ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. வாத்துக்கள் எல்லாம் கூட்டமாக வெள்ளத்தில் நீந்தியபடி, இரை தேடிக் கொண்டிருந்தன.
ஆற்றங்கரையில் கழுதைகளும் கூட்டமாக நின்று கொண்டு, புற்களை மேய்ந்து கொண்டி ருந்தன. அந்தக் கழுதைகள் வாத்துக்களை நோக்கின.
""நண்பர்களே! நம்மை விட உருவத்தில் சிறிய இந்த வாத்துக்கள் என்ன மாதிரி தண்ணீரில் நீந்துகின்றன. அவைகள் எல்லாம் தண்ணீருக்குள் மூழ்கியபடி சாகசத்தை நடத்துகிறதே! நம்மால் இந்த அளவுக்குத் தண்ணீரில் இறங்கி சாகசங் களைச் செய்ய முடிய வில்லையே!'' என்று கவலையுடன் கூறியது ஒரு கழுதை.
அதைக் கேட்ட மற்ற கழுதைகளும், ""ஆமாம் நண்பனே! நீ சொல்வ தெல்லாம் உண்மைதான். அதில், எந்தவிதமான மாற்றமும் இல்லை. வாத்துக்கள் எல்லாம் மகிழ்ச்சியோடுதான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றன. ஒன்றையொன்று தண்ணீருக்குள் நீந்தியபடி கலகலப்பாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக் கின்றன. நாமும் அந்த வாத்துக்களைப் போன்று வாழ வேண்டும்! அதற்கு என்ன செய்யலாம் என்பதை சேர்ந்து முடிவெடுப்போம்!'' என்றது.
"நண்பர்களே! இது நல்ல யோசனைதான். நாம் வாத்துக்களைப் போல தண்ணீரில் நீந்த வேண்டுமென்றால், நமக்கு இறக்கைகள் முளைக்க வேண்டும். இறக்கைகள் மட்டும் நமக்கு முளைத்து விட்டால், நாம் வாத்துக் களைப் போன்று பறக்கலாம்; தண்ணீரிலும் நீந்தலாம்,'' என்றது ஒரு கழுதை.
மற்றொரு கழுதையோ அதை மறுத்தது.
"நண்பர்களே! நான் ஒரு போதும் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டேன். நமக்கு இறக்கை கள் முளைத்து விட்டால் மட்டும் நாம் பறந்து விட முடியாது. நாம் வாத்துக்களைப் போன்று குள்ள உருவமாக மாறவேண்டும். இன்னும் சொல்லப் போனால், நாம் வாத்துக்களாக மாறி விட வேண்டும். அப்போதுதான் நாம் வாத்துக் களுக்கு இணையாக தண்ணீரில் நீந்தியபடி சாகசங்களை நிகழ்த்திக் காட்ட முடியும். அந்த வாத்துக்களுக்குப் போட்டியாக நம்முடையத் திறமைகளை எல்லாம் வெளிப்படுத்த முடியும்!'' என்றது.
அந்தக் கழுதையின் கருத்தை எல்லா கழுதைகளும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டன.
"நண்பனே! நீ சொல்வது சரி! நீ கூறியதில் ஆழமான கருத்தும் இருக்கிறது. நாம் வாத்துக் களாக மாறி விட்டால், நாம் நினைப்பது எல்லாம் எளிதாக முடிந்து விடும். அதன் பின்னர் நமக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், நாம் வாத்துக்களாக மாற என்ன செய்ய வேண்டும்? அதனைப் பற்றியும் நீயே ஒரு கருத்தினைத் தெரியப்படுத்து. அந்தக் கருத்துக்களின்படியே நாங்கள் எல்லாரும் நடந்து கொள்கிறோம்,'' என்றது.
உடனே அந்தக் கழுதையும் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தது. பின்னர் மற்றக் கழுதைகளை நோக்கியது.
"நண்பர்களே! நான் சொல்வதை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நாம் அனைவரும் இந்த ஆற்றங்கரையில் அமர்ந்து ஆண்டவனை நினைத்து தவம் இருப்போம்! நாம் எல்லாரும் ஒரு மனதாக ஆண்டவனைக் குறித்து தவம் இருந்தோமானால் நம்முடைய தவத்திற்கு மனமிரங்கி, ஆண்டவன் நம் முன்னே வருவார். உடனே, நாம் அவரிடம், "ஆண்டவா! ஆண்டவா! நாங்கள் எல்லாரும் வாத்துக்களாக இருக்க வேண்டும். எங்களது கழுதை வடிவத்தை தவிர்த்து, நாங்கள் எல்லாரும் வாத்துக்களாக மாற வேண்டும். உடனே எங்களை வாத்துக்களாக மாற்றிவிடு' என்று ஆண்டவனை வேண்டுவோம்.
"நாம் அவ்வாறு ஆண்டவனை வேண்டுகிற நேரத்தில், அவரும் மனம் இரங்கி, நமக்கு உதவிகளைச் செய்வார். நாமும் மகிழ்ச்சியோடு வாத்துக்களாக உருவம் மாறிக் கொள்ளலாம்,'' என்றது.
அந்தக் கழுதையின் யோசனையைக் கேட்டு, மற்ற கழுதைகள் எல்லாம், "ஆஹா அற்புதம்... அற்புதம்!'' என்று புகழத் தொடங்கின.
உடனே எல்லாக் கழுதைகளும் அமைதி யோடு வானத்தைப் பார்த்தபடி, ஆண்டவனை வேண்டத் தொடங்கின.
நீண்ட நேரமாக தங்களின் கால்களின் வலியைப் பொருட்படுத்தாமல், ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன.
தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்த வாத்துக் களோ கழுதைகளின் செயல்களை கவனித்தன.
"நண்பர்களே! அங்கே பாருங்கள் அந்தக் கழுதைகள் எல்லாம் கூட்டமாக ஒற்றுமையுடன் வானத்தை நோக்கிப் பார்த்தவாறு நின்று கொண்டிருக்கின்றன,'' என்றது ஒரு வாத்து.
"நண்பர்களே! கழுதைகள் அழகாக இருப்பது உண்மைதான். அவை உடலெங்கும் ரோமங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. அது மட்டுமில்லாமல் அவைகள் நம்மை விட அளவில் உயரமாகக் காணப்படுகின்றன. அவைகளுக்கு நீண்ட வெள்ளை மூக்கு இருக்கிறது. முடிகள் எல்லாம் அடர்த்தியாக இருக்கிறது. வால் ஒன்று பட்டுக் குஞ்சலம் போன்று பின்புறம் தொங்கிக் கொண்டிருக் கிறது. அது மட்டுமில்லாமல், அவைகளுக்கு நான்கு கால்கள் இருக்கின்றன... அடேயப்பா! இந்தக் கழுதைகளின் அழகை நாம் வர்ணித்துக் கொண்டே இருக்கலாம் போன்று தோன்று கிறதே!'' என்று கூறியது மற்றொரு வாத்து.
"பிறந்தால் இந்தக் கழுதைகளைப் போன்று பிறக்க வேண்டும். இப்படி நாம் வாத்துக் களாக வாழ்ந்து தண்ணீரிலேயே துன்பப்பட்டபடி காலத்தை ஓட்டிக் கொண்டி ருக்கிறோமே!'' என்று கவலையுடன் கூறியது இன்னொரு வாத்து.
"நண்பர்களே! நாம் எல்லாருமே நம்மை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக் கிறோம்! அந்தக் கவலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமானால் நாம் கழுதைகளாக உருவம் மாற வேண்டும்,'' என்றது ஒரு வாத்து.
"நண்பர்களே! நாம் கழுதைகளைப் போல உருவம் மாற ஆண்டவனை வேண்டினால் போதும். நாம் எல்லாரும் ஒற்றுமையுடன் நமது பிரார்த்தனையை ஆண்டவனிடம் தெரியப்படுத்தினால் அவர் நிச்சயமாக நமக்கு அருள் தருவார். நாமும் நம்முடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்,'' என்றது வேறொரு வாத்து.
உடனே எல்லா வாத்துக்களும் ஆண்டவ னிடம் தங்களது பிரார்த்தனையைத் தெரியப் படுத்த வேண்டும் என்று முடிவு செய்தன.
வாத்துக்கள் எல்லாம் தண்ணீரை விட்டு கரையேறிக் கொண்டன.
கரையில் நின்றபடி எல்லா வாத்துக்களும் தங்களது பிரார்த்தனையை ஆண்டவனிடம் தெரியப்படுத்த வானத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.
அந்த நேரத்தில் ஆற்றங்கரையில் ஆமை ஒன்று மெல்ல, மெல்ல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.
அந்த ஆமையானது கழுதைகளின் அருகே வந்தது. ஏன் எல்லாரும் ஒன்று சேர்ந்தபடி ஆகாயத்தையேப் பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள்?'' என்று கேட்டது ஆமை.
"ஆமையே! நாங்கள் எல்லாரும் ஆண்டவன் எப்போது வருவார் என்று ஆகாயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறோம். நாங்கள் எல்லாரும் வாத்துக்களைப் போன்று உருவம் மாறலாம் என்று முடிவு செய்துள்ளோம்,'' என்றது ஒரு கழுதை.
அதனைக் கேட்ட ஆமை, "" நீங்கள் ஏன் வாத்துக்களைப் போன்று உருவம் மாற வேண்டும்?'' என்று கேட்டது.
"ஆமையே! எங்களால் தண்ணீரில் நீந்தி விளையாட முடியவில்லை. நாங்கள் வாத்துக் களைப் போன்று உருவம் மாறிக்கொண்டால், தண்ணீரில் நீந்தி விளையாடலாமே! அதனால் தான் வாத்துக்களைப் போன்று உருவம் மாறிக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் எல்லாரும் கடவுளைக் காண வேண்டி வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்,'' என்றன கழுதைகள்.
"கழுதைகளே நீங்கள் வாத்துக்களைப் போன்று இருக்க வேண்டும் என்று ஆண்ட வனைக் குறித்து தவம் இருப்பதைப் பார்க்கிற போது எனக்கு மிகவும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது,'' என்றபடி கூறிக்கொண்டு சென்றது ஆமை.
பின்னர் அது மெல்ல, மெல்ல வாத்துக் களின் அருகே நகர்ந்து வந்தது.
"வாத்துக்களே! நீங்களும் கழுதைகளைப் போன்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள்! எதனால் இப்படி இருக்கிறீர்கள்? கழுதைகளோ உங்களைப் போன்று மாற வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் யாரைப் போன்று மாற வேண்டும் என்று வானத்தைப் பார்த்தபடி இருக்கிறீர்கள்?'' என்று கேட்டது ஆமை.
" நாங்கள் கழுதைகளைப் போன்று உருவம் மாறிக் கொள்ள வேண்டும் என்று கடவுளைக் குறித்து வேண்டுகிறோம்!'' என்றது ஒரு வாத்து.
அதைக் கேட்ட ஆமைக்கு சிரிப்பு வந்தது.
"வாத்துக்களே! நீங்கள் எல்லாரும் கழுதையைப் போன்ற உருவம் மாற வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டிருக் கிறீர்கள்! கழுதைகளோ உங்களைப் போன்று உருவம் மாறிக்கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் உங்களின் அருமையை உணர்ந்து கொள்ளாமல், ஒருவரையொருவர் உருவம் மாற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்! ஒருவருக்கொருவர் அறியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கிறீர்கள். முதலாவதாக, நீங்கள் உங்கள் பிறப்பின் உருவத்திற்கு மதிப்புக் கொடுங்கள். உங்களை நீங்களே மதியுங்கள்!'' என்று கூறியபடி சென்றது ஆமை. ஆமையின் கருத்தைக் கேட்ட வாத்துக்கள், தங்கள் தவறை உணர்ந்தன. உடனே அவைகள் எல்லாம் கழுதை களிடம் வந்தன. கழுதைகளிடமும் ஆமை கூறிய கருத்தினை தெரியப்படுத்தின. வாத்துக்களும், கழுதைகளும் தங்களின் தவறை உணர்ந்து தெளிவடைந்தன. அதன் பின்னர் இப்படிப்பட்ட முட்டாள் தனமான எண்ணங்களுக்கு இடம் கொடுக்கவில்லை.
- தினமலர்
No comments:
Post a Comment
படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்