Tuesday, November 18, 2014

படித்ததில் பிடித்தது 13- சாமியாரா இருக்கப் போறாரு! (குட்டிக்கதை)


ஒரு கிராமத்தில் மதன் என்பவன் மனைவியோடு வாழ்ந்து வந்தான். அவர்கள் இருவரும் பிச்சைக்காரர்களுக்கு ஒரு பிடி சோறு போட மாட்டார்கள். இதனால் பிச்சைக்காரர்கள் யாரும் அவர்கள் வீட்டுக்கு வருவது இல்லை.

இரவு நேரம், வெளியூரில் இருந்து பிச்சைக்காரன் ஒருவன் அங்கே வந்தான். காவி வேட்டி கட்டியிருந்த அவன், சாமியாரைப் போலக் காட்சி அளித்தான்.
அந்த வீட்டைப் பார்த்த அவன் கதவைத் தட்டினான்.

""அம்மா! தாயே! இந்த ஏழைக்குப் பிச்சை போடுங்கள்,'' என்று குரல் கொடுத்தான்.

கதவைத் திறந்த மதன், ""பிச்சை எதுவும் கிடையாது. வேறு இடம் பார்,'' என்று கோபத்துடன் சொல்லி விட்டு, கதவைப் படீரென்று சாத்தினான்.
இரவாகி விட்டது. வேறு எங்கும் செல்ல முடியாது. இங்கேயே தங்கிவிட வேண்டியதுதான் என்று நினைத்தான் அவன்.
""இந்த வீட்டில் பிச்சை கிடைக்க வில்லை. அதனால், அந்த ஊரில் செய்தது போல செய்துவிட வேண்டியதுதான். வேறு வழி இல்லை,'' என்றபடியே திண்ணை யில் அமர்ந்தான்.
அவன் பேசியது வீட்டிற்குள் இருந்த இருவருக்கும் கேட்டது.
""என்னங்க... வந்தவர் பெரிய சாமியார்னு நினைக்கிறேன். நாம வேற பிச்சை இல்லேன்னு சொல்லிட்டோம். அவர் கோபமாக இருக்காரு. அந்த ஊரில் செய்தது போல செய்யப் போறேங்கறாரு. என்ன செய்யப் போறாரோ தெரியவில்லை. எனக்குப் பயமா இருக்கு,'' என்று நடுக்கத்துடன் சொன்னாள்.
""அவர் பேசியதைக் கேட்டு எனக்கும் பயமாகத்தான் இருக்குது. பிச்சைக்காரன்னு நினைச்சு அவர்கிட்ட கோபமா பேசிட்டேன். அவர் நம்மைச் சபிச்சாலும் சபிச்சுடுவார். இப்ப என்ன செய்யறது?'' என்று கலக்கத் துடன் கேட்டான் அவன்.
""அவர் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்போம். பெரியவரான அவர் நம்மை மன்னிச்சுடுவார்,'' என்றாள் அவள்.
கதவைத் திறந்த இருவரும் அந்த பிச்சைக்காரன் காலில் விழுந்தனர்.
""எங்களை மன்னிச்சிடுங்க... நீங்க யார்னு தெரியாம அப்படிப் பேசிட்டோம். சிறிது நேரம் பொறுமையா இருங்க. உங்களுக்கு விருந்தே போடுகிறோம்,'' என்றனர்.
ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தான் பிச்சைக்காரன்.
"அவர் கோபம் தீரவில்லை' என்று இருவரும் நினைத்தனர்.
சமையல் அறைக்குள் சென்ற அவள் சமைக்கத் தொடங்கினாள். மதனும் உதவி செய்தான்.
சுடச் சுட விருந்து தயாரானது.
வெளியே வந்த அவர்கள் இருவரும் அவனைப் பணிவுடன் அழைத்தனர்.
பசியுடன் இருந்த பிச்சைக்காரன் அவர்கள் தந்த விருந்தைச் சுவைத்துச் சாப்பிட்டான். பெரிதாக ஏப்பம் விட்டான்.

அவர் கோபம் தணிந்து விட்டது. இனி ஆபத்து இல்லை என்று இருவரும் நினைத்தனர்.

அவனுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்தனர். அவற்றையும் அவன் வாயில் போட்டு மென்றான்.

""நல்ல சாப்பாடு போட்டீங்க. இப்படி எங்கேயும் சாப்பிட்டது இல்லை.நீங்க நல்லா இருக்கணும்,'' என்று வாழ்த்தினான் அவன்.

தங்களை என்ன செய்ய நினைத்தார் என்பதை அறிய விரும்பினான் மதன்.
""சாமி! நீங்க எங்க வீட்டுத் திண்ணையில் அமர்ந்தீங்க. அந்த ஊரில் செய்தது போல இங்கேயும் செய்ய வேண்டியதுதான் என்றீங்க. அந்த ஊரில் என்ன செய்தீங்க?'' என்று கேட்டான்.

""இதே போல ஒரு ஊரில் பிச்சை கேட்டு அலைஞ்சேன். யாரும் பிச்சை போடவில்லை. ஒரு வீட்டுத் திண்ணை யில் இன்று பட்டினி என்றபடியே படுத்துக் கொண்டேன். அந்த ஊரில் செய்தது போல இங்கும் செய்ய வேண்டியதுதான் எனச் சொன்னேன்,'' என்றான் பிச்சைக்காரன்.
தாங்கள் ஏமாந்ததை எண்ணி இருவரும் திகைத்து நின்றனர்.

-Dinamalar

1 comment:

  1. ஒரு நல்ல கதையைத்தான் எடுத்தாண்டிருக்கிறீர்கள்.
    நன்று.

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்