Tuesday, September 25, 2012

படித்ததில் பிடித்தது 3 -யார் மிருகம் - குட்டிக்கதை!!


பொழுது விடியப்போகும் சமயம், முன் இரவில் தங்களுக்காக இரை தேடச் சென்ற தாய்ப்புலியை எதிர்பார்த்து இரு குட்டிப் புலிகள்
காத்திருந்தன. 


முன் கால்கள் இரண்டையும் நீட்டிச்  சோம்பல் முறித்துக் கொண்டே, இவ்வளவு நேரமாகியும் அம்மாவைக் காணோமே? என்றது ஒரு புலிக்குட்டி.

இன்னும் ஒன்றும் கிடைக்கவில்லையோ என்னமோ?
என்றது இன்னொரு புலிக்குட்டி, நாக்கைச் சப்புக்
கொட்டிக் கொண்டே.
எனக்குப் பசி காதை அடைக்கிறது.

எனக்கும்தான் பசி வயிற்றைக் கிள்ளுகிறது!

எதற்கும் நாம் கொஞ்ச தூரம் சென்று அம்மாவைத் தேடிப்
பார்ப்போமா?

வேண்டாம், வேண்டாம். நான் வரும்வரை நீங்கள்
குகையைவிட்டு வெளியே வரக்கூடாது என்று அம்மா சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள்!

கடைசிவரை அம்மா வராமலே இருந்து விட்டால்.....?
என்னை நீயும் உன்னை நானும் சாப்பிட்டு விடுவதா என்ன? –

பேசாமல் இரு;
அப்படி வராவிட்டால் அப்புறம் பார்த்துக் கொள்வோம்!
என்று அவற்றில் ஒன்று எரிந்து விழுந்தது.

இன்னொன்று,அதுவரை பசியோடு இங்கேயே கிடந்து தவிக்க
வேண்டுமாக்கும்! என்று அலுத்துக் கொண்டே, தன் கால்
விரல்களில் ஒன்றை லேசாகக் கடித்து, அதில்
கசிந்து வந்த ரத்தத்தை நக்கி ருசி பார்த்தது.

அதற்குள் அவற்றின் அம்மா சற்றுத் தூரத்தில்
உறுமிக்கொண்டு வரும் சத்தம் கேட்கவே,
இரண்டு குட்டிகளும் ஏக காலத்தில் துள்ளிக்
குதித்து அதை வரவேற்கத் தயாராயின.
தாய்ப்புலி தங்களை நெருங்கியதுதான் தாமதம்
குட்டிப் புலிகள் இரண்டும் ஏமாற்றம் அடைந்தன.
ஏனெனில், அவை எதிர்பார்த்ததுபோல் அம்மாவின் வாயில்
எந்தவிதமான இரையும் இல்லை.

ஏன் அம்மா, ஒன்றும் கிடைக்கவில்லையா?

கிடைத்தது; அதற்குள் இன்னொரு புலி வந்து.....

என்ன கிடைத்தது?

ஒரு கொழுத்த காட்டுப் பன்றி.
தன்பாட்டுக்கு அது ஒரு மரத்தடியில்
உதிர்ந்து கிடந்த பழங்களைப் பொறுக்கித்
தின்று கொண்டிருந்தது. நான் அதன்மேல் பாயத்
தயாராவதற்குள் இன்னொரு புலி வந்து அதைக்
கவ்விக்கொண்டு போய்விட்டது.

அதை நீ சும்மாவா விட்டாய்?

சும்மா விடாமல் என்ன செய்வதாம்?

நீ அதை ஏன் அடித்துக் கொன்றிருக்கக் கூடாது?

சீசீ, நாம்கூட மனிதர்களா என்ன? _தன் இனத்தைத்
தானே அடித்துக் கொல்ல? - நாம் மிருகங்கள் -
அப்படியிருக்கும்போது நமக்கு நாமே எதிரிகளாக
முடியுமா? - அந்தப் பன்றி போனால் இன்னொரு பன்றி!
என்று சொல்லிக்கொண்டே, தாய்ப்புலி மீண்டும் இரை தேடச்
சென்றது.
 
குட்டிப் புலிகள் இரண்டும் தங்கள் பசியை மறந்து,
நாம் மிருகங்கள்: மனிதர்களைவிட உயர்ந்த மிருகங்கள்!
என்று கும்மாளம் கொட்டின.
 
 நன்றி :தமிழ் வளர்ப்போம் !

3 comments:

  1. நன்று...

    மிருகங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன...

    ReplyDelete
  2. 5 அறிவுக்கும் 6 அறிவுக்கும் இது தான் வேறுபாடு போல...!!!

    ReplyDelete
  3. 5 அறிவுக்கும் 6 அறிவுக்கும் இது தான் வேறுபாடு போல...!!!

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்