Friday, September 7, 2012

சிந்தனைத் துளிகள் - பகுதி1

நான் சமீபத்தில், சொல்வேந்தர்.சுகிசிவம் அவர்களின் சொற்பொழிவு ஒன்றைக் கேட்டேன். 

"உன்னை அறிந்தால்" என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.தன்னம்பிக்கை,சுய முன்னேற்றம் ஆகியவற்றைப் பற்றி அருமையாக விளக்கினார் அவர்.

சில துளிகள் இங்கே:
1. "உங்களைப்பற்றிய மற்றவர் அபிப்ராயங்கள்,வெறும் காலி அபிப்ராயங்கள்"


ரவீந்தர்நாத் தாகூர்,அவர் குடும்பத்தில் 13ஆவது பிள்ளை.
அனைவரின் பிறந்தநாளுக்கும் வீட்டில் உள்ளவர்கள் ஒரு புத்தகத்தில்,
பிறந்தநாள் கொண்டாடுபவர்க்கு வாழ்த்துகளை எழுதி வைப்பார்கள்.தாகூரின் பிறந்தநாள் அன்று,அவரின் பாட்டி, "மற்ற பிள்ளைகளைப் போல இல்லை தாகூர்.உன் முன்னேற்றம், எதிகாலம் பற்றி எனக்கு மிகுந்த கவலையாக இருக்கிறது!"என எழுதி இருந்தார்.இன்று நிலைமை என்ன? தாகூர் போல,அந்த 13 பேரில் எவரும் புகழை எட்டவில்லை.சாதாரண புகழா அது? இரண்டு நாட்டின் தேசியகீதம் எழுதியவர் அல்லவா அவர்.

எனவே உங்கள் எதிர்காலம்,உங்களைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும்!

நமது பாரதியையும் இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.அவரின் பாடல்களைப் பார்த்து,பிற பண்டிதர்கள், "பாரதியின் பாடல்கள் பாமரத்தனமானது!" என இகழ்ந்தனர்.அவர் அவற்றுக்கு சிறிதும் செவிசாய்க்கவில்லை. அவரின் நோக்கம், எளிமைத் தமிழில் நயம் சேர்த்து, படிப்பறிவில்லாதவர்க்கும் பாட்டறிவு புகட்டவேண்டும் என்பதே. அதில் அவர் உறுதியாய் இருந்தார்.இன்று அவர் பெற்றிருக்கும் புகழ் சாதாரணமானதா?

2. "உங்கள் தேர்வுகளுக்கு மற்றவர் அங்கீகாரத்தை எதிபார்க்காதே!"

நாம் ஒரு கடையில் சென்று இரண்டுமணிநேரம் செலவு செய்து,ஒரு சட்டையைத் தேர்வு செய்கிறோம்.அதை எப்போது உடுத்தப்போகிறோம் என்ற எண்ணத்திலேயே உறங்குகிறோம்.

காலையில், அந்த சட்டையைப் போடும்போதே நாம் என்ன நினைக்கிறோம்? "இந்த சட்டையைப் பற்றி அவர்கள் என்ன சொல்வார்கள்?இவர்களுக்குப் பிடிக்குமா?" என பல எண்ணங்கள் மனதில் ஓடுகின்றன.பேசும் ஒவ்வொருவரிடமிருந்தும் நம் சட்டையைப் பற்றி ஏதாவது விமர்சனத்தை எதிபார்க்கின்றோம்.

இது எதற்கு? நம் நேரத்தைச் செலவு செய்து துணியைத் தேர்வுசெய்கின்றோம்.நமக்குப் பிடித்ததால் தான் பனம் கொடுத்து வாங்கிவருகின்றோம். பிறகு தோன்றும் இந்த விமர்சன எதிபார்ப்பு எண்ணங்கள் நம் தேர்வுகள் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கின்றன.ஆக, வரும் விமர்சனங்களுக்கு புன்னகையை மட்டும் பதிலாய்க் கொடுத்துவிடு வேறு வேலையப் பார்க்கலாமல்லவா?

3."எல்லா யோசனைகளையும் மனதினுள் விடாதே!"



புதிதாக ஒரு முயற்சி மேற்கொள்ளப்போகின்றோம்.உதாரணமாக ஒரு தொழில் துவங்குகிறோம் என வைத்துக்கோன்டால், அதற்கு அனுபவம் வாய்ந்த பலரின் யோசனையைக் கேட்கின்றோம்.பலர் கூறும் பலவித செய்திகளையும் மனதுக்குள் போட்டுக் குழம்பியவனுக்கு, அந்தத் தொழில் செய்யும் எண்ணமே அற்றுப்போகிறது.

ஒரு ஊரில், ஒரு விவசாயி கோழி வளர்ப்பில் ஈடுபடலாம் என்று முடிவு செய்தான்.அவ்வாறே 100 கோழிகுஞ்சுகள் வாங்கி வளர்க்கத் துவங்கினான்.பக்கத்து ஊரில் கோழிகளுக்கு நோய் பரவுவதாக அறிந்த அவனுக்கு உறக்கம் வரவில்லை.அந்த ஊர்ப்பெரியவர் ஒருவரிடம் யோசனை கேட்டான்.அவர் ஒரு மருந்து சொல்ல, அதனை தன் 25 கோழிகளுக்கு முதலில் கொடுத்தான்.அந்தோ பரிதாபம்! 25 கோழிகளும் இறந்துவிட்டன.இதனால் பக்கத்துப் பண்ணைக்காரரிடம் யோசனை கேட்டான்.பொறாமையால் அவன் ஒரு வகை மருந்தைக் கொடுக்க, அதனால் 50 கோழிகள் இறந்து விட்டன.மீதமுள்ளவற்றையாவது காப்பாற்றவேண்டும் என அவன் நினைக்கையில், அந்த ஊருக்கும் நோய்பரவி 25 கொழிகளும் இறந்துவிட்டன.

பலர் சொல்லும் யோசனைகளைக் கேட்பதில் தவறில்லை. ஆனால், சொல்பவர் யார்? அவர் சொல்வதில் உண்மை இருக்குமா? என எண்ணிப்பார்த்து, அப்படி இருந்தால் மட்டுமே அந்த யோசனையை மனதினுள் விடவேண்டும்! ஆக, எல்லா யோசனைகளையும் மனதினுள் விடுவது பல எதிமறை விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும்.

                          ----------

இதுபோல பல கருத்துகளை அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். வாய்ப்பு கிடைத்தால் அந்த உரையை நீங்களும் கேளுங்கள்.


2 comments:

  1. இயல்பாக பேசுபவர்... அருமையான சிந்தனைகளை மனதில் படும்படி சொல்லிவிட்டு சென்று விடுவார்...

    பேசும்போதே கேட்பவர்களுக்கு என்ன சந்தேகம் வரும் அல்லது கேட்பவர்கள் என்ன கேள்வி கேட்பார்கள் - என்று அதையும் சொல்லி, அதற்கு பதிலும் சொல்லி விடுவது அவரின் சிறப்பு...

    தினமும் சில தொலைக்காட்சியிலும், சில பண்பலைகளிலும் இப்போது அவரின் பேச்சு ஒளிபரப்பப்படுகிறது...

    ReplyDelete
  2. @திண்டுக்கல் தனபாலன் : உண்மை. சிறுவயது முதலே நான் அவரின் ரசிகன் நண்பரே!!

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்