ஒரு ஊரில் பல ஆண்டுகளாக வயல்களில் ஒரு
வயது முதிர்ந்த விவசாயி வேலை செய்து கொண்டிருந்தார். அவர் தனது வீட்டில்
ஒரு குதிரையை வளர்த்து வந்தார். ஒரு நாள் அந்த குதிரை எங்கேயோ ஓடி
போய்விட்டது. அந்த விஷயத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரிடம் சென்று,
"என்ன ஒரு கெட்ட அதிர்ஷ்டம்!" என்று கனிவோடு பேசினர். அதற்கு அந்த விவசாயி
"ம்..அப்படிக் கூட இருக்கலாம்" என்று சொன்னார்.
மறுநாள் காலையில் ஓடிப் போன அந்த குதிரை திரும்ப வந்துவிட்டது. ஆனால் வரும் போது மூன்று குதிரைகளோடு வந்தது. அதை அறிந்தவர்கள், அவரிடம் "எவ்வளவு அற்புதம்.அதிர்ஷ்டக்காரன் நீ" என்று ஆச்சரியத்தோடு வந்து பேசினர். அதற்கும் அவர் "இருக்கலாம்" என்று கூறினார்.
அடுத்த நாள் அந்த விவசாயி மகன் அந்த குதிரையின் மீது சவாரி செய்ய
ஆசைப்பட்டு, குதிரையின் மீது ஏறினான். ஆனால் அந்த குதிரையோ அவனை கீழே
தள்ளிவிட்டது. அதனால் அவனது கால் உடைந்துவிட்டது. உடனே பக்கத்து
வீட்டுக்காரர்கள், அவரிடம் மறுபடியும் கனிவோடு பேசினர். அதற்கும் அவர் அதே பதிலைச் சொன்னார்.
மறுநாள் இராணுவ அதிகாரிகள் அந்த
கிராமத்திற்கு இளைஞர்களை அழைத்து செல்ல வந்தனர். அப்போது கால் உடைந்த அந்த
இளைஞனை மட்டும் விட்டுவிட்டுச் அழைத்துச் சென்றனர் . உடனே அக்கம்பக்கத்தினர் அந்த அவரிடம்
வந்து "என்ன பாக்கியம் செய்தீர்களோ உங்கள் மகனை விட்டு சென்றுவிட்டனர்"
என்று கூறி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதற்கும் அந்த விவசாயி
"இருக்கலாம்" என்றே கூறினார்.
நீதி:
"எது வேண்டுமானாலும் எப்போது
வேண்டுமானாலும் நடக்கும். எனவே எதற்கும் கவலை கொள்ளாமல் எல்லாம் நன்மைக்கே
என்று ஏற்றுக் கொள்ளும் மனநிலையே நிம்மதியான வாழ்க்கையின் அடிப்படையாகும்!"