நான் அதிகம் செவிவழியே கேட்டு ரசித்த சில கவிதைகளில், அம்மாவுக்காக கவிப்பேரரசு
வைரமுத்து அவர்கள்எழுதிய இந்தக் கவிதை மிக முக்கியமானது. வாழ்வில் நடந்த உண்மையை தமிழால், அழுத்தம் மாறாது கொடுத்த கவிஞரின் திறனை பலமுறை எண்ணி
வியந்தவன் நான். இதோ அந்தக் கவிதை உங்களுக்காக!
முதன்முதலாய் அம்மாவுக்கு!
ஆயிரந்தா கவி சொன்னேன்.அழகழகா பொய் சொன்னேன்!
பெத்தவளே உன் பெரும, ஒத்தவரி சொல்லலையே!
காத்தெல்லாம் மகன் பாட்டு, காகிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு! உங்கீர்த்தி எழுதலையே?
எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பத்தி
எழுதியென்ன இலாபமுன்னு எழுதாம போனேனோ?
பொன்னையா தேவன்பெத்த பொன்னே,குலமகளே!
என்னைப் புறந்தள்ள இடுப்புவலி பொறுத்தவளே!
வைரமுத்து பிறப்பான்னு வயித்தில் நீ சுமந்ததில்ல.
வயித்தில் நீ சுமந்த ஒன்னு வைரமுத்து ஆயிடுச்சு!
கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,
இடப்பக்கங் கிடக்கையில என்னென்ன நினச்சிருப்ப?
கத்தி எடுப்பவனோ? களவானப் பிறந்தவனோ? தரணியாள
வந்திருக்கும் தாசில்தார் இவந்தானோ?
இந்த விவரங்க ஏதொன்னும் தெரியாம, நெஞ்சூட்டி வளத்த உன்ன,
நெனச்சா அழுகை வரும்!
கதகதன்னு களி கிண்டி, களிக்குள்ள குழி வெட்டி,
கருப்பட்டி நல்லெண்ண கலந்து தருவாயே!
தொண்டையில அது இறங்கும் சுகமான இளஞ்சூடு,
மண்டையில இன்னும் மசமசன்னு நிக்குதம்மா!
கொத்தமல்லி வறுத்து வச்சு, குறுமொளகா ரெண்டு வச்சு,
சீரகமும்,சிறுமிளகும் சேர்த்துவச்சு நீர்தெளிச்சு,
கும்மி அரச்சு நீ கொழகொழன்னு வளிக்கையில,
அம்மி மணக்கும்! அடுத்ததெரு மணமணக்கும்!
தித்திக்க சமைச்சாலும்,
திட்டிகிட்டே சமைச்சாலும்,
கத்திரிக்கா நெய் வடியும்!
கருவாடு தேனொழுகும்!
கோழிக்குழம்பு மேல,
குட்டி குட்டியா மிதக்கும், தேங்காய்ச் சில்லுக்கு,
தேகமெல்லாம் எச்சில் ஊறும்!
வறுமையில நாமபட்ட வலிதாங்க மாட்டாம,
பேனா எடுத்தேன்! பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!
பாசமுள்ள வேளையிலே,
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேளையிலே,பாசம் வந்து சேரலையே!
கல்யாணம் நான் செஞ்சு கதியத்து நிக்கையில,
பெத்த அப்பன் சென்னை வந்து சொத்தெழுதி போன பின்னே,
அஞ்சாறு வருசம் உன் ஆசமுகம் பார்க்காம,
பிள்ளை மனம் பித்தாச்சே! பெத்த மனம் கல்லாச்சே!
படிப்பு படிச்சுகிட்டே பணம் அனுப்பி வச்ச மகன்,
கைவிட மாட்டான்னு கடைசியில நம்பலையே!
பாசம்,கண்ணீர்,பழையகதை எல்லாமே,
வெறிச்சோடிப்போன வேதாந்தம் ஆயிடுச்சே!
வைகையில ஊர் முழுக, வல்லூறும் சேர்ந்தழுக,
கைப்பிடியாய்க் கூட்டிவந்து கரைசேர்த்து விட்டவளே!
எனக்கொன்னு ஆனதுன்னா,உனக்கு வேறு பிள்ளை உண்டு!
உனக்கேதும் ஆனதுன்னா, எனக்கு வேற தாய் இருக்கா?
- 'கவிப்பேரரசு'
வைரமுத்து