்த நிகழ்ச்சிகள் என் கிராமத்தில் நடந்து 17 வருடங்கள் ஆகிவிட்டது.பொங்கல் கொண்டாட்டம் இப்படித் தான் இருக்கும் என நான் உணர்ந்த முதல் தருணம் அது தான்.
ஆனால் இன்று?
விவசாய நிலம் அழிவு.தைப்பொங்கல் இல்லை.
மாடுகள் இல்லை.மாட்டுப் பொங்கல் தேவையில்லை.
விளையாட்டுப் போட்டிகள் கணிணிக்குள் நடக்கின்றன.எனவே வெளியே வரத் தேவையில்லை.

தமிழர் திருநாள் என்று மார்தட்டிக் கூறும் நாம்,பொங்கல் பண்டிகையின் சிறப்புகளை ஒரு நிமிடம் மனதில் நிறுத்தி,நமக்கு உணவிடும் உழவர்களை நினைத்து நன்றி சொன்னாலே போதும்.

பாரம்பரியம் அறியாத தமிழ் வாரிசுகளுக்கு, இந்த அனுபவச் சுவடு சமர்ப்பணம்.



இனிய பொங்கல் வாழ்த்துகள்!!

Monday, January 2, 2012

அதே நேரம் அதே இடம்

கண்களை மூடிக் கற்பனையில் லயித்திருந்தேன்.
கனவுபோலத் தெரியவில்லை கண்முன் வந்த காட்சிகள்.
காலம் கடந்த காதல் நிலவு தேடிவந்ததைப் போல உணர்ந்தேன்.

அன்றொரு நாள்-இதே நேரம்,இதே இடத்தில்,
வெறுமை துளியும் இல்லை!
பசுமை படர்ந்த புல்தரை மீது அமர்ந்து, என் தோள் சாய்ந்து அவள் பேசியபோது
எதிரில் ஒலித்த இரைச்சல்களும் எறும்பின் சப்தம் போல மௌனமாய்த் தோன்றியதே?!!

ஆனால் இன்று.,
நான் தனியாக இதே இடத்தில்!
எங்கே சென்றாள் என்னவள்??
வந்து விடுவாள் விரைவில்,உள்மனம் சொல்லியது மெதுவாக...

வேலை கிடைத்தது-காலம் கடந்தது-அவள் வரவில்லை!

இரவுத்தூக்கம் எட்டாத தூரத்தில்..
வயிற்றிலிட்ட உணவும் உறுத்திய நேரங்கள்.இன்றும் அவள் என்னுடன் இல்லை.
எங்கே சென்றாள்? 

அவளுக்கு பதிலாய் அவள் தங்கை இன்று வந்தாள்!!

அவள் கையில் அச்சிட்ட அழைப்பிதழ்!
"அக்கா பொண்ணுக்கு பெயர் சூட்டு விழா.கண்டிப்பா வாங்க" என்றாள்.
சொன்னவுடன் இடிந்துபோனேன்.
அவள் தொடர்ந்தாள்."அக்கா உங்களை இன்னும் மறக்கவில்லை..அப்பாவின் பிடிவாதமும், அமெரிக்கா மாப்பிள்ளையும்,உங்களுக்கு வேலை இல்லை என்ற காரணமும்அவளை திருமண வாழ்வுக்குள் தள்ளிவிட்டது.இனி என உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்.வேறு வழி இல்லை"
சென்றுவிட்டாள்!
காலம் கடந்து விட்டது! இன்று தனியாய் நான்! தவிப்போடு அவள்!!
அவள் ஏன் என் வாழ்வில் வந்தாள்?எதற்கு இந்த துன்பம் தந்தாள்?
எனக்குள் கேட்டுக்கொண்டேன் இதுபோல ஆயிரம் கேள்விகளை.