அப்படியா? நம்பவே முடியல!
காலாகாலமாக பின்பற்றப்பட்டு வரும் சில வழக்கங்களும்,மனதில் பதிந்த செய்திகளும் ஒருநாள் உண்மையில்லை அல்லது தவறு எனத் தெரியவரும்போது வரும் மன அதிர்வு அலாதியானது.
பலமுறை நான் அனுபவப்பட்டிருக்கிறேன்.
சிறுவயதில்,அதிகாலையில் தெரியும் செவ்வாய்கிரகம் என சிவப்புநிறத்தில் வானத்தில் ஒன்றை நண்பன் காட்டினான்.பல ஆண்டுகள் உண்மை என நம்பிக்கொண்டிருந்தேன்.ஒருநாள் தந்தையுடன் வாகனத்தில் போய்க்கொண்டிருக்கும்போது மாலைநேரத்தில் அதே சிவப்புநிற கிரகத்தைப் பார்த்தேன்.குழம்பியபடி நிமிந்த எனக்கு அதிர்ச்சி.அது அலைபேசி கோபுரங்கள் மீது எரியும் சிவப்பு விளக்கு!
இதுபோல கடவுள் கதைகள் அனைத்தும் வெறும் கற்பனை என்று உணர்ந்து,கடவுளை மறுக்கத் துவங்கியநாள்.ஊரில் மிகவும் நல்லவர் என நம்பியிருந்த ஒருவர் மணமான மற்றொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த சம்பவம்.அதைவிட, "கதவைத் திறங்கள்.காற்று வரட்டும்!" என்ற மந்திரம் சொல்லி, "இளம் வயதில் இப்படி ஒரு ஞானமா?" என நான் எண்ணி வியந்த ஒரு மகான், நடிகையை ஆராய்ச்சி செய்யப்போய் மாட்டிக்கொண்டது என எத்தனையோ நிகழ்ந்தேறிவிட்டன.
உங்கள் வாழ்விலும் இதுபோல (இதைவிட) பல சம்பவங்கள் நடந்திருக்கும்.அனைவருக்கும் பொதுவான சில நம்பமுடியாத செய்திகளும் இருக்கத்தான் செய்கின்றன.அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
1.திருக்குறள் ஒருவரால் மட்டும் எழுதப்பட்டது இல்லை
இதை முதன் முதல் படித்தபோது குழம்பினேன்.தினமலர் இணைப்பாக வரும் சண்டே ஸ்பெஷல் என்ற நாளிதழில் இடம்பெற்ற கட்டுரை அது.
என நண்பர்கள் கூட சொல்லி இருக்கிறார்கள்.திருக்குறள் முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது.சில குறள் செய்யவேண்டாம் எனச் சொல்லுவதை, சில குறள்கள் செய் எனச் சொல்கின்றது என்று.
ஆனால்,அப்படிக்கேட்பவருக்கு நான் கொடுக்கும் விளக்கம்,"அதிகாரத்தின் பெயர் மற்றும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பொருளை ஆராயவேண்டும்" என்பதே.
ஆனாலும்,அவ்வையார் போல, வள்ளுவரிலும் பலர் இருந்திருப்பார்களோ? ஒவ்வொரு காலங்களிலும் அவர்கள் குறள்களை இயற்றியிருப்பர்களோ? திருவள்ளுவர் என்ற பெயர்கூட உண்மையா எனத் தெரியவில்லை.அவரது உருவம் கூட கற்பனையானதே.
இப்படி அவரின் குறள் தவிர அனைத்துமே கற்பனை என்பது நம்பவேண்டிய உண்மை.
2.சனி நீராடு
எத்தனை பேர் இதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு,சனிக்கிழமை கண்டால், (மட்டும்) நிறைவாக எண்ணெய் வைத்துக் குளிக்கிறார்கள் தெரியுமா? அவ்வை சொன்ன மொழியாயிற்றே!
இது இப்படி இருக்க,உண்மையில் அவ்வை சொன்னது என்ன எனத் தேடியதில், அருமையான உண்மைப் பொருளைக் கண்டுணர்ந்தேன்.
சனிநீர்+ஆடு=சனிநீராடு.
சனிநீர் என்பது சனிக்கின்ற,பிறக்கின்ற நீர்.ஊற்று,அருவி என வைத்துக்கொள்ளலாம்.அந்த நீரில் மட்டுமே குளி.தேங்கிய குட்டை,குளங்களில் குளிக்கவேண்டா என்பதே அவ்வை சொல்லவந்த செய்தியாகும்.
3,4 என வரிசைப்படுத்தி நிறைய எழுதலாம்.அதற்கு அவசியமில்லை என உணரவைக்கிகிறன பல புத்தகங்கள்.
உங்களுக்கும் தெரியும்.ஏராளமான ஊர்ப்பெயர்கள் மருவி குறுகியது,பழமொழிகளின் பொருள் மாறியது என நாம் கவனிக்கப்படாமல் விட்ட ஒவ்வொன்றும் பூதகரமாக மாறி, எதிகால சந்ததிக்கு தவறான வழிகாட்டலாகிவிடுகின்றன.
செய்யவேண்டியது என்ன?
- தரமான உரையுடன் கூடிய இலக்கியங்களைப் படிக்கவேண்டும்.
இலக்கணத்தை அறிந்து சொற்களைப் பயன்படுத்தவேண்டும்.
ஒவ்வொருவரும் எதையும் அப்படியே நம்பிவிடாமல் அறிவுகொண்டு அராய்ந்து பின் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
விஞ்ஞானம் என்ற பெயரில் எது சொன்னாலும் நம்பிவிடும் எண்ணம் மாறவேண்டும்.
- நாம் கற்றுக்கொள்வது மட்டுமின்றி இளைய தலைமுறைக்கு சாயமில்லாத உண்மையை உணரவைக்கவேண்டும்.
ஆக,நிறையப் படியுங்கள்! உணருங்கள்! பகிருங்கள்!
அறியாமை ஒழிப்போம்!
அன்புடன்
ராஜ்குமார்.
சிந்தனைகள் வித்தியாசமானவை...
ReplyDeleteஉணர வைக்க வேண்டிய வரிகள் அருமை... (5)
தொடர வாழ்த்துக்கள்...