முதல் தடவை உன் முகம் பார்க்கும்போது வந்த தவிப்பினை உன்னைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும் உணர்கிறேன்.
நீ அருகில் வந்து பேசும் போது உன் கண்களின் அசைவில் மயங்குகிறேன்.
உன் கண்கள் பார்த்த கிறக்கத்தில் நான் பேச நினைப்பதை
மறக்கின்றேன்.
புன்னகை உதிர்க்கும் உன் உதடுகளை வருடிப்பார்க்க நினைக்கிறேன்.
"காதல் என்பது வலி.
மருந்தை மறுக்கும் மாய நோய்" என்று
பலபேர் சொல்லியும் நான் நம்பவில்லை.
உன் மறுமொழிக்கான காத்திருப்பில்
அதன் உண்மைப்பொருளை உணர்ந்துகொண்டேன்.
நினைவில் வந்து நின்றபொழுதே,
என் கனவினை உனக்கென வாங்கிக்கொண்டாய்.
மஞ்சள் மாலைப் பொழுதுக்கு நான் எழுதிய கவிதைகளெல்லாம்,
அதில் உந்தன் பெயரை எழுதச் சொல்லி அகிம்சைப் போர் புரிகின்றன.
என் இனியவளே,ஒருநாள் உன்னைப்பார்க்காவிட்டாலும் நெஞ்சம் ஏனோ வலிக்கிறது.
நேரம் காட்டாத என் கடிகாரமும் உன்னைப்பார்க்கும் நொடிப்பொழுதில் துடிக்கிறது.
நட்புடன் இன்றும் பேசுகிறாய்!
ஏக்கப் பார்வை வீசுகிறாய்!
இருந்தும் சொல்லத் துணிவில்லை
என் மனதின் தேடல் நீ என்று..
வருடிய தென்றலுக்கு,
வைகறை மேகங்களுக்கு,
தழுவிய மழைத்துளிக்கு
சொல்லாததுபோல, உன்னிடமும் நான் சொல்லவில்லை என் ஒருதலைக்காதலை..