Wednesday, December 14, 2011

கொங்கு நாடு - பொடிநடை பயணம்!

நான் எனது சொந்த ஊரிலிருந்து, கோவை வந்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிறது.என் நகர வாழ்க்கை பற்றி கிராமத்தில் அதிசயமாகப் பேசுவதைப்பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது எனக்கு.

"இக்கரைக்கு,அக்கரை பச்சை" என்பது பழமொழி மட்டுமல்ல, நிஜ மொழியும் தான்.

நேற்றோடு, என் முதல் பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்து விட்டது.மிக்க மகிழ்ச்சி.கொண்டாட வேண்டுமே என்று நினைத்ததன் விளைவாக, படம் பார்க்கலாம் என முடிவெடுத்தேன்.

பேருந்தில் இருந்து இறங்கி, திரையரங்கு நோக்கி நடக்கத்துவங்கினேன்.

அது ஒரு பிரபல சாலை.எப்போது அதிக கூட்டம் அலைமோதும் இடம்.
போன வாரம் பார்த்தபோது, சுவர்களில் வெற்றிலை எச்சில் கறைகள்,விளம்பர சுவரொட்டிகள்,சாலையோரக்கடைகளின் எச்சில் இலைகள் சகிதமாக காட்சியளித்தது.இன்று பெரிய மாற்றம்.

கூட்டம் மாறவில்லை.சுவர்கள் சுத்தமாக இருக்கின்றது. எப்படி? விடை தெரிந்ததும் சிரிப்பதா? பாராட்டுவதா? என தெரியவில்லை.சுவர்களில் பல்வேறு மதங்களின் சின்னங்களும்,கடவுள் உருவங்களும் பதிக்கப்பட்டிருந்தது.கடவுள் எதைத் தடுக்கிறாரோ இல்லையோ அந்த சுவற்றைப் பாதுகாக்கிறார். நல்ல முயற்சி.

மாலை 6.30 காட்சி நேரம்.மயக்கம் என்ன திரைப்படம்.

விமர்சனம் நிறைய படித்திருப்பீர்கள்.ஆக, கதை பற்றி அதிக விவாதம் தேவையில்லை என் நினைக்கிறேன்.


ஒருவரியில் சொல்லப் போனால், "முயற்சியுடையார்-இகழ்ச்சியடையார்!"
அடுத்த வரியில் சொன்னால், "ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே"- இங்கு முதல் ரகம்.
மூன்றாம் வரியில் சொல்லச் சொன்னால்,"சித்திரமும் கைப்பழக்கம்" - இது கேமராவிற்கும் பொருந்தும்.

படம் முடிந்த பின்னர் வேகமாக வெளியே வந்தேன். இல்லையெனில் வாகனங்களுக்குள் புழுபோல நெளிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதால்.

எனது கைப்பேசியில், இரண்டு மூன்று தவறிய அழைப்புகள்(தவறவிட்ட அழைப்புகள்). இப்போது பேசும் மனநிலையில் இல்லை.பேருந்து பிடித்து அறைக்கு விரைவாகச் செல்ல வேண்டும்.இப்போதே மணி 9.20யைத் தொட்டு விட்டது.

20 நிமிடப் பயணம். இன்று இரவு எங்கு சாப்பிடலாம் என நினைக்கையில், கண்களில் பட்டது ஒரு உணவகம்.

இன்று அங்கு சாப்பிடுவது தான் சரியாக இருக்கும்.ஏனென்றால், பணியில் சேர்ந்த முதல்நாள், இரவு உணவு அங்கு தான் சாப்பிட்டேன்.தரம் சற்று குறைந்திருந்தது.ஒரு வருடம் ஆகிவிட்டது. எவ்வளவோ மாற்றம்.

நடக்கத் துவங்கினேன்.அந்த வழி நெடுக்க ஏராளமான உணவகங்கள் இருக்கின்றன.கிட்டத்தட்ட அனைத்து கடைகளிலுமே நான் சில நாள் வாடிக்கையாளனாக இருந்திருக்கின்றேன். இப்போதும் அப்படித்தான்.

எங்கள் ஊரில் இருந்த நாட்களில் ஏதாவது ஒருநாள் தான் "ஓட்டல் உணவு".அது பெரும்பாலான நேரம் பரோட்டாவவாகத் தான் இருக்கும்.
ஆக,அப்போதெல்லாம் ஓட்டல் என்றாலே பரோட்டா தான்  கண்முன் வரும்.ஆனால், இங்கு வந்த பிறகு உணவகங்களின் பல வகை உணவுகளைப் பற்றி அறிந்து கொண்டேன்.
  • ஒரு கரண்டி மாவினை அப்படியே ஊற்றி,ரெண்டு திருப்பு திருப்பிக் கொடுத்தால் வீட்டு தோசை.
  • அதே மாவினை, ஊற்றிய பின்னர் கல்லில் பரவவிட்டு எடுத்தால், சாதா தோசை. நல்லா வெந்து மொறுமொறு என இருந்தால் "ஸ்பெஷல் தோசை"
  • இரண்டு கரண்டி மாவினை பெருசா ஊத்தி எடுத்தா ஊத்தாப்பம்.(சில மிகைத் துணைகளை சேர்த்து, வெங்காய ஊத்தாப்பம், தக்காளி  ஊத்தாப்பம், முட்டை ஊத்தாப்பம், என நிறைய இருக்கு)

இது போல முட்டை உணவுகளிலும் பல ரகம்.
  • முட்டையை கல்லில் உடைத்து விட்டு, ஒருபக்கம் வேக விட்டுக் கொடுத்தால் ,ஆஃபாயில்.
  • அதை இரண்டு புறமும் வேக வைத்தால் ஃபுல்பாயில்.
  • வெங்காயம்,கொத்தமல்லி சேர்த்து கொஞ்சம் வேக விட்டால், ஆம்லெட்.
  • அதே வெங்காயத்துடன்,முட்டையை ஒரு பக்கம் வேக விட்டு, மடித்துக் கொடுத்தால் அது கலக்கி.
இப்போது எனது சிறுவயது சிறப்பு உணவு - பரோட்டா.
  • சில்லி பரோட்டா
  • வீச்சு பரோட்டா
  • முட்டை வீச்சு பரோட்டா
  • முட்டை பரோட்டா
  • கொத்து பரோட்டா
இது போல நிறைய இருக்கின்றன.எல்லாமே நான் சுவை பார்த்து விட்டேன்.

வெளி உணவுகள் உடலுக்கு நல்லதில்லை தான்.வேறு வழியில்லை. சமைக்கும் வசதி அறையில் இல்லை என்பதால் பொறுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.

வீட்டை விட்டு வெளியே வந்து, காசுக்காக உழைத்து வாழ்கின்ற பல இளைஞர்களுக்கு,இது போன்ற சிறு உணவகங்கள் தான் உறவினர்கள் வீடு போல.காசு கொடுக்கிறோம் அது மட்டும் வேறுபாடு.

எனது அறைக்கு வெகு அருகில் பெட்டிக்கடை ஒன்று இருக்கிறது.
பல பன்னாட்டு நிறுவனங்கள் அருகில் இருப்பதால் இரவில், சிகரெட் வியாபாரம் அங்கு ஜோர்.

சற்று தள்ளி ஒரு ஜோடி நின்று கொண்டிருத்தது.பெண்ணிற்கு சம உரிமை கொடுக்கிறான், புகைக்கையில். இருவரின் இழுப்பில், சாம்பலாய் இறக்கிறது அந்த சிகரெட்.

கலாச்சார சீர்கேடு இது தானோ!! அதிர்ச்சி தெளியாமலே அறையை அடைந்தேன்.


எப்போது உறங்கினேன்? தெரியவில்லை..

திரைகடல் ஓடியும், கலாச்சாரத்தைக் கெடுக்காத,உறவுகளைப் பிரிக்காத திரவியம் தேடு!!

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்