Tuesday, November 4, 2014

அன்பென்ற மழையில்! (கவிதை)


அவள் விழியின் ஈரத்தில்,
நானும் நனைந்திருந்தேன்.

பலநாளும் அவள் அழுததுண்டு.
என்மேல் வரும் கோபத்தால்!
இருந்தும் புன்னகைப்பாள்..
என் மனம் குளிர்வதற்கு.

அன்புக் குழந்தையை,
அடிவயிற்றில் சுமந்தபடி,
நித்தம் பல கனவோடு,
வாழ்கின்றாள் என்னவள்!

அன்றைய பொழுதுகளில்,
அப்படி நான் இருக்கவில்லை.

சமுதாயக் கோபத்தில்,
வேலையிழந்த ஏக்கத்தில்,
என்னை மறந்தபடி
வாழ்ந்த அந்நாட்களில்,
என்னவள் கனவுகளை-நான்
கண்டுகொள்ளத் துணியவில்லை!

அன்புகாட்டி அவள் ஊட்டும் சோற்றுக்கும்,
அக்கறையாய் அவள் செய்யும் சேவைக்கும்,
இரக்கம் சிறிதுமின்றி-உடல்
வேதனையை விலையாய்க் கொடுத்தேன்!

அன்றொருநாள் நள்ளிரவில்,
நடுங்கிக் கிடந்தேன் குளிர் சுரத்தில்!
"அம்மா! அம்மா!" என்ற வார்த்தையன்றி,
ஏதும் சொல்லத்துணிவின்றிக் கிடந்தேன்!

அழுது பரபரத்து -என்னவள்
மருத்துவமனை சேர்த்தாள்!
விடியல் வரை உறக்கம் தொலைத்து,
என்னை மடியில் சுமந்திருந்தாள்!

அவள்முகம் பார்த்தேன் விழிகள் திறந்து!
கண்டுகொள்ளா நேரத்திலும்,
காதல் மழை பொழிந்தவள்.
அடைந்துகிடந்த இதயத்தில்
அன்பை வாரித் தெளித்தவள்!

சொல்லி அழ வார்த்தைகள் வரவில்லை.
அவள் வளைகை இறுகப் பற்றிக்கொண்டு ,
விரல்களில் முத்தமிட்டேன்!

சிரித்தபடி அழுதாள்!-அன்று
அவள் விழியின் ஈரத்தில்,
நானும் நனைந்திருந்தேன்.

- ராஜ்குமார் 

1 comment:

  1. அன்பின் ஆழம் சொல்லும் அற்புதமான கவிதை
    அன்பும் கவிதையும் வளர
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்