Tuesday, December 26, 2017

கன்பூசியஸ் சிந்தனை முத்துக்கள்

**மனிதன் இயற்கையிலேயே நல்லவன்.ஆகவே, தண்டனையோடு அவனை நெருங்குவது முட்டாள்தனம்!

**சிந்தனையில்லாத படிப்பு உபயோகமற்றது.படிப்பில்லாத சிந்தனை ஆபத்தானது.

**தெரிந்ததை தெரியும் என்றும்,தெரியாததை தெரியாது என்றும் உணர்வது தான் அறிவு.

**நேர்மையானது எது எனத் தெரிந்தும்,அதைச் செய்யத் தவறுவது கோழைத்தனம்.

**முடிந்துபோன விஷயத்துக்கு விளக்கம் வேண்டாம்.
முன்னேறிச்செல்லும் விஷயத்துக்கு விளக்கம் வேண்டாம்.
இழைத்துவிட்ட தவறுகள் பற்றி,குற்றங்குறை கூறவேண்டாம்.

**அறிவாளி, யாரை வெறுப்பது,யாரை நேசிப்பது என்பதைத் தெளிவாக அறிவான்.

கல்வி என்பது....

கற்பது எப்போது என்பது,பள்ளியில் சேர்ந்த நாள் அன்று முடிவு செய்யப்படுவது அல்ல.தேவைகள் தோன்றும்போது,கற்பது தானாகத் துவங்கிவிடுகிறது.அப்படியானால்,அதற்கு முடிவு எப்போது என்று மட்டும் கேட்காதீர்கள்.ஏனெனில்,எது முடிவு என்பதைக் கற்றுக்கொள்ளவே முழு ஆயுளும் போதாது.
ஆகவே விரலைப் பார்த்து நேர விரயம் செய்யாமல், நிலவைப் பார்த்து ரசியுங்கள்.கல்வி பற்றி எண்ணாமல்,கற்பதைத் தொடங்குங்கள்.

ஒன்றைத் தெரியவில்லை என்று எப்போது நாம் உணர்கிறோமோ,அதனைக் கற்பதன் தேவை என்ன என்பதை எப்போது புரிந்து கொள்கிறோமோ,அந்த நொடியில்,நீங்கள் கற்க எண்ணியவை கண்முன் தானாகாத் தோன்றும்.அது,
மற்றவர் சொல்லிலிருந்தோ,புத்தகமாகவோ அல்லது காற்றில் பறந்து நம்மை அடையும் காகிதக் குப்பையாகவோ நிச்சயம் நம்மை அடையும்.ஆகவே, கற்கும் வாய்ப்பிற்காக,விழிப்புடன் காத்திருங்கள்.

அனைத்து வாய்ப்புகளும் கதவைத் தட்டுவதில்லை.
கதவைத் தட்டும் அனைத்தும்.இன்றையநாளில்,வாய்ப்புகளாக இருப்பதில்லை!!!

- ராஜ்குமார் (26-12-17)

Wednesday, October 11, 2017

படித்ததில் பிடித்தது

*கேட்டது ஒன்று,!*
   *கிடைத்தது ஒன்று!!* 

ஆண்டவனிடம்,
வலிமை கேட்டேன்!
          கஷ்டங்களை
          கொடுத்தார்!!
எதிர் கொண்டேன்,
வலிமை பெற்றேன்.👍​
                 
அறிவு கேட்டேன்!
        பிரச்சினைகளை
        கொடுத்தார்!! 
சமாளித்தேன்                             
அறிவு பெற்றேன்.👍​

தைரியம் கேட்டேன் !
         ஆபத்துக்களை     
         கொடுத்தார் !!
சந்தித்து மீண்டேன்  ,
தைரியம் பெற்றேன். 👍

அன்பு கேட்டேன் ! 
         வம்பர்களை   
         கொடுத்தார்
அனுசரித்து சென்று
வம்பர்களின் அன்பையும் பெற்றேன். 👍​ 

வளமான வாழ்வு கேட்டேன்!    
       சிந்திக்கும் மூளையை
       கொடுத்தார்.
வளமான வாழ்வு கிடைத்தது.👍​

*கேட்டது ஒன்று,!*
         *கிடைத்தது ஒன்று!!*

*கிடைத்ததை வைத்து*
         *கேட்டதைப் பெற்றேன்*.👍​

*படித்ததில் பிடித்த ஒன்று..👆​*

Tuesday, August 15, 2017

வறுமையின் சுவடுகள்

என்சிறு வயதினில்
எண்ணற்ற கனவுகள்..
ஏங்கியன யாதென்று
எண்ணிப் பார்த்தால்
பனையோலைக் கடிகாரம்
பளபளக்கும் பாலீஷ் மணிகள்
வண்ணப் பலூன்கள்
வாய்ருசிக்கப் பணியாரம்!
கேட்டிருந்தால் ஒருவேளை
கிடைத்திருக்குமோ என்னமோ?
கேட்க நினைத்ததில்லை!
வறுமையின் அரங்கேற்றம்..
ஊமையானேன் நான்..
                  ** ** **
சிறுஊசி நூல்கோர்த்து
சேலைக்கிழிசல்களை
சிரித்தபடி தைத்திடுவாள் அம்மா..
ஒருமுனையை நான் பிடிக்க,
அவள் சொல்லும் கதைகேட்டு
உள்ளம் மகிழ்ந்திருந்தேன்!
வறுமையில் யாம் இருந்தோம்
என்ற நினைப்பையும் மறந்துவிட்டு...
                   ** ** **

மழைத்துளிகள்

நீர் காணா உயிர் அது மழையைக் கண்டு வியக்கும் நொடியில் ஒரு கவிதை....
________
*மழைத்துளிகள்..*

விண்ணின்று வழியும்
தண்ணீர் உதிரம்!
மேகச் சிப்பிகள்
சிந்தும் முத்துக்கள்!

மின்னல் பூக்களில்
சுரக்கும் தேன்துளிகள்!
இடிகள் பெயர்தெடுக்கும்
சுரங்கத்தின் வைரங்கள்!

மனதில் இன்பத்தைக் கருக்கொள்ள வைக்கும் மகரந்தத் துளிகள்!
தமிழ்சோலை பதுக்கி வைக்கும்
கவிதைப் பூத்தூவல்!

- ராஜ்குமார்

Wednesday, July 26, 2017

மயங்கும் மலர்களே..


மாலை மயங்கும் நேரம் மலர்ந்த மலர்களே...!
நீங்கள் எப்போதாவது
காதல் கொண்டதுண்டா?

மைவிழியின் வீச்சில் மையல் கொண்டு,
மஞ்சள் முகம்கண்டு மதி மயங்கி,
செம்மீன் உதட்டு வரிகளில் சிக்குண்டு,
சங்கு கழுத்தில் மனம் நழுவி,
அவள் சிந்தும் அழகுப் புன்னகைக்கு காத்திருந்து,
விழிகள் திறந்தபடி கனவுகள் கண்டதுண்டா?

காதலித்துப் பாருங்கள்...!

உங்கள் மகரந்தச் சேர்க்கையில்
புது உயிரோட்டம் காண்பீர்கள்!

தென்றல் காற்றில் அழகு நடனம் புரிவீர்கள்...!