- அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி. ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்கிறவன் மூடன். ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை. தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.
- நிலத்தில் வளரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை. அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.
- மலரைப் பார்; கொடியைப் பார்; வேர் எப்படி இருக்குமென்று பார்க்க முயற்சிக்காதே. அதைப் பார்க்க முயன்றால், நீ மலரையும் கொடியையும் பார்க்க முடியாது.
- ஒவ்வொரு மரணமும் அழுகையோடு முடிந்து விடுகிறது. ஒவ்வொரு அழுகையும் மரணத்தோடு முடிந்து விடுகிறது
- மனிதன் சந்தோஷமாக இருக்கும் பொழுது தனக்கு ஏதாவது துன்பம் வந்து விடுமோ என்ற பயத்திலேயே வாழ்கிறான்.
அந்த நேரத்தில் ஒரு சிறிய பயத்தைக் கொடுத்தாலும் அவன் அதிகமாக பயந்து விடுகிறான்.இதே கவலையான நேரத்தில் அந்தக் கவலையை விட தனக்கு வேறு துன்பம் இல்லை என்று அரட்டுகிறான்.
அறிவுரைகள்
· அதிகம் நல்லவனாக இருக்க.
நினைக்காதே.உன்னை நடிகன் என்று சொல்லிவிடுவார்கள்!
· அதிகம் அன்போடு நடந்து
கொள்ளாதே.அடிமையாக்கி விடுவார்கள்!
· அதிகப் பொறுமையுடன்
நடக்காதே.பொறுக்கியாக மாறும் வரை விடமாட்டார்கள்!
· எல்லாம் வெளிப்படையாக
இருக்க வேண்டும் என நினைக்காதே.பொறாமையால் உன்னை காணாமல் ஆக்கி விடுவார்கள்!
· எல்லோரையும் நம்பி
விடாதே.ஏமாற்றுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்!
· கோபப்படாமலேயே இருந்து
விடாதே.கோமாளியாக்கி விடுவார்கள்!
24 குருமார்கள்
தத்தாத்ரேயர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார் என்பதையும் கேட்டான்.
“எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்…’ என்றார்.
இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், “சுவாமி! ஒரு வருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே…’ என்றான்.
அவனிடம், “பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்…’ என்றார் தத்தாத்ரேயர். மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்…
“மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்; தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன். பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன். எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது; பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.
“ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.
“வேடன் ஒருவன் புறாக்குஞ்சு களைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.
“எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன். பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன். பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.
“எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன். பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.
“பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.
“புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்…’ என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.
இதைக் கேட்ட அரசன், தன் பதவியையே உதறித் தள்ளி விட்டு, ஆன்மிகத்தில் ஈடுபட்டான்.
வாழ்ந்து பாருங்கள்
ஒரு சிறுவன் நடந்து போய்க் கொண்டிருந்த போது சாலையில் நூறு ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தான்.
அன்று முதல் ஏதும் தரையில் கிடக்கிறதா என்று பூமியைப் பார்த்துக் கொண்டே நடந்தான்.
அடுத்த அறுபது வருடங்கள் அப்படியே இருந்தான். அவனுக்குக் கிடைத்தவை 768 ரூபாய், 2 மோதிரங்கள், 3 கொலுசுகள்.
ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900 சூர்யோதயங்கள், 630 வானவில் காட்சிகள்.
ஆயிரக்கணக்கான பூக்கள், பல்லாயிரம் குழந்தைகளின் புன்னகைகள் வாழ்க்கையைத் தொலைத்தவன் மீட்பதற்கு வாய்ப்பே இல்லை.
அதிர்ஷ்டம் காலை இடறினால் மட்டும் குனிந்து பாருங்கள்.
இல்லையென்றால் வாழ்க்கையைப் பாருங்கள், வாழ்ந்து பாருங்கள்!!