Friday, September 30, 2011

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி..

 யார் யாரோ எத்தனையோ சொற்பொழிவுகளிலும், மேடைகளிலும்,தொலைக்காட்சிகளில் அரைமணிநேர நிகழ்ச்சியாகவும்
விளக்கிக்கூறிய திருக்குறளை, இதுவரை எத்தனை தடவை நாம்
செவி மடுத்துக் கேட்டிருப்போம்?

பெரும்பாலான இளைய தலைமுறைகள் இது போன்ற நிகழ்ச்சிகளைக் கேட்பது அவமானம் எனவும்,தகுதிக்குறைவு எனவும் நினைப்பது ஏன்?

தமிழன் தானே நாமெல்லாம்? அதில் எவருக்கேனும் சந்தேகம் இருக்கிறதோ என்னமோ தெரியவில்லை.


மதம், மொழி,நாடு என அனைத்தையும் சமமாகப் போற்றி,
பொதுவான நெறியை அறுதியிட்டு கூறும் ஒரு மறைநூல் திருக்குறள்!

சிறுவயதில், மனப்பாடப் பகுதியாக திருக்குறள் வந்த காரணத்தால் ,
தவிர்க்க முடியாமல் , படித்து மனதில் பதியவைத்துக் கொண்டோம்.

அதனாலோ என்னமோ இன்றைய காலத்தில் திருக்குறள் புத்தகங்கள் பல வீடுகளில் ,ஏதோ காட்சிப்பொருளாகவே காணக்கிடைக்கிறது.

நானும் பல ஆண்டுகளாக திருக்குறளின் சிறப்பை அறியாதவனாய் காலத்தை கடத்தியுள்ளதை நினைக்கும்போது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது.

நம் வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக திருக்குறள் இருக்கிறது என்பதற்கு சில உதாரணங்கள் தர ஆசைப்படுகிறேன்.

1.எப்படி கற்க வேண்டும்?

 குறள் எண் : 391
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

விளக்கம்:
கல்வி என்பது யாதெனில் , நமது அறியாமையை உடைக்கும் உளி போன்றது.
ஆக, எதனைக் கற்பதானாலும்   சரி, அதனைக் குற்றமற கற்க வேண்டும்.
துளியேனும் அதனைப் பற்றிய ஐயங்கள் தோன்றாத அளவுக்கு தெளிவுடன்,பிழையின்றி கற்க வேண்டும்.
அப்படிக் கற்கும் கல்வியை கற்றதோடு விடாமல்,  கற்றவாறு நடைமுறையில் வாழ்ந்து
காட்டவேண்டும்.இதுதான் கற்றல் முறை என்று வள்ளுவர் கூறுகிறார் 

2. எதனைக் கற்க வேண்டும்?

எப்படி கற்க வேண்டும் என்று சொல்லிவிட்டோம்.எதனைக் கற்பது என்று சொல்லாவிட்டால்
அறிவுரை முற்று பெறாது என்று நினைத்த வள்ளுவர் , அடுத்த குறளில் அதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
 
குறள் எண் : 392

எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு


விளக்கம்:
உயிர்களாய்ப் பிறந்தவர்கள் உயர்வு பெற வாழ வேண்டும் எனில் கல்வி மிக அவசியம்.
அதிலும், "எண்களின் அறிவு சார்ந்த கல்வியும்,தமிழ் எழுத்துக்களை பிழையற எழுதவும் பேசவும்
கற்றுக்கொடுக்கும் கல்வியும், வாழ்க்கைக்கு மிகத்தேவையானவை. இந்த இரண்டையும் நம் கண்களைப்
போலக் கருத வேண்டும்" என்று அழகாகக் கூறுகிறார்.


இதுபோல, ஒவ்வொரு குறளும் அளவில்லாத கருத்துகளைத் தன்னகத்தே
கொண்டிருப்பதை நாம் உணர வேண்டும்.

அடக்கம்,ஒழுக்கம்,விருந்தோம்பல் முதலான அடிப்படைவாழ்க்கை அறங்களைப் பற்றி அறத்துப்பாலிலும் ,
நட்பு,அரசியல் முதலானவை பொருட்பாலிலும் ,காதலிப்பதன் அருமை , மணம் முடித்தபின் வாழ்வின் இனிமை ஆகியவற்றை இன்பத்துப்பாலிலும்,அற்புதமாக இருவரிக்கவிதைகளாக வடித்து வைத்திருக்கிறார் வள்ளுவர்.
அதனை படித்து இன்பமுறுவதற்கு நமக்கு வலிக்கிறது!

யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற  வேண்டியே இந்தப் பதிப்பினை வெளியிடுகிறேன்.
 நீங்களும் இதனை உணர்ந்து, புரிந்து கொள்ள திருக்குறளைப் படிக்கத் துவங்குங்கள்


படிக்க உதவும் கரங்கள் :

தினமலர்-குறள் அமுதம்
திருக்குறள் - பரிமேலழகர் உரை

Tuesday, September 27, 2011

இப்படியும் ஒரு கதை! (படிப்பவர்கள் பாவம்)

அவளைப் பற்றி ஏதாவது எழுதலாம் என்று தோன்றியது.
என்ன எழுதலாம்.
கவிதை? அது அவ்வளவா நமக்கு வராதே!
இருந்தாலும் முயற்சித்துப் பார்க்கலாம்.

"நிலவுக்கும் அவளுக்கும் ஆறு வித்யாசம் !
நிலவோ என்னவள் முகம் போல வட்டம்
அவளோ நெளிவுகள் சுமக்கும் வளைந்த ஊசி!!"

ஐயோ வேணாம்! இதைப் படிப்பவர்கள் பாவம்!.

புதிதாக ஒரு ஆராய்ச்சி செய்யலாம் அவளை வைத்து.
ஆம். அதுதான் சரி.மீண்டும் நிலவைக் கூப்பிடவேண்டும்!

நிலவையும் அவளையும் ஒருசேர நிற்கவைத்து,
இருவரின் ஒளிவீச்சையும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்!

நிலவைக் கூட்டிக்கொண்டு அவளை பார்க்கப் போனேன்.

அங்கு நம் கவிப்பேரரசு நிற்கிறார்!
அவருடன் கம்பனும் ஷெல்லியும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்!

அவர்களோடு போட்டி போட என்னால் இயலாது.
அவர்களை முந்திக்கொண்டால் தான் நமக்கு மரியாதை!

கவிப்பேரரசை வணங்கி நின்றேன்.
"காலம் கடந்த காலத்தில்
தங்களுக்கு காதல் கவிதை எதற்கு அரசே!
ஏதோ இந்தப் பாவப்பட்ட இளைஞனின்
பரிதாபக் காதல் கூட வேண்டி,
இந்த இரு கவிமன்னர்களைக் கூட்டிக் கொண்டு
வேறு அழகியைத் தேடுங்கள்!"
என்று காலில் விழாத குறையாய் கேட்டுப் பார்த்தேன் .

அவர் நல்ல மனிதர். என்னிடம் சொன்னார், "அரை குறை கவிதை என்றாலும்
நீ தமிழில் எழுதுவதால் ,கவிஞனாய்  எனக்குத் தெரிகின்றாய்!
இந்தக் காதல் வெற்றி பெற்றால் நீ அவளின் இதயம் ஆகிடுவாய் !
அது சேராமல் போனாலோ ஒரு காவிய கவிஞனாய் மாறிடுவாய் !
எது நடந்தாலும் நன்மை உனக்குத்தான்!வாழ்த்துகள்!! "

அவர்கள் சென்று விட்டார்கள்!

என் அழைப்பின் பேரின் இருவர் வந்து இருக்கிறார்கள் ஆராய்ச்சி செய்து முடிவினைக் கூற !

நிலவையும் அவளையும் ஒருசேர நிற்க வைத்து ஆய்வுகள் ஆரம்பமானது.

இருவர் ஈர்ப்பினை ஒப்பிட்டுப்பார்க்க  நியூட்டன் ஆய்வுகள் துவங்கி விட்டார்.

ராமன் விளைவைக் கண்டுபிடித்த ராமன்,என்னவள் முகத்தின் ஒளியையும்,
நிலவின் பிரகாசிப்பையும் அலசிப்பார்க்க துவங்கிவிட்டார்.

ஆராய்ச்சி முடிவை எதிர்பார்த்து வானத்தில் உள்ள நிலவின் குடும்பத்தாரும்,
பூமியில் பூக்கள் முதலான உயிர்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்!
அனைவரை விட நான், என்னவள்தான் வெற்றிபெறுவாள் என்ற உறுதியுடன்,சந்திர மண்டல செல்வர்களிடம்,"வெற்றி பெறுபவர்களுக்கு மற்றவர் அடிமை" என பந்தையம் கட்டியுள்ளேன்.

இதோ முடிவுகள்!! பாவம் நிலா!
என்னவளிடம் தோற்று , பொலி
விழந்த முகத்தோடு
வானம் செல்லப் பார்க்கிறது.
நிலவுக்கு சில அறிவுரைகள் கூற நினைத்தேன்!

"நிலவே! ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் உன் அழகினை மெச்சிய உலகம் இன்று
உன் தோல்வியைக் கண்டு வருந்துகிறது .
இருந்தாலும் உன் பழம்பெருமையினை அழிப்பார் எவருமில்லை.
உன்னை அடிமையாக்கும் எண்ணம் எனக்கு இல்லை.
என்ன நடந்தாலும் அழுதுமட்டும் விடாதே!
அப்படி அழும்போது உன்னின்று உதிரும் கண்ணீர் துளிகண்டு
நாசா மனிதர்கள் நீர்தேடி வரக்கூடும்! "

அனைவரும் சென்றுவிட்டனர்.
அவளும் நானும் தனிமையாய் !

அவள் இப்போது புன்னகை பூவுடன் என்னை நோக்கினாள்!
"உந்தன் செய்கை எனக்கு எல்லையில்லாத இன்பத்தினை அளித்தது!
எனக்கு ஒரு ஆசை. அதை நிறைவேற்றுவாயா? " என்று கேட்டாள்.

"என்னவென்றாலும் கேள்!" என்றேன்!

"என் கல்லூரிக் காதலன் அங்கு காத்திருக்கிறார்!
இன்று பதிவு திருமணம்!
உன் வரவில் நான் மகிழ்வடைவேன்!
என்னைக் கூட்டிச் செல்வாயா விரைவாக?!" என்றாள்!
"அப்படியே ஆகட்டும் " என்றேன்!

மனதுக்குள் நடந்த வாக்குவாதங்கள்:
என்னுடன் இவளை சேர்த்து வைக்க
பாவம் ,தன் அழகை குறைத்துக்கொண்ட நிலவுக்கு நான்  என்ன பதில் சொல்வேன்?
அத்தனை அவமானம் தாங்கியும், பூரண சிரிப்போடு
என்னைப் பார்க்கும் நிலவே! இனி நீ தான் என் காதலி!
இனிமேல் நான் கவிஞன்!
உன்னைப் பற்றி காவியம் பாட,
பேனா எடுத்த கவிஞன்!

குறிப்பு:
இந்தக் கதையில் குறிப்பிட்ட கதாப்பாத்திரங்கள், என் சொந்த நாடகத்தில்
உங்களை உங்கள் அனுமதியின்றி பயன்படுத்தியமைக்கு என்னை மன்னிக்க வேண்டும்!
அனைவருக்கும் நன்றி !! 

                                       ** முடிந்தது **

Friday, September 23, 2011

சீ சீ இந்தப்பழம் புளிக்கும்!!

கடந்த சில பதிப்புகளில் நான் காதலை மையமாக்கி இரண்டு கவிதைகள் எழுதியிருந்தேன்.

காதலின் ஆழமும் அதன் பாதிப்பும் அழகாக பிரதிபலிக்கிறது என்றும் அதனால் எனக்கு நிஜ வாழ்க்கை அனுபவம் நிறைய இருக்கிறது என்றும் நண்பர்கள் மின்னஞ்சல் மூலம் அவர்களது கருத்தை சொல்லி இருந்தார்கள்.
ஆனால், அதில் பாதி உண்மை. ஆமாம். அனுபவம் இருக்கிறது. அதற்காக காதலித்த அனுபவம் என்று அர்த்தமில்லை.
கண்முன்னே பல காதல் கைகூடியதையும் சில காதல் உடைந்து வருந்தியதையும் கண்ட அனுபவம் போதும் இது போல கவிதை படைப்பதற்கு.
காதல் மேல் எனக்கு ஒரு பயம் கலந்த மரியாதை இருக்கிறது!
(கணக்கு வராது என்பதால் எனக்கு கணக்கு வாத்தியார் மீது இருப்பதுபோல!!)

உண்மைக்காதல், உயிர்க்காதல் என்றெல்லாம் உரைக்கும் அன்பர்கள் ,
உண்மையாகவும், உயிருக்கு மேலாகவும் நினைப்பதற்கு பெயர்தான் காதல் என்பதை உணர வேண்டும்.

"காதல் இல்லையேல் சாதல்" என்ற பாரதியின் வரிகளை கொஞ்சம் நினைத்துப் பார்க்கிறேன்.
இத்தனை ஆண்டு காலம் பார்த்த காதல் திரைப்படங்களை கண்முன் நிறுத்துகிறேன்.
சோக கீதங்களைக் கேட்டு கண்ணீர் சிந்துகிறேன்.

'வேண்டவே வேண்டாம் இந்த வலிகள் நமக்கு!!' என்ற அந்த பயம்,மரணபயத்தை விட கொடுமையானதாக எனக்கு
அன்று தோன்றியது.

இனிவரும் காதல் படைப்புகள் முழுக்க முழுக்க கற்பனையோ அன்றி அதற்கும் என் நிஜ வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை என அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆக,என்னைப் பற்றிய அந்த வீரதீர எண்ணங்கள் இனி யார்க்கும் வராது என நம்புகிறேன். !!

ஆகவே, காதலிப்பவர்களை வணங்கி, காதலில் விழாதவர்களை வாழ்த்தி, சேர்ந்தோரை ஆசிர்வதித்து, பிரிந்தோரை ஆறுதல்கூறி,விடைபெறுகிறேன்,
நன்றி வணக்கம்!!

Thursday, September 15, 2011

மனிதனாய் வாழ வேண்டுமா?

இன்று காலை நான் படித்த இரண்டு குறுஞ்செய்திகள் தான் என்னை இந்த பதிப்பை வெளியிட தூண்டின.
வாழ்க்கை என்பது எப்படி இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம் ?
ஆனால் நடப்பது என்ன ? அதுபோலவே மனிதர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் ? அப்படி நல்லவராய் இருப்பவர்கள் உண்மையில் நல்லவர்களா? 

இது போல எத்தனையோ எதிரும் புதிருமாக எண்ணங்கள் வருவதை யாராலும் மறுக்க முடியாது.

"வார்த்தைகளை சுமப்பது தான் கவிதை - வருத்தங்களை சுமப்பது தான் வாழ்க்கை
கற்பனையோடு வாழ்பவன் தான் கவிஞன்- காயங்களோடு வாழ்பவன் தான் மனிதன் "

என்பது பாதி உண்மையே தவிர முற்றிலும் ஏற்க முடியாத ஒன்று. வாழ்க்கை என்பது ,காதலும் கண்ணீரும் சிரிப்பும் ஏக்கமும் கலந்த ஒரு அற்புத நாடகம்.
 அவை மாறி மாறி வருமே தவிர ஒரே மாதிரி நிச்சயமாக இருப்பது இல்லை.
அது போல கவலை இல்லாத மனிதன் இந்த உலகத்தில் இல்லை. அப்படி இருப்பவர்கள் இருவர் - குழந்தைகள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டோர் என் அறிஞர்கள் கூறுகிறார்கள்.அப்படி கவலை சுமக்கும் மனிதன் நினைக்க வேண்டிய வரிகள்
"ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியை வேண்டும் அளவுக்கு கவலை வேண்டும் என நினைப்பதில்லை.
மழை வேண்டாம் - வானவில் மட்டும் போதும் என்று நினைப்பது எப்படி சாத்தியம் இல்லையோ அதுபோலத்தான் இதுவும்.
ஆக,கண்ணீர் துளியோ , மழைத்துளியோ எதுவானாலும் ரசிக்கப் பழகிவிட்டால் வாழ்க்கை இனிப்பாகும்"

இனி மனிதர்களுக்கு வருவோம். கைகளில் உள்ள ஐந்து விரல்களும் ஒன்றுபோல இருப்பதும் இல்லை அதுபோல் உலகில் வாழும் அனைவரும்  நல்லவர்களாக இருப்பதில்லை  என்பது தான் உண்மை.ஆகவே யார் நல்லவர் அப்படி இருப்பவர் உண்மையில் நல்லவரா எனக் குழம்பாமல் வள்ளுவர் சொன்ன இந்த யோசனையை மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.

"குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்"

பொருள் :ஒருவரிடம் நல்லவை, தீயவை என குணங்களை நீ  கண்டாய் எனில் அவற்றில் எது மிகையாய் தெரிகிறதோ அதனை எடுத்துக்கொள்.

சிந்தித்து வாழுங்கள்- சிறப்பாய் வாழுங்கள்!!

"கண்ணுக்குத் தெரிந்த மனிதனை நீ மதிக்க மறந்து விட்டால், 
கண்ணுக்கு தெரியாத கடவுளை மனதார மதித்தும் பயன் இருக்க போவதில்லை"

என்பதை நினைத்து , நிம்மதியான வாழ்க்கையை அமைத்து வாழ அன்புடன் வேண்டுகிறேன்.

Monday, September 12, 2011

என் தலைவன் பாரதி(December 11, 1882 – September 11, 1921)

நேற்று 11-09-11 பாட்டுத்தலைவன் பாரதியின் நினைவுநாள்.

 இந்த நாளில் அவரைப்பற்றி சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி இவ்வையம் தழைக்குமாம்"என்று பெண்ணடிமைத்தனம் ஓங்கியிருந்த நாளில் வெளிப்படையாய்ப் பாடியவர்.


அதுமட்டுமின்றி,
"சாத்திரங்கள் பலபல கற்பராம்;
சவுரியங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும் கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்!
என, பாரத நாட்டின் புதுமைப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று
கனவு கண்ட ஒரு கவிஞன் இந்த பாரதி.



பிராமண குலத்தில் பிறந்தாலும் அர்த்தமற்ற மூட சடங்குகளை வெளிப்படையாக
எதிர்த்து, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவரும் அவர்தான்.

கவிதைக்கு புது வடிவம் கொடுத்து, பழைய சமஸ்கிருத சம்பாஷணைகளை ஒதுக்கி,
பாமரர்க்கும் புரியும் படி, பாடி வைத்தவர் பாரதி.

"ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று!"
என சுதந்திர உணர்வின் ஆனந்தத்தை, 1920களிலேயே பாடிவைத்தவர் அவர்.
இந்தியாவின் அடிமைத்தளை அவிழும் முன்னரே இந்த மண்ணுலக வாழ்வைத் துறந்தவர் பாரதி.

பார்போற்றும் கவிஞனின் இறுதிச் சடங்கில் வெறும் 14 பேர் மட்டும் தான் கலந்து கொண்டார்கள் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது.
அவர் வாழ்ந்த போது அவரின் அருமை அறியாத மக்கள், இன்று அவரை போற்றித் துதிக்கின்றார்கள்.

"மனிதனுக்கு மரணமில்லை- வாட காலா! உன்னை என் காலால் எட்டி உதைக்கிறேன் "என தனது இறுதி சொற்பொழிவில் முழங்கியவர் பாரதி.

"தேடிச் சோறுநிதம் தின்று,
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி,
மனம்வாடி துன்பமிக உழன்று,
பிறர் வாட பல செயல்கள் செய்து,
நரை கூடி கிழப்பருவம் எய்தி,
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல
வேடிக்கை மனிதரைப் போல்
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

இனி என்னைப் புதிய உயிராக்கி
எனக்கேதுங் கவலையறச் செய்து
மதிதன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!!"

 என வேண்டிய பாரதியின் இந்த நினைவுநாளில் மதப்பற்று அறுத்து, சாதிபேதம் மறந்து,தமிழைப் போற்றி வாழ நாம் உறுதி எடுப்போம்!

வெல்க தமிழ்! வாழ்க பாரதம்!

Monday, September 5, 2011

ஒரு பைத்தியகாரனின் காதல் கதை

பனியில் மறைந்த நிலவின் ஒளியில்,
ஈரம் தொலைத்த இரவுக் காற்றில்,
நட்சத்திரங்களைத் தேடி
நடுரோட்டில் பயணம்!

வண்ணம் காய்ந்திடா  வானவில்காண,
மண்ணில் மறைந்த மழைக்குள் தேடல்!

என்னைத் தொடரும் நிழலுக்கும்
உன்னைப் பிடிக்கிறதே அது ஏன்?
மறக்கச் சொல்லி நீ சென்ற பிறகும்,
மனது கேட்கவில்லை அது ஏன்?
உன்னைக் காதலித்தேனே அதில் தவறா?
உண்மையாய் காதலித்தேனே அதன் விளைவா?

உன் பெயரைச் சொன்ன உதடுகள்,
உன் முகம் மட்டும் நினைத்த நினைவுகள்,
உன்னுடன் நடந்த பாதைகள்,
உனக்கென எழுதிய கவிதைகள்-இன்று 
இவைதவிர எதுவும் நினைவிலில்லை எனக்கு !

சாலை ஓரத்தில்,
பேருந்து நிறுத்தத்தில்,
பசி மறந்து ,வெற்றிலைக் கறை படிந்த சுவரில் மயங்கிச் சாய்கையில்,
இறுதியாய் மூச்சும் என்னை பிரியத் துணிகையில்,
உன்னை நினைத்தே உலகை நீங்கும் நான்
யாரோ சொல்லிக்கேட்ட கடைசி வார்த்தை, " பாவம் இந்த பைத்தியகாரன்!".