Tuesday, September 27, 2011

இப்படியும் ஒரு கதை! (படிப்பவர்கள் பாவம்)

அவளைப் பற்றி ஏதாவது எழுதலாம் என்று தோன்றியது.
என்ன எழுதலாம்.
கவிதை? அது அவ்வளவா நமக்கு வராதே!
இருந்தாலும் முயற்சித்துப் பார்க்கலாம்.

"நிலவுக்கும் அவளுக்கும் ஆறு வித்யாசம் !
நிலவோ என்னவள் முகம் போல வட்டம்
அவளோ நெளிவுகள் சுமக்கும் வளைந்த ஊசி!!"

ஐயோ வேணாம்! இதைப் படிப்பவர்கள் பாவம்!.

புதிதாக ஒரு ஆராய்ச்சி செய்யலாம் அவளை வைத்து.
ஆம். அதுதான் சரி.மீண்டும் நிலவைக் கூப்பிடவேண்டும்!

நிலவையும் அவளையும் ஒருசேர நிற்கவைத்து,
இருவரின் ஒளிவீச்சையும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்!

நிலவைக் கூட்டிக்கொண்டு அவளை பார்க்கப் போனேன்.

அங்கு நம் கவிப்பேரரசு நிற்கிறார்!
அவருடன் கம்பனும் ஷெல்லியும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்!

அவர்களோடு போட்டி போட என்னால் இயலாது.
அவர்களை முந்திக்கொண்டால் தான் நமக்கு மரியாதை!

கவிப்பேரரசை வணங்கி நின்றேன்.
"காலம் கடந்த காலத்தில்
தங்களுக்கு காதல் கவிதை எதற்கு அரசே!
ஏதோ இந்தப் பாவப்பட்ட இளைஞனின்
பரிதாபக் காதல் கூட வேண்டி,
இந்த இரு கவிமன்னர்களைக் கூட்டிக் கொண்டு
வேறு அழகியைத் தேடுங்கள்!"
என்று காலில் விழாத குறையாய் கேட்டுப் பார்த்தேன் .

அவர் நல்ல மனிதர். என்னிடம் சொன்னார், "அரை குறை கவிதை என்றாலும்
நீ தமிழில் எழுதுவதால் ,கவிஞனாய்  எனக்குத் தெரிகின்றாய்!
இந்தக் காதல் வெற்றி பெற்றால் நீ அவளின் இதயம் ஆகிடுவாய் !
அது சேராமல் போனாலோ ஒரு காவிய கவிஞனாய் மாறிடுவாய் !
எது நடந்தாலும் நன்மை உனக்குத்தான்!வாழ்த்துகள்!! "

அவர்கள் சென்று விட்டார்கள்!

என் அழைப்பின் பேரின் இருவர் வந்து இருக்கிறார்கள் ஆராய்ச்சி செய்து முடிவினைக் கூற !

நிலவையும் அவளையும் ஒருசேர நிற்க வைத்து ஆய்வுகள் ஆரம்பமானது.

இருவர் ஈர்ப்பினை ஒப்பிட்டுப்பார்க்க  நியூட்டன் ஆய்வுகள் துவங்கி விட்டார்.

ராமன் விளைவைக் கண்டுபிடித்த ராமன்,என்னவள் முகத்தின் ஒளியையும்,
நிலவின் பிரகாசிப்பையும் அலசிப்பார்க்க துவங்கிவிட்டார்.

ஆராய்ச்சி முடிவை எதிர்பார்த்து வானத்தில் உள்ள நிலவின் குடும்பத்தாரும்,
பூமியில் பூக்கள் முதலான உயிர்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்!
அனைவரை விட நான், என்னவள்தான் வெற்றிபெறுவாள் என்ற உறுதியுடன்,சந்திர மண்டல செல்வர்களிடம்,"வெற்றி பெறுபவர்களுக்கு மற்றவர் அடிமை" என பந்தையம் கட்டியுள்ளேன்.

இதோ முடிவுகள்!! பாவம் நிலா!
என்னவளிடம் தோற்று , பொலி
விழந்த முகத்தோடு
வானம் செல்லப் பார்க்கிறது.
நிலவுக்கு சில அறிவுரைகள் கூற நினைத்தேன்!

"நிலவே! ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் உன் அழகினை மெச்சிய உலகம் இன்று
உன் தோல்வியைக் கண்டு வருந்துகிறது .
இருந்தாலும் உன் பழம்பெருமையினை அழிப்பார் எவருமில்லை.
உன்னை அடிமையாக்கும் எண்ணம் எனக்கு இல்லை.
என்ன நடந்தாலும் அழுதுமட்டும் விடாதே!
அப்படி அழும்போது உன்னின்று உதிரும் கண்ணீர் துளிகண்டு
நாசா மனிதர்கள் நீர்தேடி வரக்கூடும்! "

அனைவரும் சென்றுவிட்டனர்.
அவளும் நானும் தனிமையாய் !

அவள் இப்போது புன்னகை பூவுடன் என்னை நோக்கினாள்!
"உந்தன் செய்கை எனக்கு எல்லையில்லாத இன்பத்தினை அளித்தது!
எனக்கு ஒரு ஆசை. அதை நிறைவேற்றுவாயா? " என்று கேட்டாள்.

"என்னவென்றாலும் கேள்!" என்றேன்!

"என் கல்லூரிக் காதலன் அங்கு காத்திருக்கிறார்!
இன்று பதிவு திருமணம்!
உன் வரவில் நான் மகிழ்வடைவேன்!
என்னைக் கூட்டிச் செல்வாயா விரைவாக?!" என்றாள்!
"அப்படியே ஆகட்டும் " என்றேன்!

மனதுக்குள் நடந்த வாக்குவாதங்கள்:
என்னுடன் இவளை சேர்த்து வைக்க
பாவம் ,தன் அழகை குறைத்துக்கொண்ட நிலவுக்கு நான்  என்ன பதில் சொல்வேன்?
அத்தனை அவமானம் தாங்கியும், பூரண சிரிப்போடு
என்னைப் பார்க்கும் நிலவே! இனி நீ தான் என் காதலி!
இனிமேல் நான் கவிஞன்!
உன்னைப் பற்றி காவியம் பாட,
பேனா எடுத்த கவிஞன்!

குறிப்பு:
இந்தக் கதையில் குறிப்பிட்ட கதாப்பாத்திரங்கள், என் சொந்த நாடகத்தில்
உங்களை உங்கள் அனுமதியின்றி பயன்படுத்தியமைக்கு என்னை மன்னிக்க வேண்டும்!
அனைவருக்கும் நன்றி !! 

                                       ** முடிந்தது **

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்