முடியாத இரவினிலும்,
விடிந்த பொழுதினிலும்,
புரியாமல் வருகின்ற,
கனவுகள் ஏராளம்!
கண்ணுறங்கும் நிமிடம் மட்டும்
வருவதில்லை கனவுகள்.
காத்திருக்கும் நொடிகளில்,
காணாத ஏக்கத்தில்,
எண்ணும்பொருள் ஏதுமின்றி பிறந்துமடியும் கனவுகள்,
தினம் தினம் ஏராளம்.
அன்றொருநாள் அப்படித்தான்,
நல்லதொரு கனவுகண்டேன்.
சாலை ஓரமாக,
சத்தமின்றி நடந்திருந்தேன்.
வருடிய தென்றலில் உள்ளம் சில்லிட்டது!
பிளாஸ்டிக் இல்லாத தெருக்கள்,
பிளவுகள் இல்லாத சாலைகள்.
ஆட்கள் நிறைந்தபோதும்,
கூச்சல் இல்லை அங்கு!
என் நாட்டை சுற்றிப் பார்த்திட-இங்கு
ஏராளப் பயணிகள்.!
சுயவேலைகள் பெருக்கியதில்,
குறைந்த விலைகளால்-குறைவில்லா வாழ்க்கை!
எல்லோரும் ஓர் நிறை!
என் நாட்டில் இன்று,
சுற்றுலாஅமைச்சருக்கும் நுழைவுச்சீட்டு கேட்கப்படுகிறது!
நடிகர் நடிகை மோகம் சுவடின்றி ஒழிந்திருக்கிறது.
சாதிச் சண்டைகளோ,
கொலை,குற்றச் செய்திகளோ,
சீர்கெட்ட நடிகையின் நடுப்பக்கப் படங்களோ,
நிச்சயமாய் இல்லை,
என் கையில் உள்ள நாளிதழில்.
ஒப்பற்ற என் நாடு,
ஒளிர்கிறது இன்று,
சத்தமின்றி வாழும் இந்தச் சராசரி இந்தியனின்
நம்பிக்கை நிறைந்த –ஒரு
நள்ளிரவுக் கனவினில்....!
- ராஜ்குமார்
No comments:
Post a Comment
படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்