ஒளிகண்டு விளையாட்டு (ஐஸ்-பாய்/ஐஸ் நம்பர் 1) – Hide and Seek..
ஒரு விளையாட்டுக்கு இத்தனை பெயரா என வியப்பாக
இருக்கிறதா? அனைத்துப் பெயர்களும் விளையாடும் முறையும் கிட்டத்தட்ட
ஒரே விளையாடைத்தான் குறிக்கின்றன.இந்த விளையாட்டுடன் என் அனுபவம்
பற்றி முதலில் பார்க்கலாமா? (இல்லைன்னு சொன்னாலும் விடமாட்டேன்
:) )
"எங்கள் ஊர் சித்திரைத்திருவிழா.மாரியம்மன் கோவிலை
சுற்றி மக்கள் கூட்டம் நிரம்பி இருக்கிறது.கூட்டத்துக்குள் அங்கும் இங்கும் சில
சிறுவர்கள் ஓடிக்கொண்டிருப்பது தெரிகிறது.அவர்கள் எங்கெங்கோ போய்
மறைகிறார்கள்.ஒருவன் திருதிருவென விழித்துக்கொண்டு, காணாமல்
போன பிள்ளைபோல மற்றவர்களைத் தேடுகிறான்.திடீரென பின்னாளிருந்து ஒருவன் அவன்
முதுகில் வேகமாக தட்டி,"கப் ஐஸ்!" என சொல்ல,.இவன்
மீண்டும் ஆட்டமிழந்த சோகத்தில், ஓடிச்சென்று அந்த மரத்தின் பின்னால்
நின்று 1,2,3..என எண்ணத்துவங்குகிறான்...." ஒவ்வொரு ஆண்டும்,திருவிழா
சமயத்தில் இப்படி நாங்கள் விளையாடுவது வழக்கம்.ஒளிந்து கொள்ளப்போன குழந்தைகளில்
நானும் ஒருவன்!
முதலில் இந்த "ஒளிகண்டு" விளையாட்டைப் பற்றி
பார்க்கலாம்.அதற்கு முன்னால் விளையாட்டினால் விளையும் நன்மைகளைப் பற்றி
பார்த்துவிடலாம்.
குழந்தைகள் இந்த விளையாட்டினால் பெரும் நன்மைகள்:
1.துப்பறியும் திறன் ( Detective capacity )
2.திட்டமிடல் ( Planning )
3.மேம்பட்ட விழிப்புணர்வுத் திறன் (Extra
Awareness )
இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று பார்ப்போமா?
விளையாட தேவை:
- 1.உங்கள் விருப்பம். குறைந்தபட்சம் 5 பேர்.
- 2.திறந்தவெளி/பொது இடம் (கோவில்,பள்ளி,சந்தை,..)
விளையாடும் முறை:
1.துவக்கவீரரைத் தேர்வுசெய்தல்.
2.துவக்கும் நபர், மரம்
அல்லது சுவற்றைப் பார்த்தபடி, கண்களைமூடி 1 முதல் 10
வரை சத்தமாகச் சொல்ல வேண்டும்.
3.அதே நேரத்தில் மற்றவர்கள் அவர்களின் விருப்பப்படி
எங்காவது போய் ஒளிந்துகொள்ளவும்.
4.தேடிக்கொண்டு வருபவர், ஒளிந்திருக்கும்
அனைவரையும் கண்டுபிடிக்கவேண்டும்.அப்படி ஒவ்வொருவரைக் கண்டுபிடிக்கும் போதும்
"ஐஸ் நம்பர்" எனச்சொல்லி,அவர் எத்தனையாவது ஆள் என்பதையும்
சத்தமாகச் சொல்லவேண்டும். எகா:"ஐஸ் நம்பர் 1, ஐஸ்
நம்பர் 2"..
5.மற்றவர்களைத்தேடும்போது, ஒளிந்திருப்பவர்
தேடுபவரின் பின்னால்,அவர் அறியாமல் வந்து முதுகைத்தட்டி, "கப்
ஐஸ்" என சொன்னால், அவர் மீண்டும் விளையாட்டைத் துவங்கவேண்டும்.
5.அப்படி இல்லாமல்,அனைவரும்
கண்டுபிடிக்கப் பட்டால், "ஐஸ் நம்பர் 1" ஆட்டத்தைத்
துவங்குவார்.
6.சலிக்கும் வரை விளையாடலாம்.(சிலநேரம் ஒரே ஆள் மீண்டும்
மீண்டும் ஆடமிழக்கும் பரிதாபங்களும் நிகழும்)