Friday, March 23, 2012

பொழுது விடிகிறது!

எந்த ஒரு நாளும் துவங்கும் போது, பல திருப்பங்கள் நிறைந்த நாவல் ஒன்றை படிக்கத் தொடங்கும் போது இருக்கும் ஆர்வம் நமக்கு இருக்கத்தான் செய்கிறது! அந்த நாள் முடியும் போது,நாம் இந்த எதிபார்ப்புகள் நடந்தேறினவா என்பதில் அதிகம் அக்கறை காட்டாமலேயே அடுத்தநாள் பற்றிய கனவுக்குள் மூழ்குகிறோம்! மற்றவர்கள் எப்படியோ தெரியாது, நான் இப்படித்தான்!

இன்று காலை 5:30 மணி! "சஷ்டியை நோக்க சரவணபவண..",அலைபேசி என்னை எழுப்பிவிட பாடத்துவங்கியது! விழித்துப் பார்த்தேன்.
அறையில் இன்னும் இருட்டு விலகவில்லை.மீண்டும் தூங்கலாமா? என்ற எண்ணம் மெல்ல தலைதூக்கியபோது நான் சுயநினைவு வந்தவனாய்,அறையிலிருந்து மொட்டை மாடிக்குச் சென்றேன்.
கோடைகாலம் என்பதாலோ என்னமோ ,அதிகாலையிலேயே கதிரவன் கீற்றுகள் லேசாக வானில் பரவத்துவங்கியதைக் காணமுடிந்தது! அவ்வளவு அவசரம் ஏன்
என தெரியவில்லை.வானம் முழுக்க கருப்பு நிழலாய், கூட்டம் கூட்டமாக பல பறவைகள் பாடிச் சென்றன.மொழி புரியவில்லை.ஆனாலும் இனிமை!

காலைத்தென்றல் முகத்தை வருடியது! இனிமையில் கண்களை மூடினேன்.இன்று வெள்ளிக்கிழமை.ஒரு வாரம் கழித்து சொந்த ஊர் செல்லப்போகிறேன்.வீட்டுக்குப் போய் என்ன செய்யலாம்? மூடிய கண்களுக்குள் எத்தனையோ திட்டங்கள் காட்சியாய் ஓடின.தோழி திருமணம்,நண்பனுடன் ஊர் சுற்றுதல்,சொந்தங்கள் சந்திப்பு என நிறைய.இப்படித்தான் ஒவ்வொரு வாரமும், இதே மொட்டைமாடியில், என் மனதுக்கு சத்தியம் செய்து கொடுக்கின்ற
பல திட்டங்கள், நான் ஊரை அடைந்த பின் என்னை ஏற்றிவந்த பேருந்துடனேயே சென்றுவிடுகின்றன.என்னை நினைத்து சிரித்துக் கொண்டேன்.

மணி 6:30. நான் தங்கியிருக்கும் வீட்டை ஒட்டி படுகையாய் விரிந்த மண்சாலையில் நடக்கத்துவங்கினேன்.புழுதி மண் படிந்த,சிறு கற்கள் நமது காலணிகளோடு சண்டைப்போடும் ஒரு நவீன மண் சாலை அது.தினமும் நடப்பதால் சிரமம் தெரியவில்லை.
இரு மருங்கிலும் எதிர்கால வீடுகளுக்கான முதலாளிகள் கம்பிவேலி போட்டு நிலத்தை பாதுகாத்து வைத்திருந்தனர்.
சில நிமிட நடைக்குப் பின், "மணி தேநீர் விடுதி"யை அடைந்தேன்.ஊதுபத்திப் புகையுடன்,அடுப்பின் புகையும் சூழ திருநீற்றுப் பட்டையுடன்
கடைக்காரர் காட்சியளித்தார்.


வானொலியில்,பக்திப் பாடல் வேறு உச்சகட்டமாய் ஒலித்துக்கொண்டிருந்தது.கடைக்கு
வெளியே மரப்பலகை இருக்கையில் நான்குபேர் கையில் நாளிதழுடன்,ஊர் விவகாரங்களைப் பற்றி மும்முரமாய் பேசிக்கொண்டிருந்தனர்.அங்கு அமர இடம் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தபின்,அவர்களுக்கு எதிரே இருந்த சுவற்றில் சாய்ந்தபடி கடைக்காரரிடம் சொன்னேன்,"அண்ணா! ஒரு காப்பி!".பாடல் சத்தத்தில் என் சத்தம் முழுதாய் கேட்கவில்லையோ என்னமோ. என் முகத்தைப் பார்த்தபடி சைகையில் "காப்பியா?" என அவர்கேட்க, "ஆமாம்!" என இருமுறைதலையசைத்து உறுதிப்படுத்தினேன்.

அந்த வீண் அரட்டைக் குழுவின் வாக்குவாதங்கள் காதுக்குள் நுழைவதை தடுக்க முடியவில்லை."ஏன்டா மாரி பையா! நேத்தைக்கு உன் சித்தப்பா பையனை நாய் கடிச்சுடுச்சாமா?",அவர் பதிலுக்கு,"ஆமா மாமா,வெறிநாயாமா..ராத்திரி கரண்டு வேற இல்லை.ரோட்டோரம் படுத்துக்கிடந்த நாயை மிதிச்சுட்டான் போல, கால்ல ஒரு கடி போட்டுடுச்சு!அப்பவே ஆஸ்பத்திரி கொண்டு போய்ட்டோம்! இன்னும் அங்க தான் இருக்கான்.நல்லா விடிஞ்ச பொறவு சாப்பாடு கட்டிப் போகனும்!",என மாரி முடித்தார்.
கேள்விகேட்டவர் சரி சரி என் தலையாட்டி உரையை முடித்துக் கொண்டார்.இது போல, கண்ணால் கண்ட சாலை விபத்து,எதிர் வீட்டு அடிதடி,அரசியல்,இடையில் கொஞ்சம் ரகசியமாய் காதுகடித்து சில உரையாடல்கள் என சுவாரசியம் குறையாமல் பேசிக்கொண்டிருந்தனர்.
கையில் வாங்கிய காப்பி இந்த இடைவெளியில் குடிக்கப்பட்டிருந்தது.இன்னும் எவ்வளவு நேரமாகுமோ தெரியவில்லை இந்த உரையாடல் முடிவதற்கு!

சில்லரை 2ரூ மிச்சம் இருக்க,கடைக்காரர் எனக்கு பிடிக்காத அந்த கார மிட்டாய் கொடுக்கப் பார்த்தார்.நான் வேண்டாம் என சொல்லி, ஒரு ஊதுபத்தி பெட்டி வாங்கிக் கொண்டேன்.அந்தக் கடையில் புகைந்த அதே ரக பத்தி தான்.அந்த சின்ன அட்டைப்பெட்டிமேல் அச்சிடப்பட்டிருந்த மல்லிகை பூ படம் அழகாக இருந்தது! முகர்ந்து பார்த்தபடி அறையை நோக்கி
நடக்கத்துவங்கினேன்.சூரியன் முழு வீச்சில் கதிர்களை பரப்பிக்கொண்டிருக்க, இளவெப்பம் லேசாக முகத்தை வருடத் தொடங்கியது!
 

- தொடரும்

Friday, March 9, 2012

பெண்ணே நீ!!


 உலக மகளிர் தின சிறப்பு கவிதை!


ளவில்லா அன்பினை அளித்தாய்!

றுதலை உயிர் வாழ்வினில் நிறைத்தாய்!

தழ் தரும் புன்னகையால் இனிமை தந்தாய்!

ன்றெடுத்த அன்னையாய் பேருவகை கொண்டாய்!

ள்ளம் தெளிவுபெற உபதேசம் செய்தாய்!

க்கம்தனை கொடுத்து உற்சாகம் தந்தாய்!

ண்ணிய எண்ணங்களுக்கு நல்வண்ணம் தந்தாய்!

ராளக் கவிகளுக்கு எழில்வடிவம் கொடுத்தாய்!

யம் சிறிதுமில்லை பெண்ணே, உன் பெருமையில் இன்றும் எனக்கு!

ப்பற்ற உலகத்தில் ஒற்றுமை வளர்த்து,
யாத அமைதியெனும் ஆனந்தத்தை அள்ளி வழங்க,
டத பெட்டகமாய் இந்த புவியினில் வாழ்கிறாய்!-பெண்
என்ற பெயரினைத் தாங்கி!

-கவிஞர் பானு அவர்களின் படைப்பிலிருந்து!