Thursday, August 11, 2011

துறவி

ஒரு ஊரில் முற்றும் துறந்த முனிவர் ஒருவர் இருந்தார். அவருக்குப் பல சீடர்கள் இருந்தார்கள்.

அவர் தன் சீடர்களுக்குப் பல புத்திமதிகள் கற்பித்தார், முக்கியமாகப் பெண்களை மதிக்க வேண்டும், தவறான எண்ணத்துடன் பழகக் கூடாது, பெண்களைத் தெய்வமாக கருத வேண்டும், மற்றவர்கட்கு உதவ வேண்டும் என்றெல்லாம் பல நல்வழிகளைக் கற்பித்தார். அதன்படியே சீடர்களும் ஒழுக்கமானவர்களாகத் திகழ்ந்தார்கள்.

ஒரு நாள் முனிவர் ஒரு சீடனை அழைத்துக் கொண்டு, ஒரு ஆற்றின் வழியே போய்க் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பெண் ஆற்றில் விழுந்து விட்டார்.

அந்தப் பெண் "உதவி" "உதவி" எனக் கூக்குரலிட்டபடி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

சீடன் துறவியைப் பார்த்தான், துறவி எதுவுமே சொல்லவில்லை, எவ்வித சலனமுமில்லாமல் நடந்து கொண்டிருந்தார்.

சீடன் தாமதிக்கவில்லை, உடனே ஆற்றில் குதித்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றிக் கரையிலே போட்டுவிட்டு தொடர்ந்து துறவியுடன் நடந்தான்.

சிறிது தூரம் போனார்கள் துறவி எதுவுமே பேசவில்லை.

பின் துறவி சொன்னார், "என்ன இருந்தாலும் நீ அந்தப் பெண்ணைத் தொட்டுத் தூக்கியது சரியில்லை, எனக்கு அது பிடிக்கவில்லை" என்றார்.

அதற்குச் சீடன் சொன்னான், "குருவே, நீங்கள்தான் ஆபத்தில் மற்றவர்க்கு உதவ வேண்டும் என்று கற்றுத் தந்திருக்கிறீர்கள், நான் அந்தப் பெண்ணைக் காப்பாற்றிக் கரையில் போட்டதோடு சரி எல்லாம் மறந்துவிட்டேன், நீங்கள்தான் இன்னமும் அந்தப் பெண்ணைக் நினைத்துக் கொண்டு வருகிறீர்கள்" என்றான்.

இதைக் கேட்ட துறவி வெட்கித் தலைகுனிந்தார்.

2 comments:

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்