Monday, September 12, 2011

என் தலைவன் பாரதி(December 11, 1882 – September 11, 1921)

நேற்று 11-09-11 பாட்டுத்தலைவன் பாரதியின் நினைவுநாள்.

 இந்த நாளில் அவரைப்பற்றி சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி இவ்வையம் தழைக்குமாம்"என்று பெண்ணடிமைத்தனம் ஓங்கியிருந்த நாளில் வெளிப்படையாய்ப் பாடியவர்.


அதுமட்டுமின்றி,
"சாத்திரங்கள் பலபல கற்பராம்;
சவுரியங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும் கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்!
என, பாரத நாட்டின் புதுமைப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று
கனவு கண்ட ஒரு கவிஞன் இந்த பாரதி.



பிராமண குலத்தில் பிறந்தாலும் அர்த்தமற்ற மூட சடங்குகளை வெளிப்படையாக
எதிர்த்து, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவரும் அவர்தான்.

கவிதைக்கு புது வடிவம் கொடுத்து, பழைய சமஸ்கிருத சம்பாஷணைகளை ஒதுக்கி,
பாமரர்க்கும் புரியும் படி, பாடி வைத்தவர் பாரதி.

"ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று!"
என சுதந்திர உணர்வின் ஆனந்தத்தை, 1920களிலேயே பாடிவைத்தவர் அவர்.
இந்தியாவின் அடிமைத்தளை அவிழும் முன்னரே இந்த மண்ணுலக வாழ்வைத் துறந்தவர் பாரதி.

பார்போற்றும் கவிஞனின் இறுதிச் சடங்கில் வெறும் 14 பேர் மட்டும் தான் கலந்து கொண்டார்கள் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது.
அவர் வாழ்ந்த போது அவரின் அருமை அறியாத மக்கள், இன்று அவரை போற்றித் துதிக்கின்றார்கள்.

"மனிதனுக்கு மரணமில்லை- வாட காலா! உன்னை என் காலால் எட்டி உதைக்கிறேன் "என தனது இறுதி சொற்பொழிவில் முழங்கியவர் பாரதி.

"தேடிச் சோறுநிதம் தின்று,
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி,
மனம்வாடி துன்பமிக உழன்று,
பிறர் வாட பல செயல்கள் செய்து,
நரை கூடி கிழப்பருவம் எய்தி,
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல
வேடிக்கை மனிதரைப் போல்
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

இனி என்னைப் புதிய உயிராக்கி
எனக்கேதுங் கவலையறச் செய்து
மதிதன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!!"

 என வேண்டிய பாரதியின் இந்த நினைவுநாளில் மதப்பற்று அறுத்து, சாதிபேதம் மறந்து,தமிழைப் போற்றி வாழ நாம் உறுதி எடுப்போம்!

வெல்க தமிழ்! வாழ்க பாரதம்!

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்