Tuesday, September 25, 2012

படித்ததில் பிடித்தது 3 -யார் மிருகம் - குட்டிக்கதை!!


பொழுது விடியப்போகும் சமயம், முன் இரவில் தங்களுக்காக இரை தேடச் சென்ற தாய்ப்புலியை எதிர்பார்த்து இரு குட்டிப் புலிகள்
காத்திருந்தன. 


முன் கால்கள் இரண்டையும் நீட்டிச்  சோம்பல் முறித்துக் கொண்டே, இவ்வளவு நேரமாகியும் அம்மாவைக் காணோமே? என்றது ஒரு புலிக்குட்டி.

இன்னும் ஒன்றும் கிடைக்கவில்லையோ என்னமோ?
என்றது இன்னொரு புலிக்குட்டி, நாக்கைச் சப்புக்
கொட்டிக் கொண்டே.
எனக்குப் பசி காதை அடைக்கிறது.

எனக்கும்தான் பசி வயிற்றைக் கிள்ளுகிறது!

எதற்கும் நாம் கொஞ்ச தூரம் சென்று அம்மாவைத் தேடிப்
பார்ப்போமா?

வேண்டாம், வேண்டாம். நான் வரும்வரை நீங்கள்
குகையைவிட்டு வெளியே வரக்கூடாது என்று அம்மா சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள்!

கடைசிவரை அம்மா வராமலே இருந்து விட்டால்.....?
என்னை நீயும் உன்னை நானும் சாப்பிட்டு விடுவதா என்ன? –

பேசாமல் இரு;
அப்படி வராவிட்டால் அப்புறம் பார்த்துக் கொள்வோம்!
என்று அவற்றில் ஒன்று எரிந்து விழுந்தது.

இன்னொன்று,அதுவரை பசியோடு இங்கேயே கிடந்து தவிக்க
வேண்டுமாக்கும்! என்று அலுத்துக் கொண்டே, தன் கால்
விரல்களில் ஒன்றை லேசாகக் கடித்து, அதில்
கசிந்து வந்த ரத்தத்தை நக்கி ருசி பார்த்தது.

அதற்குள் அவற்றின் அம்மா சற்றுத் தூரத்தில்
உறுமிக்கொண்டு வரும் சத்தம் கேட்கவே,
இரண்டு குட்டிகளும் ஏக காலத்தில் துள்ளிக்
குதித்து அதை வரவேற்கத் தயாராயின.
தாய்ப்புலி தங்களை நெருங்கியதுதான் தாமதம்
குட்டிப் புலிகள் இரண்டும் ஏமாற்றம் அடைந்தன.
ஏனெனில், அவை எதிர்பார்த்ததுபோல் அம்மாவின் வாயில்
எந்தவிதமான இரையும் இல்லை.

ஏன் அம்மா, ஒன்றும் கிடைக்கவில்லையா?

கிடைத்தது; அதற்குள் இன்னொரு புலி வந்து.....

என்ன கிடைத்தது?

ஒரு கொழுத்த காட்டுப் பன்றி.
தன்பாட்டுக்கு அது ஒரு மரத்தடியில்
உதிர்ந்து கிடந்த பழங்களைப் பொறுக்கித்
தின்று கொண்டிருந்தது. நான் அதன்மேல் பாயத்
தயாராவதற்குள் இன்னொரு புலி வந்து அதைக்
கவ்விக்கொண்டு போய்விட்டது.

அதை நீ சும்மாவா விட்டாய்?

சும்மா விடாமல் என்ன செய்வதாம்?

நீ அதை ஏன் அடித்துக் கொன்றிருக்கக் கூடாது?

சீசீ, நாம்கூட மனிதர்களா என்ன? _தன் இனத்தைத்
தானே அடித்துக் கொல்ல? - நாம் மிருகங்கள் -
அப்படியிருக்கும்போது நமக்கு நாமே எதிரிகளாக
முடியுமா? - அந்தப் பன்றி போனால் இன்னொரு பன்றி!
என்று சொல்லிக்கொண்டே, தாய்ப்புலி மீண்டும் இரை தேடச்
சென்றது.
 
குட்டிப் புலிகள் இரண்டும் தங்கள் பசியை மறந்து,
நாம் மிருகங்கள்: மனிதர்களைவிட உயர்ந்த மிருகங்கள்!
என்று கும்மாளம் கொட்டின.
 
 நன்றி :தமிழ் வளர்ப்போம் !

Thursday, September 20, 2012

படித்ததில் பிடித்தது 2 -நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்.

ஒருநாள் அலுவலகம் போய் வேலை செய்து பார்.சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.

அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு,வீட்டுப் பாடங்கள்
சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.



அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.
என எதிர் சவால்விட்டாள்.கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்.

அவன் வீட்டில் இருக்க, இவள் அலுவலகம் போனாள்.ஒரே குப்பை, கூளமாக கிடந்தது அலுவலகம்.முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்
கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்.வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள்.கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்.

மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது,ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல,பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்.கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு,மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்.

பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே.இலையில் வைத்த 'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும் என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்.முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.அவள் சாப்பிட்டதை விட,
பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்.

ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்.
இவளை பார்த்ததும்,பிள்ளையா பெத்து வச்சிருக்க.?அத்தனையும்
குரங்குகள்.சொல்றதை கேட்க மாட்டேங்குது.படின்னா படிக்க மாட்டேங்குது.சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது.அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன்.பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே என்று பாய,அவளோ,அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா?? என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்.

உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள்.விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன்,‘ஏங்க.இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க?இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற,ஓஹோ ,அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க,அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது.

இல்லாள் என்றும் ,மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம்
தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை.இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் ஒரு பெண்ணின் பங்கு தலையாயது.

அதுபோல,பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது.
ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் இது ஆணுக்கு,
இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க
இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது.

இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால்
கணவன்மீது மனைவியோ,மனைவிமீது கணவனோ ஆதிக்கம்
செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருந்தால்தான்
எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்.
மக்கள் இதை உணர்ந்து வாழவேண்டும்.


Monday, September 17, 2012

எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா?

"பகுத்தறிவு பகலவன்" ஈ.வெ.ரா பெரியார்(செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) அவர்களின் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை - எழுத்து ராஜ்குமார்



கடவுளை ஏற்றுக்கொள்வதற்கு முன் எவ்வளவு பேர் யோசிக்கிறார்கள்? எனக்குத் தெரிந்து ஒருவரும் துவக்கத்தில் கடவுளைப் புரிந்து பின்னர் ஏற்றுக்கொள்ளவில்லை.அவர்கள் பின்னாளில் புரிந்து கொள்கிறார்கள் என்று சொல்வதே பொருந்தும்.அதுவும் கொஞ்சமாகத் தான்.அப்படி முழுதும் நம்பினால் மருத்துவமனை பதிவேட்டில் அவர் பெயர் இருக்காது.மனதினுள் பொறாமை,கோபம் எதுவுமே இருக்காது.

இந்தக் காலத்தில் அப்படி இருக்கும் மகான்களைக் கூட பார்க்க முடியவில்லை என்பது கசப்பான உண்மை.இன்று உலவும் சாமியார்களில் பலர் பணத்தின் மேலும்,சிலர் மதன மோகத்தின் மீதும் பற்றை அறுக்காமல் இருக்கிறார்கள்.புத்தகத்தில் படித்த சிறுவயதுக் கதைகளால், தமக்கு ஒரு குரு வேண்டும் என பலரும் சிஷ்யர்களாகி சொத்துக்களை இழந்துகொண்டிருக்கிறார்கள் தங்களை அறியாமல்.உலகத்தில் காணப்படும் வறுமை,பசி,பஞ்சம் இவற்றைவிட மக்களைப் போலி பக்திமார்க்கத்திலிருந்து வெளியேற்றவாவது கடவுள் வரவேண்டும்..



கடவுளைப் போற்றித் துதிக்கும் மக்களைப் பாருங்கள்.அவர்கள் முகத்தில் ஆன்ம நிம்மதி ஒளி தெரிகிறது.பெரும்பாலானவர்கள் வயோதிகர்கள்.குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, பெற்ற பிள்ளைகளை,சமுதாயத்தை நம்புகிற மனநிலை அவர்களுக்கு இருப்பதில்லை.சுற்றி இருப்பவர்களை ஒரு சந்தேகத்துடன்,அச்சத்துடன் தான் அணுகுவார்கள்.அவர்கள் நம்புகிற ஒரே ஆள் நம் கடவுள்.உள்ளம் உருகி நினைக்கிறார்கள்.பேரானந்தம் அடைகிறார்கள்.இது ஒருவகை தியானம் தான்.

சிறுவயது முதலே நமக்கும் கூட ஒரு நம்பகமான துணையாக அவர் இருக்கிறார்.தேர்வுக்கு முன்னால் தேர்ச்சி அடையவேண்டும் என்று துவங்கி, கார் வேண்டும்,டிவி வேண்டும்,குடும்பப் பயணம் நன்றாக இருக்கவேண்டும்,இருட்டில் போகும்போது பேய்,பிசாசு தொடராமல் இருக்கவேண்டும் என கடவுளிடம் நமது வேண்டுதல் நீள்கிறது.அதேநேரம், தனக்கு நடக்கும் தடைகளுக்கும்,இழப்புகளுக்கும் காரணகர்த்தாவாக நினைத்து, திட்டித்தீர்ப்பதுவும் கடவுளைத்தான்.துதிக்கும் அதேவாய் தீயவார்த்தைகளைக் கொட்டுகிறது.கடவுளை நினைத்து நினைத்து குளிந்த மனம், கோபத்தீயால் கொதிக்கிறது.அதுவும் சிலநாட்கள் தான்.கடவுளை மறந்து,திட்டித்தீர்க்கும் காலத்தில் மனிதர்களின் சுய உருவம் வதைக்கும்போது தானாய் நாம் சரணடையும் ஒருவர் கடவுளாகத்தான் இருக்கிறார்.வேடிக்கையாக அல்லவா இருக்கிறது!!

கடவுள் இருக்கிறார் என்ற கூற்று உண்மை என வைத்துக் கொள்வோம்.பெருமக்கள் சொன்னதுபோல் அவரே உலகைப் படைத்தார்.புல்,பூண்டு முதலான அனைத்து உயிர்களையும் படைத்தார் என்பதையும் நினைவில் கொள்க.மதம் பற்றி வாகுவாதம் இப்போது வேண்டாம்.நம்மைப் பொறுத்தவரை, அவர் கடவுள்.அவ்வளவுதான்.

கடவுள் ஒரு படைப்பாளி.குயவன் பானை செய்வதைப்போல,சிற்பி சிற்ப உருவத்தைச் செதுக்குவது போல அவரும் நம்மைப் படைத்திருக்கிறார்.அவர் படைப்பில் ஒரு அதிசயம், தனது படைப்புகளில் சிலவற்றை உயிர்கொடுத்து உலவ விட்டிருக்கிறார்.

ஆக,இப்போது அவர் ஒரு தந்தை ஸ்தானத்தை அடைகிறார்.அன்பாய் வளர்க்கிறார்.அனைத்து உயிர்களும் சகோதரத்துவத்தை மனதில் வைத்து, ஒருவொருக்கொருவர் உதவியாக இருக்கின்றன.தாவரங்கள் ஒளி,நீர் ஆகிவற்றைப் பெற்று உணவுதயாரிக்கின்றன.அவற்றை மனிதன் உட்பட சில படைப்புகள் உண்டு வளர்கின்றன.சில விலங்குகள் கொடுக்கும் பயன்பொருட்கள் தாவர வளர்ச்சி மற்றும் பிற விலங்குகள் வாழ்வதற்கும் உதவுகின்றன. இப்படியாக ஒற்றுமையாய் வாழும் தனது குழந்தைகளை அன்போடு தந்தையாய் இருந்து கவனிக்கிறார்.
சந்ததிப்பெருக்கம் அடைந்தபின், பேரக்குழந்தைகளைப் பார்த்து பேரானந்தம் அடைகிறார்.அவர்களுக்கும் வேறுபாடுகாட்டாமல், அன்பைப் பொழிகிறார்.

இப்போது அவரை ஒரு படைப்பாளி என்ற பார்வையில் நோக்குவோம்.புதிய தலைமுறைகளைப் படைத்தவர் அவரே.ஆக, புதியனவற்றை வாழ்விக்க, பழைய படைப்புகளை அழிக்கவேண்டி இருக்கிறது.அது மட்டுமில்லாமல், எதிர்கால சிக்கல்களைத் தவிர்க்கவும் அப்படி கருணைக் கொலை செய்கிறார் அந்தப் படைப்பாளி.
ஒரு வீடு கட்ட நினைக்கிறோம்.அந்த வீடு கட்டும் இடத்தில், பல ஆண்டுகள் நாம் செல்லமாய் வளர்த்த மரம் ஒன்று செழித்து வளந்திருக்கிறது.வீடு முழுமையடையவேண்டும் என்றால், அந்த மரத்தை அகற்றவேண்டும் என்ற நிலை. நாம் என்ன செய்வோம்.வீடு என்ற புதுமை பிறக்க,மரம் என்ற பழமையை வருத்தத்தோடு வெட்டி விடுகிறோம்.கடவுளும் இதைத்தான் செய்கிறார்.

நெருங்கியவர் இறப்புக்குப் பின் நாம் கடவுளைத் திட்டுவது போலவே, அந்த மரத்தின் உறவுகளும் நம்மைத் திட்டுகின்றன என்று எண்ணிப் பார்க்கவேண்டும்.இதில் பாவம் என்று எதுவும் இல்லை.அதுபோல வருத்தம் என்பது இல்லாமல்போவதில்லை.
எப்படி ஒரு சிற்பி தான் உருவாக்கிய சிற்பத்தைச் சிதைக்க எப்படி முழு உரிமை இருக்கிறதோ,அது போல படைத்த கடவுளுக்கும், தான் படைத்தவற்றை அழிக்கும் உரிமை இருக்கிறது.இதில் கோபம் கொள்வதில் அர்த்தம் இல்லை.சண்டைப் போடுவதற்கும் நமக்கு உரிமை இல்லை.மனிதர்கள் சிலவருட எதிகாலத் திட்டங்களை நிகழ்காலத்தில் வகுக்கிறார்கள்.இடையில் மரணம் சம்பவிக்கிறது.அத்தனைத் திட்டங்களும் மனிதனோடு சேர்த்து அழிக்கப்படுகின்றன.ஆக,இறந்தவருக்காகவோ,அவரின் கனவுகளுக்காகவோ பிறர் அழுது அரற்றுவதில் பயன் ஏதும் விளையப் போவதில்லை.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் உறவினால் பிணைக்கப் பட்டிருந்தாலும், அவர்களின் வாழ்வும்,மரணமும் தனிமனிதனைப் பொறுத்தே அமைகிறது என்பதை மனதில் நிறுத்தவேண்டும்.

இறுதியாய், நீங்கள் கடவுளை நம்பினால்,உலகமும் உயிர்களும் அவர் படைப்பென்று நம்பினால், நாம் வாழும் இந்த வாழ்க்கை நிரந்தரமில்லை,கடவுள் கொடுப்பவற்றுக்கும்,எடுப்பவற்றுக்கும் வருத்தமோ,ஆனந்தமோ படுவது மாயை என்பதையும் உணர்ந்துவாழ வேண்டும்.படைத்தவனின் அடுத்தசெயல் நமக்குத் தெரிவதில்லை.ஆக, பயந்துவாழவேண்டும்.உணர்ந்துவாழ வேண்டும்.

நீங்கள், கடவுள் இல்லை என்று நினைத்தால், அறிவியலை நம்புங்கள்.இயற்கையை நம்புங்கள்.சக மனிதனை சகோதரனாய் எண்ணுங்கள்.அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்யுங்கள்.நீங்கள் கடவுளை நம்புவர்களுக்கு உபதேசம் செய்யும் நேரத்தில், இயலாத பலருக்கு உதவி வாழுங்கள்.உலக வாழ்க்கையின் இன்பத்தை உணரலாம்.இறுதிநாளில் சிரித்தபடி இறக்கலாம்.

எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா..நீங்களே சொல்லுங்கள்!

அன்புடன் ராஜ்குமார்.

Wednesday, September 12, 2012

படித்ததில் பிடித்தது 1-அந்த வாசகம்! (சிறுகதை)


அ.யாழினி அன்புமணி, ஈரோடு (சுட்டி விகடன்)

அன்று காலை சூரிய வெளிச்சம் தட்டி எழுப்ப, உலகம் கண் விழித்தது. பல் துலக்க, முகம் துடைக்கத் தங்கள் வீட்டுக் கண்ணாடியை நெருங்கியவர் களுக்கு பயங்கர அதிர்ச்சி. ஒவ்வொருவர் நெற்றியிலும் பச்சை குத்தியதைப்போல் அந்த வாசகம் இருந்தது.

தாங்கள் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டி, பூனைக்குட்டிகளின் நெற்றியிலும் அது இருந்ததைக் கண்டு குழம்பினர். நகரங்களில் இப்படி என்றால், கிராமங்களில் பால் கறக்க, ஏர் உழ, மேய்ச்சலுக்கு எனத் தங்களது ஆடு, மாடுகளை நெருங்கியவர்களுக்கு தலை சுற்றியது. அந்தக் கால்நடைகளின் உடல்களிலும் அதே வாசகம்.

சாலையில் செல்பவர்களின் நெற்றியிலும் அவ்வாறு இருந்தது. பலரும் மருத்துவர்களிடம் ஓடினார்கள். ஆனால், மருத்துவர்களே தங்கள் நெற்றியில் இருப்பதை எந்த மருந்தைத் தேய்த்து அழிப்பது என்று புரியாமல் மண்டையை உருட்டிக்கொண்டு இருந்தார்கள்.

அவ்வளவு ஏன்? ஓயாமல் வானிலை ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளும், வானத்தில் பிரகாசிக்கும் சூரியன் மீதும் அப்படி எழுதி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். விண்வெளி ஆராய்ச்சி மையத்தையும் விட்டுவைக்கவில்லை அந்தக் குழப்பம். செவ்வாய் கிரகத்தில் இறங்கிய விண்கலம் அனுப்பிய புகைப்படத்தில், அந்தக் கிரகத்தின் தரையிலும் அது எழுதப்பட்டு இருந்தது.

ஃபேஸ்புக், ட்விட்டர், செல்போன் மூலம் இந்தச் செய்தி உலகம் முழுக்கப் பரபரப்புடன் பரிமாறப்பட்டது. மருத்துவர்கள், விஞ்ஞானிகளுக்கே புரியாததால், பத்திரிகையாளர்கள் சென்று ஆன்மிகவாதிகளின் வீட்டுக் கதவைத் தட்டினார்கள்.

கதவைத் திறந்த அவர்களும் கையில் தத்துவப் புத்தகங்களுடன் புரியாமல் விழித்துகொண்டு இருந்தார்கள். காரணம், அவர்களின் நெற்றியிலும் அந்த வாசகம்.

சூரியன் மேற்கில் இறங்கி, சந்திரன் தோன்றியபோது நிலவிலும் அந்த வாசகம் மின்னியது. மனிதர்களின் நெற்றியில் இருட்டிலும்கூட அந்த எழுத்துகள் தெளிவாக ஒளிர்ந்தன. எங்கே பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் அதே வாசகம்தான். அப்படி என்னதான் எழுதப்பட்டு இருந்தது?

ஸ்பெயின் நாட்டு மொழியில் 'லா ப்ரென்டேசியன் டி டியோஸ்என்றும் இத்தாலியில் 'பிரசன்டேஸியோன் டிடியோஎன்றும் இருந்தது. அதேபோல் ஃப்ரான்ஸில் 'டையுஒரெசன்டேஷன்டச்சு மொழியில் 'டி வூர்ஸ்டெல்லிங் வான் காட்போர்ச்சுக்கீசிய மொழியில் 'அப்ரசன்டேயி அவோ டு டியஸ்ஹிந்தியில் 'தான்:பகவன்தெலுங்கில் 'இச்சினிவாலு:தேவுடுகன்னடத்தில் 'கொட்டவரு:பகவன்மலையாளத்தில் 'சௌஜன்யம்:தெய்வம்என்றும் இருந்தன. இங்கிலாந்தில் 'பிரசன்டேஷன்:லார்ட்என்று எழுதப்பட்டு இருந்தது.

அதே சமயம் மேலோகத்தில்...

பூமியில் நடந்துகொண்டு இருந்த விநோதத்தைக் கண்டு தேவர்களும், தேவதைகளும், இன்னபிற தேவலோக ஊழியர்களும் புரியாமல் குழம்பினர். அதற்கான விளக்கத்தை அறியக் கடவுளிடம் சென்றனர்.

"
இறைவா, இது என்ன புதுக் குழப்பம்? ஒரே நாளில் உலகம் முழுக்க இது எப்படி நடந்தது?" என்று கேட்டார்கள்.

கடவுள் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு "இதை நான் கண்டுபிடிக்கவில்லை. மனிதர்கள்தான் முதலில் ஆரம்பித்துவைத்தார்கள். எனக்கும் ஆசை வந்துவிட்டது. அங்கே பாருங்கள்" என்றார்.

ஒரு கோயிலில் எரிந்துகொண்டு இருந்த டியூப்லைட் ஒன்றைச் சுட்டிக் காட்டினார். மற்றொரு இடத்தில் ஒரு மின்விசிறியில் யார் பெயரை எழுதுவது என்று இருவர் சண்டையிட்டுக்கொண்டு இருந்தனர்.

கடவுள் சிரித்தபடியே சொன்னார் "ஒரு சிறிய மின்விளக்கையும் மின்விசிறியையும் வழங்கியதற்கே தங்கள் பெயரையும் ஊரையும் போட வேண்டும் என்று இந்த மனிதர்கள் சண்டை போடுகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தையே படைத்தவன் நான் என்பதை மறுந்துவிட்டார்கள். அதைஅவர்களுக்கு நினைவுபடுத்தவே இவ்வாறு செய்தேன். இன்று முழுவதும் அந்த வாசகம் இருக்கும். நாளை காலை தானாக மறைந்துவிடும். நான் செய்தது சரிதானே?" என்றார்.

"
ரொம்ப சரி!" என்று புன்னகைத்தனர் தேவர்கள்.

கடவுள் சொன்னபடியே அடுத்த நாள் காலையில் கண்விழித்த அனைவருக்கும் நிம்மதி. அந்த வாசகம் மறைந்துபோய்விட்டது.

மன்னிக்கவும் நண்பர்களே! நம்ம தமிழ்நாட்டில், தமிழ் மொழியில் என்ன எழுதி இருந்தது எனச் சொல்லவே இல்லையே? அந்த வாசகம்... 'உபயம்: கடவுள்.