Monday, January 12, 2015

படித்ததில் பிடித்தது 14- யானை புக பானை செய்த கதை




மந்தையூர் என்னும் ஊரில் குணசீலன் என்பவன் துணி வெளுக்கும் தொழிலைச் செய்து வந்தான். அரண்மனைத் துணிகளையும் அவன்தான் வெளுப்பான். அவன் சிறப்பாக வேலை செய்வதால், மகிழ்ந்த அரசர் அவனைப் பாராட்டிப் பரிசு வழங்கினார்.

அவன் பக்கத்து வீட்டில் மட்பாண்டங்கள் செய்யும் சுப்பு என்பவன் குடி இருந்தான். குணசீலன் பேரும், புகழும் பெற்றதைப் பார்த்து, பொறாமை கொண்டான் சுப்பு.

அரசரிடம் வந்து ""அரசர் பெருமானே! நீங்கள் வெள்ளை யானையில் அமர்ந்து பெருமிதமாக உலா வர வேண்டும். இந்நாட்டு மக்கள் அதைப் பார்த்து மகிழ வேண்டும்,'' என்றான்.

""
வெள்ளை யானையில் அமர்ந்து வந்தால் பெருமையாகத்தான் இருக்கும். வெள்ளை யானைக்கு எங்கே போவது?'' என்றார்.

""
அரசே! துணி வெளுக்கும் குணசீலன் திறமையை நீங்கள் அறிவீர்கள். எப்படிப் பட்ட அழுக்குத் துணியையும் அவன் வெளுத்து விடுவான். உங்கள் பட்டத்து யானையை அவனிடம் தாருங்கள். அதை அழகிய வெள்ளை யானையாக்கித் தருவான்,'' என்றான்.

அதை உண்மை என்று நம்பிய அரசர் குணசீலனை அழைத்தார்.
""
குணசீலா! பட்டத்து யானையை நீ வெள்ளை யானையாக்கித் தர வேண்டும்,'' என்றார்.

""
அரசே! அது எப்படி முடியும்?'' என்று தயக்கத்துடன் கேட்டான் குணசீலன்.
""
அது எனக்குத் தெரியாது. பட்டத்து யானையை நீ வெள்ளை யானையாக்க வேண்டும். இல்லையேல், உன் உடலில் உயிர் இருக்காது,'' என்று கண்டிப்புடன் சொன்னார்.

அங்கிருந்த சுப்புவைப் பார்த்தான் குணசீலன். இது சுப்புவின் சூழ்ச்சிதான் என்பதைப் புரிந்து கொண்டான்.

அறிவு நிறைந்த குணசீலன், சுப்புவைப் பழி வாங்க நினைத்தான்.
""
அரசே! அழுக்குத் துணிகளை நாங்கள் ஒரு பானைக்குள் போடுவோம். பிறகு அந்தப் பானையை வெள்ளாவி வைப்போம். துணிகளில் உள்ள அழுக்குப் போய்விடும். அதே போல, பட்டத்து யானையை வெள்ளாவி காட்டினால், வெள்ளை யானை யாகி விடும். துணிகளைப் போடும் அளவு பானைதான் என்னிடம் உள்ளது. யானை நுழையும் அளவு பெரிய பானை என்னிடம் இல்லை.
""
மட்பாண்டங்கள் செய்வதில் சுப்பு திறமைசாலி. அவனிடம் யானை நுழையும் அளவு பெரிய பானை செய்து தரச் சொல்லுங்கள். பானை கிடைத்த அடுத்த நாளே பட்டத்து யானையை வெள்ளை யானையாக்கித் தருகிறேன்,'' என்றான் குணசீலன்.
சுப்புவைப் பார்த்த அரசர், ""உனக்குப் பதினைந்து நாள் அவகாசம் தருகிறேன். அதற்குள் யானை நுழையும் அளவு பெரிய பானை செய்து தர வேண்டும்,'' என்று கட்டளை இட்டார்.

சுப்பு சொன்ன எந்த சமாதானத்தையும் அரசர் ஏற்றுக் கொள்ளவில்லை.
பதினைந்து நாட்கள் கடினமாக உழைத்த சுப்பு, யானை உள்ளே செல்லும் அளவு பெரிய பானை ஒன்று செய்தான்.

அந்தப் பானைக்குள் யானை அடி எடுத்து வைத்தது. அதன் எடை தாங்காமல் பானை உடைந்து நொறுங்கியது.

இதைப் பார்த்த அரசர், ""சுப்பு! முதன் முறை என்பதால் உன்னை மன்னிக்கிறேன். அடுத்து நீ செய்யும் பானை உறுதியாக இருக்க வேண்டும். யானை உள்ளே சென்றால் உடையக் கூடாது,'' என்று கட்டளை இட்டார்.
அவ்வளவு உறுதியான பானையை யாராலும் செய்ய முடியாது என்பது அவனுக்குப் புரிந்தது.

வீடு வந்த அவன், "பொறாமை கொண்டு குணசீலனுக்கு தீங்கு செய்தேன். அந்தப் பொறாமை என் வாழ்விற்கே உலை வைத்து விட்டதே... என்ன செய்வேன்?' என்று உள்ளம் நொந்து இறந்து போனான்.
 
நன்றி-தினமலர் 

Tuesday, January 6, 2015

அவைகளும் நானும் (சிறுகதை)



தினமும் நான் அலுவலகம் செல்லும் அந்த வழியில் நிறைய நாய்கள் உண்டு.ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த அந்த நாய்களை என்றுமே நான் பெரிதாக  கண்டுகொள்வதில்லை.அதே போல் தான்  அவைகளும் என்னை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை .இந்த உலகத்தில் நம்மைப்போலவே அனைவரும்  இருந்துவிட்டால் என்ன ஆவது? அது நம் ஐந்து விரல்களும் ஒரே அளவாக  இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பதற்குச் சமமானது.அழகாகத்தான் தெரியும்.ஆனால்  பயனற்ற ஒன்று நாம் எதிர்பார்க்கும் இந்த மாறுதல் . அழகான இந்தத் தத்துவத்தை நீங்கள் ஆராயாமல் அனுபவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அதே தெருவில்  நான் அடிக்கடி பார்க்கும் இன்னொருவரைப்பற்றி சொல்லிவிட ஆசைப்படுகிறேன்..

அவர் அடையாளம் சொல்கிறேன்.அந்த தெரு வழியாக ஒருவேளை நீங்கள் நடக்க  நேர்ந்தால், அவரைப் பார்த்து ஒரு வணக்கம் சொல்லிவிட்டுப் போனால் நான்  சந்தோசப்படுவேன்.அவருக்கு வயது சுமார் 50 இருக்கும்.நல்ல உயரம்,ஒல்லியான  தேகம்.சீப்பைப் பார்க்காத நரைத்த தலை,தொள தொள-வென அவரை விட  பெரியதாய் இருக்கும் அழுக்கு அரைக்கைச் சட்டை,அடர் நிறத்தில் கால்  சட்டை,வேகமான நடை அப்புறம் அந்த நாய்களுக்கு அடிக்கடி உணவிடும்  ஒரேமனிதர் அவர்தான்.எனவே,அவர் அந்த வீதியில் நடக்கும் போது நான் சொன்ன  அந்த நாய்கள் கூட்டம் அன்பாக அவரைச் சூழ்ந்துகொள்ளும்.

இன்றுவரை எனக்கு புதிராகத்தான் தெரிகிறார் அந்த மனிதர்.அதே தெருவில் உள்ள  ஒரு பட்டறையில் வேலை செய்கிறார் என்று நினைக்கிறேன்.ஏனெனில், சிலமுறை  தேநீர் நிரம்பிய பைகளுடன் அந்தப் பட்டறையினுள் நுழைவதைப் பார்த்திருக்கிறேன்.  நீண்ட நேரமாக திரும்ப மாட்டார்.ஆக அவர் தேநீர் விற்பவரில்லை அல்லவா. அதை  வைத்துத் தான் அவர் அங்கே வேலை செய்கிறார் என்ற முடிவுக்கு வந்தேன்.மற்றபடி  எங்கே தங்கியிருக்கிறார்..எவ்வளவு சம்பாதிக்கிறார்,அந்த நாய்களுக்கு உணவிட  தினமும் எவ்வளவு செலவு செய்கிறார் என எதுவுமே எனக்குத் தெரியாது.

நள்ளிரவு சுமார் 1 மணி இருக்கும்.நான் அந்த வீதியில் தனியாக  வந்துகொண்டிருந்தேன்.யாரும் என்னைப்பார்த்து பயப்படவேண்டாம்.ஒரு  தமிழ்ப்படத்தின் இரவுக்காட்சி பார்த்துவிட்டு அறைக்குத்  திரும்பிக்கொண்டிருந்தேன்.திரையரங்கிலிருந்து எனது அறை நடக்கும்  தொலைவுதான்.அது ஒரு நீண்ட நெடிய ஆள் அரவமற்ற சாலை.இருமருங்கிலும்  பாதரசவிளக்குகள் ஒளியைப்பாய்ச்சிக்கொண்டிருந்தன.அந்த வீதியில் வீடுகள்  மிகவும் குறைவு.பட்டறைகள் மற்றும் மாலைவரை செயல்படும் சிறுதொழில்  அலுவலங்கள் தான் அதிகம்.இரவுக்குளிர்க்காற்றை முகத்தில் வாங்கிகொண்டு  மெதுவாக நடந்துகொண்டிருந்தேன்.இதோ பாதி வழி தாண்டியாயிற்று.

இதுவரை என்னைக் கண்டுகொள்ளவில்லை என எந்த நாய்களைப் பற்றி மேலே  குறிப்பிட்டேனோ, அதே அழகு நாய்க்குட்டிகள் அன்று என்னை வைத்தகண்  வாங்காமல் பார்த்தன.என்னையும் அறியாமல் முகத்தில் கலவரம்  பரவியது.இருந்தும் மெதுவாய் நடந்தேன்.இன்னுமொரு 2 நிமிடம் நடந்தால்  அறைக்குச் சென்றுவிடலாம்.அப்போது பார்த்து, ஒரு நாய் குரைக்கத்  துவங்கியது.அதைத் தொடர்ந்து அனைத்து நாய்களும் ஒருசேர கூப்பாடு  போட்டன.அந்த திடீர் சத்தத்தில் சப்தநாடிகளும் அடங்கி நிலைகுழந்திருந்த எனக்கு, நாய்கள் நெருங்குவதைப் பார்க்கையில் மேலும் திகில் பரவியது.இதுவரை எந்த நாயிடமும்  கடி வாங்கியதில்லை என்ற பெருமை எனக்கு எப்போதும் உண்டு.இன்றோடு அது தொலைந்தது  என்றே நினைத்துக்கொண்டேன்.

அலைபேசியை எடுத்து, அப்படி நாய்கள் கடித்தால் யாரை அழைத்து தகவல்  சொல்வது என பார்த்துக்கொண்டிருந்தேன்.அவ்வாப்போது ஊய்..போ..என்றெல்லாம்  நாய்களைப்பார்த்து சத்தமிட்டபடி முன்னேறினேன்.ஒன்றிரண்டு நாய்கள்  கால்களுக்குள் புகுந்து வெளியே வந்தவாறு பயமுறுத்தின.அந்த வினாடியில் இதயம் அப்படியே வாய்வரை வந்து விட்டு  உள்ளே செல்வது போலிருந்தது.ஆபத்துதவி ஆண்டவன்  என நான் இந்த நேரம் சொல்ல  வேண்டுமென்றால்,எங்கிருந்தோ வந்த அந்தப் பெண் நாயைச் சொல்வேன். தூரத்தில் ஊளையிட்ட அதனைப் பார்த்தவுடன் இவை என்னை விட்டுவிட்டு அந்தப் பெண் நாயைத் துரத்தத் துவங்கின.அப்பாடா..இப்போது அப்படி ஒரு நிம்மதி என் மனதில். அறைக்கு வேகமாக வந்த நான் , ஒரு குவளை நீரை மூச்சுவிடாமல் குடித்து முடித்தேன்.இயல்புநிலைக்குத் திரும்பி உறங்குவதற்கு சிறிது நேரம் பிடித்தது.

அடுத்தநாள் காலையில் அலுவலகம் கிளம்பும்போது, என் அறைக்கு முன் இருக்கும் மளிகைக்கடையில்  இரண்டு ரொட்டித்துண்டு பொட்டலங்களை வாங்கிகொண்டேன்.என்றும்போல  என்னை அந்த நாய்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், நான் அருகில்  சென்றேன்.இரவு இருந்த பயம் இப்போது இல்லை. மெதுவாக நெருங்கி  ரொட்டித்துண்டுகளை அவைகளிடம் வீசினேன்.ஒரே பாய்ச்சலில் வந்து  ஆர்வமாய் சாப்பிடத்துவங்கின.சிலவினாடிகள் பார்த்துவிட்டு,மகிழ்ச்சியாக அலுவலகம் நோக்கிப்  புறப்பட்டேன்.இந்த மனநிறைவு உணர்வுக்கு,எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்யலாம் எனத் தோன்றியது.சிறிதுதூரம் நடந்த நான், மெல்லத் திரும்பினேன்.அங்கே வாலைக் குழைந்தபடி அந்த  நாய்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தன.


- ராஜ்குமார்