Friday, June 27, 2014

வாழ்க்கை என்னும் பரிசு!


ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

பரிசு என்னவென்றால்,ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.

ஆனால் இந்தப் பரிசுக்கு சில நிபந்தனைகள் உண்டு.

அவை :
1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு கணக்கிற்கு மாற்ற முடியாது.
3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு
4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக் கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய் வரவு வைக்கப்படும்
5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.
6) வங்கி - "முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவுதான். வங்கிக் கணக்கு மூடப்படும், மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.
 

 இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?
உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள் இல்லையா? உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள்.


ஏனென்றால் அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் - அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை - நிதர்சனமான உண்மை!!

ஆம் ..

நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் - காலம்.


ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும் போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக 86400வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.
இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.
அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான்.நேற்றைய பொழுது போனது போனது தான். 


ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில்
86400நொடிகள். எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும். அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? 


உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா?
இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா? காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும். 


எனவே உங்களைப் பொன் போல பேணுங்கள் - சந்தோஷமாக இருங்கள் - சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் - வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.

படித்ததில் பிடித்தது 10 - கடவுள் கதைகள்

1.கடவுளின் மனைவி


குளிர் நிரம்பிய பொழுதொன்றில் காலணிகள் கடையின் ஜன்னல் வழியே ஏக்கத்துடன் காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் தோளில் கரமொன்று படிந்தது.

புன்னகை முகத்துடன் பெண்மணி ஒருவர், “என்ன பார்க்கிறாய்” என்று கேட்டார்.

“எனக்கு ஒரு ஜோடி காலணிகள் தருமாறு கடவுளைக் கேட்டுக்கொண்டிருந்தேன்”.

சிறுவனை உள்ளே தூக்கிச் சென்ற பெண்மணி, புழுதி படிந்த அவனுடைய பிஞ்சுப் பாதங்களைக் கழுவி, பொருத்தமான காலுறைகளையும் காலணிகளையும் தேர்ந்தெடுத்து அணிவித்தார்.

தான்தான் கடை உரிமையாளர் என்பதை சிறுவன் யூகித்திருப்பான் என்று நம்பி , “நான் யார் தெரியுமா!” என்றார்.

சிறுவன் சொன்னான். “தெரியுமே! நீங்கள்தான் கடவுளின் மனைவி!!”

கனிவை வெளிப்படுத்தும் போதெல்லாம் கடவுளாகிறோம்.


2. ஆப்பிள் கடவுள்


நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன.

 அந்தக் கூடையின் மேல், "ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்;
கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது.

சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.


அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது:
'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!'