Monday, November 19, 2018

குறுங்கதைகள்

Tech Geek

" Tech " என முன்புறமும்," Geek " என்று பின்னாலும் எழுதிய T-shirt அணிந்து கொண்டு, தான் முன்னே வாங்கி வைத்த வடையும்,இட்லியையும் எந்த டேபிளில் வைத்தோம் என்று தெரியாமல் திருதிருவென விழித்தபடி,ஒருகையில் காபி சிந்துவது கூடத் தெரியாமல்,இன்னொரு கையில் "Whatsapp status" பார்த்துக் கொண்டு சுற்றி சுற்றி நடந்த அந்த சக தொழிலாளியைப் பார்த்தபோது மனதில் சொல்லிக்கொண்டேன்..இவன் "
Tech Geek" இல்லை.."Tech Freak ".

கஜா புயல்..

  புயலால் மரங்கள் சரிந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடிய பொழுதில், சரிந்த மரங்கள் மீது நின்றும், வெள்ளத்தின் ஓரத்திலும் நின்று எடுக்கப்பட்ட selfie -கள் சமுதாயத்திற்கு சொல்வது என்ன?

வழி..

Google Map -ல் வழிதேடி எளிதில் நண்பன் வீட்டை வந்தடைந்தேன்..
ஆனால், திரும்பி வரும்போது தான் தெரிந்தது, எனது பயண அனுபவங்கள் எல்லாம் google map history -க்குள் முடங்கி விட்டன என்று..அதில் நான் தொலைத்தவை உணர்வுகளும்,பல மனித முகங்களும்...

அதற்குத் தக..

உதவி என்று கேட்டவர்களுக்கு உன் கைகள் உதவட்டும். ஒரு கை உனக்கு என்றால்,மற்றது,ஏழை எளியவர்களுக்கு கொடுப்பதற்கு என்ற ஒரு சினிமா வசனத்தைக் கேட்டுக்கொண்டே நகர்ந்த என்னிடம் ,"சாமி..சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு சாமி..எதாவது போடுங்க.." என்றது சிறுவனின் கூக்குரல்.."சில்லறை இல்ல.." என்று சொல்லிவிட்டு வழக்கம் போல அவனைக் கடந்து வந்துவிட்டேன்.யாரோ யாரையோ சத்தமாகத் திட்டியது காதில் விழுந்தது..மன்னிக்க வேண்டும்.அது எழுத இயலாத கெட்டவார்த்தை.
எனக்கு எனோ சுருக்கென்றது..


- ராஜ்குமார்
16-11-18 10:50

ஈரமான நெஞ்சம்..

என்னவளிடம் கேட்டேன்..
என்னைப் போன்ற ஒருவனை நீ
சந்தித்தது உண்டா? என்று..

இல்லை என்று சொல்வாள் என
எண்ணிக் கேட்ட கேள்வி அது..

அலட்டல் இல்லாமல் அவள் சொன்னாள்
"உண்டு" என்று..

கோபத்தை உள்வைத்து
ஆர்வமாய் முகம் வைத்து,
"யாரென்று சொல் கண்ணே!" என்று
அமைதியாகக் கேட்டேன்..

நெருங்கி என்னிடம் வந்து,
நெற்றிமுடி வருடியபடி சொன்னாள் ..
" இரவு முடிந்த பின்னும்
மலரிதழ்களின் ஈரம் காய்ந்திடாது பெய்யும்
வான் மழையும் நீயும் ஒன்றுதானே!" என்றாள் ..

புன்சிரிப்பு என்னிடம்...குறும்புச் சிரிப்பு அவளிடம்...

- ராஜ்குமார்
16-11-18 23:45
 

Wednesday, November 14, 2018

அடிக் கள்ளி..


காதல் என்ற பொக்கிஷத்தின்
கள்ளச் சாவியைக்
கேட்டால் தருகிறேன் என்கிறது - உன்
கண்களின் வெட்கம்!

- ராஜ்குமார் (11-11-18 10:45)

தனிமை

பலநாள் கழித்து
என் வீட்டுக்குள் நுழைந்தேன்..

சிதறிக் கிடந்த தானியங்களை
எறும்புகள் தின்றிருந்தன.
சிறு பூச்சிகள் சிலந்திவலையில்
சிக்கிக் கிடந்தன..

வாடி உதிர்ந்த காகிதப் பூக்களைக்
காற்று எடுத்துச் சென்றிருந்தது..

ஆனால்,

என் தனிமை மட்டும்
தின்னப் படாமல்
எனக்காகக் காத்துக் கொண்டிருந்தது..!

                          *        *        *

என் தனிமையை இசை தின்று தீர்க்கிறது..
ஸ்வரங்கள் இனிமையில்
நான் தொலையும் தருணத்தில்
என்னையும் தின்றுவிட்டு
ஏப்பம் விடுகிறது இசை...!

- ராஜ்குமார் (02/11/18 11:00)

ரசிகை

என் எழுத்துகளுக்குக் காத்திருக்கின்றன
அவள் விழிகள்.
என் கவிதை பாடக் காத்திருக்கின்றன
அவள் மொழிகள்..!

என்ன எழுதிக்கொடுத்தாலும் - அவள்
படித்துக்கொண்டே இருப்பாள்!
நான் எழுதுவதை நிறுத்தினாலும் - அவள்
வாசிப்பு ஓய்ந்ததில்லை.

எனது வரிகளை
விழிகளால் சுவைத்து
விழுங்கத் துடிக்கும்
அவளது பசி ,குறையாதது!

அவள் மீது எனக்கும்,
என் கவிதைகள் மீது அவளுக்கும் ,
இழையோடும் உறவு
காதல் சேராதது...காமம் தோயாதது...!

கண்ணீராய், வெட்கங்களாய் ,
புன்னகையாய் ,பூரிப்பாய்
எனது எழுத்துக்களுக்கு-தினம்தினம்
அவளின் கைத்தட்டல்கள்...!

இதோ
எழுதுவதற்கு நான் தயாராகி விட்டேன்.
எங்கே எனது அந்த ரசிகை?

- ராஜ்குமார் (02/11/18 9:00)

Tuesday, January 30, 2018

பிரிவின் வலியில்..

காதலில் தவிக்கும் -என்
கண்களில் தூக்கம் இல்லை.
தனிமை கசக்கிறது!
நிமிடங்கள் சுடுகின்றன!

கவிதைகளைத் துணையாக விட்டுத்
தூரமாக நீ சென்று விட்டாய்! -என்னைக்
கவிதைகள் தூங்க விடுவதில்லை.
நானும் தான்..

நடுநிசியில் எழுந்துகொண்டு
எதுகை மோனை யோசிக்கிறேன்!
பசி வந்த பொழுதுகளில் -நம்
காதல் கவிதைகள் வாசிக்கிறேன் !

உருவகிக்க இயலாத உணர்வுப் பிடியில்
உள்ளம் நோகிறது!
பரிதவிக்கும் நான்!
தூரமாய்  நீ ! - நிஜம்
சுடுகிறது!

- ராஜ்குமார்


Tuesday, December 26, 2017

கன்பூசியஸ் சிந்தனை முத்துக்கள்

**மனிதன் இயற்கையிலேயே நல்லவன்.ஆகவே, தண்டனையோடு அவனை நெருங்குவது முட்டாள்தனம்!

**சிந்தனையில்லாத படிப்பு உபயோகமற்றது.படிப்பில்லாத சிந்தனை ஆபத்தானது.

**தெரிந்ததை தெரியும் என்றும்,தெரியாததை தெரியாது என்றும் உணர்வது தான் அறிவு.

**நேர்மையானது எது எனத் தெரிந்தும்,அதைச் செய்யத் தவறுவது கோழைத்தனம்.

**முடிந்துபோன விஷயத்துக்கு விளக்கம் வேண்டாம்.
முன்னேறிச்செல்லும் விஷயத்துக்கு விளக்கம் வேண்டாம்.
இழைத்துவிட்ட தவறுகள் பற்றி,குற்றங்குறை கூறவேண்டாம்.

**அறிவாளி, யாரை வெறுப்பது,யாரை நேசிப்பது என்பதைத் தெளிவாக அறிவான்.

கல்வி என்பது....

கற்பது எப்போது என்பது,பள்ளியில் சேர்ந்த நாள் அன்று முடிவு செய்யப்படுவது அல்ல.தேவைகள் தோன்றும்போது,கற்பது தானாகத் துவங்கிவிடுகிறது.அப்படியானால்,அதற்கு முடிவு எப்போது என்று மட்டும் கேட்காதீர்கள்.ஏனெனில்,எது முடிவு என்பதைக் கற்றுக்கொள்ளவே முழு ஆயுளும் போதாது.
ஆகவே விரலைப் பார்த்து நேர விரயம் செய்யாமல், நிலவைப் பார்த்து ரசியுங்கள்.கல்வி பற்றி எண்ணாமல்,கற்பதைத் தொடங்குங்கள்.

ஒன்றைத் தெரியவில்லை என்று எப்போது நாம் உணர்கிறோமோ,அதனைக் கற்பதன் தேவை என்ன என்பதை எப்போது புரிந்து கொள்கிறோமோ,அந்த நொடியில்,நீங்கள் கற்க எண்ணியவை கண்முன் தானாகாத் தோன்றும்.அது,
மற்றவர் சொல்லிலிருந்தோ,புத்தகமாகவோ அல்லது காற்றில் பறந்து நம்மை அடையும் காகிதக் குப்பையாகவோ நிச்சயம் நம்மை அடையும்.ஆகவே, கற்கும் வாய்ப்பிற்காக,விழிப்புடன் காத்திருங்கள்.

அனைத்து வாய்ப்புகளும் கதவைத் தட்டுவதில்லை.
கதவைத் தட்டும் அனைத்தும்.இன்றையநாளில்,வாய்ப்புகளாக இருப்பதில்லை!!!

- ராஜ்குமார் (26-12-17)

Wednesday, October 11, 2017

படித்ததில் பிடித்தது

*கேட்டது ஒன்று,!*
   *கிடைத்தது ஒன்று!!* 

ஆண்டவனிடம்,
வலிமை கேட்டேன்!
          கஷ்டங்களை
          கொடுத்தார்!!
எதிர் கொண்டேன்,
வலிமை பெற்றேன்.👍​
                 
அறிவு கேட்டேன்!
        பிரச்சினைகளை
        கொடுத்தார்!! 
சமாளித்தேன்                             
அறிவு பெற்றேன்.👍​

தைரியம் கேட்டேன் !
         ஆபத்துக்களை     
         கொடுத்தார் !!
சந்தித்து மீண்டேன்  ,
தைரியம் பெற்றேன். 👍

அன்பு கேட்டேன் ! 
         வம்பர்களை   
         கொடுத்தார்
அனுசரித்து சென்று
வம்பர்களின் அன்பையும் பெற்றேன். 👍​ 

வளமான வாழ்வு கேட்டேன்!    
       சிந்திக்கும் மூளையை
       கொடுத்தார்.
வளமான வாழ்வு கிடைத்தது.👍​

*கேட்டது ஒன்று,!*
         *கிடைத்தது ஒன்று!!*

*கிடைத்ததை வைத்து*
         *கேட்டதைப் பெற்றேன்*.👍​

*படித்ததில் பிடித்த ஒன்று..👆​*

Tuesday, August 15, 2017

வறுமையின் சுவடுகள்

என்சிறு வயதினில்
எண்ணற்ற கனவுகள்..
ஏங்கியன யாதென்று
எண்ணிப் பார்த்தால்
பனையோலைக் கடிகாரம்
பளபளக்கும் பாலீஷ் மணிகள்
வண்ணப் பலூன்கள்
வாய்ருசிக்கப் பணியாரம்!
கேட்டிருந்தால் ஒருவேளை
கிடைத்திருக்குமோ என்னமோ?
கேட்க நினைத்ததில்லை!
வறுமையின் அரங்கேற்றம்..
ஊமையானேன் நான்..
                  ** ** **
சிறுஊசி நூல்கோர்த்து
சேலைக்கிழிசல்களை
சிரித்தபடி தைத்திடுவாள் அம்மா..
ஒருமுனையை நான் பிடிக்க,
அவள் சொல்லும் கதைகேட்டு
உள்ளம் மகிழ்ந்திருந்தேன்!
வறுமையில் யாம் இருந்தோம்
என்ற நினைப்பையும் மறந்துவிட்டு...
                   ** ** **