Wednesday, April 11, 2012

நான் ரசித்த கவிதைகள்! - 2

உயிரின் மதிப்பை மட்டுமல்ல,வாழ்வின் முடிவும் ஆரம்பமும் நம் கையில் இல்லை என்ற தத்துவத்தையும் உணர்த்துகிறது இந்தக் கவிதை.இந்த வரிகளை படித்தபிறகு நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் மனம் ரசிக்கப் பழகுவதை அனைவரும் உணரலாம்!

                                        வாழ்வை ரசிக்கப் பழகுங்கள்!!

                                                                                         - தோழியின் வரிகள்
 
பத்து மாதம் பத்திரமாய் இருந்து,
பெற்றவளை விட்டு பூமிக்கு வந்தோம்!
வாழ்க்கைப் பயணத்தில்,
இறங்(க்)கும் நேரம் தெரியாமலே!


வாழ்க்கைத் தேடலில்,
வழியில் அறிமுகமாகும்,
பலரிடமிருந்தும் கேட்கும் ஓர் வாசகம், "என்ன வாழ்க்கையடா இது?"

இன்ப துன்பம் நிறைந்தது தான் இவ்வுலக வாழ்க்கை!

இலையுதிர் காலத்தை ஏற்கும் சோலைகள், அதை இழப்பாக நினைப்பதில்லை!
வசந்த காலம் வந்த போதும், அதை வரவேற்க மறப்பதில்லை!

நம் வாழ்வின் மேன்மை,தெரிய வேண்டுமா?
வாழ்வின் அர்த்தம் அறிய வேண்டுமா?

 கேட்டுப் பாருங்கள்!

விளக்கை நோக்கிச் சென்று,
வினாடிப் பொழுதில் உயிர் தப்பிய
விட்டில் பூச்சிகளை!

வேடன் தானெறிந்த அம்பினிலே
தப்பிப் பிழைத்த தத்தைகளை!

"பூர்வ ஜென்மத்து புண்ணியமோ?
இறைவனின் இரக்கமோ? தப்பிப் பிழைத்தது"
என்று அவர்கள் சொன்னது, காற்றினிலே கலந்து,என் காதுகளை அடைந்தது!

உங்கள் இறுதி ஆக்ஸிஜனை,
 நீங்கள் சுவாசிக்கும் வரையிலும் ரசியுங்கள்!

பகலவனைக் கண்டதும்
பட்டென மறையும்
பனித்துளியை!

கணநேரப் பொழுதாயினும்,
காண்போரைக் கவரும்,
கதிரவனின் நிறப்பிரிகையாம் வானவில்லை!

ஆலமரத்து கிளைகளில்,
அங்குமிங்கும் ஓடித்திரியும்
அணில்களை!

பார்ப்போரை பரவசப்படுத்தும்
பச்சிளங்குழந்தைகளின்
பவளச் சிரிப்பை!

சட சடவென்று
பெய்யும் மழையில்,
ஜன்னலோரப் பேருந்து பயணத்தை!

இன்னும்,
ஏராளமாய்
உங்களுக்குப் பிடித்தவற்றை,
மிகவும் பிடித்தவற்றை ரசிக்கப் பழகுங்கள்!



நமக்கு வயதானாலும்,
அவற்றிற்கு "என்றும் இளமை" தான்!

அன்பென்ற வார்த்தை தவிர
அவளேதும் அறியா
அருமை அன்னையை!

கண்டிப்புடன்
கடும் உழைப்பையும்
நமக்காகத் தரும் தந்தையை!

நம் மௌனத்தின் அர்த்தம் கூட,
அழகாய்ப் புரிந்து கொள்ளும்
அன்பான நண்பர்களை!

செல்லமாய்த் சண்டையிடும்
சகோதர உறவுகளை!

போட்டியிடும் பகைவனை!

இவர்களுக்கெல்லாம் மேலாக,
இவ்வுலகில் வேறு யாராலும் நேசிக்க முடியாதபடி, "உங்களை" மிகவும் நேசியுங்கள்!

வாழ்வின் மதிப்பு தானாய்த் தெரியும்!

நாளை உலகைக் காண,
நடைபோடுவோம்,"நம்மால் முடியும்" என்ற நம்பிக்கையோடு!
                                                                     
                                                                                                            

1 comment:

  1. நன்னம்பிக்கை கவிதை இயற்கை எழிலுடன்

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்