துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
கடந்த வெள்ளிக்கிழமை, இந்தக்
குறளின் காட்சிவிளக்கத்தை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில்
காணமுடிந்தது.
பேருந்து நிலையம் அருகில் செல்லும் நெடுஞ்சாலை, எப்போதுமே
நெரிசல் மிகவே இருக்கும்.அன்றும் அப்படித்தான்.சின்ன இடைவெளி கிடைத்ததும் நான் ஓட்டமாக சாலையைக்
கடந்து, பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தேன்.ஓரிடத்தில் ஒரு சிலர்
கூடி நிற்பதைப் பார்த்து அங்கே சென்றேன்.வேடிக்கை
பார்ப்பது நம்மவர்க்கு புதிதல்லவே!
காவல் துறை அதிகாரி அங்கே போக்குவரத்தை
ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார்.இந்தக் கூட்டத்தை அவ்வப்போது கலைத்துக் கொண்டும் இருந்தார்.அங்கே ஒரு இந்திய
"குடிமகன்",சுயநினைவே இன்றி படுத்துக்கிடந்தான்.அவன் இவன் என
சொல்வதில் தவிறில்லை என நினைக்கிறேன்.எதிரில் ஒரு பிரபல புத்தகக்கடை.இந்த ஆளை
எழுப்பும் முயற்சியில் அவர்கள் ஒரு குடம் நீரை வீணாக்கியதை உணரமுடிந்தது.
ஆனாலும் ஒரு துளி அசையாமல்
படுத்துக்கொண்டிருந்தான்.நான் முதலில் பார்த்தபோது செத்துவிட்டானோ எனத் தோன்றியது.இரண்டு நிமிடம் உற்று பார்த்தபோது
மூச்சுவிடுகிறான் என்பதன் அறிகுறி தெரிந்தது. பிறகு நான் அந்த இடத்தைவிட்டு
அகன்றுவிட்டேன்.
[களித்தானைக்
காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று]
ஒருவன் குடிபோதையில் இருக்கும் போது அவனுக்கு உதவி
செய்வதோ புத்திமதி கூறுவதோ வீண்வேளை என வள்ளுவர் இன்னொரு குறளிலும் சொல்லி
இருக்கிறார் அல்லவா.நமக்கேன் வம்பு என பேருந்தில் ஏறி ஊர் சென்றேன்.
[கையறி
யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்]
இப்படி உணர்விழந்து,மானம்
இழந்து மதி கெட்டு நம்மை மற்றவர் கேவலமாகப் பார்க்கும்படி செய்யும் மதுவினை,
காசு கொடுத்து
அவன் வாங்கிப்பருகுவதை என்னவெனச் சொல்வது?
[கள்ளுண்ணாப்
போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு]
இவன் மது மயக்கத்தில் இல்லாத போது, இவன்
இபோது கிடக்கும் நிலையில் உள்ள மற்றொருவனைப் பார்த்தாலாவது
இவனுக்குள் மாற்றம் வருமோ என்னமோ? வள்ளுவனின்
அதே கேள்வி எனக்கும்!!