Wednesday, December 14, 2011

யாராவது என் பேனாவைப் பார்த்தீங்களா?

"அம்மா! இங்க வச்சிருந்த என்னோட பேனா எங்க?".
"அந்த மேசை மேல தான் இருந்துச்சு! நால்லா தேடிப் பாரு!!".
நானும் அரைமணிநேரமாகத் தேடுகிறேன்.கிடைக்கவில்லை.

ராசியான பேனா! எவ்வளவோ ஸ்டைலா புது புது பேனா வந்தாலும்,
இந்த பேனா மேல எனக்கு காதல் அதிகம்!ஐந்து வருட பிணைப்பு எங்களுக்குள்! அழகான என் எழுத்துக்கள் என்றும் அழகாக இருக்க வேண்டி, என் அப்பா வாங்கித்தந்த பேனா அது.

அந்தப் பேனாவினால் எழுதத் துவங்கினாலே,எழுத்துக்கள் உயிர் பெற்றது போல எனக்குள் உணர்வு வரும்.அது விவரிக்க முடியாத இன்பம்!
அந்தப் பேனாவைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

"பேனா கிடைச்சுதா?" என்ற கேள்வியோடு அம்மா என் அறைக்குள் வந்தாங்க.
இருவருமாக அலமாரி,மேசை,படுக்கை என எல்லா இடங்களிலும் தேடினோம்.

சிறிது நேரத்துக்கு பிறகு, ஏதோ நியாபகம் வந்தது போல, "அடடா..மறந்தே போய்ட்டேன்!நீ காலையில ஆபிஸ் போனதுக்கு அப்புறம், காமாட்சி அக்கா வந்துச்சு. ஏதோ அவங்க பொண்ணுக்கு லோன் வாங்க விண்ணப்பம் பூர்த்தி செய்யனும்னு பேனா கேட்டுச்சு. நானும் அந்த பேனாவை எடுத்துக் குடுத்திட்டேன்.இன்னும் கொண்டு வந்து தரலை..நானும் வேலையா இருந்ததால, மறந்தே போய்ட்டேன்!!","அந்த பேனாவை எதுக்குமா
குடுத்த?" என்று கூறிவிட்டு கோபத்தோடு வாசலை நோக்கிச் சென்றேன்."மணி ஆறு ஆகிடுச்சு! அவங்க வீட்டுக்கு வந்திருப்பாங்க!
போய் வாங்கிட்டு வந்துடு..இனிமே நான் யாருக்கும் குடுக்கல டா! கோபப்படாதே!",என்ற அம்மாவின் குரல் வாசல் வரை கேட்டது.

காமாட்சி அக்கா வீடு, எங்க வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருக்கிறது.எங்க தெருவில் மொத்தமே 6 வீடுகள் தான், அதில் படிச்ச உயிர்கள் ரெண்டு பேர் தான். ஒன்னு நான். இன்னொன்னு, காமாட்சி அக்கா பொண்ணு யமுனா.நான் படிச்சு முடிச்சு வேலைல இருக்கேன். யமுனா கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கிறாள்.நல்ல குடும்பம்.

லேசான பனிக்காற்று, கார்த்திகை மாதம் என்பதை நினைவுப்படுத்தியது.
காமாட்சி அக்கா வீட்டுக்கு வெளியே கொடியில் காய்ந்த துணிகளை எடுத்துக்கொண்டிருந்தார்.
என்னைப்பார்த்ததும்,"தம்பி! வாங்க.இப்ப தான் யமுனா கிட்ட சொல்லிட்டு இருந்தேன்.உள்ள வாப்பா!",நான் வாசலில் நுழைந்தபோது அடுத்த கட்டளை,"யம்மு!!! குமார் அண்ணனோட பேனாவை எடுத்துட்டு வா!" என்று சொல்லியபடிதுணிகளை எடுத்துக்கொண்டு அறைக்குள் போய்விட்டார்.

"அண்ணா! எப்படி இருக்கீங்க?",இது யமுனா."நல்லா இருக்கேன் யம்மு.
காலேஜ் எப்படிப் போகுது?"என்றபடி பேனாவை வாங்கிகொண்டேன்."காலேஜ் ஜாலியா போகுது.பரீச்சை வந்தா தான் கடுப்பா இருக்கும்!" ,"அது அப்படித்தான். கல்லூரி முடிச்சதுக்கு அப்புறம்,இந்த எரிச்சல் கூட சிரிப்பூட்டும்!"என்றேன்.அவள் சிரித்தாள்.

சிறிது நேரப் பேச்சுக்குப் பின்னர், காமட்சி அக்கா கொடுத்த தண்ணீரை பருகிவிட்டு வெளியே வந்தேன்.

பேனா எனது சட்டைப் பையில்.

வீடு வந்து சேரும் போது மணி 7. ஒரு கதை எழுத நினைத்து தான் அந்த பேனாவைத்தேடினேன்.உடை மாற்றிக்கொண்டு, வெள்ளைத்தாளுடன் மொட்டை மாடியில் அமர்ந்து யோசிக்கத்துவங்கினேன்.

"வந்து சாப்பிடு டா! மணி எட்டாகப் போகுது." அம்மாவின் குரல் கற்பனைகளைக் கலைத்து விட்டது. "இப்ப தாம்மா வந்தேன்.அதுக்குள்ள என்னசாப்பாடு?பசிக்கல.நான் அப்புறமா சாப்பிடுறேன்!",என்றேன் கோபமாக. அப்படி சொன்னேனே தவிர பசி வயிற்றைக் கிள்ளியது.ஒரு வரியாவது எழுதிவிட்டு சாப்பிடப் போலாம் என அமர்ந்திருந்தேன்.

நிலா,வானம்,நட்சத்திரம்,மேகம் எனப்பார்த்த எனக்கு,கதை எழுதும் எண்ணம் மாறி, கவிதை எழுதத் தோன்றியது.

"நிலவே! உனக்கும் எனக்கும் இடையில் உணர்வுப்பாலமாய் என் கவிதை" எனத்துவங்கிய போது பசி உணர்வு மேலோங்கிவிட்டது. பேனாவையும், தாளையும் மேசை மேல் போட்டுவிட்டு அவசர அவசரமாக
சாப்பிடச் சென்றேன்.உண்ட மயக்கம். உடனடி உறக்கம். 

காலை எழுந்து அலுவலகம் செல்லும் அவசரத்தில்
இரவு நடந்த கவிதை முயற்சி மறந்தே போய்விட்டது.

மாலையில் வீட்டுக்கு வந்த உடன் மீண்டும் தேடினேன்.
"அம்மா! இந்த மேசை மேல வச்சிருந்த என் பேனாவை பார்த்தீங்களா"!!

மறதி, நம் தேசிய வியாதி - கமல்ஹாசன்

2 comments:

  1. என் மேஜையிலிருந்து எதையும் யாராவது எடுத்தால் கொலை விழும்.

    ReplyDelete
  2. i have already studied this brother

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்