Friday, January 25, 2013

கூடு திரும்பிய குருவி! (சிறுகதை)


டை வீதிகள். 
இந்த உலகில் தவிர்க்க முடியாத பிரசித்தி பெற்ற இடங்கள் இவைதான்.ஒரு நகரத்திற்கு பயணம் மேற்கொள்கிறோம் எனில்,அங்கே அமைந்துள்ள பலவகைக் கடைகளைப் பார்வையிட நாம் கண்டிப்பாக நேரம் ஒதுக்குவோம்.இன்று நேற்றல்ல.நம் தமிழகத்தில் இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் இருந்தே "அங்காடித் தெரு - விற்பனை சந்தை" போன்றவை இருந்து வருகின்றன

கோவை மாநகருக்கு நான் வந்து மூன்றாண்டுகள் ஆகின்றன.உடைகள் விற்பனை,உயர்ரக அணிகலன் விற்பனை என பலநூறு ஆண்டுகள் சிறப்புபெற்ற கொங்கு மண்டல தலைநகரல்லவா அது. இன்றும் அப்படியே விளங்குகிறது.100அடி ரோடு,க்ராஸ்-கட் ரோடு என் நகரின் மையப்பகுதியில் இரு பெறும் சாலைகள்.இவற்றின் இருமருங்கிலும் வானுயர் கட்டிடங்களும்,அவற்றின் ஒவ்வொரு மாடிகளிலும் ஒவ்வொரு வகைக் கடைகளும் காணக்கிடைக்கின்றன.குறிப்பாக வீட்டு உபயோகப்பொருட்கள்,மின் சாதன விற்பனைக்கடைகள்,கணிப்பொறி,கையடக்க தொலைபேசி மற்றும் அவைசார்ந்த விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்,சில சிற்றுண்டிக் கடைகள்,பெரிய அசைவ உணவகங்கள்,என விரிகிறது பட்டியல்.இவ்வளவு பெரிய நகரத்தில்,தங்களுக்கென பல வாடிக்கையாளரை ஒவ்வொரு கடைகளும் கொண்டிருப்பது ஆச்சரியமாகத்தான் தெரிகிறது.
இப்போது கதையின் நாயகனை அறிமுகப்படுத்தும் நேரம்.பெயர் முருகன்.எனக்கு தூரத்து உறவு என்று வைத்துக் கொள்ளலாம்.முருகனுக்கு சொந்த ஊர் ஈரோடு மாவட்டம்,கோபிசெட்டிபாளையம் வட்டம்,அத்தாணி என்ற அழகிய ஊர்.அங்கே தேங்காய்,வாழைஇழை,காய்கறி என நேரத்துக்கு ஏற்றார்ப்போல வியாபாரம் செய்து வந்தார் அவர்.பல தமிழ்ப்படங்களில் காட்டுவது போல,ஒரு நகரத்துக்குச் சென்று,சம்பாதித்து பின் தன் கிராமத்திற்கு காரில் வந்து இறங்கும் ஆசை முருகனுக்கு என்றுமே உண்டு.பகல் நேரங்களில் வீட்டுத்திண்ணையில் படுத்தபடி இந்த நினைவை அடிக்கடி அவர் அசைபோடுவது வழக்கம்.அந்த அதிர்ஷ்டக் கனவை, சோதித்துப்பார்க்கும் நாள் வந்தது. 

அதிகாலையில்,அந்தியூர்-கோபி வழியாக கோவை செல்லும் பேருந்தைப் பிடித்தார்.2000 ரூபாய் வழிச்செலவுக்கென எடுத்துக்கொண்டார்.
கோவை பேருந்துநிலையத்தை அடைந்தபோது மணி 9 ஆகிவிட்டது.பேருந்திலிருந்து இறங்கும்போது அருணாச்சலம் படத்தில் சென்னையில் இறங்கும் ரஜினியை கண்கள் மூடி நினைத்துக் கொண்டார். 

பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரம் வேடிக்கை பார்த்தபடி நடந்தார்.அங்கு இன்னும் சில சிற்றுண்டிக் கடைகளை அவர் பார்க்க நேர்ந்தது.ஒன்றிரண்டு பேர் மட்டுமே வந்துபோய்க் கொண்டிருந்த ஒரு  கடையில்,கல்லாப்பெட்டியில் இருந்த சில்லறையை எண்ணியபடி சோகமாய் முதலாளி கண்ணில் பட்டார்.வெளியில் அவருடைய பழைய மோட்டார்வண்டி பரிதாபமாய்க் காட்சியளித்தது.இதை பார்த்ததும் சற்றே அதிந்துபோனார் முருகன்.ஏனெனில்,உணவகம் ஆரம்பிக்கலாம் என்ற ஒரு எண்ணம் அவருக்கு இருந்தது.இதுபோல நமக்கும் நேர்ந்தால் என்ன செய்வது என தன்னையே ஒருமுறை கேட்டுக்கொண்டார்

இதே சிந்தனையில் நடந்தவர் சாலையோரம் இருந்த ஓர் தேநீர்க்கடையில் வந்து அமர்ந்தார்.வாகன நெரிசலில் சிக்கி உழன்ற புகை,புழுதி அனைத்தும் அந்தக் கடை வாசல் வரை வந்து அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தன.வாகன இரைச்சலும் நகர நெரிசலும் மிகுந்ததாக இருந்தது அந்த சாலையில்."என்ன சாபிடுரீங்க சார்?" எனக் கேட்ட அந்தப் பெரியவரிடம் "ஒரு டீ" எனச் சொன்னார் முருகன்."பஜ்ஜி போண்டா தரட்டுமா சார்? சூடா இருக்கு!" எனச் சொன்னவரிடம் வெறுமனே வேண்டாம் என தலையசைத்தார்.மீண்டும் சிந்தனையில் மூழ்கினார்.'இந்த தேநீர்க்கடையில் வேலை செய்யும் இந்த முதியவரிடம் கூட கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.வேண்டுமா எனக்  கேட்காமல்,தரட்டுமா என்று நேர்மறையாய் வினவுகிறார்.வேண்டாம் என்று சொல்லவே எனக்கு நா எழவில்லையே?ஒரு வியாபாரத்தில் இப்படியான நேர்மறை எண்ணங்கள் மிக முக்கியம் தான்!' என தனக்குத் தானே மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.

லேசாகத் ஆரம்பித்த வெயில், இப்போது சுட்டெரிக்கத் துவங்கியது.வியர்வை வழிய 100 அடி சாலையில் நடகத்துவங்கினார்.ஒவ்வொரு கடையின் மேல்புறமும் வைக்கப்பட்டிருக்கும் பெயர்ப்பலகையை வியப்பாகப் பார்த்தார்.ஒரேபொருளை விற்கும் பல கடைகள்.அவற்றின் விளம்பரமும்,பெயர்ப்பலகையும் எவ்வளவு வித்தியாசப்படுகின்றன.வியாபார தனித்துவம் மிக முக்கியம்.இல்லை என்றால் இந்த பெரிய நகரத்தில்,இவ்வளவு போட்டியை சமாளித்து வியாபாரம் செய்ய முடியுமா?சில கைப்பேசி விற்பனைக் கடைகள்,மிகப்பெரிய பல்பொருள் அங்காடிகள்,தொலைக்காட்சி விளம்பரங்களில் கண்ட துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் என சுற்றிக்கொண்டிருந்த அவருக்கு, தான் வசிக்கும் கிராமம் நினைவில் வந்தது. 

அந்த ஊரில் இருக்கும் மளிகைக் கடைகளில் ஒன்று முத்து அண்ணன் கடை.மளிகைப் பொருட்கள்,காய்கறிகள் மற்றும் தேநீர் என 40 வருடங்களுக்கு மேலாக வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது.இத்தனைக்கும் பெயர்ப்பலகைகூட அங்கே வைத்திருக்கப் படவில்லை.அவருடைய ஒரு மகன் மருத்துவம் படித்து சென்னையில் பெரிய மருத்துவமனை ஒன்றில் வேலை பார்க்கிறான்.மகளுக்கு போன மாதம் திருமணம் முடிந்தது.மகனுக்கு வரன் பார்த்துக்கொண்டிருக்கிறார்.அவர் எல்லாம் இந்த நகரத்தைப் பார்த்தது கூட கிடையாது.ஆனாலும் அவர் தன் தொழிலை சிறப்பாக செய்து,உயர்ந்திருக்கிறார்.

அவரை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டார் முருகன்,.சாலையோர நடைபாதைக்கடை ஒன்று அவர் கண்ணில் பட்டது.காலை உணவு முடித்து நீண்டநேரம் ஆகியிருக்கவே,அங்கே சென்று சாபிடலாம் என எண்ணினார்.
அந்தக்கடையைச்சுற்றிலும் சிலர் நின்று சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.அவர்களில் பெரும்பாலானோர் வேலை தேடி சுற்றும் இளைஞர்கள்.அவர்களைப் பார்த்தபடி கடையை நெருங்கினார்.அங்கே தொங்கிக்கொண்டிருந்த உணவு வகைகள் அட்டையைப் பார்த்தபடி,"ஒரு தக்காளி சாதம் குடுங்க!" என்று முருகன் கேட்டார்.கடைக்காரர் திரும்பி தன் மனைவியிடம் உத்தரவு போட்டார், "ஒரு தக்காள் சாதம் - லைனுக்கு!".வேகாத வெயிலில் நின்று கொண்டு வியாபாரம் செய்யும் இவர்களுக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டும் என சாப்பிட்டபடி மனதுக்குள் வேண்டிக்கொண்டார்.தன்னையே பார்த்தபடி நிற்கும் முருகனிடம் அந்த ஆள் பேசத்துவங்கினான்,"சாப்பாடு எப்படி சார்
இருக்கு?".முருகனிடம் இருந்து சட்டென பதில் வந்தது,"அருமை..!"."நல்லது சார்.இன்னைக்குதான் இந்த ஏரியாவுக்கு வரோம்.இதுக்கு முன்னே கணபதி பாலத்துகிட்ட கடை வச்சிருந்தோம்!அங்க வியாபாரம் ஒன்னும் சரியில்ல.அதான் இங்க வந்துட்டோம்!" என மூச்சு விடாமல் சொல்லி முடித்தான் அந்த ஆள்."வியாபாரம் எப்படிப் போகுது.உங்க வீடு எங்கே இருக்கு?" என முருகன் கேட்டார்.இதைக் கேட்ட உடனே அந்த ஆள் முகத்தில் மாறுதல் கண்டது.ஏதோ ஒரு பெரிய சோகக்கதையின் வெளிப்பாட்டுக்கு முன்னுரை போட்டுவிட்டோமோ என்றே முருகனுக்குத் தோன்றியது.
"சொல்லிக்கொள்ளும் படி பெரிய லாபமெல்லாம் கிடையாது சார்.இன்னைக்கு சம்பாதிக்கிறது நாளை சமைக்கவே சரியா இருக்கும்.மிச்சமாகும் காசு வீட்டு வாடகைக்கு சேர்ந்துவைக்க போதுமானதாக இருக்கும்.நாங்க ரெண்டு
பேருதான்.நல்லவேளை ண்டவன் எங்களுக்கு பிள்ளைவரம் கொடுக்கல.அப்படி ஒன்னு பொறந்திருந்தா,ஒரு சுகமும் அது கண்டிருக்காது!" என நீர்கோர்த்தவிழியுடன் சொல்லிக்கொண்டிருக்க,அவர் மனைவி அழுதே விட்டாள்.அந்த ஆள் மீண்டும் பேசத்துவங்கினான்,"வீடு கணபதில தான் இருக்கு.800 ரூபா வாடகை.அதைக் கொடுக்கறதுக்கே கஷ்டமாயிடுது.இதுல,உடம்புக்கு ஏதாவது அசௌகிரியம் வந்தா இன்னும் சிரமம் சார்.எப்படியோ சாகாம வாழுறோம்.இன்னும்
எத்தனை வருஷம் இப்படியே இருக்கப்போறோம்னு தெரியல!".
  இப்போது முருகன் கோவையிலிருந்து தன் சொந்த ஊர் செல்லும் பேருந்தில் பயணத்துக்கொண்டிருக்கிறார்.ஊருக்குச் சென்று,தான் செய்யும் தொழிலை கவனமாக,சிரத்தையோடு செய்யவேண்டும்,தன்னைக் கஷ்டம் தெரியாமல் வளத்த பெற்றோர் காலில்விழுந்து கும்பிடவேண்டும்,தொழிலில் வெற்றி பெற்ற பலரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும் என ஏராளமான திட்டங்கள் அவர் மனதுக்குள் உருவாகிக்கொண்டிருந்தன.அவர் கண்டிப்பாக முன்னேறிவிடுவார். நான் சொல்லவில்லை.அந்த ஊரில் அப்படிப் பேசிக்கொள்கிறார்கள்.

 - ராஜ்குமார்

2 comments:

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்